ஹெச்1பி விசா: டிரம்பின் புதிய உத்தரவால் அமெரிக்காவில் சிறு நிறுவனங்கள் கவலை

ஹெச்1பி விசா, டிரம்ப், அமெரிக்கா, ஸ்டார்ட்அப், சிறு நிறுவனங்கள், இந்தியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, H-1B விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
    • எழுதியவர், டேனியல் கயே
    • பதவி, வர்த்தக செய்தியாளர்

கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஹெச்1பி விசா திட்டத்திதின் விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.88 லட்சம்) உயர்த்தும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டதும், அபிஷேக் சிங் உடனடியாக தான் வேறு இடத்திற்கு மாற வேண்டி வரும் எனக் கவலைப்பட்டார்.

சியாட்டில் பகுதியில் வசிக்கும் ஒரு மென்பொருள் பொறியியல் மேலாளரான சிங், இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனத்தால், தனது ஊதியத்துடன் சேர்த்து இந்த விசா கட்டணத்தையும் செலுத்த இயலாது என்பதை நன்றாகவே தெரிந்துவைத்துள்ளார்.

இவர் கடந்த 10 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறார். அதில் கடந்த 7 ஆண்டுகளாக ஹெச்1பி விசாவில் வசிக்கிறார். கடந்த சனிக்கிழமை வெள்ளை மாளிகை வெளியிட்ட விளக்கத்தால் சற்றே நிம்மதி அடைந்தார். ஏனென்றால் அந்தக் கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

கட்டண உயர்வின் விளைவு

ஹெச்1பி விசா, டிரம்ப், அமெரிக்கா, ஸ்டார்ட்அப், சிறு நிறுவனங்கள், இந்தியர்

பட மூலாதாரம், Abhishek Singh

படக்குறிப்பு, இந்தியாவை சேர்ந்த அபிஷேக் சிங் கடந்த 10 வருடங்களாக அங்கு வேலை செய்கிறார்.

ஆனால், இந்த மாற்றம் எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பது பற்றி அவர் கவலை கொள்கிறார். ஏனெனில் இது தொழில்கள், குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு புதிய சுமைகளை ஏற்படுத்துகிறது. இது பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சிலர் கூறுகின்றனர்.

ஹெச்1பி திட்டம் பொதுவாக அமெரிக்க தொழில்நுட்ப துறையுடன் தொடர்புள்ளது ஆகும். 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில், 10,000 க்கும் மேற்பட்ட H-1B விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் அமேசான் முதலிடம் பிடித்துள்ளது. மைக்ரோசாஃப்ட், மெட்டா, ஆப்பிள் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்களும் ஜூன் மாதத்திற்குள் தலா 4,000-க்கும் மேற்பட்ட விசாக்களை பெற்றுள்ளன.

இந்த நிறுவனங்கள் எதுவுமே இதுகுறித்து கேட்டபோது கருத்து தெரிவிக்கவில்லை.

ஆனால், வெறும் 30 நிறுவனங்கள், பெரும்பாலும் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இதில் ஆதிக்கம் செலுத்தி, கிடைக்கும் புதிய ஹெச்1பி விசாக்களில் சுமார் 40%-யை பெற்றிருந்தாலும், டிரம்பின் இந்த புதிய அறிவிப்பால் பாதிக்கப்படப் போவது இவர்கள் மட்டுமல்ல.

யாருக்கு பாதிப்பு?

ஹெச்1பி விசா, டிரம்ப், அமெரிக்கா, ஸ்டார்ட்அப், சிறு நிறுவனங்கள், இந்தியர்

பட மூலாதாரம், Karen Brady

படக்குறிப்பு, ரைத்தர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கரென் பிரேடி

ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமின்றி, தொழில்நுட்ப துறைக்கு அப்பாற்பட்ட சிறிய நிறுவனங்களும் ஹெச்1பி விசாக்கள் மூலம் பணியாளர்களை வேலைக்கு எடுக்கின்றன. அவர்களுக்கு, ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணத்தை செலுத்துவது என்பது பெரும் சுமையாக இருக்கும்.

"நீங்கள் ஒரு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்டார்ட் அப் நிறுவனம் வைத்திருந்து, உங்களிடம் வெஞ்சர் கேபிடல் பணம் (அதாவது முதலீட்டாளர்களின் நிதி) இருந்தாலும், அது விரைவில் கரைந்துவிடும் என்ற கவலையிருந்தால், இது உங்களை சிக்கலில் தள்ளும்" என சான் டியாகோவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில்) பணியாளர் வளர்ச்சியை ஆய்வு செய்யும் பேராசிரியர் ஜான் ஸ்க்ரென்ட்னி கூறினார்.

"ஒவ்வொரு நிறுவனமும் ஒரு விசாவுக்கு 1 லட்சம் டாலர் செலவு செய்ய முடியாது என்பதை டிரம்ப் நிர்வாகம் உணரவில்லை" என்றும் அவர் கூறினார்.

தொழில்நுட்பத் துறையைத் தாண்டி, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற துறைகளிலும் திறமை வாய்ந்த வெளிநாட்டு ஊழியர்கள் ஹெச்1பி விசா மூலம் வேலை பார்த்து வரும் நிலையில், இந்த கட்டண உயர்வு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலையும் எழுகிறது.

"எங்களால் எந்த விதத்திலும் 1 லட்சம் டாலர் செலவு செய்ய முடியாது" என சியாட்டில் நகரில் அமைந்துள்ள ரைத்தர் (Ryther) எனும் நடத்தை தொடர்பான ஆரோக்கிய சேவை வழங்கும் லாப நோக்கமற்ற அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி கரென் பிரேடி கூறினார்.

"இனி எதிர்காலத்தில் ஊழியர்களை தேர்நெதெடுக்கும் போது எங்களால் ஹெச்1பி விசாக்களை பயன்படுத்த முடியாது." எனக் கூறினார்.

சிக்கல்கள் என்ன?

ஹெச்1பி விசா, டிரம்ப், அமெரிக்கா, ஸ்டார்ட்அப், சிறு நிறுவனங்கள், இந்தியர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக பிரேடி கருதுகிறார்.

சியாட்டில் நகரத்தில் அமைந்துள்ள ரைத்தர் நிறுவனத்தில் தற்போது மொத்தம் 45 பணியாளர்கள் உள்ளனர். அவர்களின் சீனாவைச் சேர்ந்த இரு மனநல ஆலோசகர்கள் ஹெச்1பி விசாவில் வேலைக்கு அமர்த்தப்பட்டதாக பிரேடி தெரிவித்தார்.

இவர்கள் இல்லாவிட்டால், அதே பின்னணியிலிருந்து வரும் குடும்பங்களுடன் மொழி மற்றும் பண்பாட்டு அறிவுடன் தொடர்பு கொள்ளக் கூடிய பணியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

"எங்கள் வாடிக்கையாளர்களில் சிலரது தேவைகளுடன் அமெரிக்க ஊழியர்களைக் காட்டிலும் இவர்களே சிறப்பாக பொருந்தி போகிறார்கள். அதை நான் மாற்ற முடியாது." என்று அவர் கூறினார்.

பெரென்பெர்க் (Berenberg) என்ற ஒரு முதலீட்டு வங்கியின் பொருளாதார நிபுணர் அதகன் பகிஸ்கன், தனது ஆய்வறிக்கையில் அமெரிக்காவின் வளர்ச்சி மதிப்பீட்டை 2%-ல் இருந்து 1.5% ஆக குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

"புதிய ஹெச்1பி கொள்கையால், எதிர்காலத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காட்டிலும் குறைவதற்கான வாய்ப்பு அதிகம்" என்றார் அவர். "இது உற்பத்தித் திறனை கடுமையாக பாதிக்கும்." எனவும் கூறினார்.

சிறந்த தீர்வு என்ன?

ஹெச்1பி விசா, டிரம்ப், அமெரிக்கா, ஸ்டார்ட்அப், சிறு நிறுவனங்கள், இந்தியர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் அறிவிப்பை நெட்பிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ் பாராட்டியிருந்தார்.

தனது ஆணையில், கட்டண உயர்வை டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். ஹெச்1பி விசா திட்டத்தில் உள்ள சிக்கல்களை களைவதே இதன் குறிக்கோள் எனக் கூறினார். இது, பல்வேறு அரசியல் வட்டாரங்களில் நீண்டகாலமாக நிலவி வந்த ஒரு கவலை ஆகும். நிறுவனங்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி வெளிநாட்டு ஊழியர்களை குறைந்த ஊதியத்தில் வேலைக்கு எடுப்பதை தடுக்கும் வழி எனவும் அவர் கூறினார்.

