உலகக்கோப்பை: எச்சரிக்கை விடுத்த தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியாவின் தொடர் தோல்வி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலகக் கோப்பைத் தொடர் சில அணிகளுக்கு இன்ப அதிர்ச்சியையும், சில அணிகளுக்கு பேரதிர்ச்சி தரக்கூடிய முடிவுகளையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் அடைந்த தோல்வி அந்த அணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.
லக்னோவில் இன்று நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 311 ரன்கள் குவித்தது. 312 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 40.5 ஓவர்களில் 177 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.
பழைய தென் ஆப்பிரிக்காவா!
நீண்ட காலத்துக்குப்பின் “பழைய தென் ஆப்பிரிக்க” அணியின் பந்துவீச்சைப் பார்த்த மனநிறைவு ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆலன் டொனால்ட், ஷான் போலக், மெக்மிலன், குளூஸ்னர், ஸ்டெயின், பியானே டீ வில்லியர்ஸ் இருந்த காலத்தில் எவ்வாறு கட்டுக்கோப்பான, துல்லியமான, நெருக்கடி தரும் பந்துவீச்சு இருந்ததோ அதுபோல எதிரணிக்கு கடும் நெருக்கடி தரும்விதத்தில் இன்றைய பந்துவீச்சு இருந்தது.
1992 முதல் 2015 ம் ஆண்டுவரை தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவது எளிதானது அல்ல, அவ்வாறு தோற்கடித்தாலும் அது காகிதத்தில் மட்டுமே இருந்தது. அந்த அளவுக்கு பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஜாம்பவான்கள் நிறைந்திருந்தனர். ஆனால், ஐசிசி போட்டி என்று வரும்போது மட்டும் தென் ஆப்பிரிக்க அணியினர் “ஜோக்கர்களாக” மாறிவிடுவது பெருத்த அவமானத்தைத் தேடித்தந்தது.
ஆனால் இந்த முறை தென் ஆப்பிரிக்க அணி ஒவ்வொரு போட்டியை அணுகுவதைப் பார்க்கும்போது, அனைத்து அணிகளுக்கும் “திரும்பிவந்துட்டேன்” என்று எச்சரிப்பது போல் இருக்கிறது.
பிரமாதமான பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images
குறிப்பாக லுங்கி இங்கிடி, ஜான்சன், ரபாடா ஆகியோரின் இன்றைய பந்துவீச்சு ஆஸ்திரேலிய பேட்டர்களை தண்ணி குடிக்க வைத்தது. சுழற்பந்துவீச்சில் மகராஜ் கலக்கலாகப் பந்துவீசி, சுருட்டினார்.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்கா பெறும் 2வது வெற்றி இதுவாகும். இந்த வெற்றி மூலம் 4 புள்ளிகளுடன், 2.360 நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்துக்கு தென் ஆப்பிரிக்கா முன்னேறியது. ஆட்டநாயகன் விருது டீ காக்கிற்கு வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் தொடரும் தோல்வி
தென் ஆப்பிரிக்காவிடம் தொடர்ந்து 2வது முறையாக உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் தோல்விஅடைந்த நிலையில் தற்போது 2023 ஆண்டு உலகக் கோப்பையிலும் தென் ஆப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலியா தோற்றது.
1999 முதல் 2011 வரை தொடர்ந்து 34 போட்டிகளை வென்று சிங்கம்போல் வலம் வந்து பிற அணிகளை ஆட்டிப்படைத்த ஆஸ்திரேலியாவுக்கு இந்த தோல்வி பேரதிர்ச்சியாகும்.
அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு மாதத்தில் 300 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்த அனைத்துப் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி நெருக்கடி தாங்காமல் தோற்றுள்ளது.
இந்தியப் பயணத்துக்கு முன்பாக தென் ஆப்பிரிக்க அணியிடம் தொடர்ந்து 3 தோல்விகளை ஆஸ்திரேலியா சந்தித்தது. 3 ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களுக்கு அதிகமான வேறுபாட்டில் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது.
இந்திய அணியிடம் 99 ரன்களிலும், இப்போது தென் ஆப்பிரி்க்காவிடம் 174 ரன்களிலும் ஆஸ்திரேலிய அணி வீழ்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்ட ரன்களை கடைசியாக 2020ம் ஆண்டு செப்டம்பரில் ஆஸ்திரேலியா வெற்றிகரமாக சேஸிங் செய்தது. அதன்பின் கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை சேஸிங் செய்யவில்லை.
சர்ச்சைக்குரிய அவுட்கள்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரேலிய அணி இக்கட்டான நேரத்தில் இருந்தபோது ஸ்மித், ஸ்டாய்னிஷுக்கு 3வது நடுவர் வழங்கிய தீர்ப்பு பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் 3வது நடுவரின் தீர்ப்பு பேசுபொருளாக மாறியுள்ளது.
டீ காக் அதிரடி ஆட்டம்
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தைப் போலவே வலுவான தொடக்கம் அளிக்க தென் ஆப்பிரிக்க அணி முயன்றது. தொடக்க வீரர் குயின்டன் டீ காக், பவுமா இருவரும் நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கினர்.
4 ஓவர்களுக்குப் பின்புதான் டீ காக் “டைமிங்” பார்த்து, முதல் பவுண்டரி அடித்து கணக்கைத் தொடங்கினார். அதன்பின் தனது இயல்பான ஆட்டத்துக்கு திரும்பிய டீ காக், ஸ்டார்க் பந்துவீச்சில் பிளிக் ஷாட்டில் சிக்ஸரும், ஹேசல்வுட் பந்துவீச்சில் பௌண்டரியும் விளாசினார்.
குயின்டன் டீக் காக் அடித்து ஆட, அவருக்குத் துணையாக கேப்டன் பவுமா ஒத்துழைத்து பேட் செய்தார். 2 சிக்ஸர்கள், 4 பௌண்டரிகள் உள்பட 51 பந்துகளில் குயின்டன் டீகாக் அரை சதம் அடித்தார்.
அதன்பின் தொடக்க ஜோடியைப் பிரிக்க ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலனில்லை. ஆஸ்திரேலியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய டீ காக், அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images
டீ காக் 2வது சதம்
தென் ஆப்பிரிக்க அணி 17.4 ஓவர்களில் 100 ரன்களையும், 26.6 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. டீ காக் 90 பந்துகளில் உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ந்து தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.
இலங்கை அணிக்கு எதிராக 84 பந்துகளில் சதம் அடித்த டீ காக், இந்த ஆட்டத்தில் 90 பந்துகளில் சதம் அடித்தார். ஒருநாள் போட்டிகளில் டீ காக் அடிக்கும் 19-வது சதமாகவும் உலகக் கோப்பைத் தொடரில் தொடர்ச்சியாக அடிக்கும் 2வது சதமாக அமைந்தது.
இந்த சதத்தின் மூலம் பாபர் ஆசம், பிரையன் லாரா, ஜெயவர்த்தன ஆகியோரின் சத எண்ணிக்கையை டீ காக் சமன் செய்தார். இதற்கு முன் 2013-ம்ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தொடர்ச்சியாக இரு சதங்களை டி காக் அடித்திருந்தார். அதன்பின் தற்போது அடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரிலும் டீ காக்கிற்கு இந்த சீசனில் போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை, தென் ஆப்பிரிக்க அணியும் தடுமாறி வந்த நிலையில் டீ காக் ஃபார்முக்கு வந்துள்ளது அந்த அணிக்கு பெரும் சாதகமாகும். இந்த உலகக் கோப்பைத் தொடர்தான் டீ காக்கிற்கு கடைசியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தன்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்து வருகிறார்.
முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில் பவுமா 35 ரன்களில் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டூசென் 2 ஆயிரம் ரன்கள்
அடுத்து வந்த வேன் டெர் டூசென், டீ காக்குடன் இணைந்தார். நிதானமாக பேட் செய்த டூசென் 26 ரன்களில் ஆடம் ஸம்பா பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். டீகாக், டூசென் இருவரும் 2-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
டூசென் 45 இன்னிங்ஸ்கள் விளையாடி 2ஆயிரம் ரன்களை எட்டி அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை எட்டிய 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
அடுத்துவந்த மார்க்ரம், டீ காக்குடன் சேர்ந்து அதிரடியாக பேட் செய்தார். மேக்ஸ்வெல் பந்துவீச்சில் “ரிவர்ஸ் ஸ்வீப்” ஆட முற்பட்டு “க்ளீன்” போல்டாகி , டீ காக் 109 ரன்களில் (106 பந்துகள், 8 பௌண்டரிகள், 5 சிக்ஸர்கள்) ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கிளாசன், மார்க்ரத்துடன் இணைந்து வேகமாக ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
விக்கெட் வீழ்ச்சியால் ரன் ரேட் சரிவு
தென் ஆப்பிரிக்க அணி 42 ஓவர்களில் 250 ரன்களை எட்டியதால், 50 ஓவர்களில் 350 ரன்களை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதிரடியாக ஆடிய மார்க்ரம் 41 பந்துகளில் அரைசதம் அடித்து சிறிது நேரத்தில் கம்மின்ஸ் பந்துவீச்சில் 56 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
மார்க்ரம் வெளியேறியபின் ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்க ரன்ரேட்டை கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதனால் 49 ஓவர்களில்தான் தென் ஆப்பிரிக்க அணி 300 ரன்களை எட்டியது. கிளாசன் 29 ரன்களிலும், ஜான்சன் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் மேக்ஸ்வெல், ஸாடார்க் இருவரும் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதில் மேக்ஸ்வெல் அற்புதமாகப் பந்துவீசி 10 ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதேசமயம், ஆடம் ஸம்பா 10 ஓவர்களில் 70 ரன்களை வாரி வழங்கினார்.
ஜான்சன், இங்கிடி மிரட்டல் பந்துவீச்சு
312 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தென் ஆப்பிரிக்க வேகப் பந்துவீச்சாளர்கள் மார்கோ ஜான்சன், இங்கிடி இருவரும் ஆஸ்திரேலிய பேட்டர்களான வார்னர், மார்ஷுக்கு பெரும் சவாலாக இருந்தனர்.
லைன் அன்ட் லென்த்தை மாற்றாமல் இருவரும் பந்துவீசியதால் வார்னர், மார்ஷ் இருவரும் பெரும் நெருக்கடிக்குள்ளாகினர். இதனால் 4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் மட்டுமே சேர்த்து அழுத்தத்துக்கு ஆளாகியது.
ஆனாலும், இங்கிடி, ஜான்சன் இருவரும் வார்னர், மார்ஷ் ஆகியோரை தவறு செய்ய வைக்கும் நோக்கில் துல்லியத்தன்மை மாறாமல், நெருக்கடியாகப் பந்துவீசினர். அதிலும் இங்கிடியின் பந்துவீச்சு “பனானா ஸ்விங்” ஆகி, மார்ஷ், வார்னரை “பீட்டன்” செய்தது.
இதனால் ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கும், நெருக்கடிக்கும் தள்ளப்பட்டனர். பவர்ப்ளே ஓவர்களை வீணாக்குகிறோம் என்றஅழுத்தம் வார்னருக்கும், மார்ஷுக்கும் ஏற்பட்டது. அதற்கு ஏற்றார்போல், தென் ஆப்பிரிக்க அணி பீல்டிங்கும் வலுவாக அமைந்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
பவர்ப்ளேயில் விக்கெட் வீழ்ச்சி
மார்ஷ், வார்னர் அடித்த பெரும்பாலான ஸ்குயர் கட், ஸ்குயர் லெக், பைன் லெக் ஷாட்களை துல்லியமாகத் தடுத்து தென் ஆப்பிரிக்கா நெருக்கடியை மேலும் அதிகப்படுத்தியது.
பொறுமை இழந்த மார்ஷ்(7), ஜான்சன் வீசிய 6-வது ஓவரில், லைன் லென்த்தில் வந்த பந்தை தூக்கி அடிக்க, கேப்டன் பவுமாவால் கேட்ச் பிடிக்கப்பட்டு விக்கெட்டை இழந்தார். இங்கிடியின் ஸ்விங் பந்துவீச்சுக்கு தொடக்கம் முதலே வார்னர் தடுமாறினார், பல பந்துகளை பீட்டன் செய்து நெருக்கடியோடு இருந்தார்.
ஆனால், இங்கிடி தனது லென்த்தை மாற்றாமல் தொடர்ந்து வார்னருக்கு அழுத்தம் கொடுத்தார். இங்கிடி வீசிய 7-வது ஓவரில் வார்னர்(15) அவுட் சைட் ஆஃப் சைட் சென்ற பந்தை அடிக்க முற்பட்டு, வென்டர் டூசெனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது முறையாக வார்னர் விக்கெட்டை இங்கிடி வீழ்த்தினார்.
பவர்ப்ளே ஓவருக்குள் ஆஸ்திரேலிய அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த ஸ்மித், லாபுஷேன் ஜோடி, சிறிது வேகமாக ரன்களைச் சேர்த்தனர். 1 0ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 50 ரன்களைச் சேர்த்தது.
ஸ்மித் சர்ச்சைக்குரிய அவுட்டா?
ஸ்மித் விக்கெட்டை வீழ்த்த ரபாடா அழைக்கப்பட்டார். ஆடுகளத்தின் தன்மையைக் கணித்த ஸ்மித் எவ்வாறு பேட் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து ரபாடா பந்துவீச்சில் இரு பவுண்டரிகளை விளாசினார். அவசரப்பட்டு ஷாட்களை ஆடாமல் அல்லது பேட்டை சுழற்றாமல், பந்தை உள்ளே வரவைத்து ஷாட்களை ஆடும் நேர்த்தியைதெரிந்து கொண்டுவிட்டோம் என்ற நம்பிக்கை ஸ்மித்தின் ஷாட்களில் தெரிந்தது.
ஆனால், ஸ்மித்தை நீண்டநேரம் ரபாடா விட்டு வைக்கவில்லை. ரபாடா வீசிய 10-வது ஓவரில் ஸ்மித் கால்காப்பில் வாங்கி 19 ரன்னில் வெளியேறினார். ரபாடா வீசிய பந்து ஸ்மித்தின் கால்காப்பில் பட்டது தெளிவாகத் தெரிந்தாலும், அது ஸ்டெம்பின் நுனியில் பட்டுச் செல்வது போன்றுதான் மூன்றாவது நடுவர் கணிப்புக் காட்சியில் தெரிந்தது.
ஏறக்குறைய ஸ்டெம்பின் உயர்த்துக்கு மேல் பந்து செல்வதுபோலத்தான் இருந்தது. சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு வழங்க வேண்டும் என்ற தார்மீகத்தைப் பின்பற்றாமல் மூன்றாவது நடுவர் அவுட் வழங்க, ஸ்மித் அதிர்ச்சியுடன் வெளியேறினார்.
அடுத்துவந்த இங்கிலிஸ் 5 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 12 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 56 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
சுழற்பந்துவீச்சாளர்களான மகராஜ், ஷாம்சியை பந்துவீச கேப்டன் பவுமா அழைத்தார். இதற்கு கைமேல் பலன் கிடைத்தது. மேக்ஸ்வெல் 17 பந்துகளை ஆடியும் 3 ரன்களுடன் திணறிக்கொண்டிருந்தார். மகாராஜ் வீசிய 17-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து மேக்ஸ்வெல் வெளியேறினார்.
விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லாபுஷேன் மட்டும் நிதானமாக பேட் செய்தார், அடுத்து வந்த ஸ்டாய்னிஷ் தன்னை நிலைப்படுத்துவதற்குள் ரபாடாவின் பந்துவீச்சில் வீழ்ந்தார். ரபாடா வீசிய 18-வது ஓவரில் ஸ்டாய்னிஷ் அடித்த ஷாட்டை விக்கெட் கீப்பர் டீ காக் கேட்ச் பிடித்து அவுட் என நடுவரிடம் முறையிட்டார். ஆனால், நடுவர் அவுட் வழங்கவில்லை. ஆனால், ஸ்டாய்னிஷ் தொடையில் பந்துபட்டு, அவரின் பேட் ஹேன்டிலில் பட்டு சென்றது என டீ காக் தெரிவித்தார். இதையடுத்து, 3வது நடுவரிடம் கேப்டன் பவுமா அப்பீல் செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்டாய்னிஷ்க்கு அவுட் வழங்கியது சரியா?
ஸ்டாய்னிஷ் ஆடிய ஷாட்டை ஆய்வு செய்த 3வது நடுவர், பந்து ஸ்டாய்னிஷின் பேட் கைபிடியில் பட்டு சென்றதை உறுதி செய்து அவுட் வழங்கினார். இதை சற்றும் எதிர்பாராத ஸ்டாய்னிஷ் அதிருப்தியுடன் சென்றார். அவரிடம், நடுவர் அவுட் குறித்து விளக்கம் அளித்து அனுப்பிவைத்தார்.
உண்மையில் ஸ்டாய்னிஷ் லெக்சைடில் சென்ற பந்தை தட்டிவிடும்போது, அவரின் இடது கை பேட்டின் கைபிடியிலும், வலது கை பேட்டின் ‘ஹேண்டிலை’ பிடிக்காமல் இருந்தது. ஆனால், கிரிக்கெட் விதிப்படி, இரு கைகளும் கைபிடியைப் பிடித்துள்ளபோது பந்து ‘ஹேண்டிலில்’ அல்லது ‘கிளவுஸில்’ பட்டு சென்று விக்கெட் கீப்பர் பிடித்தால்தான் ‘அவுட்’. பேட்டின் ஒரு ‘ஹேண்டிலை’ மட்டும் பேட்டர் பிடித்திருந்தபோது, பந்து ‘ஹேண்டிலில்’ பட்டு சென்று விக்கெட் கீப்பர் பிடித்தால் அது ‘அவுட்’ இல்லை என்பது விதி என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
இதனால் 70 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 6 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் என்பது, உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிட்ஷெல் ஸ்டார்க், லாபுஷேன் ஜோடி விக்கெட் சரிவைத் தடுக்கும் நோக்கில் டெஸ்ட் போட்டி போன்று பேட் செய்தனர். இருவரும் சேர்ந்து தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சாளர்களின் பொறுமையைச் சோதிக்கும்வகையில் பேட் செய்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்தது, ஆஸ்திரேலிய அணியும் பெரும் பாடுபட்டு 100 ரன்களைக் கடந்து சென்றது.
ஜான்சன் வீசிய ஓவரில், ஸ்டார்க் 27 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இருவரும் 7-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்தனர்.
லாபுஷேன் மட்டும் போராட்டம்
அரைசதத்தை நெருங்கிய லாபுஷேன் 74 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கேப்டன் கம்மின்ஸ் 22 ரன்களிலும், ஹேசல்வுட் 2 ரன்களிலும் ஷாம்ஸி வீசிய 41வது ஓவரில் விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
40.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு ஆட்டமிழந்து 134 ரன்களில் தோல்வி அடைந்தது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அனைத்துப் பந்துவீச்சாளர்களுமே சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக இங்கிடி 8 ஓவர்கள் வீசி 2 மெய்டன் ஓவர்களுடன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை சாய்த்தார்.
ரபாடா 8 ஓவர்கள் வீசி ஒரு மெய்டனுடன் 33 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜான்சன், ஷாம்ஸி, மகாராஜ் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். மகராஜ் 10 ஓவர்கள் வீசி 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












