நிற வேறுபாட்டை சுட்டிக்காட்டி இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்ட திருமண ஜோடி என்ன சொல்கிறது?

ரிஷப்- சோனாலி, திருமணம், சமூக ஊடகங்கள், இனவெறி, இந்தியா

பட மூலாதாரம், Rishabh and Sonali's family

படக்குறிப்பு, ரிஷப் ராஜ்புத் மற்றும் சோனாலி சௌக்ஸியின் திருமண காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது
    • எழுதியவர், விஷ்ணுகாந்த் திவாரி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மத்திய பிரதேசம் மாநிலம், ஜபல்பூரில் ஒரு அமைதியான மதிய வேளை. ​​வீட்டின் சோபாவில் அமர்ந்து, ரிஷப் ராஜ்புத்தும் சோனாலி சௌக்ஸியும் தங்கள் திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு ஆன்லைனில் வைரலான ஒரு காணொளியை மீண்டும் மீண்டும் பார்க்கிறார்கள்.

நவம்பர் 23-ஆம் தேதி நடந்த அவர்களின் திருமணத்தின் 30 வினாடி காணொளியை ரிஷப்பின் சகோதரி பதிவு செய்தார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த காணொளி வைரலாகி, எண்ணற்ற வாட்ஸ்அப் குழுக்களிலிருந்து மீம் பக்கங்களுக்குப் பரவியது.

அப்படி வைரலான பதிவுகளில் திருமண வாழ்த்துகள் கூறப்படவில்லை, ஆனால் ரிஷப் மற்றும் சோனாலியின் தோல் நிறம் குறித்த கருத்துகள் இருந்தன. இருவரும் ட்ரோல் செய்யப்பட்டனர்.

ஆனால், ரிஷப் மற்றும் அவரது குடும்பத்தினர் இதையெல்லாம் அறியாமல், திருமணத்திற்குப் பிந்தைய சடங்குகளில் மும்முரமாக இருந்தனர்.

ஒரு சடங்கின் நடுவில், அண்டை வீட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வந்து தனது தாயிடம், "உங்கள் மகன் காணொளி வைரலாகி வருகிறது, மீம்ஸ்களும் உருவாக்கப்படுகின்றன" என்று கூறியதாக ரிஷப் கூறுகிறார்.

"முதலில் நான் அதை ஒரு 'ஜோக்' என்றும், யாரோ ஒருசிலர் இதைப் பகிர்ந்து கொண்டிருக்கலாம், அதனால் என்ன என்றும் நினைத்தேன். ஆனால் நான் என் ஸ்மார்ட்போனில் அந்தப் பதிவுகளைப் பார்த்தபோது, ​​அதிர்ச்சியடைந்தேன்" என்கிறார் ரிஷப்.

மொபைல் திரையில் தோன்றிய 'கமென்டுகள்', அங்கிருந்த சூழலை மாற்றியதாக குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

"அந்த காணொளியில் மிகத் தெளிவாகத் தெரிவது இரண்டு பேர் மகிழ்ச்சியாக உள்ளார்கள் என்பது, ஆனால் எங்கள் மகிழ்ச்சி ஆன்லைனில் இருப்பவர்களுக்குத் தெரியவில்லை. சமூக ஊடகங்களின் செயற்கை உலகில், 11 ஆண்டுகளாக நாங்கள் கண்ட கனவு, எங்கள் காதல் எல்லாம் எங்கோ மறைந்துவிட்டது. எல்லோரும் எங்கள் தோல் நிறத்தில் மட்டுமே கவனம் செலுத்தினார்கள்" என்றார் சோனாலி.

சோனாலி - ரிஷப் இருவருக்கும் 'ஜோடிப் பொருத்தமில்லை' என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டன. மணமகன் கருப்பு நிறமாகவும், மணமகள் வெள்ளை நிறமாகவும் இருப்பதாகவும், இதுவொரு 'விசித்திர' திருமணம் எனவும் சிலர் குறிப்பிட்டிருந்தனர்.

"எங்கள் தோலின் நிறம் ஒரு பிரச்னையாக இருக்கலாம் என்று எங்கள் சுற்றத்தார் யாரும் இதுவரை எங்களிடம் கூறியதில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் உலா வரும் மக்களின் சிந்தனையைப் பார்த்தபோது, ​​இணைய உலகம் எவ்வளவு பொய்யானது என்பதை முதல்முறையாக உணர்ந்தோம். நாங்கள் 11 வருடங்களாக எதிர்பார்த்து, காத்திருந்த தருணத்தை, இணையத்தில் உள்ளவர்கள் கேலி செய்தனர்" என்று ரிஷப் கூறுகிறார்.

ரிஷப்- சோனாலி, திருமணம், சமூக ஊடகங்கள், இனவெறி, இந்தியா

பட மூலாதாரம், Rishabh Rajput and Sonali Chouksey

படக்குறிப்பு, சோனாலி - ரிஷப் இருவருக்கும் 'ஜோடிப் பொருத்தமில்லை' என்று சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டன.

சமூக ஊடகங்களில் தொடங்கிய ஊகங்கள்

ஆனால் தோலின் நிறம் பற்றிய கருத்துகள் வந்தது என்பது இந்த பிரச்னையின் முதல் அத்தியாயம் மட்டுமே.

அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் ரிஷப் பற்றி பல்வேறு ஊகங்களும் நகைச்சுவையான பதிவுகளும் வரத் தொடங்கின. சிலர் அவர் மிகவும் பணக்காரராக இருக்க வேண்டும் என்று பதிவிட்டனர், மற்றவர்கள் அவருக்கு ஐந்து பெட்ரோல் பம்புகள் இருக்கலாம் அல்லது அவர் ஒரு அமைச்சரின் மகனாக இருக்கலாம் என்று கூறினர்.

'மணமகனுக்கு அரசாங்க வேலை இருக்கும், அதனால் தான் இந்தப் பெண் அவரை மணந்துள்ளார்' என்று கூட பலர் சொன்னார்கள்.

ஆனால் உண்மையில், பட்டதாரிகளான சோனாலியும் ரிஷப்பும் தனியார் துறையில் வேலை செய்கிறார்கள்.

"நான் பணத்திற்காக இவரை திருமணம் செய்துகொண்டேன் என்றும், ஏதோ கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டேன் என்றும் சிலர் பதிவிட்டனர். இதையெல்லாம் கேட்டதும் எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மிகவும் வருத்தமடைந்தனர்" என்று சோனாலி கூறுகிறார்.

"நாடு முழுவதும் உள்ள அந்நியர்களால், சோனாலியும் நானும் பகிரங்கமாக கேலி செய்யப்பட்டோம். நாட்டின் நிற வெறி மனநிலை வெளிப்பட்டது" என்கிறார் ரிஷப்.

"என்னை மட்டுமல்ல, என் குடும்பத்தினரையும் மக்கள் குறிவைக்கத் தொடங்கியது மிகவும் வேதனையான விஷயம். வைரலான புகைப்படங்கள் மற்றும் காணொளியில் என் அம்மா, சகோதரிகள் மற்றும் உறவினர்களும் இருந்தனர். அவர்களும் ஆன்லைனில் ஆபாச கருத்துகளின் தாக்குதலுக்கு ஆளாயினர்," என்று ரிஷப் கூறுகிறார்.

"ட்ரோல் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, இது சில பார்வைகளைப் (Views) பெறுவதற்கான ஒரு வழியாகும். ஆனால் அது பலரின் வாழ்க்கையையும் எங்கள் தனியுரிமையையும் பாதித்தது" என்று சோனாலி கூறுகிறார்.

வைரலான காணொளிக்குப் பின்னால், தங்களது '11 வருட காதல் புறக்கணிக்கப்பட்டது' என்று அவர் கூறுகிறார்.

காணொளி வைரலானாலும், இருவரின் உண்மைக் கதை முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை.

ரிஷப்- சோனாலி, திருமணம், சமூக ஊடகங்கள், இனவெறி, இந்தியா

பட மூலாதாரம், Rohit Lohia/ BBC

படக்குறிப்பு, ரிஷப் ராஜ்புத் மற்றும் சோனாலி சௌக்ஸி நவம்பர் 23-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் சந்தித்தது எப்படி?

தானும் சோனாலியும் 2014ஆம் ஆண்டு கல்லூரியில் சந்தித்ததாக ரிஷப் கூறுகிறார்.

"2015 ஆம் ஆண்டு, நான் சோனாலியிடம் காதலைச் சொன்னேன். பத்து நாட்களுக்குப் பிறகு அவள் சம்மதம் தெரிவித்தாள். நாங்கள் எதிர்காலத்தில் திருமணம் செய்து கொள்வோம் என்று அன்றே எங்களுக்குத் தெரியும். இப்போது வைரலானது வெறும் முப்பது வினாடி காணொளி அல்ல, எங்கள் 11 வருட பயணத்தின் பலன். நாங்கள் 11 வருடங்களாக கண்ட கனவு நனவான தருணம் அது."

திருமண உறவின் அடித்தளம் நிறத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல, மாறாக இருவரது குணங்கள் மற்றும் பரஸ்பர மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. சோனாலியின் பணிவு, கடின உழைப்பு, வாழ்க்கையைப் பற்றிய பார்வை ஆகியவை தன்னை ஈர்த்ததாக ரிஷப் கூறுகிறார்.

"என்னைப் பொறுத்தவரை, ஒரு திருமணம்/காதல் உறவு என்பது ஒரு வாழ்க்கைத்துணை அல்லது காதலர் ஒரு பெண்ணை எப்படி நடத்துகிறார், எவ்வளவு மரியாதை கொடுக்கிறார், அவர் தன் வாழ்க்கையில் அந்தப் பெண்ணிற்கு எவ்வளவு இடம் கொடுக்கிறார் என்பதைப் பொறுத்தது" என்று சோனாலி கூறுகிறார்.

"எங்களது உறவில் எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது பாசாங்குத்தனமோ இல்லை. இது என்னுடைய சொந்த முடிவு. இந்த முடிவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்கிறார் சோனாலி.

ரிஷப்- சோனாலி, திருமணம், சமூக ஊடகங்கள், இனவெறி, இந்தியா

பட மூலாதாரம், Rohit Lohia/ BBC

படக்குறிப்பு, சமூக ஊடகங்களில் செய்யப்படும் ட்ரோல்கள் குறித்து ரிஷப் மற்றும் சோனாலி பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

'நிறவெறி சமூகம்'

இணையத்தில் அதிகம் பேசப்பட்ட தலைப்பு நிறவெறி. இந்தியாவின் சமூக அமைப்பில் பரவியுள்ள இந்தப் பாரபட்சம் டிஜிட்டல் உலகிலும் சம அளவில் கவனிக்கத்தக்கதாக உள்ளது.

"இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், 70 முதல் 80 சதவிகித மக்கள் கருமையான சருமம் கொண்டவர்களாக இருந்தாலும், வெள்ளை நிறம் இன்னும் உயர்ந்ததாகக் கருதப்படுவது வருத்தமளிக்கிறது. ஒருவரின் நிறத்தைப் பார்த்து அவரது குணம் அல்லது நடத்தையை தீர்மானிக்க முடியுமா?" என ரிஷப் கேள்வியெழுப்புகிறார்.

இந்தக் கருத்தை வலியுறுத்திப் பேசும் சோனாலி, "பல நேரங்களில் மக்கள் 'வெள்ளைத் தோல்' கொண்ட ஒரு நபர் சிறந்தவராக இருப்பார் என்றும், ஒரு கருப்பான நபர் மோசமானவராக இருப்பார் என்றும் கருதுகிறார்கள். ஆனால் ஒரு உறவில் மிக முக்கியமான விஷயம் அந்த நபரின் நடத்தை, அவரது நல்லுள்ளம் மற்றும் அவரது நோக்கங்கள்" என்கிறார்.

"எங்களுடைய தோல் நிறத்தைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்தியாவில் வெவ்வேறு காலநிலைகள், வெவ்வேறு நிறங்கள் உள்ளன...அப்படியென்றால் அதை ஏற்றுக்கொள்வது ஏன் இவ்வளவு கடினம்? வெள்ளை தோல் கொண்ட ஒருவர் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது குற்றம் செய்தாலோ, அவருடைய சரும நிறத்தைப் பார்த்து அவரை நல்லவர் என்று கருதுவோமா? நிறம் மட்டுமே ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதைத் தீர்மானிக்க முடியுமா?" என்று சோனாலி கேள்வியெழுப்புகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரிஷப் மற்றும் சோனாலி, "பொதுவாக இதுபோன்ற சம்பவங்களால் தம்பதிகள் கொஞ்சம் சங்கடமாக உணர்வார்கள், ஆனால் நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறோம்" என்று கூறுகிறார்கள்.

"எங்கள் காதலுக்கு இருவரது குடும்பத்திலும் எந்தப் பிரச்னையும் இருந்ததில்லை. கொஞ்சம் வற்புறுத்தி பேசியதும், அனைவரும் ஒப்புக்கொண்டனர். முதல் நாளிலிருந்தே எங்கள் திருமணத்தைப் பற்றி நாங்கள் யோசித்துக் கொண்டிருந்தோம். பணத்தை சிறுகசிறுகச் சேமித்து, மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் ஒருவருக்கொருவர் துணையாக நின்று, இந்த நாளையும் அதற்குப் பிந்தைய வாழ்க்கையையும் குறித்து நாங்கள் கனவு கண்டோம். இப்போது அந்தக் கனவைத் தான் நனவாக்கி வாழ்கிறோம்" என்று கூறுகிறார் சோனாலி.

"உலகமே எங்களை ட்ரோல் செய்தாலும், பெரும்பாலான மக்களிடம் இல்லாத ஒன்று எங்களிடம் இருக்கிறது. எனக்கு சோனாலி இருக்கிறார், சோனாலிக்கு நான் இருக்கிறேன்" என சோனாலியைப் பார்த்தவாறு கூறுகிறார் ரிஷப்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு