விரைவிலேயே ஆட்டமிழப்பதை தவிர்க்க இந்திய வீரர்கள் பயன்படுத்திய புதிய உத்தி

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியா-ஆஃப்கானிஸ்தான் இடையே நேற்று (அக்ட்போபர் 11) நடந்த போட்டியில் விராட் கோலியின் ஆட்டத்தைக் காணும் ஆவலில் டெல்லி ரசிகர்கள் குழுமியிருந்தனர். ஆனால், ரோஹித் சர்மா அபாரமான தனது ஆட்டத்தின் மூலம் அவர்களின் கண்களுக்கு விருந்தளித்தார். இருப்பினும் விராட் கோலியின் பேட்டிங்கையும், அவரின் ரசிக்கத்தக்கச் செயல்களையும் ரசிகர்கள் கண்டுகளிக்காமல் இல்லை.
273 ரன்கள் எனும் இலக்கை 15 ஓவர்கள் மீதமிருக்கும்போதே, இந்திய அணி சேஸிங் செய்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆட்டத்தை வென்றது.

பட மூலாதாரம், Getty Images
12 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை மாற்றிய கோலி
இது விராட் கோலி டெல்லியில் பங்கேற்கும் 2-வது உலகக் கோப்பைப் போட்டி. இதுவே அவரது கடைசி உலகக் கோப்பையாகக் கூட இருக்கலாம். ஆனால், 12 ஆண்டுகளுக்கு முன் 2011-ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோலி, 20 பந்துகளில் 12 ரன்களுடன் ரசிகர்கள் முன் தலைகுனிந்து வெளியேறினார்.
ஆனால், இன்று விராட் கோலி களமிறங்கும்போதே கோலி, கோலி என்ற 32,000 ரசிகர்களின் கோஷத்துடன் களமிறங்கினார். 55 ரன்களுடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதிலும் அஸ்மத்துல்லா ஓமர்ஜாஸ் வீசிய ஓவரில் விராட் கோலி தன்னுடைய ‘பிராண்டிங் ஷாட்டான’, ‘ஸ்ட்ரைட் டிரைவில்’ ஷாட் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
தொடக்க ஆட்டக்காரர் பணி ஏன் கடினமாகிவிட்டது?
அதேநேரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 6 பந்துகளைச் சந்தித்து கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் வெளியேறியதை ரோஹித் சர்மா இப்போட்டியில் சரிசெய்துவிட்டார். 30 பந்துகளில் அரைசதம், 63 பந்களில் சதம், 84 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார்.
கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளாகப் பல அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்களின் பணி கடினமாகியிருக்கிறது. ஏனென்றால், தற்போது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ‘வெள்ளை கூக்கபுரா’ பந்துகள் தொடக்கத்தில் அதிகமாக ஸ்விங் ஆவதும், ‘நிப்பிங்’ ஆவதும் பேட்டர்களுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்துகிறது. கூக்கபுரா பந்து தேயும்வரை தொடக்க ஆட்டக்காரர்கள் கவனத்துடன் பேட் செய்ய வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் நிச்சயம் விக்கெட்டை இழக்க நேரிடும்.
அதனால்தான் ரோஹித் சர்மா நேற்றைய ஆட்டத்தில் முதல் பவுண்டரி அடிக்கச் சில ஓவர்களை எடுத்துக்கொண்டு, செட்டில் ஆன பின்புதான் பவுண்டரி அடித்தார். ஆனால், அதன்பின் ரோஹித் சர்மா ஆட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருப்பினும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ரோஹித் சர்மா ஒரு நாள் போட்டியில் தனது ஸ்ட்ரைக் ரேட்டை 100.68ஆகவும், 2022-ஆம் ஆண்டில் 111.58ஆகவும் வைத்துள்ளார்.
கவனமாக ஷாட்களை ஆடிய ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா நேற்று 16 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடித்தார். ‘விக்கெட்டை இழந்துவிடக்கூடாது, நீண்டநேரம் பேட் செய்ய வேண்டும்’ என்ற கவனத்துடன் ஒவ்வொரு ஷாட்டையும் தேர்ந்தெடுத்து ஆடினார். அதிலும், அவர் எந்த திசையில் வலிமையாக இருப்பார் என்பதை தெரிந்துகொண்டு ஷாட்களை ஆடினார்.
ரோஹித் சர்மா ஸ்கொயர்லெக், லெக் சைட் பிளிக், லேட் கட், மிட்-ஆஃப் டிராப் கிளிக் போன்ற ஷாட்களில்தான் பெரும்பாலும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும், இந்திய அணியின் வலிமையை வெளிக்காட்டியது.
ஆப்கானிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் பசல்ஹக் பரூக்கி வீசிய ஓவரில் லாங்-ஆன் திசையில் பவுண்டரி அடித்து ரோஹித் சர்மா தனது கணக்கைத் தொடங்கினார். பரூக்கியின் அடுத்த ஓவரில் தொடர்ந்து பவுண்டரிகளை அடித்த அவர் பந்துவீச்சாளருக்கு நெருக்கடி அளித்தார். அதிலும் பரூக்கி வீசிய ‘ஸ்லோ பால்’-ஐ, ஸ்கொயர் லெக் திசையில் பவுண்டரி அடித்து தனது ஃபார்மை வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம், Getty Images
இத்தனை சாதனைகளா?
நவீன் உல் ஹக் பந்துவீச வந்தபோது, அவரின் பந்துவீச்சில் மொகிந்தர் அமர்நாத் ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ரசிகர்களை நோக்கி ரோஹித் சர்மா சிக்ஸர் விளாசி புதிய சாதனையைப் படைத்தார். அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸர் அடித்த கிறிஸ் கெயிலின் (553) சாதனையை ரோஹித் சர்மா நேற்று முறியடித்தார். ஓமர்ஜாய் பந்துவீச்சில் ரோஹித் சர்மா தனது 4-வது சிக்ஸரையும், ரஷித் கான் பந்துவீச்சில் 5-வது சிக்ஸரையும் விளாசி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை எந்த இந்திய பேட்டரும் செய்யாத வகையில் அதிவேகமாக, 63 பந்துகளில் சதம் அடித்து ரோஹித் சர்மா புதிய சாதனையைப் படைத்தார். அது மட்டுமல்லாமல் உலகக் கோப்பைத் தொடர்களில் அதிகமான சதம் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.
அது மட்டுமல்லாமல் உலகக் கோப்பைத் தொடர்களில் இந்திய அணி சேர்த்த முதல் 100 ரன்களில் அதிகமான பங்களிப்பு ரோஹித் சர்மா உடையதாக இருக்கும் வகையிலும் சாதனை படைத்தார். அதாவது, உலகக் கோப்பைத் தொடர்களில் முதல் 100 ரன்களை சேர்த்திருந்தால், அதில் அதிகபட்ச பங்களிப்பாக ரோஹித் சர்மா 79 ரன்கள் பங்களித்திருப்பார். இந்த அளவு ரன்கள் பங்களிப்பை இதுவரை எந்த இந்திய பேட்டரும் செய்தது இல்லை.
அது மட்டுமல்லாமல் ஒருநாள் போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களில் அதிகமான ரன்களைக் குவித்த இந்திய பேட்டரும் ரோஹித் சர்மாதான். ஆனால், இந்த இன்னிங்ஸ் அல்லது நேற்றைய இரவு மட்டுமே ரோஹித் சர்மாவின் சாதனையை வெளிக்காட்டுபவை அல்ல.

பட மூலாதாரம், Getty Images
ரசிகர்களின் ஆதரவே சாட்சி
ரோஹித் சர்மாவின் சாதனை எத்தகையது என்பது ரசிகர்களின் கரகோஷத்தாலும், கோஷத்தாலும், கைதட்டல்களாலும் வரையறுக்கப்பட்டது.
உலகக் கோப்பை தொடங்கி ஒருவாரம் கடந்துவிட்டது. ஆனால், இந்தியா விளையாடும் போட்டிகளைத் தவிர்த்து, பி.சி.சி.ஐ நிர்வாகிகள் விரும்பும் அளவுக்கு எந்த மைதானத்திலும் ரசிகர்கள் வருகை இல்லை. இதன் மூலம், இந்தியா அணி விளையாடும் போட்டிகளைப் போல வேறு போட்டிகள் ரசிகர்கள் மனதில் நிற்கவில்லை என்பதையே காட்டுகிறது.
‘இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்பினேன்’
கேப்டன் ரோஹித் சர்மா தனது ஆட்டம் குறித்துப் பேசுகையில், டெல்லி ஆடுகளம் பேட்டிங் செய்ய சிறப்பானது என்றும் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுதான் களமிறங்கியதாகவும் கூறினார்.
“ஆட்டத்தில் கவனத்தைச் செலுத்திவிட்டால், விக்கெட் மேலும் எளிதாக மாறிவிடும் என்று தெரியும். எதிரணியினருக்கு நெருக்கடி கொடுக்கும் மனநிலையை மட்டும் நாம் இழந்துவிடக்கூடாது என்பது முக்கியமாகும்,” என்றார்.
மேலும், “நான் டாப்-ஆர்டரில் பேட்டிங் செய்யும் போது எனக்கான பொறுப்புகள் என்ன என்பது எனக்கு நன்கு தெரியும். நல்ல தொடக்கம் தேவை, குறிப்பாக சேஸிங்கின்போது தொடக்க ஆட்டக்காரர்கள் அளிக்கும் நம்பிக்கையும் அடித்தளமும் அணியை நல்ல நிலையில் கொண்டு செல்லும், அடுத்துவரும் பேட்டர்களுக்கு சிரமமில்லாமல் இருக்கும். இதுபோன்ற நாள் எனக்கு அமைந்தால், மிகப்பெரிய ஸ்கோரை அடையமுடியும்,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் ரோஹித் சந்திக்கவிருக்கும் நெருக்கடிகள்
இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பதில் இருக்கும் அழுத்தம், இந்தப் போட்டியில் தன் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பம் அனைத்தையும் தெரிந்தே ரோஹித் சர்மா ஒவ்வொரு போட்டியிலும் கவனமாக நகர்வை எடுத்து வைக்கிறார்.
இந்திய அணியில் திறமைவாய்ந்த பல வீரர்கள் வந்தாலும், சென்றாலும், கடந்த 10 ஆண்டுகளாக ஐ.சி.சி சார்பில் எந்த ஒரு கோப்பையையும் வெல்ல முடியாத வறட்சி நிலவுகிறது. கிரிக்கெட்டில் மிகப்பெரிய, மிக சக்திவாய்ந்த தேசத்திற்கு இந்த விஷயம் மட்டும் புரிந்துகொள்ள முடியாததாகி இருக்கிறது.
இந்தக் கேள்விக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியபின் ரோஹித் சர்மா பதில் அளிக்கையில் “நாங்கள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள். எங்கள் மீது எப்போதும் ஒருவிதமான அழுத்தம் இருக்கத்தான் செய்யும்,” எனத் தெரிவித்தார்.
இனி அடுத்துவரும் 5 வாரங்களும் இந்திய அணிக்கு கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவுக்குச் சவாலாகத்தான் இருக்கும். வரும் சனிக்கிழமை ஆமதாபாத்தில் பாகிஸ்தானுடன் மோதும் ஆட்டம் உச்ச கட்ட நெருக்கடியை ரோஹித்துக்கு ஏற்படுத்தும்.
ஆப்கானிஸ்தானுடன் பேட் செய்தபோது ரோஹித் சர்மாவுக்கு கிடைத்த சுதந்திரம், வெளிப்படுத்திய இயல்பான ஆட்டம் பாகிஸ்தானுடன் இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