ஆண்டுதோறும் சுமார் 85,000-க்கும் அதிகமாக புதிய விசாக்களுக்கான விண்ணப்பங்கள் வரக்கூடிய இந்தத் திட்டத்தில், பெரிய அளவிலான மாற்றங்களை மேற்கொள்ள டிரம்ப் நிர்வாகம் முயல்கிறது. அதில், அதிக ஊதியம் வழங்கும் பணியாளர்களின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமும் அடங்கும்.

டிரம்பின் இந்த அறிவிப்புக்கு சிலர் பராட்டு தெரிவித்தனர். அதில், இந்தக் கட்டண உயர்வை 'சிறந்த தீர்வு' எனக் குறிப்பிட்ட நெட்பிளிக்ஸ் இணை நிறுவனர் ரீட் ஹேஸ்டிங்ஸ்-ம் ஒருவர்.

"இவர்கள் உண்மையிலேயே சிறப்பு திறன்களைக் கொண்டவர்கள் என்றால், ஒரு ஊழியருக்கு 1 லட்சம் டாலர் என்பது இவர்களுக்கு பெரிய பிரச்னையாக இருக்காது" என அமெரிக்க குடியேற்றக் கொள்கையில் கவனம் செலுத்தும் ஹோவர்ட் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியர் ரோநில் ஹிரா தெரிவித்தார்.

"திறமையான ஊழியர்களை பணியமர்த்தும் நடைமுறை சிக்கலானதாக மாறும்போது, அதே திறன் உள்ள அமெரிக்க பணியாளர்களை வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக தொழிலை வேறு நாட்டிற்கு மாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது" என்று கொலம்பியா பிஸினஸ் ஸ்கூல் பேராசிரியர் டான் வாங் கூறினார். இவர் உலகளாவிய குடியேற்றமும் தொழில்முனைவுறுதியும் என்பது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.

"உண்மையில் இந்தக் கொள்கைகள் வேலைவாய்ப்பில் அமெரிக்க தொழிலாளர்கள் போட்டியிட உதவுவதில்லை. இதனால் அவர்கள் பயனடைகிறார்கள் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை" என்று பேராசிரியர் வாங் கூறுகிறார்.

கிளாஸ்கோ குடியேற்றச் சட்டக் கூட்டாளர்கள் (Klasko Immigration Law Partners) என்ற நிறுவனத்தில் கார்பரேட் குடியேற்ற நடைமுறைக்கான இணைத் தலைவராக உள்ள எலிஸ் ஃபியால்கோவ்ஸ்கி, மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களோடு மட்டுமின்றி பெரிய நிறுவனங்களுடனும் பணிபுரிகிறார்.

தனது பெருநிறுவன வாடிக்கையாளர்களில் ஏற்கனவே அமெரிக்காவிற்கு வெளியே துணை நிறுவனங்களையோ அல்லது கிளை அலுவலகங்களையோ கொண்டுள்ளவர்கள், கடந்த வாரம் முதல் கனடா, பிரிட்டன் என பிற நாடுகளில் உள்ள திறமைசாலிகளை பணியமர்த்துவது தொடர்பாக முடிவு செய்துள்ளதாக அவர் கூறுகிறார்.

ஹெச்1பி விசா, டிரம்ப், அமெரிக்கா, ஸ்டார்ட்அப், சிறு நிறுவனங்கள், இந்தியர்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

"டிரம்பின் இந்த புதிய அறிவிப்பு பெரும்பாலான நிறுவனங்களை தங்களின் வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்ற வழிவகுக்கும்" என்று அவர் கூறினார்.

இப்போது தற்காலிகமான நிம்மதி கிடைத்திருந்தாலும், தனது சொந்த நாடான இந்தியாவிலோ, கனடா, ஜப்பான், தென் கொரியா போன்ற பிற நாடுகளிலோ வேலை கிடைத்தால் தனது ஸ்டார்ட்அப்பை விட்டு வெளியேறுவது குறித்து சிங் பரிசீலித்து வருகிறார். டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறுபவர்களுக்கு எதிரான கொள்கைகளை கடுமையாக்கும் என்ற அச்சமும் அவருக்கு உள்ளது.

"இப்போது ஒரு வகையான நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்" என்று சிங் கூறினார்.

"எங்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினால், எங்களுக்கு இதைத்தவிர வேறு வழியில்லை." என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு