தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அசத்தல் அறிமுகம் - தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன சாதித்தார்?

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வெறும் 116 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனை, இந்திய வீரர்கள் எளிதில் ஊதித் தள்ளினர்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் ஆடிய வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் கால் பதித்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஒரு நாள் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி இருபது ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் அறிமுகம்
இந்த போட்டியின் மூலம் சர்வதேச போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் வீரரான சாய் சுதர்சன் களம் கண்டார். கேப்டன் லோகேஷ் ராகுல் அவருக்கு இந்திய அணியின் தோப்பியை அளித்தார். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தென்னாப்பிரிக்கா இளஞ்சிவப்பு நிற ஜெர்சியை அணிந்து விளையாடியது.

பட மூலாதாரம், Getty Images
தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி
நியூ வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் எய்டன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் அது தவறு என்று அடுத்த சிறிது நேரத்திலேயே அவர் உணர்ந்திருப்பார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களம் கண்ட அதிரடி வீரர் ராஸ்ஸி வான்டர் டுஸ்சன் அதே அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் காலியானார்.
3 ரன்களை எடுப்பதற்குள்ளாகவே தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர் டோனி ஷோர்சியுடன் இணைந்து அணியை தூக்கி நிறுத்த கேப்டன் மார்க்ரம் முயன்றார். ஆனால், அது நடக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
அர்ஷ்தீப் சிங் மிரட்டல் பந்துவீச்சு
இந்திய அணியின் பந்துவீச்சில் அனல் பறந்தது. குறிப்பாக அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய இருவருமே துல்லியமாக பந்துவீசி தென் ஆப்ரிக்க பேட்ஸ்மேன்களை மிரட்டினர்.
டோனி ஷோர்சி 28 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த தென் ஆப்ரிக்க விக்கெட் கீப்பரும் அதிரடி ஆட்டக்காரருமான ஹென்றி கிளாஸனும் அந்த அணிக்கு ஏமாற்றம் அளித்தார். அவர் 6 ரன் மட்டுமே எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்தார்.
கேப்டன் மார்க்ரம் 12 ரன்களில் நடையைக் கட்டினார். தென் ஆப்ரிக்க அணியின் ஆபாத்பாந்தவனாக பார்க்கப்படும் அதிரடி வீரர் டேவிட் மில்லர் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆவேஷ்கான் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான கேப்டன் லோகேஷ் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
வியான் முல்டன் 0, இந்திய வம்சாவளி வீரரான கேசவ் மகராஜ் 7 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதிக்கட்டத்தில் அன்டிலே மட்டும் நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆடி 33 ரன்களை எடுத்தார்.
தென் ஆப்ரிக்க அணி 27.3 ஓவர்களிலேயே 116 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டுகளையும், ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் அசத்தல்
எளிய இலக்கை எதிர்கொண்ட இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட்டும், சாய் சுதர்சனும் களம் புகுந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் 10 பந்துகளில் 5 ரன் எடுத்த நிலையில் முல்டர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
ஆனால், மறுமுனையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் முதல் போட்டி என்ற சாயலே தெரியாத வகையில் முதல் பந்தில் இருந்தே அபாரமாக ஆடினார். எந்தவொரு பதற்றமும் இல்லாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் ஒரு பந்து கூட வீணடிக்காமல் ரன்களை சேர்த்தார். இதனால் இந்திய அணியின் ரன் ரேட் சிறப்பாக இருந்தது.
அவருடன் கைகோர்த்த ஸ்ரேயாஸ் ஐயரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவருமே அரைசதம் அடித்து அசத்தினர். சாய் சுதர்சன் 39 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
இருவரும் சேர்ந்து இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினர். இந்திய அணி வெற்றியின் விளிம்பில் இருந்த போது, அரைசதம் எடுத்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா, சாய் சுதர்சனுடம் ஜோடி சேர்ந்தார். இருவரும் இந்திய அணி வெற்றிக்கோட்டை எளிதாக எட்டச் செய்தனர்.
முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்து அசத்திய சாய் சுதர்சன் 43 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images
ஆட்ட நாயகன் அர்ஷ்தீப் சிங்
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 37 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணியின் அஸ்திவாரத்தையே அசைத்த அர்ஷ்தீப் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












