பாகிஸ்தானால் இந்தியா - செளதி அரேபியா உறவு பாதிக்கப்படுமா?

பாகிஸ்தான் - சௌதி அரேபியா, இந்தியா

பட மூலாதாரம், @Spa_Eng

படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் மற்றும் செளதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் உத்திரீதியான பரஸ்பரப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

செளதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் குறித்த மிக முக்கியமான விவாதம் என்னவென்றால், ஒரு நாடு தாக்கப்பட்டால், அது மற்றொரு நாட்டுக்கு எதிரான தாக்குதலாகவும் கருதப்படும் என்பதுதான்.

இந்தியாவில் உள்ள பல ஆய்வாளர்கள் இதை மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே நடந்த ராணுவ மோதலின் பின்னணியில் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில், மேற்கத்திய நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள், சமீபத்தில் கத்தாரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் பின்னணியில் இதைப் பார்த்தனர்.

பிபிசி இந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான 'தி லென்ஸ்' தொடரில், கலெக்டிவ் நியூஸ்ரூமின் இதழியல் இயக்குனர் முகேஷ் சர்மா, பாகிஸ்தான் - செளதி அரேபியாவுக்கு இடையேயான இந்த ஒப்பந்தம் குறித்து நிபுணர்களுடன் விவாதித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் அர்த்தம் என்ன? இந்த ஒப்பந்தம் பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியா உறவுகளில் ஒரு முக்கியமான படியாக இருக்கிறதா?

அமெரிக்காவின் அணுகுமுறையைக் கருத்தில் கொண்டு செளதி அரேபியா புதிய கூட்டாளிகளைத் தேடுகிறதா? மேலும் மிக முக்கியமான கேள்வி - இதனால் செளதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்படுமா?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பெற, இந்த நிகழ்ச்சியில் துபையைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் எஹ்தேஷாம் ஷாஹித் மற்றும் கௌடில்யா பொது கொள்கை பள்ளியின் (Kautilya School of Public Policy ) உதவிப் பேராசிரியர் கனிகா ராக்ரா ஆகியோருடன் விவாதிக்கப்பட்டது.

பாதுகாப்பு ஒப்பந்தத்தை எப்படிப் பார்க்க வேண்டும்?

மூத்த பத்திரிகையாளர் எஹ்தேஷாம் ஷாஹித், இதில் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் என இரண்டு முக்கிய மையப்புள்ளிகள் அல்லது பின்னணிகளைக் குறிப்பிடுகிறார்.

செளதி அரேபியாவுக்குப் பாதுகாப்பு மற்றும் பாகிஸ்தானுக்குப் பொருளாதார உதவி என்ற பின்னணியைக் குறிப்பிட்டு, இரண்டு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டிய தேவைகள் எழுகின்றன என்று அவர் கூறுகிறார்.

"இந்த நேரத்தில் செளதி அரேபியாவுக்குப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. மத்திய கிழக்கின் நிலைமை மிகவும் சிக்கலானது. இரான் ஒரு காரணியாக உள்ளது, இஸ்ரேல் ஒரு காரணியாக உள்ளது. அதே சமயம், இந்த பிராந்தியத்தில் பாதுகாப்புக்கு உத்தரவாததாரராக இருந்து வந்த அமெரிக்காவின் பங்களிப்பில் இப்போது குறைபாடு உணரப்படுகிறது." என்கிறார் எஹ்தேஷாம் ஷாஹித்,

"அத்தகைய சூழ்நிலையில், செளதி அரேபியா ஒரு மாற்றுப் பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்வது மிகவும் அவசியமாக இருந்தது. அந்தப் பின்னணியில் பாகிஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் சரியாகப் பொருந்துகிறது."

"பாகிஸ்தான் ஒரு ராணுவ சக்தியாகும், அதற்குப் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பொருளாதார ரீதியாக பாகிஸ்தானுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும், அதுவே அவர்களின் முதல் முன்னுரிமையாகும்," என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஒரு காரணியா?

பாகிஸ்தான் - சௌதி அரேபியா, இந்தியா

பட மூலாதாரம், Win McNamee/Getty Images

படக்குறிப்பு, மே 13, 2025 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரின் சந்திப்பு நடந்தது.

டொனால்ட் டிரம்ப் அதிபரான பிறகு அவரது அணுகுமுறையால், அமெரிக்காவின் பல நட்பு நாடுகள் அதன் மீது நம்பிக்கை இழந்து வருகின்றன.

செளதி அரேபியா-அமெரிக்க உறவுகளை பொறுத்தவரை செளதி அரேபியா தங்கள் பாதுகாப்புக்காக அமெரிக்காவைச் சார்ந்து இருந்தது என்றும், பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்தது என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஹமாஸின் பெயரைச் சொல்லி இஸ்ரேல் கத்தாரில் தாக்குதல் நடத்தியது செளதிக்குக் கவலை அளிக்கிறது. மறுபுறம், இரானுடன் செளதிக்கு எப்போதும் பதற்றமான உறவுகள் உள்ளன.

இதனால், அமெரிக்காவின் 'நண்பர்கள்' என்று கருதப்படுபவர்களும், 'எதிரிகள்' என்று கருதப்படுபவர்களும் செளதி அரேபியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படியானால், பாகிஸ்தானுடனான சமீபத்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தைச் செளதி தனது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இரண்டாவது மாற்று வழியைப் பார்ப்பதாகக் கருதலாமா?

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் பங்கு குறைந்து வருவதுடன் மோசமடைந்து வருகிறது என்று கனிகா ராக்ரா கூறுகிறார்.

இந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகள் தமக்கான மாற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தேடுகின்றன. ஆனால் செளதி அரேபியாவுக்கு, அமெரிக்காவுக்கு மாற்றாக பாகிஸ்தான் இருக்க முடியாது என்பது கனிகா ராக்ராவின் கூற்று.

"டிரம்ப் வந்ததுடன், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். மத்திய கிழக்குப் பிரச்னைகளில் அமெரிக்காவின் தலையீடு குறைந்தது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் காலத்திலேயே தொடங்கிவிட்டது." என்கிறார் எஹ்தேஷாம் ஷாஹித்.

செளதி அரேபியாவுடன் இந்தியாவின் உறவுகள் பாதிக்கப்படுமா?

பாகிஸ்தான் - சௌதி அரேபியா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான்-செளதி அரேபியாவுக்கு இடையேயான ஒப்பந்தம் இந்தியா-செளதி உறவுகளையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தான் மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு எந்தக் கவலையும் அளிக்காது என்று இரண்டு நிபுணர்களும் கூறுகிறார்கள்.

"செளதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவுகள் பாகிஸ்தானை நம்பி உருவாக்கப்படவில்லை. மத்திய ஆசியாவில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும் இந்தியா இருதரப்பு உறவுகளை உருவாக்குகிறது, மற்ற நாடுகளின் நகர்வுகளைப் பார்த்தல்ல." என்றார் கனிகா ராக்ரா.

எஹ்தேஷாம் ஷாஹித் கூறுகையில், "செளதி அரேபியாவுக்கு இந்தியாவுடனான உறவுகள் பல அடுக்குகளைக் கொண்டவை, இதில் எரிசக்தி மற்றும் பொருளாதாரச் சார்பும் அடங்கும்."

"இந்த பிராந்தியத்தில் ஏராளமான இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். இந்த உறவுகளைச் சீர்குலைக்கும் எந்த நோக்கமும் செளதியின் தரப்பில் இல்லை, மேலும் செளதி இந்தியாவுடனான உறவுகளைச் சீர்குலைத்து பாகிஸ்தானுடன் உறவுகளை வளர்க்க விரும்புகிறது என்று அவர்கள் எந்தக் கருத்தையும் சொல்லவில்லை," என்று அவர் கூறுகிறார்.

முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வந்தபோது, இந்தியா-செளதி உறவுகளுக்கும் பாகிஸ்தான்-செளதி உறவுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவர் தெளிவாகக் கூறினார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தான் - சௌதி அரேபியா, இந்தியா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாகிஸ்தான்-செளதி அரேபியாவுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் ஒருவருக்கொருவர் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது பற்றி விவாதிக்கப்படுகிறது. இது இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின் பின்னணியில் பார்க்கப்பட்டால் அதன் பொருள் என்ன?

இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்த முழுமையான விவரம் எங்கும் வெளியிடப்படவில்லை என்றும், அதனால் இரண்டு நாடுகளும் எந்த விதமான ஆதரவை அளிக்கும் என்பது தெரியவில்லை என்றும் கனிகா ராக்ரா கூறினார்.

"நாம் இந்த ஒப்பந்தத்தை இந்தியா மற்றும் பாகிஸ்தானின் பின்னணியில் பார்க்கிறோம். ஆனால் செளதி-இரான் இடையே சண்டை நடந்தால், பாகிஸ்தான் யாருடைய பக்கத்தை ஆதரிக்கும் என்ற பின்னணியில் இதைப் பார்க்கிறோமா? ஏனெனில் பாகிஸ்தானுக்கு இரான் மற்றும் செளதி ஆகிய இரு நாடுகளுடனும் உறவுகள் உள்ளன. அப்படியானால், தனது அண்டை நாடான இரானை பாகிஸ்தான் தாக்குமா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

எஹ்தேஷாம் ஷாஹித், இந்த ஒப்பந்தத்தில் இந்தியா-பாகிஸ்தான் நிலைமைகளை விட, மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களே முக்கியக் காரணம் என்று கருதுகிறார்.

அவரது கூற்றுப்படி, இப்போதைக்கு இந்தியா-செளதி உறவுகள் மோசமடைவதாகத் தெரியவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு