இரான் அணுசக்தி தளங்கள் அமெரிக்கா தாக்கியது எப்படி? - சேதத்தை காட்டும் படங்கள்

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், US Air Force

படக்குறிப்பு, பி-2 குண்டுவீச்சு விமானம்

இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு வாரத்திற்கும் மேலாக தொடரும் நிலையில் அமெரிக்காவும் அதில் இணைந்துள்ளது. இரானில் ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பதை டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.

இரானை உடனடியாக சமாதானத்திற்கு வருமாறும், இல்லாவிட்டால் அதிக அளவில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் பற்றி இரான் கூறுவது என்ன? அமெரிக்காவுக்கு பதிலடி தருவது பற்றிய இரானின் எச்சரிக்கை என்ன?

இரான் மீது MOP குண்டுகளை வீசிய அமெரிக்கா

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், Reuters/Department of Defense

இரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமெரிக்காவின் தாக்குதல் இரானின் அணுசக்தி திறன்களை தகர்த்து அழிக்க வேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தைத் தகர்த்த இந்த தாக்குதலால் இரான் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.

அதிபர் டிரம்புக்கு புகழாரம் சூட்டிய ஹெக்சேத் "பல அதிபர்களும் இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவு கட்ட வேண்டும் என கனவு கண்டனர். ஆனால் டிரம்ப் வரும் வரை யாராலும் அதைச் செய்ய முடியவில்லை" என்றார்.

''டிரம்ப் அமைதியின் பாதையை விரும்புபவர், இரானும் அதையே தேர்வு செய்ய வேண்டும்'' எனத் தெரிவித்தார் அவர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவருமே வீரர்கள் எனக் குறிப்பிட்டார் ஹெக்சேத்.

பாதிப்புகளைக் காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்


ஃபோர்டோ அணுசக்தி தளத்தில் ஏற்பட்ட பாதிப்பை காட்டும் படம்
படக்குறிப்பு, ஃபோர்டோ அணுசக்தி தளத்தில் ஏற்பட்ட பாதிப்பை காட்டும் செயற்கைக்கோள் படம்

இன்று பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் ஃபோர்டோவில் உள்ள அணுசக்தி நிலையத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பைக் காட்டுகிறது.

மேலே உள்ள படத்தில் காணப்படும் ஆறு புதிய துளைகள் அமெரிக்க வீசிய குண்டுகள் நுழைந்த இடத்தைக் குறிக்கிறது. அதனால் ஏற்பட்ட குப்பை மற்றும் கழிவுகள் கொட்டிக் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.

குண்டு நுழைந்த இடத்தில் பெரிய பாதிப்புகளைப் பார்க்க முடியாது. ஏனென்றால் இந்த குண்டுகள் நுழையும் இடத்தில் அல்லாமல் ஆழமாகச் சென்று வெடிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டவை என மெக்கென்ஸி உளவு சேவைகள் அமைப்பைச் சேரந்த ஸ்டூ ரே பிபிசியிடம் தெரிவித்தார்.

இரண்டு வெவ்வேறு இடங்களில் அமெரிக்கா மூன்று குண்டுகளை வீசியிருப்பது இந்தப் படங்களின் மூலம் தெரியவருகிறது.

ஃபோர்டோ அணுசக்தி தளத்தில் ஏற்பட்ட பாதிப்பை காட்டும் படம்

பி2 ஸ்டெல்த் போர் விமானங்கள்

இந்த தாக்குதலில் அமெரிக்காவின் பி2 ஸ்டெல்த் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவித்தார் ஹெக்சேத்.

"கடந்த 2001ம் ஆண்டிலிருந்து மிகப்பெரிய பி2 போர் விமானங்கள் இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. MOP என்கிற அழைக்கப்படுகிற மேசிவ் ஆர்ட்னன்ஸ் பெனிட்ரேட்டர் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "டிரம்ப் போரை விரும்பவில்லை. ஆனால் நமது மக்கள், கூட்டாளிகள் மற்றும் நலன்கள் அச்சுறுத்தப்பட்டால் நாங்கள் விரைவாகவும் தீவிரவமாகவும் செயல்படுவோம்" என்றார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதி டேன் கெய்ன் இந்தத் திட்டம் மிகவும் ரகசியமாக திட்டமிடப்பட்டது எனத் தெரிவித்தார்.

