இந்தியா பற்றி வங்கதேச ஊடகங்களில் கூறப்படுவது என்ன?

பட மூலாதாரம், EPA/Shutterstock
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதியிலிருந்து இந்தியா மற்றும் வங்கதேச உறவுகளில் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால், வங்கதேசத்தில் இன்குலாப் மஞ்ச் தலைவர் ஷெரீஃப் உஸ்மான் ஹாதி மற்றும் இந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளதாக, பல வங்கதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சனிக்கிழமை அன்று புது டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டத்திற்கு அந்நாடு தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாகச் சில வங்கதேச ஊடகங்களில் பரப்பப்படும் 'தவறான பிரசாரத்தை' இந்தியா கவனித்துள்ளதாக, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
இதை வெறும் 'தவறான பிரசாரம்' என்று கூறி நிராகரிக்க முடியாது என்று வங்கதேசம் கூறியுள்ளது.
வங்கதேசத்தின் 'டெய்லி ஸ்டார்' நாளிதழின்படி, "ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடந்த அரசியல் மாற்றத்திற்குப் பிறகு இந்தியா மற்றும் வங்கதேச உறவுகளில் பதற்றம் நீடித்து வருகிறது. ஆனால் இப்போது இந்த உறவுகள் மேலும் மோசமடைந்துள்ளன."
"இரு நாடுகளும் தங்களின் தூதரகங்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றன."
வங்கதேசத்திலுள்ள இந்திய விசா விண்ணப்ப மையமான IVAC சிட்டகாங்கில் உள்ள விசா மையத்தை காலவரையின்றி மூடுவதாகத் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த வாரத் தொடக்கத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக டாக்கா, குல்னா மற்றும் ராஜஷாஹி ஆகிய இடங்களில் உள்ள விசா விண்ணப்ப மையங்கள் தலா ஒரு நாள் பகுதியளவு மூடப்பட்டன.
இந்த நகரங்களில் நடைபெற்ற போராட்டங்களின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
"புது டெல்லியில் உள்ள வங்கதேச தூதரகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஒரு போராட்டம் தொடர்பாக, டாக்கா மற்றும் புது டெல்லியிலிருந்து முரண்பட்ட அறிக்கைகள் வெளியிடப்பட்டன," என 'டெய்லி ஸ்டார்' நாளிதழ் மேலும் எழுதியுள்ளது.
'சமீபத்திய சம்பவங்கள் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன'

'மானவ் ஜமீன்' செய்தித்தாள் வெளியிட்டுள்ள பிரதான செய்தியில், "வங்கதேச தூதரகத்திற்கு வரும் அச்சுறுத்தல்களை டெல்லி மறுத்துள்ளது. ஆனால் இரு நாடுகளின் உறவுகளும் மோசமடைந்து வருகின்றன." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், "வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இரு தரப்பிலும் நடந்த சமீபத்திய சம்பவங்கள் நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன."
"டெல்லியின் பாதுகாப்பான தூதரகப் பகுதியில் அமைந்துள்ள 'வங்கதேச இல்லத்தின்' வாயிலில் ஒரு குழுவினர் போராட்டம் நடத்தினர்."
"அந்தக் குழு சாணக்யபுரியில் அடுத்தடுத்து பாதுகாப்பு வளையங்களை உடைத்துக்கொண்டு வங்கதேச தூதரக வாயிலின் முன்னே அணி திரண்டது. அங்கு வங்கதேசத்திற்கு எதிரான முழக்கங்களும் எழுப்பப்பட்டன." என எழுதப்பட்டுள்ளது.
வங்கதேச தூதரகத்தின் முன்னால் நடந்ததாகக் கூறப்படும் போராட்டம் தொடர்பாக வங்கதேச வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில், இது ஒரு 'தகாத சம்பவம்' என்று கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், "உண்மை என்னவென்றால், டிசம்பர் 20 அன்று சுமார் 20-25 இளைஞர்கள் புது டெல்லியிலுள்ள வங்கதேச தூதரகத்தின் முன்னால் திரண்டனர். அவர்கள் மைமன்சிங்கில் தீபு சந்திர தாஸ் கொல்லப்பட்டதற்கு எதிராக முழக்கமிட்டனர் மற்றும் வங்கதேசத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையினரின் பாதுகாப்பைக் கோரினர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த நேரத்திலும் தடுப்புகளை உடைக்கவோ அல்லது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நிலைமையை உருவாக்கவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார். அங்கு பணியிலிருந்த போலீசார் சில நிமிடங்களிலேயே அந்த கும்பலைக் கலைத்தனர் என்றும் தெரிவித்தார்.
இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பு நிராகரிப்பு

வங்கதேசத்தின் ஆங்கில நாளிதழான 'டாக்கா ட்ரிப்யூன்' , "சனிக்கிழமை அன்று புது டெல்லியிலுள்ள வங்கதேச தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டங்கள் தொடர்பாக இந்தியாவின் விளக்கத்தை டாக்கா முற்றிலுமாக நிராகரித்தது." எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதில், "இந்தச் சம்பவத்தை 'மிகவும் துரதிருஷ்டவசமானது' என்று குறிப்பிட்ட டாக்கா, இதை 'தவறான பிரசாரம்' என்று கூறி நிராகரிக்க முடியாது எனத் தெரிவித்தது. போராட்டங்கள், அச்சுறுத்தல்கள், முரண்பட்ட அறிக்கைகள், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் தூதரக பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது."
"எந்தவொரு போராட்டம் குறித்தும் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அங்கு உருவான சூழலால் தூதரகத்தில் இருந்த ஊழியர்கள் அச்சமடைந்தனர்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"வியன்னா மாநாட்டின்படி வங்கதேச தூதரகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இந்தியாவின் உறுதிமொழியை டாக்கா ஏற்றுக்கொண்டது. ஆனால், இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒரு வங்கதேச குடிமகன் மீது நடத்தப்பட்ட ஒரு தனிப்பட்ட தாக்குதலை, சிறுபான்மையினர் மீதான ஒட்டுமொத்தத் தாக்குதலாகச் சித்தரிக்க இந்திய அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை டாக்கா நிராகரித்துள்ளது."
டாக்கா ட்ரிப்யூன் மேலும், "ஒரு இளைஞரின் கொலை தொடர்பாகச் சந்தேக நபர்களை வங்கதேசம் கைது செய்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற தெற்காசிய நாடுகளை விட நாட்டின் சமூகங்களுக்கு இடையிலான நிலைமை சிறப்பாக இருப்பதாகவும், சிறுபான்மையினரின் பாதுகாப்பு என்பது ஒரு பகிரப்பட்ட பிராந்தியப் பொறுப்பு என்றும் வலியுறுத்தியுள்ளது." என குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் 'தி பங்களாதேஷ் டுடே' நாளிதழ், "புது டெல்லியிலுள்ள தனது தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டம் குறித்து இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பை வங்கதேசம் வெளிப்படையாக நிராகரித்துள்ளது. பாதுகாப்பான தூதரகப் பகுதிக்குள் போராட்டக்காரர்கள் எப்படி நுழைய முடிந்தது என்று வங்கதேசம் கேள்வி எழுப்பியுள்ளது. இதை ஒரு தீவிர பாதுகாப்பு குறைபாடு என்று வங்கதேசம் கூறியுள்ளது." எனப் பதிவு செய்துள்ளது.
வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக, உள்நாட்டிலும் இந்தியாவுடனும் பதற்றத்தைக் குறைக்க ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளதாக 'தி டெய்லி அப்சர்வர்' எழுதியுள்ளது.
மேலும் அந்த செய்தியில், "வங்கதேசத்திற்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் கிரிகோரிவிச் கோசின் திங்கள்கிழமை அன்று வங்கதேசத்தில் பதற்றத்தைக் குறைக்கக் கோரிக்கை விடுத்தார். வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாகச் சாதகமான சூழலை உருவாக்க அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்."
"வங்கதேசம் மற்றும் அதன் அண்டை நாடான இந்தியா இடையே பதற்றத்தைக் குறைப்பதன் அவசியத்தை தூதர் வலியுறுத்தினார். இது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு நல்லது என்று அவர் கூறினார். இரு நாடுகளின் இருதரப்பு உறவுகளில் தாங்கள் தலையிடவில்லை என்றும், ஆனால் பதற்றம் தற்போதைய அளவைத் தாண்டி அதிகரிப்பதைத் தடுப்பதற்கான வழியைக் கண்டறிவதே புத்திசாலித்தனம் என்று அவர் கருதுவதாகவும் தெரிவித்தார்." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் என்ன?
வங்கதேச தூதரகத்திற்கு வெளியே நடந்த போராட்டம் குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் எழுப்பிய கேள்விகளுக்கு 'பங்களாதேஷர் கபர்' முக்கியத்துவம் அளித்துள்ளது.
அந்தச் செய்தித்தாளில், "டெல்லியிலுள்ள வங்கதேச தூதரகம் தூதரகப் பகுதியில் அமைந்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இது மிகவும் பாதுகாப்பான இடமாகும், அப்படியிருக்க இந்து தீவிரவாதிகள் என்று கூறப்படுபவர்கள் இந்தப் பகுதிக்குள் நுழைய ஏன் அனுமதிக்கப்பட்டனர்? அவர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்திருந்தால், இத்தகைய சம்பவம் நடக்க வாய்ப்பில்லை." என குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம் 'புரோதோம் ஆலோ' தனது இணையதளத்தில், "வெளியுறவு அமைச்சகம் எங்களிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளது, ஆனால் இந்தியாவில் உள்ள எங்களது தூதருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். அவரை அச்சுறுத்துவதற்காக மட்டும் ஏன் ஒருவர் அங்கு வர வேண்டும்? இந்தச் சம்பவத்திற்குப் பிறகு டெல்லியில் உள்ள தூதரின் குடும்பத்தினர் பாதுகாப்பற்ற உணர்வில் இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது." என எழுதியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












