லெபனான் மற்றொரு காஸாவாக மாறுகிறதா? இஸ்ரேலிய தாக்குதலின் நோக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெரிமி போவன்
- பதவி, சர்வதேச விவகாரங்கள் ஆசிரியர், பிபிசி நியூஸ்
ஹெஸ்பொலா மீதான தாக்குதலால் இஸ்ரேல் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். வாக்கி-டாக்கி மற்றும் பேஜர் வெடிப்பில் தொடங்கிய இத்தாக்குதல், தற்போது தீவிரமான வான்வழித் தாக்குதல்களாக உருவெடுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 23) நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் அதற்குப் பாராட்டு தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், “இன்று (செப்டம்பர் 23) நடந்தது மிகப்பெரிய சாதனை. ஹெஸ்பொலா உருவானதிலிருந்து இந்த வாரம் அதற்கு மிக மோசமான வாரமாக அமைந்தது. அதையே இந்தத் தாக்குதலின் முடிவுகள் உணர்த்துகின்றன,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “வான்வழித் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகள் அழிக்கப்பட்டன,” என்றார்.
இந்நிலையில், இஸ்ரேலியத் தாக்குதல்களில் 50 குழந்தைகள் உட்பட 550 பேர் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 2006-இல் இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொலாவுக்கும் இடையே ஒரு மாதமாக நீடித்த போரில் லெபனானில் உயிரிழந்தவர்களில் கிட்டத்தட்ட பாதியாகும்.

லெபனான் எப்படி வேறுபட்டது?
இத்தகைய தீவிரமான நடவடிக்கைகள் மூலமாக தங்களின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு ஹெஸ்பொலாவை கட்டாயப்படுத்த முடியும் என இஸ்ரேல் நம்புகிறது. ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் இரானில் உள்ள அவரது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்கள், எதிர்ப்பின் விலை மிக அதிகம் என்று முடிவு செய்யும் அளவுக்கு இஸ்ரேல் பாதிப்புகளை ஏற்படுத்த விரும்புகிறது.
இஸ்ரேல் தலைவர்களுக்கும் ராணுவத் தளபதிகளுக்கும் வெற்றி அவசியமாக இருக்கிறது. காஸாவில் ஓராண்டாக நடைபெற்று வரும் போர் சிக்கலானதாக உள்ளது. ஹமாஸ் குழுவினர் சுரங்கப்பாதைகளிலிருந்து வெளிவந்து, இஸ்ரேல் படையினரை கொல்கின்றனர், காயம் ஏற்படுத்துகின்றனர். இஸ்ரேல் பணயக்கைதிகளை ஹமாஸ் இன்னும் விடுவிக்கவில்லை.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் இஸ்ரேலை ஆச்சர்யப்படுத்தியது. அதற்கு முன்பு, இஸ்ரேலியர்கள் ஹமாஸை பெரிய அச்சுறுத்தலாக கருதாததால், அது அழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தியது.
ஆனால், லெபனான் வேறுபட்டது.
இஸ்ரேல் பாதுகாப்புப் படை, மற்றும் மொசாட் உளவு முகமை 2006-இல் போர் நடைபெற்றதிலிருந்து ஹெஸ்பொலா மீது போர் தொடுக்கத் தயாராகிவருகிறது.
தற்போது நடைபெறும் தாக்குதல் ஹெஸ்பொலாவிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தங்கள் இலக்கை அடைய உதவும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார்.
இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள் ஏவுவதை ஹெஸ்பொலா நிறுத்த வேண்டும் என நெதன்யாகு விரும்புகிறார். எல்லையிலிருந்து ஹெஸ்பொலாவைத் திருப்பி அனுப்ப விரும்புவதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. மேலும், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ராணுவத் தளங்களை அழிக்கவும் இஸ்ரேல் ராணுவம் விரும்புகிறது.

பட மூலாதாரம், Getty Images
மற்றொரு காஸாவா?
லெபனானில் கடந்த வாரம் நடந்த சம்பவங்கள், ஓராண்டுக்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவூட்டின. காஸாவில் தாக்குதல் நடைபெறும் இடங்களிலிருந்து வெளியேறுமாறு எச்சரித்தது போன்று தற்போதும் இஸ்ரேல் எச்சரித்தது. குடிமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படுவதாக ஹமாஸ் மீது சுமத்திய குற்றச்சாட்டையே தற்போது ஹெஸ்பொலா மீதும் இஸ்ரேல் சுமத்துகிறது.
இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் முறையாக வழங்கவில்லை எனவும் குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற போதிய நேரம் வழங்கவில்லை என்றும் இஸ்ரேலின் எதிரிகளும் விமர்சகர்களும் கூறுகின்றனர். ஒரு நாட்டின் குடிமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், ராணுவ பலத்தை கண்மூடித்தனமாக உபயோகிக்கக் கூடாது எனவும் போர் விதிகள் கூறுகின்றன.
ஹெஸ்பொலாவின் சில தாக்குதல்களில் இஸ்ரேலில் உள்ள குடியிருப்புப் பகுதிகளும் குறிவைக்கப்பட்டன. இது குடிமக்களைப் பாதுகாப்பதற்கான விதிமுறைகள மீறுவதாக இருந்தது. ஹெஸ்பொலா இஸ்ரேல் ராணுவத்தையும் குறிவைத்தது. இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஹெஸ்பொலாவை பயங்கரவாத அமைப்பாகக் கருதுகின்றன.
தங்களது ராணுவம் போர் விதிமுறைகளைக் கடைபிடிப்பதாக இஸ்ரேல் வலியுறுத்திக் கூறுகிறது. ஆனால், காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக உலகின் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. எல்லையில் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதால், இப்பிரச்னை இன்னும் தீவிரமாகியுள்ளது.

பட மூலாதாரம், Reuters
பேஜர் தாக்குதல்கள் உணர்த்துவது என்ன?
சமீபத்திய பேஜர் தாக்குதலை எடுத்துக்கொள்வோம்.
ஹெஸ்பொலாவைச் சேர்ந்தவர்களது பேஜர்களைக் குறிவைப்பதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், பேஜர்கள் வெடிக்கும்போது அருகே யார் இருப்பார்கள் என்பது இஸ்ரேலுக்குத் தெரியவில்லை. அதனால்தான் வீடுகளில் இருந்த குழந்தைகள், கடைகள், மற்றும் பொது இடங்களில் இருந்த மக்கள் ஆகியோர் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர்.
ஹெஸ்பொலா படையினர் மற்றும் பொதுமக்களுக்கிடையே வித்தியாசத்தை உணராது இஸ்ரேல் கொடிய தாக்குதலை நடத்துவதாகவும் இது போரின் விதிகளுக்கு எதிரானது என்றும் பிரபல வழக்கறிஞர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
ஹெஸ்பொலா மற்றும் இஸ்ரேலுக்கு இடையேயான மோதல், 1980-களில் துவங்கியது. ஆனால், சமீபத்திய எல்லை போர் 2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பின்னர் துவங்கியது. ஹமாஸுக்கு ஆதரவாகக் கட்டுப்படுத்தப்பட்ட, ஆனால் தினசரித் தாக்குதலுக்கு ஹசன் நஸ்ரல்லா உத்தரவிட்டதால், இஸ்ரேல் ராணுவம் சிக்கல்களை எதிர்கொண்டது. இதனால், எல்லைப்பகுதியில் வசிக்கும் சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த காலப் படையெடுப்புகள்
சமீபத்திய தாக்குதல்களின் தாக்கத்தை 1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுடன் சில இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர்புப்படுத்துகின்றன. 1967-இல் இஸ்ரேல் எகிப்து மீது திடீரென தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் எகிப்து வான் படை மோசமாக பாதிக்கப்பட்டது. அதன் விமானங்கள் அழிக்கப்பட்டன. இஸ்ரேல், அடுத்த ஆறு நாட்களில், எகிப்து, சிரியா மற்றும் ஜோர்டானை தோற்கடித்தது. இந்த வெற்றி தற்போதைய நெருக்கடிக்கு வடிவம் கொடுத்துள்ளது. அதன்பின் இஸ்ரேல் மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம், காஸா முனை மற்றும் கோலன் குன்றுகளை ஆக்கிரமித்தது.
இது சரியான ஒப்பீடு அல்ல. லெபனான் மற்றும் ஹெஸ்பொலாவுடனான போர் இரண்டும் வெவ்வேறானவை. இஸ்ரேல் கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. ஆனால், இன்றுவரை ஹெஸ்பொலாவின் தாக்கும் திறனை தடுத்து நிறுத்தவில்லை.
இஸ்ரேல் மற்றும் ஹெஸ்பொலாவுடனான கடந்த காலப் போர்களில் இருதரப்பிலும் உறுதியான வெற்றி இல்லை. சமீபத்திய போரிலும் அப்படித்தான் இருக்கும். எனினும், இஸ்ரேல், அதன் உளவு முகமைகள் மற்றும் ராணுவம் ஆகியவை கடந்த வாரத் தாக்குதல்களால் திருப்தியடைந்துள்ளன.
ஹெஸ்பொலா தோற்கடிக்கப்பட்டு, எல்லையிலிருந்து பின்வாங்கி, இஸ்ரேல் மீதான சண்டையை நிறுத்தும் என்ற அனுமானம் அல்லது ஒரு சூதாட்டத்தின் அடிப்படையிலேயே இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்துகிறது. இப்பிரச்னையை உற்றுநோக்கும் பலரும் ஹெஸ்பொலா சண்டையை நிறுத்தாது என நம்புகின்றனர். இஸ்ரேல் உடனான சண்டையே ஹெஸ்பொலாவின் இருப்புக்கு முக்கிய காரணமாகும்.

பட மூலாதாரம், Getty Images
ஹெஸ்பொலா பணியாவிட்டால் என்ன நடக்கும்?
ஹெஸ்பொலா இதை நிறுத்தாவிட்டால் போருக்கான வாய்ப்பை இஸ்ரேல் இன்னும் விரிவாக்கும். மற்றொரு புறம், ஹெஸ்பொலா வடக்கு இஸ்ரேலில் தங்கள் தாக்குதல்கள் மூலம் இஸ்ரேல் மக்களை மீண்டும் அப்பகுதிக்கு திரும்பிவருவதை அனுமதிக்காது. அப்போது, தரைவழி மூலம் தாக்குதல் நடத்துவது குறித்து நெதன்யாகு ராணுவம் முடிவுசெய்யும். ஒருவேளை, இஸ்ரேல் ராணுவம் அதன் ஒருபகுதியை கூட கைப்பற்றலாம்.
இதற்கு முன்பும் லெபனானில் இஸ்ரேல் நுழைந்துள்ளது. கடந்த 1982-ம் ஆண்டில் இஸ்ரேலுக்குள் பாலத்தீன தாக்குதல் நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் பொருட்டு, இஸ்ரேல் படைகள் பெய்ரூட் வரை சென்றது. பின்னர் இஸ்ரேலின் லெபனான் கூட்டாளிகள் பெய்ரூட்டின் சப்ரா மற்றும் ஷாதிலா அகதிகள் முகாம்களில் பாலத்தீன மக்களை படுகொலை செய்தனர். இந்த நடவடிக்கை பரவலாக விமர்சிக்கப்பட்டதையடுத்து, இஸ்ரேல் ராணுவம் பின்வாங்க வேண்டியிருந்தது.
லெபனான் எல்லைக்கு அருகே உள்ள பகுதியின் பெரும்பரப்பை 1990-ம் ஆண்டு வரை இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமித்தது. தற்போது இஸ்ரேல் ராணுவத்தில் ஜெனரல்களாக உள்ளவர்கள் அப்போது இளம் வீரர்களாக இருந்தனர். அவர்கள் ஹெஸ்பொலாவுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டனர். அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எஹுட் பராக் 2000-ம் ஆண்டில் ராணுவத்தை அங்கிருந்து திரும்ப பெற முடிவு செய்தார். அப்பகுதியில் நீடித்திருப்பது இஸ்ரேலுக்கு நல்லதல்ல என்றும் இதற்காக அதிக எண்ணிக்கையிலான இஸ்ரேல் வீரர்கள் தங்கள் உயிர்களை இழப்பதாகவும் கருதினார்.
