ஹெச்1பி விசா கட்டண உயர்வு: இந்தியாவை விட அமெரிக்காவையே அதிகம் பாதிக்கும் என்று கருதப்படுவது ஏன்?

ஹெச்1பி விசா, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹெச்1பி விசா கட்டணத்தை பன்மடங்கு வரை உயர்த்துவதாக அறிவித்ததன் மூலம் டிரம்ப் தொழில்நுட்ப உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.
    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் நிகில் இனாம்தார்

பயம், குழப்பம், பின்னர் வெள்ளை மாளிகையின் விளக்கம் என ஹெச் 1-பி விசாவின் கீழ் உள்ள லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு இது ஒரு அதிர்ச்சிகரமான வார இறுதியாக இருந்தது.

வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன்மிகு தொழிலாளர்களுக்கான விசா கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி 100,000 டாலராக அறிவித்தார். இது தொழில்நுட்ப உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

சிலிகான் பள்ளத்தாக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஊழியர்களை வெளிநாடு பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரித்தன, ஹெச்1பி விசா வைத்திருந்த வெளிநாட்டு ஊழியர்கள் விமான டிக்கெட் தேடி அலைந்தனர், உத்தரவை புரிந்துகொள்ள குடியேற்ற வழக்கறிஞர்கள் இரவு பகலாக வேலை செய்தனர்.

சனிக்கிழமை, வெள்ளை மாளிகை இந்தக் குழப்பத்தைத் தணிக்க முயன்று, கட்டணம் புதிய விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும், அதுவும் ஒரு முறை மட்டுமே வசூலிக்கப்படும் என்று தெளிவுபடுத்தியது. ஆனால், நீண்ட காலமாக இருந்த ஹெச் - 1பி திட்டத்தின் எதிர்காலம் இன்னும் தெளிவில்லாமல் உள்ளது.

இந்தத் திட்டம் அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும், உலகளாவிய திறமைகளை ஈர்க்கும் ஒன்றாக கருதப்பட்டது.

இந்த மாற்றங்களுடனும், மூன்று தசாப்தங்களாக இந்தியர்களின் "அமெரிக்க கனவை" நனவாக்கி, அமெரிக்க தொழில்களுக்கு திறமையான ஊழியர்களை வழங்கிய ஹெச்1பி திட்டத்தை இந்தக் கொள்கை பெருமளவு தடுக்கிறது.

இந்த ஹெச் - 1பி திட்டம் இந்தியாவையும் அமெரிக்காவையும் மாற்றியமைத்தது.

ஹெச்1பி விசா, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images

இந்தியர்களுக்கு, இது ஒரு கனவு பயணமாக மாறியது.

சிறு நகரங்களைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர்கள் டாலர்களில் சம்பாதிக்க ஆரம்பித்தனர், குடும்பங்கள் நடுத்தர வர்க்கத்துக்கு உயர்ந்தன, விமான நிறுவனங்கள் முதல் ரியல் எஸ்டேட் வரை பல துறைகள் உலகம் சுற்றும் இந்தியர்களுக்காக உருவாயின.

இந்தத் திட்டம் ஆய்வகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், புதிய நிறுவனங்களை நிரப்பும் திறமையான பணியாளர்களை அமெரிக்காவுக்குக் கொடுத்தது. இன்று, இந்திய வம்சாவளியினர் கூகுள், மைக்ரோசாப்ட், ஐபிஎம் போன்ற நிறுவனங்களை வழிநடத்துகிறார்கள். அமெரிக்க மருத்துவர்களில் சுமார் 6% இந்தியர்கள்.

ஹெச் -1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், சமீப ஆண்டுகளில் 70% க்கும் மேல் விசாக்கள் இந்தியர்களுக்கு கிடைத்தன. (சீனா இரண்டாவது இடத்தில், சுமார் 12%)

தொழில்நுட்பத் துறையில், இந்தியர்களின் பங்கு இன்னும் பெரியது. 2015-ல் கிடைத்த தகவலின்படி, 80% க்கும் மேற்பட்ட "கணினி" வேலைகள் இந்தியர்களுக்கு சென்றன. அந்த நிலை இப்போதும் பெரிதாக மாறவில்லை என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவத் துறையிலும் இது தெளிவாகிறது. 2023-ல், 8,200-க்கும் மேற்பட்ட ஹெச்-1பி விசா பெற்றவர்கள் மருத்துவமனைகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர்.

இந்தியா, சர்வதேச மருத்துவ பட்டதாரிகளின் மிகப்பெரிய மூலாதாரமாக உள்ளது. (பொதுவாக ஹெச் - 1பி விசாக்களில் அமெரிக்காவில் இருப்பவர்கள்) அவர்களில் 22% இந்தியர்கள். அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில் கால் பங்கு வெளிநாட்டவர்கள் என்ற நிலையில், ஹெச் - 1பி விசா வைத்துள்ள இந்தியர்கள் மொத்தத்தில் 5-6% இருக்கலாம்.

ஹெச்1பி விசா, இந்தியா - அமெரிக்கா
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

டிரம்பின் புதிய 100,000 டாலர் கட்டணம் நடைமுறையில் முற்றிலும் செயல்படுத்த முடியாதது. 2023-ல் புதிய ஹெச்-1பி ஊழியர்களின் சராசரி சம்பளம் 94,000 டாலர் மட்டுமே. ஏற்கனவே பணியில் இருப்பவர்களுக்கு 129,000 டாலர். இந்தக் கட்டணம் புதிதாக நியமிக்கப்படுபவர்களுக்கே மட்டுமே பொருந்துவதால், பலர் இதை செலுத்த முடியாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

"புதிதாக ஹெச் -1பி விசா பெறுபவர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதனால், உடனடி பாதிப்பு இல்லாமல், நடுத்தர மற்றும் நீண்டகால தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படலாம்," என்று நிஸ்கனென் மையத்தின் குடியேற்றக் கொள்கை ஆய்வாளர் கில் குவேரா பிபிசியிடம் கூறினார்.

இந்தியா முதலில் பாதிக்கப்படலாம், ஆனால் அமெரிக்காவிலும் இதன் தாக்கம் ஆழமாக இருக்கலாம். டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் முன்பிருந்தே இதற்கு தயாராகி வருகின்றன.

புள்ளிவிவரங்கள் இதுகுறித்த புரிதலை தருகின்றன.

ஹெச்-1பி விசா பெறுபவர்களில் 70% இந்தியர்கள். ஆனால், 2023-ல் முதல் 10 ஹெச்-1பி வேலை அளிக்கும் நிறுவனங்களில் மூன்று மட்டுமே இந்தியாவுடன் தொடர்புடையவை, 2016-ல் இது ஆறாக இருந்தது என்று பியூ ஆய்வு கூறுகிறது.

இருந்தாலும், 283 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய ஐடி துறை, தனது வருவாயில் பாதிக்கு மேல் அமெரிக்காவுக்கு திறமையான ஊழியர்களை அனுப்புவதை நம்பியுள்ளதால், பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

விசா கட்டண உயர்வு அமெரிக்காவிலுள்ள சில "திட்டங்களின் வணிகத் தொடர்ச்சியை பாதிக்கலாம்" என்று ஐடி துறை அமைப்பான நாஸ்காம் எச்சரிக்கிறது. இந்த சட்டம் குறித்த தெளிவு கிடைக்கும் வரை, வாடிக்கையாளர்கள் திட்டங்களுக்கு புதிய தொகை நிர்ணயம் செய்யவோ அல்லது தாமதிக்கவோ வலியுறுத்தலாம். நிறுவனங்கள் தங்கள் பணியாளர் முறையை மாற்றலாம், அதாவது வேலையை வெளிநாடுகளுக்கு மாற்றுதல், அமெரிக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளை குறைத்தல், ஸ்பான்சர்ஷிப் வழங்கும் போது மிகவும் தேர்வு செய்து செயல்படுதல் போன்றவை.

இந்திய நிறுவனங்கள் கூடுதல் விசா செலவுகளை அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு மாற்றிவிடும் வாய்ப்பும் உள்ளது என்று முன்னணி பணியாளர் நிறுவனம் CIEL HR-இன் ஆதித்ய நாராயண் மிஸ்ரா கூறுகிறார்.

"முதலாளிகள் அதிக செலவு தேவைப்படும் விசா ஸ்பான்சர்ஷிப்பை ஏற்க தயங்குவதால், தொலைதூர ஒப்பந்தங்கள், வெளிநாட்டு சேவைகள், தற்காலிக பணியாளர்களை அதிகம் நம்பலாம்," என்று அவர் விளக்குகிறார்.

அமெரிக்காவுக்கு இதன் தாக்கம் கடுமையாக இருக்கலாம்.

மருத்துவர்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் மருத்துவமனைகள், ஸ்டெம் (STEM-அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தை ஒருங்கிணைக்கும் துறை) மாணவர்களை ஈர்க்க முடியாமல் தவிக்கும் பல்கலைக்கழகங்கள், கூகுள் அல்லது அமேசான் போன்ற பெரிய செல்வாக்கு இல்லாத புதிய நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படலாம்.

"இந்த விசா கட்டண உயர்வு அமெரிக்க நிறுவனங்களை தங்கள் வேலைவாய்ப்பு முறைகளை மாற்றவும், பல வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றவும் கட்டாயப்படுத்தும். அமெரிக்காவில் நிறுவனங்களை நடத்த வரும் தொழில்முனைவோர் மற்றும் தலைமை நிர்வாகிகளையும் தடுக்கும். இது அமெரிக்காவின் புதுமை படைத்தல் மற்றும் போட்டித்திறனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்," என்று கேட்டோ இன்ஸ்டிட்யூட்டின் குடியேற்ற ஆய்வு இயக்குநர் டேவிட் பியர் பிபிசியிடம் கூறினார்.

ஹெச்1பி விசா, இந்தியா - அமெரிக்கா

பட மூலாதாரம், San Francisco Chronicle via Getty Images

படக்குறிப்பு, ஹெச் - 1பி திட்டத்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர், அதில் பயன் பெறுபவர்களில் 70% க்கும் அதிகமானோர் உள்ளனர்.

இந்த கவலை மற்ற நிபுணர்களாலும் பகிரப்படுகிறது. "அமெரிக்காவில் தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற துறைகளில் பணியாளர்களுக்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துறைகள் மிகவும் முக்கியமானவை என்பதால், சில ஆண்டுகள் நீடிக்கும் பணியாளர் பற்றாக்குறை அமெரிக்க பொருளாதாரத்தையும் நாட்டின் நலனையும் கடுமையாக பாதிக்கலாம்," என்று குவேரா கூறுகிறார்.

"இது திறமையான இந்தியர்களை வேறு நாடுகளில் கல்வி கற்கத் தூண்டலாம். இதனால் அமெரிக்க பல்கலைக்கழகங்களும் பாதிக்கப்படலாம்."

உண்மையில், இதன் தாக்கத்தை மிகவும் நேரடியாக உணரப் போகிறவர்கள் இந்திய மாணவர்கள் தான். அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் நால்வரில் ஒருவர் இந்தியர்.

120 பல்கலைக்கழகங்களில் 25,000 மாணவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வட அமெரிக்க இந்திய மாணவர் சங்கத்தின் நிறுவனர் சுதான்ஷு கௌஷிக், செப்டம்பர் மாத சேர்க்கைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்ததால் புதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்கிறார்.

"இது நேரடி தாக்குதல் போல் உணரப்பட்டது. மாணவர்கள் ஏற்கனவே 50,000 டாலர் முதல் 100,000 டாலர் வரை செலவு செய்துவிட்டனர். ஆனால் அமெரிக்க வேலைவாய்ப்புக்கான முக்கிய பாதை இப்போது மூடப்பட்டுவிட்டது," என்று கௌஷிக் பிபிசியிடம் கூறினார்.

பல இந்திய மாணவர்கள் நிரந்தரமாக குடியேறக்கூடிய நாடுகளைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதால், அடுத்த ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழக சேர்க்கைகள் பாதிக்கப்படலாம் என்று அவர் கணிக்கிறார்.

இந்த கட்டண உயர்வின் முழு தாக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

டிரம்பின் இந்த நடவடிக்கை விரைவில் சட்ட சவால்களை எதிர்கொள்ளும் என்று குடியேற்ற வழக்கறிஞர்கள் கருதுகின்றனர். "புதிய ஹெச்1பி கொள்கை அமெரிக்காவுக்கு பல எதிர்மறை விளைவுகளைத் தரலாம். ஆனால் அவை எப்படி இருக்கும் என்பது தெரிய சிறிது காலம் ஆகும்," என்று குவேரா குறிப்பிடுகிறார்.

"உதாரணமாக, நிர்வாக உத்தரவு சில நிறுவனங்களுக்கு விலக்கு வழங்க அனுமதிக்கிறது. அதனால் அமேசான், ஆப்பிள், கூகுள், மெட்டா போன்ற அதிக அளவில் ஹெச்1பி பயன்படுத்தும் நிறுவனங்கள் இந்தக் கட்டணத்திலிருந்து விலக்கு பெறக்கூடும். ஆனால் அவர்கள் அனைவரும் விலக்கு பெற்றால், அந்தக் கட்டணத்தின் நோக்கமே வீணாகிவிடும்."

இந்த ஹெச்1பி மாற்றம் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரி போல் இல்லாமல், அமெரிக்க நிறுவனங்களுக்கும் பொருளாதாரத்திற்கும் ஒரு சவாலாக தோன்றுகிறது. ஹெச்1பி விசா வைத்திருப்பவர்களும் அவர்களது குடும்பங்களும் ஆண்டுக்கு சுமார் $86 பில்லியன் பங்களிக்கின்றனர், இதில் $24 பில்லியன் பெடரல் வரிகளாகவும், $11 பில்லியன் மாநில மற்றும் உள்ளூர் வரிகளாகவும் செல்கின்றன.

நிறுவனங்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பொறுத்து, அமெரிக்கா புதுமையிலும் திறமையிலும் முன்னிலை வகிக்குமா அல்லது மற்ற நாடுகளுக்கு வாய்ப்பளிக்குமா என்பது தீர்மானிக்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு