ஜோஷிமட் போல மண்ணுக்குள் புதைந்து கொண்டிருந்த ஊரை ஒன்றுகூடி காப்பாற்றிய மக்கள்

- எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி நியூஸ்
இந்தியாவின் இமயமலை நகரமான ஜோஷிமட், கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், கண்முடித்தனமாக நிலத்தடி நீரை உறிஞ்சியது போன்ற காரணங்களால் புதைந்துகொண்டிருப்பதாகத் தொடர்ந்து செய்திகளில் பார்க்கிறோம். நாட்டின் பல நகரங்கள் இந்தக் கதியை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியிலுள்ள ஒரு பகுதி நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதைக் குறைத்ததன் மூலம் தங்களுடைய பகுதி நிலத்தில் புதைந்து போகாமல் தடுத்து நிலைமையை மாற்றியுள்ளனர்.
54 வயதான சுதா சின்ஹாவும் அவரது குடும்பத்தினரும் 1998இல் துவாரகாவிற்கு இடம் பெயர்ந்து வந்தனர். அவர்கள் பசுமையான சூழலை விரும்பியதும் இந்தியாவின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திற்கு நெருக்கமாக இருக்க வேண்டும் என்று நினைத்ததுமே அவர்கள் இடம் பெயர்ந்து வருவதற்குக் காரணம்.
ஆனால் விரைவிலேயே, அக்கம்பக்கத்தில் குழாய் தண்ணீர் இல்லையென்பதைக் கண்டனர். அதற்கு மாறாக, ஆழ்துளை கிணறு மூலம் நிலத்தடி நீரை உறிஞ்சி, குடிநீராகவும் குளிக்க மற்றும் பிற அன்றாடத் தேவைகளுக்கும் பயன்படுத்த வேண்டியிருந்தது.
பல ஆண்டுகலாக துவாரகாவிற்கு அதிகமான மக்கள் இடம் பெயர்ந்ததால், நூற்றுக்கணக்கான ஆழ்துனை கிணறுகள் தோண்டப்பட்டன. சில இடங்களில் 196 அடி ஆழம் வரைக்கும், மக்களும் பில்டர்களும் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஆழ்துளை கிணறுகளைத் தோண்டினர்.
“அடுக்குமாடி குடியிருப்புகள், சந்தைகள், பள்ளிகள் என்று அனைத்தும் காளான்களைப் போல் வளர்ந்தன. அனைவரும் நிலத்தடி நீரையே பயன்படுத்தினார்கள்,” என்று சின்ஹா நினைவு கூர்ந்தார்.
நிலத்தடி நீரை எடுக்கும்போது, அதற்கு மேலே இருக்கும் நிலம் கீழே போகும். இது நிலம் மண்ணுக்குள் புதைவதற்கு வழி வகுக்கிறது. துவாரகாவிலும் அப்படித்தான் நடப்பதாகப் பல ஆய்வுகள் காட்டுகின்றன.
நிலத்தடி நீர் குறைந்ததால், துவாரகாவின் நிலம் புதையத் தொடங்கியதாக அரசாங்க அறிக்கை கூறுகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக அறிக்கை 2014இல் மட்டும் அந்தச் சுற்றுப்புறம் சுமார் 3.5 செ.மீ குறைந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.
நிலத்தடி நீரை உறிஞ்சுவதைத் தடுப்பதற்கு குடியிருப்புவாசிகளும் அரசாங்கமும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்தனர்.
ஆழ்துளை கிணறுகளை மூடுவதற்காக, அரசாங்கம் மக்களுக்கு குழாய் மூலம் தண்ணீரை வழங்கத் தொடங்கியது. அதையும் மீறி அவற்றைப் பயன்படுத்தும் கட்டடங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு மக்கள் அந்தப் பகுதியின் நீர்மட்டத்தை அதிகரிப்பதற்காக மழைநீரைச் சேமிக்கத் தொடங்கினார்கள்.