கடந்த 2006-ம் ஆண்டு இஸ்ரேலிய துருப்புகள் அதிகம் இருந்த எல்லைப் பகுதியை ஹெஸ்பொலா தாக்கியது. இஸ்ரேல் வீரர்கள் பலர் இதில் இறந்தனர், சிலர் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். போர் முடிவடைந்த பின்னர், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் என தான் முன்பே அறிந்திருந்தால் இந்த சண்டையை அனுமதித்திருக்க மாட்டேன் என நஸ்ரல்லா கூறியிருந்தார். அதன்பின், அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எமுட் அல்மெர்ட் போரை அறிவித்தார்.
இஸ்ரேல் மீதான ராக்கெட் தாக்குதல்களை தங்களின் வான்படை மூலம் தடுத்து நிறுத்த முடியும் என முதலில் இஸ்ரேல் நம்பியது. ஆனால், அது நடக்காத போது, டேங்க்குகளும் படையினரும் நிலைநிறுத்தப்பட்டனர். அந்த போர் லெபனான் மக்களுக்கு பேரழிவை ஏற்படுத்தியது. ஆனால், போரின் கடைசி நாளில் ஹெஸ்பொலா இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.
ஹெஸ்பொலாவின் பலம்
காஸாவைக் கடப்பதை விட, சரமாரியான ராக்கெட்டுகளின் மத்தியில் லெபனானைக் கடப்பது ஒரு பெரிய ராணுவ சவாலாக இருக்கும் என்பதை இஸ்ரேலிய தளபதிகள் அறிவார்கள். ஹெஸ்பொலாவும் 2006 முதல் திட்டங்களை வகுத்து வருகிறது. அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் சண்டையிடுவார்கள். தெற்கு லெபனானின் மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் நிலைமைகள் ஹெஸ்பொலாவுக்கு சாதகமாக இருக்கும். அதன் மலைப்பாங்கான நிலப்பரப்பு கொரில்லா உத்திக்கு ஏற்றதாக உள்ளது.
காஸாவில் ஹமாஸின் அனைத்து சுரங்கப்பாதைகளியும் இஸ்ரேலால் அழிக்க முடியவில்லை. தெற்கு லெபனானின் எல்லைப் பகுதிகளில், ஹெஸ்பொலா கடந்த 18 ஆண்டுகளாக திடமான பாறைகளின்வழி சுரங்கப்பாதைகளை அமைத்து வருகிறது. ஹெஸ்பொலா இரானால் வழங்கப்பட்ட ஒரு வலிமையான ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டுள்ளது. காஸாவில் உள்ள ஹமாஸ் போலல்லாமல், சிரியா வழியாக ஆயுதங்களை மீண்டும் அவற்றுக்கு வழங்கமுடியும்.
வாஷிங்டன் டிசியில் உள்ள சிந்தனை மையமான ஸ்டிராட்டஜிக் அண்ட் இண்டர்நேஷனல் ஸ்டடீஸ் மையம், ஹெஸ்பொலாவிடம் 30,000 பேர் செயலில் இருப்பதாகவும் 20,000 பேர் தயார்நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கிறது. இவர்களுள் பெரும்பாலானோர் தரைப்படையின் சிறிய பிரிவுகளாக பயிற்சி பெற்றுள்ளனர். மேலும், பலருக்கு போரில் நல்ல அனுபவம் உள்ளது. இந்த மக்கள் அசாத் ஆட்சிக்கு ஆதரவாக சிரியாவில் சண்டையிட்டுள்ளனர்.
ஹெஸ்பொலாவிடம் 1.2 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் இருப்பதாக பெரும்பாலான மதிப்பீடுகள் கூறுகின்றன. பல இஸ்ரேலிய நகரங்களை சேதப்படுத்தும் ஆயுதங்களும் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலிய விமானப்படை காஸாவிற்கு செய்ததை லெபனானுக்கு செய்து விடுமோ என்று பயந்து, மொத்த நகரங்களையும் இடிபாடுகளாக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்களைக் கொன்றுவிடுமோ என்ற அச்சத்தில், ஹெஸ்பொலா அந்த அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தாது என்று இஸ்ரேல் இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம். லெபனான் ஆயுதங்களைப் பயன்படுத்துவதை இரான் விரும்பவில்லை. இரான் தனது அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தைக் கருத்தில் கொண்டு இந்த ஆயுதங்களை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்புகிறது.
இது மற்றொரு சூதாட்டம். இந்த ஆயுதங்களை இஸ்ரேல் அழிக்கும் முன் ஹெஸ்பொலா அவற்றை பயன்படுத்த நினைக்கலாம்.
காஸாவில் நடந்து வரும் தாக்குதல்கள் மற்றும் மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறைகளுக்கு மத்தியில் இஸ்ரேல் லெபனானுக்குள் நுழைந்தால், அது மூன்றாவது போர்முனையைத் திறக்கும். இஸ்ரேலிய வீரர்கள் உந்துதல் பெற்றவர்களாகவும், நன்கு பயிற்சி பெற்றவர்களாகவும், ஆயுதம் ஏந்தியவர்களாகவும் இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒரு வருடப் போரினால் சோர்ந்து போயிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
அமைதியான தீர்வை அடைவதில் உள்ள சவால்கள்
அமெரிக்கா தலைமையிலான இஸ்ரேலின் நட்பு நாடுகள், ஹெஸ்பொலாவுடனான இஸ்ரேலின் போரை அதிகரிக்க விரும்பவில்லை. இந்த நாடுகளும் லெபனானுக்குள் நுழைவதற்கு ஆதரவாக இல்லை. ராஜதந்திர வழிமுறைகள் மூலம் மட்டுமே எல்லைகளைப் பாதுகாக்க முடியும், குடிமக்கள் நாடு திரும்ப முடியும் என்று இந்த நாடுகள் வலியுறுத்துகின்றன. 2006-இல் நடைபெற்ற போரை முடிவுக்குக் கொண்டு வந்த ஐ.நா பாதுகாப்பு தீர்மானம் 1701-இன் அடிப்படையில் அமெரிக்கத் தூதுவர் ஒருவர் ஒப்பந்தம் ஒன்றை தயாரித்துள்ளார்.
ஆனால், காஸாவில் போர் நிறுத்தம் இல்லாததால், ராஜதந்திர ரீதியான அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளன. காஸாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்படும்போதுதான் ஹெஸ்பொலாவும் தாக்குதலை நிறுத்தும் என்கிறார் நஸ்ரல்லா. தற்போது, இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், பாலத்தீனக் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், காஸாவில் போர்நிறுத்தம் செய்வதற்குமான உடன்படிக்கைக்கு இஸ்ரேலும் ஹமாஸும் உடன்படவில்லை.
ஏற்கனவே பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கும் லெபனானின் சாமானிய குடிமக்களின் வேதனை, இஸ்ரேலின் தாக்குதல்களால் மேலும் அதிகரித்துள்ளது. எல்லையில் இருபுறமும் அச்சம் நிலவுகிறது. ஹெஸ்பொலா கடந்த ஆண்டை விட அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது என்பது இஸ்ரேலியர்களுக்கும் தெரியும்.
ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுத்து எல்லையில் இருந்து ஹெஸ்பொலாவை பின்னுக்குத் தள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று இஸ்ரேல் நம்புகிறது. ஆனால் இஸ்ரேல், திறம்பட ஆயுதம் ஏந்திய, சினம் கொண்ட படைகளை எதிர்கொள்கிறது. ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பின்னர் கடந்த ஒரு வருடத்தில் ஏற்பட்டுள்ள மிக ஆபத்தான நெருக்கடி இதுவாகும். தற்போது நிலைமை மோசமடைவதைத் தடுக்க யாராலும் முடியாது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