இந்த தாக்குதலின் நேரம் மற்றும் தன்மை பற்றி அமெரிக்காவில் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது என்றார்.

"ஏழு பி2 போர் விமானங்கள் 18 மணி நேரம் பயணித்து இந்த தாக்குதலை நடத்தின. போர் விமானங்கள் இரான் வான்பரப்பை அடைந்த பிறகு உள்ளுர் நேரப்படி மாலை 5 மணிக்கு அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்கள் இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையம் மீது 20-க்கும் மேற்பட்ட டொமாஹாக் ஏவுகணைகளை ஏவின. மூன்று அணுசக்தி நிலையங்களும் மாலை 6.40 மணியில் இருந்து 7.05 மணிக்குள் தாக்கப்பட்டன. இரானுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிட சிறிது காலம் பிடிக்கும். மூன்று தளங்களும் கடுமையான பாதிப்பு மற்றும் அழிவைச் சந்தித்துள்ளது" என்றார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், US military

படக்குறிப்பு, அமெரிக்க போர் விமானங்கள் இரானை நோக்கி புறப்பட்டதை விளக்கும் காட்சிப் படங்கள். அமெரிக்க இந்தத் திட்டத்திற்கு ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் எனப் பெயரிட்டுள்ளது.

இந்த தாக்குதல் இரானில் ஆட்சி மாற்றம் பற்றியது இல்லை என்று செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார் பாதுகாப்பு செயலாளரான பீட் ஹெக்சேத்.

"நமது தேசிய நலனுக்கான அச்சுறுத்தலாக விளங்கும் இரானின் அணுசக்தி திட்டத்தை மட்டுப்படுத்தவும் நமது படைகள் மற்றும் கூட்டாளியான இஸ்ரேலின் தற்காப்புக்காவும் குறிவைத்த தாக்குதலை மேற்கொள்ளவே டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்" எனத் தெரிவித்தார்.

அமெரிக்கா மத்திய கிழக்கில் மற்றுமொரு போரில் ஈடுபடப்போகிறதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த ஹெக்சேத், "இரானின் அணுசக்தி திறன்களை அழிப்பது மட்டுமே இதன் நோக்கம் என்கிற சக்திவாய்ந்த மற்றும் தெளிவான இலக்கை டிரம்ப் என்னிடம் கொடுத்திருந்தார்" என்றார். செய்தியாளர் சந்திப்பின் முடிவில் இரான் அமெரிக்கா கூறியபடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த துணை அதிபர் ஜேடி வேன்ஸ் அமெரிக்கா இரானுடன் போரில் இல்லை, அதன் அணுசக்தி குறிக்கோள் உடன் தான் போரில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

'ஓர் அற்புதமான இராணுவ வெற்றி'

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க மக்களிடம் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தினார்.

"இந்த பயங்கரமான அழிவுகரமான தளங்களை அவர்கள் கட்டியெழுப்பும் போது எல்லோரும் பல ஆண்டுகளாக அந்தப் பெயர்களைக் கேட்டனர். இன்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஒரு அற்புதமான இராணுவ வெற்றி என்று நான் உலகிற்கு தெரிவிக்க முடியும். இரானின் முக்கிய அணு செறிவூட்டல் வசதிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன" என்று டிரம்ப் தெரிவித்தார்.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

இரானுக்கு டிரம்ப் மிரட்டல்

இரான் இப்போது சமாதானம் செய்ய முன்வராவிட்டால், எதிர்காலத்தில் அமெரிக்காவின் தாக்குதல்கள் மிக அதிகமாக இருக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

"அமைதி விரைவில் ஏற்படும் அல்லது கடந்த எட்டு நாட்களில் நாம் கண்டதை விட இரானுக்கு மிகப் பெரிய சோகம் ஏற்படும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

"நினைவில் கொள்ளுங்கள், இன்னும் நிறைய இலக்குகள் உள்ளன. இன்றிரவு மிகவும் கடினமானதாகவும், மிகவும் ஆபத்தானதாகவும் இருந்தது. ஆனால் அமைதி விரைவில் வரவில்லை என்றால், நாங்கள் துல்லியம், வேகம் மற்றும் திறமையுடன் மற்ற இலக்குகளை நோக்கிச் செல்வோம்," என்று அவர் கூறினார்.

"இஸ்ரேலும் அமெரிக்காவும் ஒரு குழுவாக செயல்பட்டன"

இரானின் முன்னாள் இராணுவத் தளபதி காசிம் சுலைமானியால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக டிரம்ப் கூறுகிறார்.

"இது நடக்க விடமாட்டேன், இது தொடராது என்று நான் நீண்ட காலத்திற்கு முன்பே முடிவு செய்தேன்" என்று குறிப்பிட்ட அவர்,

"இஸ்ரேலுக்கு எதிரான இந்த பயங்கரமான அச்சுறுத்தலை" அழிக்க இஸ்ரேலுடன் ஒரு "குழுவாக" பணியாற்றியதாகக் கூறி, பெஞ்சமின் நெதன்யாகுவை வாழ்த்தினார்.

டிரம்ப் உரை சுமார் நான்கு நிமிடங்கள் நீடித்தது.

இரானில் 3 அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்

முன்னதாக, "ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீதான எங்களது வெற்றிகரமான தாக்குதலை நாங்கள் முடித்துவிட்டோம். அனைத்து விமானங்களும் இப்போது இரான் வான்வெளிக்கு வெளியே உள்ளன," என்று டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் குறிப்பிட்டிருந்தார்.

அனைத்து விமானங்களும் அமெரிக்காவிற்குத் திரும்பி வந்தன என்றும் டிரம்ப் மேலும் கூறினார்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ஈடுபட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்காக, அமெரிக்காவின் பி-2 ரக ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்கள் அமெரிக்க தீவுப் பகுதியான குவாமுக்கு முன்பே மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது இரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக் கூடும் என்ற ஊகத்தை அதிகப்படுத்தியிருந்தது.

அமெரிக்காவுக்கு இரான் கடும் எச்சரிக்கை

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவின் தாக்குதல்களை "பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்று" என்று இரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் கண்டித்துள்ளார். இரான் "தனது இறையாண்மையைப் பாதுகாக்க அனைத்து தெரிவுகளையும்" கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

"இன்று காலை நடந்த நிகழ்வுகள் மூர்க்கத்தனமானவை மற்றும் எப்போதும் நிலைத்திருக்கக் கூடிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். ஐ.நா.வின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த மிகவும் ஆபத்தான, சட்டவிரோத மற்றும் குற்றவியல் செயல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஓர் உறுப்பினராக அமெரிக்கா ஐ.நா. சாசனத்தை கடுமையாக மீறியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

'ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது'

"ஃபோர்டோ தகர்க்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு புலனாய்வு பயனரின் பதிவை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுபதிவு செய்துள்ளார்.

"இது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் உலகிற்கு ஒரு வரலாற்று தருணம்" என்று அவர் தனது ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார்.

"இரான் இப்போது இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர ஒப்புக்கொள்ள வேண்டும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு இஸ்ரேல் அமெரிக்காவுடன் "முழு ஒருங்கிணைப்பில்" இருந்தது என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் இஸ்ரேலிய பொது ஊடகமான கானிடம் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், Google Earth

ஃபோர்டோ - ரகசிய இரானிய அணுசக்தி தளம்

தலைநகரம் டெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 60 மைல் (96 கிமீ) தொலைவில் ஒரு மலைப் பகுதியில் ஃபோர்டோவில் யுரேனியம் செறிவூட்டல் தளம் அமைந்துள்ளது.

நிலத்தடி வசதி, யுரேனியத்தை செறிவூட்டப் பயன்படுத்தப்படும் மைய விலக்கு இயந்திரங்களையும், சிறிய சுரங்கப்பாதைகளின் வலையமைப்பையும் கொண்டிருந்த 2 முக்கிய சுரங்கப்பாதைகளைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

இந்த தளத்தை தாக்குமாறு அமெரிக்காவிடம் இஸ்ரேல் ஏற்கனவே முறையிட்டது. ஏனெனில், நிலத்தடியில் இருந்த அந்த அணுசக்தி தளத்தை தகர்க்கும் திறன் கொண்ட பங்கர் பஸ்டர் குண்டு அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இரான் பதில்

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு இலக்கான அணுசக்தி தளங்களை தாங்கள் ஏற்கனவே காலி செய்துவிட்டதாக இரானிய அரசு தொலைக்காட்சி கூறியுள்ளது.

இரானின் அரசு ஊடகத்தின் துணை அரசியல் இயக்குநர் ஹசன் அபேதினி அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசினார். இரான் இந்த மூன்று அணுசக்தி தளங்களையும் முன்னதாகவே காலி செய்துவிட்டதாக அவர் கூறினார்.

டிரம்ப் சொல்வது உண்மையாக இருந்தாலும் கூட, இரான் அந்த அணுசக்தி தளங்களில் இருந்த பொருட்களை ஏற்கனவே பாதுகாப்பாக வெளியே எடுத்துவிட்டதால், இந்த தாக்குதலால் பெரிய பின்னடைவு எதையும் சந்திக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதலை உறுதிப்படுத்திய இரான்

இரானில் இருந்த பாதுகாப்பான அணுசக்தி தளமாக கருதப்பட்ட ஃபோர்டோ மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை இரான் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.

கோம் மாகாண நெருக்கடி மேலாண்மைப் பிரிவு செய்தித் தொடர்பாளர் மோர்டெசா ஹெய்தாரி, "ஃபோர்டோ அணுசக்தி நிலையப் பகுதியின் ஒரு பகுதி வான்வழித் தாக்குதலுக்கு இலக்கானது" என்று கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நடான்ஸ், இஸ்பஹான் அணுசக்தி தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக இரான் கூறியுள்ளது.

இஸ்பஹானின் பாதுகாப்பு துணை ஆளுநர் அக்பர் சலேஹி, "நடான்ஸ் மற்றும் இஸ்பஹானில் பல வெடிப்புகள் கேட்டன, இஸ்பஹான் மற்றும் நடான்ஸின் அணுசக்தி நிலையங்களுக்கு அருகில் தாக்குதல்களைக் கண்டோம்" என்று கூறியுள்ளார்.

இதன் மூலம், டிரம்ப் குறிப்பிட்ட 3 அணுசக்தி தளங்களும் தாக்குதலுக்கு இலக்கானது இரானிய அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - இரான், அமெரிக்கா, பி-2 குண்டுவீச்சு விமானம், பங்கர் பஸ்டர் குண்டு, டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

இரானிடம் முன்னறிவித்த அமெரிக்கா

தாக்குதல் நடத்துவதற்கு முன்னரே அதுகுறித்து இரானிடம் அமெரிக்கா தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமையன்று இரானை "ராஜதந்திர ரீதியாக" தொடர்பு கொண்டு தாக்குதல் நடத்த மட்டுமே செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், "ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகள் திட்டமிடப்படவில்லை" என்றும் அமெரிக்கா கூறியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸ் செய்தி கூறுகிறது.

இந்த வார தொடக்கத்தில், இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியைக் கொல்லும் நெதன்யாகுவின் திட்டத்தை டிரம்ப் நிராகரித்துவிட்டதாக பல அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு