'ரூ' என்பதை பெரிதாக்கியது ஏன்? முதல்வர் ஸ்டாலின் விளக்கம் - இன்றைய டாப்5 செய்திகள்

பட மூலாதாரம், HANDOUT
"மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியுடன் உள்ளோம் என்பதை காட்டவே 'ரூ' என்ற எழுத்தை பெரிதாக வைத்தோம்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்திருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி கூறுகிறது.
'உங்களில் ஒருவன்' (Ungalil Oruvan) என்னும் பெயரில் நேற்று (மார்ச் 16) வெளியான காணொலியில், இதுகுறித்து அவர் பேசியுள்ளார். அந்த வீடியோவில், "பட்ஜெட் logo-வை வெளியிட்டிருந்தேன். மொழிக்கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்டுவதற்காக அதில் 'ரூ'-என்று வைத்திருந்தோம். ஆனால், தமிழைப் பிடிக்காதவர்கள். அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள்.
ஒன்றிய அரசிடம், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், பேரிடர் நிதி வழங்க வேண்டும், பள்ளிக்கல்வி நிதியை விடுவிக்க வேண்டும், தமிழ்நாடு சார்பாக நூறு கோரிக்களை வைத்திருப்பேன். அதற்கெல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர், இதைப் பற்றி பேசியிருக்கிறார்.
அவங்களே, பல பதிவுகளில் ரூ-என்றுதான் பயன்படுத்துகிறார்கள். ஆங்கிலத்திலும் எல்லாரும் Rupees- என்பதை எளிமையாக Rs-என்றுதான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாக தெரியாதவங்களுக்கு, இதுதான் பிரச்சினையாக தெரிகிறது போல. மொத்தத்தில், இந்திய அளவில் நம் பட்ஜெட்டும் ஹிட், தமிழும் ஹிட்! இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்." என தி இந்து செய்தி கூறுகிறது.
"குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சி போதும்"
குற்றத்தை நிரூபிக்க நேரடி சாட்சிகள் இல்லாவிட்டாலும், கண்காணிப்பு கேமரா காட்சிகளே போதுமானது என சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் மேலும்,"சென்னை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் அல்லி என்பவர் பழக்கடை நடத்தி வந்தார். கடந்த 2023ம் ஆண்டு மே 1 ம் தேதி இவரது கடைக்கு வந்த 4 பேர் பழங்கள் வாங்கி சாப்பிட்டு விட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர்.
கடையில் வேலை பார்த்த மன்மோகன் சிங் என்பவர் பணம் கேட்ட போது அவரை ஆபாசமாக திட்டி மிரட்டிய அவர்கள் கடையை சேதப்படுத்தியதோடு, சோடா பாட்டில்களை வீசி எறிந்து தகராறில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து 3 பேரும் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை 19வது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்றது.
இவ்வழக்கில் நேரில் பார்த்த சாட்சியான கடை ஊழியர் மன்மோகன்சிங் சாட்சி அளிக்காத நிலையில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் தெளிவாக இருப்பதால் தண்டனை அளிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் தனசேகரன் வாதிட்டார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ராஜ்குமார் பிறப்பித்த உத்தரவில், "நேரில் பார்த்தவர் சாட்சியம் அளிக்கவில்லை என்றாலும், கண்காணிப்பு கேமராவில் குற்றச்செயல் தெளிவாக பதிவாகியுள்ளது. இது போன்ற குற்றச்சம்பவங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.
இதுபோன்ற குற்றசம்பவங்களை கண்டு கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நாகரிக சமூகத்தில் இதை அங்கீகரிக்க முடியாது. நேரடி சாட்சியம் இல்லாவிட்டாலும், குற்றத்தை நிரூபிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் போதுமானதாகும். எனவே, குற்றசெயலில் ஈடுபட்ட வெங்கடேசன் உள்ளிட்ட 4 பேருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது." என தினத்தந்தி செய்தி குறிப்பிட்டுள்ளது.

மனைவியின் வருமான வரி விவரங்களை கணவருக்கு கொடுக்க உத்தரவு
விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ள மனைவியின் வருமானம் தொடர்பான அடிப்படை விவரங்களை கணவருக்கு பகிருமாறு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில்,"சென்னையைச் சேர்ந்த ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமது மனைவியின் வருமானம் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதாகவும், இதனை வழங்க மறுத்த வருமான வரித்துறை உத்தரவுக்கு எதிராக தகவல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ள இவரது மனைவி பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். 2010-11 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரையிலான மனைவியின் வருமானம் தொடர்பான அடிப்படை விவரங்கள் , குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் திருமண வழக்கின் விசாரணைக்காக தேவைப்படுவதால் இதனை வழங்குமாறு மனுதாரர் கோரியிருந்தார்.
ஆனால் இந்த கோரிக்கை தனிநபரின் தனியுரிமையில் ஆதாரமற்ற தலையீடு எனக் கூறி இந்த தகவலை வழங்க தலைமை தகவல் ஆணையர் மறுத்தார். பொதுநல நோக்கம் இல்லாத பட்சத்தில் இதனை வழங்க முடியாது எனவும் முதல் நிலையில் தகவல் ஆணையர் மறுத்திருந்தார்.
இரு தரப்பையும் விசாரித்த மத்திய தகவல் ஆணையம் மனுதாரர் சட்டப்பூர்வமான திருமணம் செய்த கணவர் தான் என்பதை உறுதி செய்துவிட்டு, அவரது மனைவியின் வரிவிதிப்பிற்குட்பட்ட வருமானம், மற்றும் நிகர வருமானம் ஆகியவற்றை மனுதாரரிடம் பகிருமாறு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் விரிவான வருமான வரி விவரங்களை பகிரத் தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது." என அந்த செய்தி விவரிக்கிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்து - 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

பட மூலாதாரம், THE HINDU
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து காரணமாக பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்ததால் 3 அலகுகளில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், தூத்துக்குடி வஉசி துறைமுகம் அருகே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான அனல்மின் நிலையத்தின் 1 மற்றும் 2-வது அலகுகளுக்கான கட்டுப்பாட்டு அறை அருகே பல அடுக்குகளாக இருக்கும் கேபிள் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென தீப்பிடித்துள்ளது. சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பரவியது. இதையடுத்து தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட பல்வேறு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.
சுமார் 500 தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி நேற்று காலை 10 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் உள்பகுதிகளில் உள்ள கேபிள்களிலும் தீ பரவியதால் முழுமையாக அணைக்க முடிவில்லை. நேற்று மாலை வரை தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. பல கோடி ரூபாய் மதிப்பிலான கருவிகள் சேதமடைந்ததால் 3 அலகுகளில் மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 மற்றும் 5-வது அலகுகளில் மின் உற்பத்தி பாதிப்பின்றி நடைபெற்று வருகிறது. தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் புகை மண்டலத்தில் சிக்கி மயக்கமடைந்தனர்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டலந்த முகாம் ஆட்கொலை - ரணில் விக்கிரமசிங்கவை கைது செய்ய கோரிக்கை

பட மூலாதாரம், VEERAKESARI
பட்டலந்த முகாம் ஆட்கொலை விவகாரத்துடன் தொடர்புடைய ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று முன்னணி சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளருமான புபுது ஜெயகொட வலியுறுத்தியிருப்பதாக வீரகேசரி இணையதள செய்தி தெரிவிக்கிறது.
அநுராதபுரத்தில் இடம்பெற்றக் கூட்டமொன்றில் சனிக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றிய அவர், "பட்டலந்த விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கூற முடியும்.எனவே ரணிலை கைது செய்யுங்கள்.டக்லஸ் பிரீஸை கைது செய்யுங்கள்.இது அரசியல் பழிவாங்கல் அல்ல.இது ரணில் அல்லது வேறு எவரிடமோ மேற்கொள்ளும் அரசியல் பழிவாங்கல் அல்ல.எமது ஆயிரம் கணக்கான இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். வேண்டுமானால் நாம் அதற்கு மன்னிப்பு வழங்குவோம். அங்கு பணியாற்றி ஒய்வுப்பெற்ற ஒருவர் அண்மையில் பல தகவல்களை பகிரங்கப்படுத்தியுள்ளார்.
பட்டலந்த சித்திரவதை முகாம் ஆட்கொலை விவரகத்துடன் ரணில் மத்திரம் தொடர்பு படவில்லை. மாத்தளை விஜய கல்லூரி புதைகுழி சம்பவம் தொடர்பில் கோட்டாபய பொறுப்புக்கூற வேண்டும். எனவே நீதி கிடைக்கவேண்டும்.மறைக்கப்பட்ட உண்மைகளை முழு உலகமும் அறிய வேண்டும். அப்பாவி மக்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை சமூகம் அறிந்துகொள்ள வேண்டும். குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.அது அரசியல் பழிவாங்கல் அல்ல" என்று குறிப்பிட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