பட மூலாதாரம், Getty Images
டெல்லியின் நிலத்தடி நீர்மட்டத்தை செயற்கைக்கோள் கண்காணிப்பு மூலம் ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர் ஷாகுன் கர்க், “தலைநகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சிலவற்றில் நிலம் கீழே புதைந்து வரும் நிலையில், துவாரகாவில் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் நிலம் மேலே எழுந்து வருவதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன,” எனக் கூறினார்.
துவாரகாவில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போகத் தொடங்கியபோது, டெல்லி அரசு அந்தப் பகுதிக்கு லாரியில் தண்ணீரை அனுப்பத் தொடங்கியது.
ஆனால், அந்தத் தண்ணீர் போதுமானதாக இருக்கவில்லை, விலையும் உயர்ந்தது. 2004ஆம் ஆண்டில், சின்ஹாவும் சக குடியிருப்புவாசிகளும், குழாய் மூலம் தண்ணீர் வழங்க வேண்டுமெனக் கோரி தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
அந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக மனுக்களில் கையெழுத்திட்டு, ஊர்வலம் சென்று மிரட்டினார்கள்.
அதிர்ஷ்டவசமாக, 2000ஆம் ஆண்டில் இருந்தே துவாரகாவிற்கு குழாய் நீர் வழங்குவதற்கான திட்டத்தை அரசு திட்டமிட்டு வந்தது. அந்தத் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு, 2011ஆம் ஆண்டு வாக்கில், ஒவ்வோர் அடுக்குமாடி கட்டடமும் குழாய் மூலம் தண்ணீரைப் பெறத் தொடங்கியது.

பட மூலாதாரம், Getty Images
2016ஆம் ஆண்டுக்குள், கிட்டத்தட்ட அனைத்து வீட்டு வசதி சங்கங்களும் ஆழ்துளை கிணறுகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன. அதோடு, நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதும் கணிசமாகக் குறைந்தது.
வல்லுநர்களின் கூற்றுப்படி, 100 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் உள்ள இரண்டு உள்ளூர் ஏரிகளும் இதனால் புத்துயிர் பெற்றன. அவை நிலத்தடி நீரை மீள்நிரப்புவதிலும் உதவின.
கழிவுநீர் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் பொது பூங்காக்கள், மைதானங்களுக்கு நீர்ப்பாசனம் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டது.
நிலத்தடி நீரின் அளவை அதிகரிப்பதற்கு 200 ஆண்டுகள் பழைமையான ‘நயா ஜோட்’ என்ற உள்ளூர் நீர்த்தேக்கத்தைப் புதுப்பிக்க மக்கள் ஒன்று கூடினார்கள். ஏரி கிட்டத்தட்ட முற்றிலுமாக வறண்டிருந்ததால், மழை பெய்யும்போது தண்ணீர் தேங்குவதற்கு உதவுவதற்காக அதிலிருந்த களைகளையும் வண்டல் மண்ணையும் அகற்றினார்கள்.
டெல்லி போன்ற குறைந்த மழைப்பொழிவைக் கொண்ட வறண்ட நகரங்களில், வண்டல் மண் நிறைய உள்ளது. இதனால், நிலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால், மழைநீர் சேகரிப்பு நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிப்பதற்குச் சிறந்த வழி என்கின்றனர் வல்லுநர்கள்.

பட மூலாதாரம், Getty Images
கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகமும் மும்பை ஐஐடியை சேர்ந்த ஆய்வாளர்களும் அடங்கிய குழு, சமீபத்தில் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி மேற்கொண்ட ஆய்வில் தலைநகரின் சுமார் 100 சதுர கி.மீ பரப்பளவு மண்ணில் புதைந்து வருகிறது என்றும் அதிகப்படியான நிலத்தடி நீரை உறிஞ்சியதுதான் அதற்கு முதன்மையான காரணம் என்றும் தெரிய வந்தது.
நகர திட்டமிடுதல் வல்லுநரான விகாஸ் கனோஜியா, “பழைய நீர்த்தேக்கங்களுக்குப் புத்தியிர் அளிப்பது, மழைநீரைச் சேகரிப்பது போன்ற நடவடிக்கைகள் நிலத்தடி நீரைச் சார்ந்திருப்பதைக் குறைக்க துவாரகாவுக்கு உதவியது. அது புதைந்துகொண்டிருந்த நிலத்தின் போக்கையே மாற்றியது.
இது டெல்லிக்கு மட்டுமின்றி இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் ஒரு முன்மாதிரி,” என்று கூறுகிறார்.
வேளாண் பொருளாதாரமாக இருப்பதால், அமெரிக்காவும் சீனாவும் இணைந்து பயன்படுத்தும் நீரின் அளவைவிட இந்தியா அதிகமான நிலத்தடி நீரைப் பயன்படுத்தும் நாடாக உள்ளது.
“இந்தியாவில் நிலத்தடி நீரை எடுக்கும் விகிதம் மழையால் நிரப்பப்படும் விகிதத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருப்பதால் நாட்டில் நிலம் மண்ணுக்குள் புதைவது அதிகரித்து வருகிறது,” என்கிறார் மனித குடியிருப்புகளுக்கான இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் கிருஷ்ணசாமி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












