உடலில் இருந்து வாயுவை வெளியேற்றுவதற்கான நடைபயிற்சி பற்றி தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சாரா பெல்
- பதவி, குளோபல் ஹெல்த், பிபிசி உலக சேவை
நாம் உட்கொள்ளும் உணவுகளின் மூலமாக நமது உடலில் வாயுக்கள் உருவாகின்றன. வாயுக்களை வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் நடைபயிற்சி 'ஃபார்ட் வாக் (Fart walk)' என அழைக்கப்படுகிறது.
ஃபார்ட் வாக்கிங் செல்வது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளது. நம்மில் பலரும் வாயு வெளியேற்றியதை ஒப்புக்கொள்வதில்லை.
ஆனால் ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் வாயுக்களை வெளியேற்ற நடைபயிற்சி மேற்கொள்ளும் முறையான 'ஃபார்ட் வாக்' சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இதை அனைவரும் பின்பற்றலாமா?
சமூக ஊடகங்களில் இதை வைரலாக்கியதில் முன்னோடியானவர் நடிகையும் தொழில் முறை வீட்டு நிர்வாக நிபுணருமான மேர்லின் ஸ்மித். அவரது கணவருடன் மேர்லின் நடைபயிற்சி செய்து பதிவிட்ட ரீல்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக் டாக்கில் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளன.
"பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வளர்ப்பு நாயுடன் இரவு உணவு முடித்த பிறகு நடைபயிற்சி செல்வோம். அதனை 'ஃபார்ட் வாக்' என்று அழைக்கத் தொடங்கினோம். ஆனால் வெளியிடத்தில் வாயுக்களை வெளியேற்றிய பிறகு நாயின் மீது பழியைப் போட்டோம்," என நகைப்புடன் தெரிவித்தார் மேர்லின்.
"ஃபார்ட் வாக்" நமக்கு ஏன் நன்மையானது?
இந்தப் பெயரும் அணுகுமுறையும் வேடிக்கையானதாக இருக்கலாம், ஆனால் "ஃபார்ட் வாக்கிங்" செய்வதால் உண்மையில் பல சுகாதார நன்மைகள் உள்ளன. அதில் முதலாவதானது சாப்பிட்ட பிறகு உடலில் சேரும் வாயுக்களை வெளியேற்றுவது தான்.
ஏனெனில் நாம் உணவு, தண்ணீர் அல்லது எச்சில் என எதை விழுங்கினாலும் சிறிதளவு காற்றையும் சேர்த்து தான் விழுங்குகிறோம், இவை செரிமான அமைப்பில் சென்று சேர்கின்றன. செரிமானத்தின் போது அல்லது செரிமானம் செய்வதற்கு கடினமான உணவுகளை சாப்பிடும் போதும் வாயுக்கள் சேர்கின்றன. சில மருந்துகள், உணவுகள் மீதான ஒவ்வாமையினாலும் வாயு வெளியேற்றம் ஏற்படலாம்.
"நீங்கள் நடக்கிற போது இரைப்பை குடலை மசாஜ் செய்கிறீர்கள். அது வாயுக்களை வெளியேற்ற உதவியாக இருந்து உங்களுக்கு நன்மை தருகிறது," என்கிறார் கனடாவைச் சேர்ந்த எழுத்தாளரான மேர்லின்.
உடற்பயிற்சி செய்வது உங்கள் குடலில் உள்ள நுண்ணியிரிகளை அதிகரிக்கிறது. பெருங்குடல் பகுதியில் இருக்கும் இவை கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கின்றன. இவை உங்களின் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கக்கூடியதாக இருக்கின்றன.

பட மூலாதாரம், Mairlyn Smith
"இந்த நுண்ணுயிரிகள் குடலில் இயற்கையாகவே காணப்படும் பைல் அமிலங்களையும் (bile acid) மாற்றுகின்றன. இவை குடலின் இயக்கத்தை அதிகரிக்கின்றன. இது தான் மலச்சிக்கலை தவிர்த்து வாயுக்களை வெளியேற்ற உதவுகிறது." என்கிறார் செரிமான அமைப்பு நோய்கள் உள்ளவர்களுக்காக பணியாற்றும் தொண்டு நிறுவமான கட்ஸ் யுகேவின் தகவல் மேலாளர் ஜூலி தாம்ப்சன்.
நடைபயிற்சி என்பது உங்களின் இதய ஆரோக்கியத்திற்கு உதவிசெய்து, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் தடுத்து அவற்றை நிலைப்படுத்த உதவி இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஆபத்தைக் குறைக்கிறது.
"நீங்கள் சாப்பிட்ட உடன் உட்காராமல் நடந்தால் ரத்த குளுக்கோஸ் சுழற்சிக்கு உங்களின் தசைகள் ஸ்பாஞ்ச் போல வேலை செய்கின்றன," என்று விளக்கினார் மேர்லின்.
"சர்க்கரை பாதிப்பை குறைப்பதற்கு இது ஒன்று மட்டுமே வழி அல்ல. ஆனால் படிப்படியாக சிறப்படைவதற்கு இதுபோன்ற பழக்கங்கள் உதவும்." என்றும் தெரிவித்தார்.
நார்ச்சத்தின் முக்கியத்துவம் என்ன?
அதிக நார்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற இலக்கை அடைய "ஃபார்ட் வாக்" உதவும் என்கிறார் பிரிட்டனைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான எம்மா பிராட்வெல்.
"உலகளவில் 90% பேர், தினசரி எடுத்துக் கொள்ள வேண்டிய 30 கிராம் நார்ச்சத்து என்கிற அளவை அடைவதில்லை. ஆனால் மக்கள் ஏன் அதைத் தவிர்க்கிறார்கள் என்றால் அதனால் வீக்கம் மற்றும் வாயு போன்ற பின் விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் தான். அந்தச் சூழலில் இந்த 'ஃபார்ட் வாக் உதவியாக இருக்கும்," என்கிறார் எம்மா.
நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் நிறைய சுகாதார நன்மைகள் ஏற்படுகிறது என்பதால் இது முக்கியமாகிறது.

பட மூலாதாரம், Emma Bardwell
"இது உடலில் உள்ள கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது. இது உங்களின் ரத்த குளுக்கோஸ் அளவை சமாளிக்க உதவுகிறது. இவை இதய நோய், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் உள்ளிட்ட சில வகை புற்றுநோய்களும் வராமல் தடுக்க உதவுகிறது." என்று தெரிவித்தார் எம்மா.
குடலில் உள்ள நுண்ணியிரிகளுக்கும் நார்ச்சத்து என்பது அவசியமாகிறது.
"குடலில் உள்ள நுண்ணியிர்கள் நார்ச்சத்தை உண்டு வளர்சிதை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இவை பி12 வைட்டமின் மற்றும் செரடோனின் உருவாக்கம் போன்ற எண்ணற்ற பலன்களை தருகிறது. இது மனநிலையை பராமரிக்கவும் உதவுகிறது." என்கிறார் எம்மா.
மனநல நன்மைகள்
வெளியே சென்று நடப்பது மன நலனை ஊக்குவிக்க உதவும். ஏனெனில் நடைபயிற்சி செய்வது எண்டோர்ஃபின்ஸ் மற்றும் செரடோனின் போன்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்கிறது. இவை நம்முடைய கவலைகளை மறந்து நன்றாக தூங்க உதவுகின்றன.
நடைபயிற்சி உங்களுடைய உறவுகளை மேம்படுத்தவும் உதவுகிறது. கணவன் மனைவி இருவரும் வேலை, குடும்பம் என ஓய்வில்லாமல் சுற்றி வரும்போது நடைபயிற்சி என்பது இருவரும் நேரம் செலவழிக்க ஒரு நல்ல வழியாகும் என்கிறார் மேர்லின்.
"இப்போது எனது கணவர் வரவில்லையென்றாலும், நண்பர்களுடன் நடக்கச் செல்கிறேன். ஒருவருடன் நேரம் செலவழிக்க இது மிகவும் அற்புதமான வழி," என்றும் தெரிவித்தார்.
ஜோடியாக "ஃபார்ட் வாக்கிங்" செய்யும் வீடியோவை கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்களை உற்சாகப்படுத்துவதற்காக பதிவிட ஆரம்பித்தார் மேர்லின். அதன் பின்னர் 2023-இல் பனியில் விழுந்து அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டது. பின்னர் நோயிலிருந்து மீண்டெழுவதில் ஒரு பகுதியாக ரீல்ஸ் பதிவு செய்வது ஆகிப்போனது.
"எனது போனை எடுத்து ஃபார்ட் வாக்கிங் பற்றி பேசத் தொடங்கினேன். அப்போது, 'நான் இதற்காகத் தான் அறியப்படுகிறேன் என்றால் நகைச்சுவையாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்," என்று தெரிவித்தார் மேர்லின்.

'ஃபார்ட் வாக்' எப்படி செய்வது?
பொதுவாக ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் நடப்பது நல்லது. ஆனால் ஒருவரின் முக்கியமான உணவிற்குப் பிறகு நடப்பது சிறந்த பலன்களைத் தரும். பலருக்கும் இரவு உணவு தான் முக்கியமான உணவாக உள்ளது.
இதற்காக வகுக்கப்பட்ட விதிகள் எதுவும் இல்லை எனக் கூறும் எம்மா, 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை நடப்பது செரிமானத்திற்கு உதவும் என்கிறார். நடக்கும் தூரம் அதிகமாகவும் அல்லது நடைபயிற்சி கடினமாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை.
"10 நிமிடங்கள் நடப்பது கூட நல்லது தான். நாம் அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை." என்றும் தெரிவித்தார் எம்மா.
நடைபயிற்சி செய்வதற்கு சௌகரியமான காலணிகளும் வானிலைக்கு உகந்த ஆடைகளும் இருந்தாலே போதுமானது எனக் கூறும் எம்மா, சமூக ஊடகங்களில் ஆரோக்கியம் என்பது மிகவும் சிக்கலானதாகவும் ஆடம்பரமானதாகவும் காட்டப்படுகிறது என்று தெரிவித்தார்.
"சாப்பிட்ட பிறகு நடப்பதைப் பற்றி பேசுவதே மிகவும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் அனைவராலும் நடைபயிற்சி செய்ய முடியும், இதற்காக எந்தச் செலவும் செய்ய வேண்டியதில்லை." என்றும் தெரிவித்தார்.
உங்களுடைய தினசரி பழக்கவழக்கத்தில் "ஃபார்ட் வாக்கிங்கை" சேர்ப்பது ஆரோக்கியமான வாழ்விற்கு உதவும்," என்று தெரிவித்தார் மேர்லின்.
"இந்த சிறிய நகர்வுகள் தான் நீங்கள் சரியாக பயிற்சி செய்து சிறப்பாக உணர உதவும்," என்றும் தெரிவித்தார்.
இந்த ட்ரெண்ட் பிரபலமானது எனக்கு உற்சாகமூட்டுகிறது எனக் கூறும் அவர் "என்னுடைய ஒரே குறிக்கோள் மக்களை எழுந்து நடக்க ஊக்குவிக்க வேண்டும் என்பதே" என்று தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












