அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்து: பாஜகவுக்கு என்ன சிக்கல்? கட்சியின் 'தலித் அரசியலை' பாதிக்குமா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி செய்தியாளர்
"இது இப்போது ஃபேஷனாகிவிட்டது... அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்.
இந்தளவுக்கு கடவுளின் பெயரைப் பயன்படுத்தியிருந்தால், ஏழு பிறவிகளுக்கும் சொர்க்கத்தை அடைந்திருப்பீர்கள்."
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அரசியல் சாசனம் மீதான விவாதத்தின் போது, அவரது நீண்ட உரையின் இந்த சிறிய பகுதியால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும் அளவுக்கு பெரும் அமளி ஏற்பட்டது.
அவரது கருத்து, அம்பேத்கரை அவமதிப்பதாகக் கூறி கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அமித்ஷா புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
"பாபா சாஹேப் அம்பேத்கரை வாழ்நாள் முழுவதும் அவமதித்தவர்கள், அவரது கொள்கைகளை புறக்கணித்தவர்கள், ஆட்சியில் இருந்தபோது பாபா சாஹேப்பை பாரத ரத்னா பெற அனுமதிக்காதவர்கள், இடஒதுக்கீடு கொள்கைகளை புறக்கணித்தவர்கள், இன்று பாபா சாஹேப் பெயரில் குழப்பங்களை உருவாக்கி வருகிறார்கள்" என்று அமித் ஷா கூறினார்.
- சாதி விவகாரத்தில் சாவர்க்கரோடு அம்பேத்கர் இணைந்து செயல்பட முயன்றது எப்போது? என்ன நடந்தது?
- ஒரே நாடு ஒரே தேர்தல்: மசோதாக்களில் என்ன இருக்கிறது? எளிமையான விளக்கம்
- அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன பேசினார்? எதிர்க்கட்சிகள் போராட்டம் ஏன்?
- ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?

அதுமட்டுமின்றி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பீம்ராவ் அம்பேத்கரை கௌரவிக்கும் வகையில், தனது அரசு என்னென்ன பணிகளை செய்துள்ளது என, பிரதமர் நரேந்திர மோதி சமூக வலைத்தளங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
ஆனால், இவ்வளவு நடந்த பிறகும், சலசலப்பு குறையவில்லை .
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக குற்றம் சாட்டி, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
"அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்துள்ளார், அரசியலமைப்பை அவமதித்துள்ளார். அவரது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், அம்பேத்கரின் அரசியலமைப்பை மதிக்க விரும்பவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறுவதாக" கார்கே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில், பீம்ராவ் அம்பேத்கரின் பெயரில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அரசியல் செய்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
பாஜக ஏன் தெளிவுபடுத்த வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
அமித் ஷாவின் இந்த கருத்து அம்பேத்கரை அவமதிப்பதாகக் கருதப்படுவது ஏன், அது பாஜகவின் தலித் அரசியலை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்விக்குப் பதிலளித்தார், முனைவர் ஹவால்தார் பார்தி. இவர், பஞ்சாப் தேஷ்பகத் பல்கலைக்கழகத்தின் தலித் ஆய்வாளர் மற்றும் உதவிப் பேராசிரியர்.
"பல நூற்றாண்டுகளாக சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கல்வி ரீதியாக பாகுபாடுகளை எதிர்கொண்டு வரும் சாதி அடிப்படையிலான, இந்திய சமுதாயத்தின் கோடிக்கணக்கான மக்களுக்கு அரசியல் சாசனத்தில் சமத்துவ உரிமை வழங்கியதன் மூலம், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களை சுரண்டலில் இருந்து விடுவித்துள்ளார், அம்பேத்கர். சுரண்டலில் இருந்து விடுதலை அளிப்பவர் கடவுள் என்றால், இங்குள்ள கோடிக்கணக்கான மக்களின் கடவுள் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர்" என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், "அம்பேத்கரின் சித்தாந்தம் மற்றும் தலித் அரசியலுடன் தொடர்புடையவர்கள், அமித் ஷாவின் இந்தக் கூற்று, அம்பேத்கரை அவமதிப்பதாகப் பார்க்கக் காரணம் இதுதான்" என்றும் தெரிவித்தார்.
ஆனால், தற்போது அம்பேத்கரை ஏற்றுக்கொள்வதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் போட்டி இருப்பதாகவும், அம்பேத்கரின் சிந்தனைகளை நடைமுறைப்படுத்தாமல், அவரது அடையாளத்தைப் பயன்படுத்தி தலித் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாகவும் பார்தி கூறுகிறார்.
மேலும், அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்தால் பாஜக தன்னை விமர்சனங்களிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இதுமட்டுமின்றி, சமீபகாலமாக தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வாக்காளர்களை ஈர்க்கும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
பிராமணர்கள் மற்றும் பனியாக்களின் கட்சி என்ற அடையாளம்

பட மூலாதாரம், Getty Images
பாரதிய ஜனதா கட்சி, நீண்ட காலமாக பிராமணர்கள் மற்றும் பனியாக்களின் கட்சி என்ற பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், கடந்த பத்தாண்டுகளில், பாஜக இந்த அடையாளத்தைத் தாண்டி, இந்து சமூகத்தின் மற்ற சாதிகளையும் உள்ளடக்கியதில் வெற்றி பெற்றுள்ளது.
சாதி அடையாள அரசியல், ஆதிக்கம் செலுத்துவதற்கு மாறாக, பெரும்பான்மை இந்துக்களின் 'மத அடையாள அரசியல்' வலுவடைய வேண்டும் என்று பாஜக முயற்சிக்கிறது.
அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் அபய் குமார் துபே கூறுகையில், "ஆர்.எஸ்.எஸ்., மகாராஷ்டிராவின் உயர் சாதியினரின், குறிப்பாக பிராமணர்களின் அமைப்பாக இருந்தது, ஆரம்பத்தில் பட்டியல் சாதியினர் அதன்பால் ஈர்க்கப்படவில்லை."என்று குறிப்பிட்டார்.
"ஆர்.எஸ்.எஸ்-ல் அப்போதும் சரி, இப்போதும் சரி, பிராமணியத்தை விமர்சிக்கும் வாய்ப்பு இல்லை.
ஆர்.எஸ்.எஸ்-ன் சித்தாந்தம் சமத்துவம் அல்ல, நல்லிணக்கம்.
பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்-ம் தேர்தல் அரசியலில் ஈடுபட வேண்டுமானால், அதற்கு, இந்து மக்களின் ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.
அது தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வாக்குகளைப் பெறாமல் சாத்தியமில்லை என்பதுதான் இன்றைய நிலை" என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜகவை நிறுவுவதற்கு முன்பே ஆர்.எஸ்.எஸ் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. 1974ல், பாலாசாகேப் தியோரஸ் தலைவராக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டது. தனது காலை பிரார்த்தனையில் அம்பேத்கர், பெரியார், மகாத்மா பூலே போன்ற தலைவர்களின் பெயர்களை பாலாசாகேப் தியோரஸ் இணைத்தார்.
இதுதவிர, தலித்துகள் மற்றும் பழங்குடியினரை தங்கள் பக்கம் ஈர்க்கும் வகையில், ஆர்.எஸ்.எஸ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியது.
டெல்லியை தளமாகக் கொண்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான பர்வேஷ் சௌத்ரி, பாஜக உருவாவதற்கு முன்பே, அம்பேத்கரை ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக்கொண்டதாக வாதிடுகிறார்.
தலித்துகளை பாஜகவுடன் இணைக்கும் முயற்சி

பட மூலாதாரம், Getty Images
பேராசிரியர் பர்வேஷ் சௌத்ரி கூறும்போது, "பாஜக இன்று மட்டுமின்றி ஜனசங்க காலத்தில் இருந்தே அல்லது அதற்கு முன்பே தலித்துகள் தங்களோடு இணைய வேண்டும் என்பதை ஊக்குவித்து வருகிறது. பாபா சாஹேப் அம்பேத்கரின் தேர்தல் முகவராக மகாராஷ்டிர ஆர்.எஸ்.எஸ். பிரசாரகரான தத்தோபந்த் தேங்காடி இருந்தார், பாபா சாஹேப் ஏற்கனவே சங்கத்தில் இருந்தார். ஆர்.எஸ்.எஸ் எப்போதும் பாபா சாஹேப் அம்பேத்கரின் மீது நாட்டம் கொண்டுள்ளது," என்றும் தெரிவித்தார்.
"1970-களில் ஆர்.எஸ்.எஸ் மகாராஷ்டிராவில் சம்ராசதா கோஷ்டியைத் (சமூக நல்லிணக்கக் குழு) தொடங்கியது, இது பாஜக உருவாவதற்கு முன்பே தொடங்கப்பட்டது. மும்பையில் பாஜக தொடங்கப்பட்ட இடத்துக்கு சம்தா நகர் என்று பெயர் சூட்டப்பட்டது. தத்தாராவ் சிண்டே, அதற்கான அடிக்கல்லை நாட்டினார். அவர், தலித் பேந்தர் இயக்கத்தின் தலைவராக இருந்தார். பின்னர் காங்கிரஸிலும், அதன் பின்னர் பாஜகவிலும் சேர்ந்தார். அதன்பிறகு, சூரஜ் பானை பாஜக ஆளுநராக்கியது. கட்சியின் தேசியத் தலைவராக பங்காரு லட்சுமணன் நியமிக்கப்பட்டார்" என தெரிவித்தார் சௌத்ரி.
ஆனால், பாஜக தலித்துகளை மைய அரசியலுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியான அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதா அல்லது அடையாள அரசியலை செய்ததா என்ற கேள்வி இதனையும் மீறி எழுகிறது.
துபே கூறுகையில், "சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். பாஜக நல்லிணக்கம் பற்றி பேசுகிறது, ஆனால் சமத்துவம் பற்றி அல்ல. சமத்துவம் என்பது அம்பேத்கரின் அடிப்படை சித்தாந்தம். தேர்தல் அரசியலில் பல தந்திரங்கள் உள்ளன, சித்தாந்தங்களை ஏற்காமல், வாக்குகள் பெறப்படுகின்றன. இதைத்தான் பாஜக செய்கிறது" என்று தெரிவித்தார்.
துபே மேலும் பேசியபோது "இந்தக் கருத்து அமித் ஷாவின் வாயிலிருந்து வந்திருக்கலாம், ஆனால் இதைப் பார்த்து யாரும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவர் தனக்குத் தோன்றியதை மட்டுமே கூறியுள்ளார். பீமா கோரேகான் சம்பவத்திற்குப் பிறகு, நரேந்திர மோதி அரசு, நாடு முழுவதும் உள்ள அம்பேத்கரியர்களை விமர்சித்துள்ளது." என்றும்
பாஜக, அம்பேத்கரின் பெயரை முன்னெடுத்துள்ளது, அவரது சித்தாந்தத்தை அல்ல" என்றும் குறிப்பிட்டார்.
ஜாதவ் அல்லாத பிற சாதிகளை ஊக்குவித்தல்

பட மூலாதாரம், Getty Images
தலித்துகளின் மிகப்பெரிய சாதியான ஜாதவ்கள் பாரம்பரியமாக பாஜகவில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஆனால், ஜாதவ் அல்லாத சாதிகளை தன்னுடன் சேர்த்துக்கொள்ள பாஜக முயற்சித்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அம்பேத்கரிய ஆய்வாளருமான விவேக் குமார் கூறுகையில், "ஜாதவ சமூக மக்கள், பாஜகவில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், ஜாதவ் அல்லாத தலித் சாதியினரைத் தம் பக்கம் ஈர்க்க பாஜக ஆரம்பம் முதலே முயற்சி செய்து வருகிறது" என்று கூறினார்.
பேராசிரியர் விவேக் குமார் மேலும் கூறுகையில், "வால்மீகி எழுதிய ராமாயணத்தை பாஜக முன்னெடுத்து, வால்மீகி சமூகத்தைத் தன் பக்கம் ஈர்த்தது. உத்தர பிரதேசத்தில் பரசுராமருடன் இணைந்த பாசி சமூகம் பாஜகவால் ஈர்க்கப்பட்டது. காதிக் சமூகத்தையும் தோபி சமூகத்தையும் பாஜக ஈர்த்தது. அதாவது, ஜாதவ் அல்லாத தலித்துகள் ஏற்கனவே பாஜகவுடன் இருக்கிறார்கள், அகில இந்திய அளவில் பார்த்தால், மஹர் தலைவர் ராம்தாஸ் அத்வாலேவும் பாஜகவுடன் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
ஆனால், ஜாதவ் சமூகத்தைத் தன் பக்கம் ஈர்க்க பாஜக முயற்சிக்கவில்லை என கூற முடியாது.
பேராசிரியர் துபே கூறுகையில், "எங்களுக்கு வாக்களித்தால் அரசியலில் உங்களுக்கு சமமான இடத்தை வழங்குவோம் என்று பாஜக தலித்துகளுக்கு உறுதியளித்துள்ளது. தலித்துகளில் மிகப்பெரிய ஜாதி ஜாதவ். பகுஜன் சமாஜ் கட்சி குறிப்பாக ஜாதவ் சமூகத்தினரை தன்னுடன் சேர்த்துக் கொண்டது." என்றார்.
"பகுஜன் சமாஜ் கட்சியின் எழுச்சி, ஜாதவ் சாதியினருக்கு அரசியலில் இடம் அளித்தது. அதே நேரத்தில், பிற பட்டியலின சாதியினர் அரசியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெறவில்லை என்பதை உணர்ந்து, அவர்களுக்கு இடம் கொடுக்க முயன்றது பாஜக. அதன் விளைவாக ஜாதவ சமூகத்தினரைத் தவிர, மற்ற தலித் சாதியினர் பாஜகவில் இணைந்தனர்" என்று குறிப்பிட்டார்.
துபே மேலும் பேசியபோது, "மகாராஷ்டிராவில் பாஜகவுடன் மஹர் சமூக மக்கள் அதிகளவு இணைந்ததில்லை. ஆனால், மஹர் அல்லாத தலித் சாதிகள் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் உள்ளன" என்றும்,
"சிறியளவில் உள்ள தலித் சாதிகளை ஈர்ப்பதற்காக தலித்துகளிடையே உள்ள சாதிப் பிரிவினையை பாஜக பயன்படுத்திக் கொண்டது. அக்கட்சி இப்போது ஜாதவ் பிரிவைச் சேர்ந்த மக்களைத் தன் பக்கம் ஈர்க்க முயற்சிக்கிறது, அதற்காக அம்பேத்கரை ஏற்றுக்கொண்டு அவரது கருத்துக்களை ஊக்குவிக்க வேண்டியது அவர்களுக்கு அவசியம்," என்றும் தெரிவித்தார்.
அம்பேத்கரின் பெயரால் நிலவும் அரசியல் போட்டி

பட மூலாதாரம், Getty Images
தற்போது பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரைப் முன்னிறுத்துவதில், இந்திய அரசியலில் போட்டி நிலவி வருகிறது. அரசியலமைப்புச் சட்டம், சாதிவாரி கணக்கெடுப்பு, இடஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தொடர்ந்து பேசி வருகிறது. காங்கிரஸ் தலைவராக தலித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளார். அவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
பேராசிரியர் விவேக் குமார் கூறுகையில், "தலித் அரசியலில் பாஜகவை விட காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. சாதி அடையாளத்தைத் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாகவும் தெரிகிறது" என்றார்.
இந்துத்துவா அரசியலைத் தொடரும் பாஜகவுக்கு சாதி அடையாளம் பற்றிய கேள்வி, பிரச்னைகளை உருவாக்கலாம்.
பாஜக ஊக்குவிக்கும் இந்துத்துவா மாதிரியில், சாதி அடையாளம் பற்றிய கேள்வியே இல்லை என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
மேலும், "சாதி அடையாளம் குறித்த கேள்வி எழுவதை பாஜக விரும்பவில்லை. காங்கிரஸ் தொடர்ந்து சாதி அடையாளத்தை வளர்த்து வருகிறது, இப்போது அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியத்தை பாஜக உணர்ந்துள்ளது. அம்பேத்கரைச் சுற்றி விவாதத்தை உருவாக்கி அதையே செய்ய பாஜக முயற்சிக்கிறது" என்றும் பேராசிரியர் விவேக் குமார் கூறினார்.
அம்பேத்கரின் நினைவாக பஞ்சதீர்த்தத்தை பாஜக நிறுவியது. பஞ்சதீர்த்தம் என்பது, அம்பேத்கர் பிறந்த இடம் முதல் அவருட தொடர்புடைய ஐந்து இடங்களை ஊக்குவிக்கும் பாஜகவின் முயற்சியாகும். லண்டனில் அம்பேத்கருக்கு ஒரு நினைவிடத்தையும் அமைத்தது. பாஜக ஆட்சிக்கு வந்த பின், அரசியலமைப்பு தினம், பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
பேராசிரியர் பர்வேஷ் சௌத்ரி கூறுகையில், "பாபா சாஹேப் அம்பேத்கருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் பாஜக பாதுகாத்து, யாத்திரை தலங்களாக உருவாக்கியது. அவரது ஆளுமை மற்றும் எண்ணங்களை மேம்படுத்த, பாபா சாஹேப் அம்பேத்கர் மையம் நிறுவப்பட்டது"என்றார்.
'ராஷ்டிர நிர்மன் பாபா சாஹேப் அம்பேத்கர்' (Rashtra Nirman Baba Saheb Ambedkar) புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் பர்வேஷ் சௌத்ரி கூறுகையில், "பாபா சாஹேப் அம்பேத்கர் தலித்துகளின் தலைவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியா மற்றும் உலகத்தின் தலைவர். பாஜக இந்த கருத்தை முன்வைத்துள்ளது. காங்கிரஸ், அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக முன்னிறுத்தியது. ஆனால், பாஜக அவரை உலகளவிலான தலைவராக உருவாக்கி வருகிறது.மேலும், அவருடைய அனைத்து அம்சங்களையும் முன்னிறுத்தியுள்ளது." என்றார்.
பலவீனமடைந்து வரும் தலித் அரசியல்

பட மூலாதாரம், Getty Images
தனித்துப் போட்டியிட்டு அரசியல் அதிகாரத்தை எட்டிய தலித் கட்சிகள் தற்போது வலுவிழந்து உள்ளன. தனது கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களை உருவாக்க முடியாத, பகுஜன் சமாஜ் கட்சியே இதற்கு உதாரணம்.
பேராசிரியர் விவேக் குமார் கூறும்போது, "சுயசார்பு தலித் அரசியல் பலவீனமடைந்ததன் காரணமாகத்தான், தற்போது அனைத்துக் கட்சிகளும் பாபா சாஹேப் அம்பேத்கரை ஏற்றுக்கொள்கின்றன . உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி, பீகாரில் லோக் ஜன சக்தி கட்சி, அல்லது மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோர் இத்தகைய தலித் அரசியலில் ஈடுபட்டனர்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் இத்தகைய தலித் அரசியல் பலவீனமாகிவிட்டது" என்றார்.
வட இந்தியாவாகட்டும், மத்திய அல்லது தென்னிந்தியாவாகட்டும், தலித் அரசியலில் இருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தலித் அரசியலுக்கான களம் காலியாக இருப்பதாக அரசியல் கட்சிகள் கருதுகின்றன.
பேராசிரியர் விவேக் குமார் மேலும் இதுகுறித்து கூறுகையில், "தற்போது காங்கிரஸ் தலித் அரசியலை முன்னின்று நடத்துகிறது. ஒரு காலத்தில் அரசியல் சாசனத்துக்கு மரியாதை செய்யும் விதமாக, தங்கள் கட்சி களத்தில் உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி கூறியது.
இன்று காங்கிரஸ் மற்றும் 'இந்தியா' கூட்டணி பிரதிநிதிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். தலித் அரசியலில் பாஜகவும் தீவிரமாக மாறி, தலித்துகளை தன் பக்கம் இழுக்க முயல்வதே இதற்குக் காரணம்" என்று தெரிவித்தார்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் தலித்துகளின் மக்கள்தொகை சுமார் 16.6 சதவிகிதம், ஆனால் தலித் அமைப்புகள் இந்தியாவில் தலித் மக்களின் உண்மையான மக்கள்தொகை 20 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்புகின்றன.
மக்களவையில் 84 இடங்கள் தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, காங்கிரஸ் உள்ளிட்ட பல எதிர்க்கட்சிகள் வகுப்பு வாரி கணக்கெடுப்பைக் கோரி வருகின்றன.
அரசியல் அதிகாரத்திற்காக தலித் மக்களையும் சேர்த்துக் கொள்வது கட்சிகளின் அரசியல் நிர்ப்பந்தம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, சமத்துவம் போன்ற பல பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வு தற்போது தலித் மக்களிடையே அதிகரித்துள்ளது.
பாரதிய ஜனதாவும் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளது, ஆனால் இது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மீறுவதாக தலித் அமைப்புகள் கருதுகின்றன.
பேராசிரியர் துபே மேலும் கூறும்போது, "இப்போது படிப்படியாக, தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பாஜக முக்கியமாக பிராமண-பனியா கட்சி என்று மீண்டும் உணரத் தொடங்கியுள்ளனர்" என்றார்.
மேலும், "தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினர் அதிலிருந்து பிரிந்தால் அரசியல் இழப்புகள் ஏற்படலாம் என்று பாஜக அஞ்சுகிறது. இன்று ஒவ்வொரு தலித் மக்களின் வாக்குகளையும் பெறாமல் ஆட்சியை எட்ட முடியாது என்பது அக்கட்சிக்குத் தெரியும். அம்பேத்கர் மீதான இந்த உணர்வு, வாக்குகளைப் பெறுவதில் மட்டும் உள்ளதா அல்லது தலித்துகளின் உண்மையான எழுச்சியை நோக்கமாகக் கொண்டதா என்பது தான் தற்போதைய கேள்வி," என்கிறார் பேராசிரியர் துபே.
அமித் ஷாவின் அறிக்கையால் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது ?
அமித் ஷாவின் இந்த கருத்தால் ஏற்பட்ட அரசியல் சலசலப்புக்கு மத்தியில், இந்த கருத்து பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால் பெரிய அரசியல் பாதிப்புகள் ஏதும் ஏற்படாது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அபய் குமார் துபே கூறும்போது, "அம்பேத்கரியமும் தலித் சமூகமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. ஆனால், நடைமுறையில் பார்த்தால், அம்பேத்கரியத்தைப் பின்பற்றும் தலித்துகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இவர்கள் தலித் மக்களில் ஒரு சிறிய பகுதியினர்.
அத்தகைய சூழ்நிலையில், அமித் ஷாவின் இந்த கருத்து தலித் மக்களிடையே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சாத்தியமில்லை. அம்பேத்கர் மீது எல்லா தலித்துகளும் மரியாதை வைத்துள்ளனர். ஆனால், வாக்கரசியலில் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். அம்பேத்கரே, எந்த அரசியல் வெற்றியும் பெறவில்லை " என்றும் குறிப்பிட்டார்.
மேலும் "சில நாட்கள் மட்டும் எழுப்பப்படும் இந்தச் சத்தம், இதனை மாற்றாது. அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரந்த அரசியல் கருத்தாக்கவும், இந்த விவகாரத்தில் பாஜகவை சிக்கவைப்பதற்கும், அதிகளவிலான அடிப்படை முயற்சிகள் தேவை" என்று பேராசிரியர் அபய் குமார் துபே தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












