தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்க்கு ஆஸ்கர் விருது: பொம்மன் - பெள்ளி கூறுவது என்ன?

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM

தங்களது வாழ்க்கை கதையைக் கொண்ட தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறு ஆவணப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதில் நடித்துள்ள பொம்மன் - பெள்ளி தம்பதி தெரிவித்துள்ளனர்.

95வது அகாடெமி விருதுகள் வழங்கும் விழாவில், முதுமலை காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியைப் பற்றிய குறு ஆவணப்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் சிறந்த குறு ஆவணப்படத்திற்கான விருதை வென்றுள்ளது. முன்னதாக இந்த பிரிவில் தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ், ஹாலவுட், ஹவ் டு யூ மெஷர் எ இயர்?, தி மார்த்தா மிட்செல் எஃபெக்ட், ஸ்ட்ரேஞ்சர் அட் தி கேட் ஆகிய 5 படங்கள் போட்டியிட்டன.

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தை கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குட்டி யானைகளின் பராமரிப்பு குறித்தும், அதை குடும்பத்தில் ஒருவராக பாவிக்கும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதிகள் குறித்தும் இந்த குறும்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் குறு ஆவணப்படத்தில் தயாரிப்பாளர் குனீத்மோங்கா, இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் அகாடெமி மேடையில் விருதை பெற்றுகொண்டனர்.

ஆஸ்கரில் இந்திய படத்திற்கு கிடைக்கும் முதல் விருது இது. கார்த்திகியின் முதல் படம் இது. இந்தியாவில் இருந்து இந்த விருதை பெறும் முதல் இயக்குநரும் அவர்தான். மிகவும் பெருமையாக உள்ளது. என்றார்.

கார்த்திகி கோன்சால்வ்ஸ் பேசும்போது, `நமக்கும் நமது இயற்கை உலகத்துக்கும் இடையே உள்ள புனிதமான பிணைப்பைப் பற்றி பேச நான் இன்று இங்கு நிற்கிறேன். பழங்குடி மக்களையும் விலங்குகளையும் சிறப்பிக்கும் எங்கள் திரைப்படத்தை அங்கீகரித்ததற்காக அகாடமிக்கு நன்றி . இந்த ஆவணப்படத்திற்காக 6 ஆண்டுகள் உழைத்தேன். பழங்குடியினருடன் பணியாற்றியது நிறைவாக இருந்தது. பூமியுடன் எப்படி இணைந்து வாழ்வது என்பதை பழங்குடியினரிடம் இருந்து நாம் கற்றுகொள்ளலாம். காட்டுநாயக்கர்கள் மிகவும் பழைமைவாய்ந்த பழங்குடியினர். அவர்களில் வெறும் 1700 பேர்தான் தற்போது இருக்கின்றனர். பழங்குடியினருக்காக குரல் கொடுக்க விரும்பினேன். அதற்கான இந்த படத்தை எடுத்தோம். இந்த விருது என் தாய்நாடு இந்தியாவிற்காக` என்று பேசினார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானை பராமரிப்பாளர்களாகப் பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதிகளின் வாழ்வியலையும், அவர்களுக்கும் யானைகளுக்கும் இருக்கும் உறவையும் மிகவும் உணர்வுப்பூர்வமாக இந்த ஆவணப்படம் பதிவு செய்திருந்தது. தாயை பிரிந்து, உடம்பில் பல காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானைக்கு ரகு எனப் பெயரிட்டு பொம்மனும், அவருக்கு துணையாக வரும் பெள்ளியும் வளர்ந்தனர். யானையை பராமரித்து வந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த பொம்மனும், பெள்ளியும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். யானைகளை தங்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வளர்க்கும் இத்தம்பதியினரை `எலிபெண்ட் விஸ்பரர்ஸ்` ஆவணப்படம் பேசியிருந்தது.

ஆஸ்கர் விருது பெற்றது தொடர்பாக பேட்டியளித்த பெள்ளி, “ரகு தருமபுரியில் இருந்தும், பொம்மி சத்தியமங்கலத்தில் இருந்தும் வந்தன. ரகு யானையை வளர்க்க அழைத்தார்கள். அதற்கு வால் வெட்டப்பட்டு இருந்ததால், அதனை வளர்க்க முடியாது என முதலில் சொன்னேன். முடிந்தளவு பார்க்கலாம், எப்படியாவது சரி செய்து விடலாம் என வீட்டில் சொன்னார்கள். ரகுவை வளர்த்து பெரிதாக்கினோம். அப்போது 3 மாத குட்டியாக பொம்மி வந்தது. அதற்கு பால் கொடுத்து வளர்த்தோம். இதைப்பற்றிய ஆவணப்பட்டம் விருது பெற்று இருப்பது சந்தோஷம். முதுமலையில் இருப்பவர்களும், வனத்துறையினரும் சந்தோஷம் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

ஆஸ்கர் விருது

பட மூலாதாரம், KARTIKIGONSALVES/INSTAGRAM

ஆஸ்கர் விருது அறிவிக்கப்படும்போது, பொம்மன் வீட்டில் இல்லை. அண்மையில், தர்மபுரியில் மின்சார வேலியில் சிக்கி மூன்று யானைகள் உயிரிழந்தன. இரண்டு குட்டி யானைகள் மட்டும் உயிர் தப்பின. அவை அப்பகுதியிலேயே சுற்றி வந்த நிலையில், அவற்றை தேடும் பணியில் பொம்மன் ஈடுபட்டிருந்தார். ஆஸ்கர் விருது கிடைத்தது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஆஸ்கர் விருதைப் பெறும் என்று எதிர்பாக்கவே இல்லை. மிக மகிழ்ச்சியாக உள்ளது.

ஆவணப்படத்தை எடுத்த இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ்க்கு இந்த நேரத்தில் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். ரகுவும் அம்முவும் தற்போது எங்களுடன் இல்லை என்பதும் சிறிது வருத்தமாக உள்ளது` என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: