உலகக்கோப்பை 2023 - IND vs AUS: சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்

பட மூலாதாரம், Getty Images
உலகக்கோப்பை கிரிக்கெட் ஐந்தாவது லீக் போட்டி இன்று சென்னையில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது.
இந்த லீக் போட்டியில், இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோதுகின்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடர், சென்னை, மும்பை, புனே, லக்னோ உள்ளிட்ட 10 பெரு நகரங்களில் நடக்கிறது. உலகக்கோப்பை போட்டி இம்முறை இந்தியாவில் நடைபெறுவதால், கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டும் என ரசிகிர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
இந்திய அணியைப் பொறுத்தவரையில், சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் உலகக்கோப்பையில் களம் காண்கிறது.
நல்ல ஃபார்மில் இருந்த தொடக்க ஆட்டக்காரரான சுப்மன் கில், டெங்கு காய்ச்சல் காரணமாக இன்றைய போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு பதிலாக, இஷான் கிஷன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சச்சின் சாதனையை முறியடித்த ஆஸி. பேட்டர்

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பையில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் குவித்துள்ளார்.
மிகக் குறைவாக 19 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்கள் என்று சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார். சச்சின் டெண்டுல்கர் 20 இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை உலகக் கோப்பையில் எட்டியிருந்தார். அதை வார்னர் முறியடித்துள்ளார்.
மூன்றாவது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் 360 டிகிரி வீரர் ஏபி டிவில்லியர்ஸ்(20இன்னிங்ஸ்), மேற்கிந்தியத் தீவுகள் ஜாம்பவான் விவியன் ரிச்சார்ட்ஸ்(21 இன்னிங்ஸ்), இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி(21) இன்னிங்ஸ்களில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர்.
சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகமாக இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
அடிப்படையில், சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக இருக்கும். ஏனென்றால், இரண்டாவது இன்னிங்ஸின்போது மாலை வேளையில் கடற்கரை காற்று அதிகரிக்கையில் காற்றின் ஈரப்பதமும் அதிகரிக்கிறது.
இது பந்துவீச்சாளர்கள் பந்தை இறுகப்பற்றுவதில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே, சேப்பாக்கத்தைப் பொறுத்தவரை டாஸ் வென்றுவிட்டால், பேட்டிங்கை தேர்வு செய்வதே வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும்.
அதன்மூலம், இரண்டாவது இன்னிங்ஸில் சேஸ் செய்யும் அணியை கட்டுப்படுத்திவிட முடியும். சேப்பாகம் மைதானத்தின் வரலாற்றைப் பொறுத்தவரை, சில குறிப்பிட்ட போட்டிகளைத் தவிர பெரும்பாலான போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன.
இப்போது ஐசிசி மைதானத்தில் என்ன மாற்றங்களைச் செய்துள்ளார்கள் என்பது முழுமையாகத் தெரியவில்லை. ஆனால், இயல்பாகவே சேப்பாக்கம் மைதானம் ஸ்லோ பிட்ச் வகையறாவை சேர்ந்தது. ஆகவே, சேஸிங்கின் போது முதல் 15 ஓவர்களில் ரன்களை குவிப்பது கடினமாக இருக்கும். அதற்குப் பிறகுதான், ஓரளவுக்கு விளையாட முடியும்.

பட மூலாதாரம், Getty Images
சம பலத்துடன் இந்தியா, ஆஸ்திரேலியா
இந்தியா, பேட்டிங்கில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா ஆகிய நம்பிக்கை நட்சத்திரங்களோடும், பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி, சிராஜ், ஜடேஜா, அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் என ஆஸ்திரேலியாவுக்கு நிகரான பலமான அணியாகவே உள்ளது.
மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டும் சீராக இருந்தால், இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க முடியும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஐந்து முறை உலகக்கோப்பை சாம்பியனான ஆஸ்திரேலியாவும் இந்தியாவுடன் போட்டியிடுவதற்கான சம பலத்திலேயே உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரக்காவுக்கு எதிரான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியைத் தழுவிய நிலையில், உலகக்கோப்பை போட்டியில் தங்களின் பலத்தை நிரூபிக்க காத்திருக்கின்றன.
உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 12 முறை நேருக்க நேர் மோதியுள்ளன. இதில், எட்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், நான்கு போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் அக்டோபர் 12ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மழையால் போட்டி தடைபடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும், இந்தப் போட்டி முடிவு எட்டப்படும் போட்டியாகவே இருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












