ஆசியக் கோப்பை தோல்வி: பாகிஸ்தானை சாடிய முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

காம்ரான் அக்மல் மற்றும் சோயிப் மாலிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காம்ரான் அக்மல் மற்றும் சோயிப் மாலிக் ஆகியோர் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு குறித்துப் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்தது. அதைத் தொடர்ந்து நடந்த கோப்பை சர்ச்சை குறித்துப் பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

சிலர் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி குறித்துக் கேள்வி எழுப்பினர், சிலர் இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்த முடிவை கிரிக்கெட்டின் உண்மையான உணர்வுக்கு எதிரானது என்று கூறினர்.

துபையில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானைத் தோற்கடித்து. பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 19.4 ஓவர்களில் எட்டியது. திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும், ஷிவம் துபே 33 ரன்களும் எடுத்தனர்.

ஆனால், இந்தப் போட்டிக்குப் பிறகு கோப்பையை வாங்கும் விஷயத்தில் நடந்த சம்பவங்கள் கிரிக்கெட் களத்தில் முன்பு எப்போதும் கண்டிராத நிகழ்வாகும்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை ஏற்க இந்திய அணி மறுத்தது.

இலக்கு சிறியதாக இருந்தாலும், பந்துவீச்சாளர்கள் போட்டியை இறுதிவரை இழுத்துச் செல்ல முயன்றனர். இருந்தபோதிலும் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இலக்கு சிறியதாக இருந்தாலும், பந்துவீச்சாளர்கள் போட்டியை இறுதிவரை இழுத்துச் செல்ல முயன்றனர். இருந்தபோதிலும் இந்தியா எளிதில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் செயல்பாடு குறித்த கேள்வி

பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மல், பேட்டிங்கையே பாகிஸ்தான் அணியின் மிகப் பெரிய பலவீனம் என்று குறிப்பிட்டார். அணி வெறும் "நவீன கிரிக்கெட்" என்ற முழக்கத்தை மட்டுமே எழுப்புகிறது என்றும், ஆனால் தயாரிப்பு மற்றும் வீரர் தேர்வில் எந்த தீவிரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

காம்ரான் அக்மல் 'தி கேம் பிளான்' யூடியூப் சேனலில் பேசுகையில், "நவீன கிரிக்கெட் என்று முழக்கமிடுவதால் மட்டும் ஒரு அணி சிறப்பாக இருக்காது. அதற்கு, உலக கிரிக்கெட்டை மனதில் வைத்து வீரர்களைச் சரியாக தேர்வு செய்யவேண்டும், அவர்களை தயார் செய்ய வேண்டும், விளையாட வைக்கவேண்டும்.

இந்தத் தொடர் முழுவதும் பேட்டிங்கில் திணறியது... பேட்டிங்கில் ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு முறையும் பரிசோதனை செய்வதால் பலன் கிடைக்காது. ஒரு வீரர் எந்த இடத்தில் விளையாட வேண்டுமோ, அங்கேயே விளையாட வேண்டும். இல்லையெனில், பெரிய அணிகளுக்கு எதிராக இதே நிலைதான் தொடரும்," என்று கூறினார்.

பாகிஸ்தானின் செயல்பாடு குறித்த கேள்வி

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கும் சூழ்நிலையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட தவறு மற்றும் "போட்டியின் நிலை பற்றிய விழிப்புணர்வு" (Game Awareness) இல்லாமை குறித்துக் கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த OTT டாப்மெட்டில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பேசிய சோயிப் மாலிக், "முதலில் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளவில்லை. பேட்டிங்கிலும் தவறு நடந்தது, பந்துவீச்சிலும் தவறு நடந்தது. அதற்கு மேல், ஃபீல்டிங்கும் மோசமாக இருந்தது.

விளையாட்டு விழிப்புணர்வு பூஜ்யமாக இருந்தது. அதற்கும் மேலாக நீங்கள்(கேப்டன்) என்ன செய்தீர்கள்? நீங்களே போகாதீர்கள், ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களை அனுப்புங்கள். உங்களால் ரன்கள் எடுக்க முடியவில்லை என்றால், ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களை முன்னால் அனுப்பியிருக்க வேண்டும். 120 பந்துகள் விளையாட வேண்டும் என்றால், ஃபார்மில் இருக்கும் வீரர்கள் விளையாட வேண்டும்," என்று கூறினார்.

கேப்டன்சி மற்றும் நிர்வாகத்தின் மீது தாக்குதல்

சோயிப் அக்தர் மற்றும் ரமீஸ் ராஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோயிப் அக்தர் பாகிஸ்தான் அணியின் கேப்டன்சி குறித்து கேள்வி எழுப்ப, ரமீஸ் ராஜா இந்திய அணியைப் பாராட்டினார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், அணி நிர்வாகம் மற்றும் கேப்டன்சியை நேரடியாகக் குற்றம் சாட்டினார். முடிவுகள் தவறாக எடுக்கப்பட்டன என்றும், பயிற்சியில் தொலைநோக்கு இல்லை என்றும் அவர் கூறினார்.

டாப்மெட் நிகழ்ச்சியில் பேசிய சோயிப் அக்தர், "இன்று 175 ரன்கள் எடுத்திருந்தால் போதுமானதாக இருந்திருக்கும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. இது வீரர்களின் பிரச்னை மட்டுமல்ல, நிர்வாகத்தின் பிரச்சனையும் கூட. மிடில் ஆர்டர் நீண்ட காலமாகவே ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது," என்று தெரிவித்தார்.

அவர் கேப்டன்சி குறித்தும் கேள்வி எழுப்பினார், "மாற்றங்கள் சரியாகச் செய்யப்படவில்லை. சுழற்பந்து வீச்சாளரின் பந்து வீச்சு பலன் அளிக்காதபோது ஹாரிஸ் ரவுஃபைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. தவறுகளின் பட்டியல் நீளமானது, உடனடியாகச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது," என்று கூறினார்.

அணியின் எதிர்காலம் பேசிய அக்தர், "அணியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியில் உடனடியாக வேலை செய்யப்பட வேண்டும் என்பதே எனது ஒரே கருத்து. இல்லையெனில், நிலைமைகளை மாற்றுவது கடினம். ஆனால் நான் வீரர்கள் மீது மிகவும் கடுமையாக இருக்க விரும்பவில்லை. அவர்கள் தங்கள் முழு முயற்சியையும் கொடுத்தார்கள், அதுவே அவர்களின் சிறந்த செயல்பாடு. அவ்வளவுதான்," என்று கூறினார்.

கேப்டன்சி குறித்து பேசிய சோயிப் மாலிக், "பேட்டிங்கில் சூழ்நிலைகளைப் புரிந்து கொள்ளவில்லை, பந்துவீச்சிலும் சூழ்நிலையைச் சரியாக மதிப்பிடவில்லை. அதற்கு மேல், ஃபீல்டிங் அமைப்பும் சரியாக இல்லை," என்று கூறினார்.

இந்தியாவுக்கு பாராட்டு, பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு பாராட்டு, பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை

பல பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் இந்திய அணியைப் பாராட்டினர். பாகிஸ்தான் இப்போது அதன் பலவீனங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா தனது யூடியூப் சேனலில், "பவர்பிளேயில் பாகிஸ்தான் போட்டியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. ரன் ரேட் ஓவருக்கு 10 என்ற விகிதத்தில் இருந்தது, இந்தியப் பந்துவீச்சாளர்கள் அழுத்தத்தில் இருந்தனர். ஆனால், அதன் பிறகு நிலைமை திடீரென மாறியது, பாகிஸ்தான் வலுவான நிலையிலிருந்து பலவீனமடைந்தது," என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், " கடினமான சூழ்நிலையிலும் எப்படி மீண்டும் வலுவாக எழுவது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. குல்தீப் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்ற பந்துவீச்சாளர்கள் போட்டி கையை விட்டு நழுவிச் சென்ற பிறகும் அதைத் திருப்புவதற்கான திறனைக் கொண்டுள்ளனர், ஆனால் பாகிஸ்தானுக்கு அந்தத் திறமை இன்னும் இல்லை," என்று கூறினார்.

இந்தத் தொடர் முழுவதும் பாகிஸ்தானைத் தொடர்ந்து மூன்று முறை தோற்கடித்ததன் மூலம், இந்திய அணி அவர்களின் நுட்பம், விளையாட்டுப் புரிதல் மற்றும் மன வலிமை ஆகியவை பாகிஸ்தானை விட மேலானது என்பதை நிரூபித்துள்ளது என்று ரமீஸ் ராஜா நம்பினார்.

இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்தது குறித்த கருத்து

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி கோப்பையை ஏற்க மறுத்தது குறித்த கருத்து

கோப்பைப் பிரச்னை குறித்துக் காம்ரான் அக்மல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது கிரிக்கெட்டின் உண்மையான உணர்வுக்கு எதிரானது என்றும், இதுத் தொடரின் இனிமையை கெடுத்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

"உங்களுக்குக் கைகுலுக்கவோ அல்லது கோப்பையையோ ஏற்க வேண்டாம் என்றால், அதை முன்பே தெளிவாகக் கூறி இருக்க வேண்டும். ஆசியக் கோப்பை கூட்டத்தில் இதைக் குறித்துப் பேசியிருக்கலாம். நீங்கள் போட்டியை வென்றீர்கள், நம்பர் ஒன் அணியாக இருக்கிறீர்கள், எனவே கோப்பையை எடுத்திருக்க வேண்டும். ஆனால், வீரர்கள் கோப்பையை ஏற்க வரவில்லை என்றபோது, முழுச் சுவையும் கெட்டுவிட்டது.

நீங்கள் கோப்பையை ஏற்க வேண்டும், குழுப் புகைப்படம் எடுக்க வேண்டும், சாம்பியனைப் போல மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதே கிரிக்கெட்டின் உண்மையான உணர்வு. ஆனால் இந்த முறை கோப்பையை ஏற்க மறுத்தது எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது." என்று அக்மல் கூறினார்.

எதிர்காலத்தில் இத்தகைய சர்ச்சைகள் ஏற்படாமல் இருக்க, பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆகியவை இது குறித்துச் சிந்திக்க வேண்டும் என்றும் அக்மல் கூறினார்.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து இந்திய அணி கோப்பையைப் பெற மறுத்தது குறிப்பிடத்தக்கது. பிசிசிஐ செயலர் தேவஜித் சைகியா, வீரர்கள் இந்த முடிவை முன்பே எடுத்திருந்ததாகக் கூறினார். கேப்டன் சூர்யகுமார் யாதவும் செய்தியாளர் சந்திப்பில் இது அணியின் கூட்டு முடிவு என்று கூறினார்.

பாகிஸ்தான் கேப்டன் சால்மன் ஆகா கூறுகையில், "அவர்கள் கைகுலுக்காமல் இருப்பதோ அல்லது இதுபோன்ற ஒரு நடத்தையை கொண்டிருப்பதோ எங்களை அல்ல, மாறாக கிரிக்கெட்டை அவமதிப்பதாகும். கிரிக்கெட்டை அவமதிப்பவர் எங்காவது ஒரு கட்டத்தில் வெளிப்படுவார். இன்று அவர்கள் செய்ததை, எந்த ஒரு நல்ல அணி செய்யாது என்று நான் நினைக்கிறேன்." என்று கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இஸ்லாமாபாத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆசியக் கோப்பையின் முதல் இந்தியா-பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. தலைநகர் இஸ்லாமாபாத் உட்படப் பல நகரங்களில் உள்ள வீடுகள், பூங்காக்கள் மற்றும் உணவகங்களில் மக்கள் குழுமியிருந்து பெரிய திரைகளில் போட்டியைப் பார்த்தனர்.

பிபிசி செய்தியாளர் ஃபர்ஹத் ஜாவேத், போட்டிக்குப் பிறகு இஸ்லாமாபாத்தில் இருந்த கிரிக்கெட் ரசிகர்களுடன் பேசினார்.

அவர்களின் கருத்துகள் கலவையாக இருந்தன. சிலர் அணியின் ஆரம்ப பேட்டிங் மற்றும் பந்துவீச்சைப் பாராட்டினர், ஆனால் பெரும்பாலானோர் மிடில் ஆர்டர் தொடர்ந்து தோல்வியடைந்ததற்குத் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் வலுவாக இருந்ததாகவும், பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் முக்கியமான தருணங்களில் தோற்றுவிட்டதாகவும் அவர்கள் கூறினர்.

ரசிகர்கள் கேப்டன்சி குறித்தும் கேள்வி எழுப்பினர், சிறந்த வியூகம் இருந்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கும் என்று கூறினர். ஹாரிஸ் ரவுஃப் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சு குறித்தும் விவாதம் இருந்தது, ஆனால் ரசிகர்கள் பேட்டிங் காரணமாகவே போட்டி கையை விட்டு நழுவிச் சென்றதாக நம்பினர்.

இருந்தபோதிலும், பல ரசிகர்கள் அணியின் முயற்சிகளைப் பாராட்டினர், கிரிக்கெட் என்பது நிச்சயமற்ற தன்மைகளின் விளையாட்டு என்றும், வெற்றி தோல்வி சகஜம் என்றும் கூறினர். அடுத்த முறை பாகிஸ்தான் சிறப்பாகச் செயல்படும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு