டி20 உலகக் கோப்பை: பும்ராவின் வேகத்தில் வீழ்ந்த பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவின் வெற்றிக்கும், பாகிஸ்தான் தோல்விக்கும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டும்தான். இந்திய அணியிடம் ஜஸ்பிரித் பும்ரா இருக்கிறார், பாகிஸ்தானிடம் பும்ரா இல்லை. அவ்வளவுதான்!
முதல் 10 ஓவர்கள் வரை ஆட்டம் பாகிஸ்தான் கைவசம் இருந்தது. கடைசி 7 ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவைப்பட்டது கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்ததால், இந்திய அணியின் போராட்டம் அவ்வளவுதான் என்று ரசிகர்கள் எண்ணினர்.
ஆனால், எதிர்பாராத வகையில் இந்தியாவின் பிரம்மாஸ்திரமான பும்ரா 15-ஆவது ஓவரை வீசியபோதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. தொடக்க வீரராகக் களமிறங்கி செட்டிலாகியுள்ள பேட்டர் ரிஸ்வானை க்ளீன் போல்டாக்கி பும்ரா வெளியேற்றிய பின்புதான் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
ஆட்டத்தின் போக்கு இந்தியாவின் பக்கம் கைமாறியது. பும்ரா மட்டும் ஆட்டத்தில் இல்லாமல் இருந்தால், நிச்சயமாக இந்த ஆட்டம் வேறுவிதமாக முடிந்திருக்க நிறையவே வாய்ப்பிருந்தது. டி20 வரலாற்றிலேயே மிகக்குறைந்த 119 ரன்களை இந்திய அணி டிபெண்ட் செய்து வென்றது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சாத்தியமில்லாத வெற்றி, சாத்தியமானது எப்படி?
நியூயார்க் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் ஏ பிரிவு 19-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாத்தியமில்லாத வெற்றியை இந்திய அணி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 120 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஐசிசி உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 15-ஆவது முறையாக பாகிஸ்தான் அணியை இதன் மூலம் வென்றுள்ளது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக 7-ஆவது வெற்றியை இந்திய அணி பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் 4 புள்ளிகளுடன் 1.455 நிகர ரன்ரேட்டில் குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் கனடா, அமெரிக்கா அணிகளுக்கு எதிராக மட்டுமே ஆட்டங்கள் எஞ்சியுள்ளதால், சூப்பர்-8 சுற்றை எளிதாக இந்திய அணி உறுதி செய்யும்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் வெளியேறுகிறதா?
பாகிஸ்தான் அணி தொடர்ந்து 2ஆவது தோல்வியைச் சந்தித்து, நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.150 எனச் சரிந்துள்ளது. அடுத்துவரும் இரு ஆட்டங்களையும் பாகிஸ்தான் கட்டாயமாக வெல்ல வேண்டும். அது மட்டுமல்லாமல், அமெரிக்கா அணி தனது இரு லீக் ஆட்டங்களிலும் தோற்க வேண்டும், அந்த அணியின் நிகர ரன்ரேட்டைவிட உயர்வாக வைத்திருக்க வேண்டும்.
இவை நடந்தால்தான் பாகிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்ல முடியும். இப்போதுள்ள சூழலில் பாகிஸ்தான் ஏறக்குறைய லீக் சுற்றோடு வெளியேறும் நிலையில்தான் இருக்கிறது. ஒருவேளை அமெரிக்க அணி மோதும் ஆட்டம்மழையால் தடைபட்டு ஒரு புள்ளி கிடைத்தால்கூட பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறிவிடும்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய அணி புதிய சாதனை
இந்திய அணியைப் பொருத்தவரை டி20 வரலாற்றில் குறைந்த ரன்களுக்குள் இரண்டாவது பேட் செய்யும் எதிரணியை முடக்கிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன் 2014ல் நியூசிலாந்துக்கு எதிராக 120 ரன்களை இலங்கை அணி டிபெண்ட் செய்தது. அதன்பின், 10 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணி அதே ஸ்கோரை டிபெண்ட் செய்துள்ளது. அது மட்டுமல்ல டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை எந்த அணியும் 120 ரன்களை டிபெண்ட் செய்து வென்றது இல்லை, முதல்முறையாக அந்த சாதனையை இந்திய அணி படைத்துள்ளது
20 ஓவர்களையும் முழுமையாக வீசி 120 ரன்கள் இலக்கை இந்திய அணி முதல்முறையாக டிபெண்ட் செய்துள்ளது. இதற்கு முன் 2016ல் ஹராரேயில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 139 ரன்களை 20 ஓவர்களை முழுமையாக வீசி இந்திய அணி டிபெண்ட் செய்தது.
அது மட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணி குறைந்த ஸ்கோரை துரத்திச் சென்று தோல்வி அடைந்த 2-ஆவது ஆட்டமாகும். இதற்கு முன்2021ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 119 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் பாகிஸ்தான் தோற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடைசி 8 ஓவர்களில் என்ன நடந்தது?
கடைசி 8 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 48 ரன்கள் தேவைப்பட்டது, 8 விக்கெட்டுகள் கைவசம் இருந்தன. இதற்கு முன் இப்படியொரு சூழலில், 2020-இல் இங்கிலாந்துக்கு எதிராக 52 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் ஆஸ்திரேலிய அணி தோற்றது. அந்த ஆட்டத்தில் 163 ரன்கள் இலக்கில், ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் என வலுவாக இருந்து 52 ரன்களை சேஸிங் செய்ய முடியவில்லை.
இந்திய அணி முதலில் பேட் செய்து 119 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியும், எதிரணியை வெல்லவிடாமல் தடுத்தது. டி20 உலகக் கோப்பையில் இது 6-ஆவது சம்பவமாகும். கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான 8 டி20 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த அணிதான் 7 முறையும் வென்றுள்ளது. முதல் முறையாக இந்த உலகக் கோப்பையில்தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த அணி தோற்றுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
‘வீழ்வோம் என்ற மனநிலை யாருக்கும் இல்லை’
வெற்றிக்குப்பின் பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, “நாங்கள் போதுமான அளவுசிறப்பாக பேட் செய்யவில்லை. 10 ஓவர்களுக்குப்பின் நல்ல நிலையில் இருந்தோம். நல்ல பார்ட்னர்ஷிப்பை எதிர்பார்த்தேன். 15 முதல் 20 ரன்கள் குறைவாகவே சேர்த்தோம். 140ரன்கள் வரை எதிர்பார்த்தோம், நடக்கவில்லை. ஆனால், பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர். எந்த வீரரிடமும் வீழ்ந்துவிடுவோம் என்ற மனநிலை கடைசிவரை இல்லை.” என்று குறிப்பிட்டார்.
“119 ரன்கள்தான் சேர்த்திருந்தோம், கடைசிவரை போராடினோம். 10 ஓவர்களுக்குப்பின் நான் அணி வீரர்களிடம் பேசுகையில், நமக்கு என்னமாதிரியாக விக்கெட் இருந்ததோ அதுபோன்றுதான் அவர்களுக்கும் இருக்கிறது அவர்களுக்கும் நடக்கும் ஆதலால் நம்பிக்கையை இழக்காதீர்கள் என்றேன். ஒவ்வொருவரின் பங்களிப்பு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. பும்ராவின் பந்துவீச்சு வலிமையிலும் வலிமை பெறுகிறது. அவர் குறித்து அதிகம் பேசமாட்டேன். இதேமனநிலையில் அவர் கடைசிவரை இருக்க வேண்டும். பந்துவீச்சில் பும்ரா ஒரு அறிவுஜீவி. ரசிகர்கள் எங்கள் மீது கடைசிவரை நம்பிக்கை வைத்திருந்தது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது. ஒருபோதும் நம்பிக்கையை கைவிடவில்லை. என்ன நினைத்து வந்தார்களோ அது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் புன்னகையுடன் வீட்டுக்கு புறப்பட்டனர். இப்போதுதான் தொடங்கியுள்ளோம், இன்னும் தொடரில் நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது”எனத் தெரிவித்தார் ரோகித் சர்மா.

பட மூலாதாரம், Getty Images
பும்ரா செய்தது என்ன?
இந்திய அணியின் சாத்தியமில்லாத இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் பந்துவீச்சாளர்கள்தான். அதிலும் குறிப்பாக உலகத் தரம்வாய்ந்த பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பும் பிரம்மாஸ்திரம். பும்ராவின் ஒழுங்கான, கட்டுக்கோப்பான பந்துவீச்சு பாகிஸ்தான் பேட்டர்களுக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது.
இந்த ஆட்டத்தில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, ஆட்டநாயகன் விருதை வென்றார். முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம், இப்திகார் அகமது என தேவைப்படும் நேரத்தில் விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கான வழியை காட்டியது பும்ராதான்.
கடைசி 36 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 40 ரன்கள் தேவை, கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. செட்டிலான பேட்டர் ரிஸ்வான் களத்தில் இருந்ததால், பாகிஸ்தான் வெற்றிபெற 93 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினியின் கணிப்புகள் தெரிவித்தன.
நியூயார்க் ஆடுகளம் பேட்டர்களுக்கு சிறிதளவும் ஒத்துழைக்காமல் இருப்பதைப் புரிந்து கொண்ட பும்ரா, 15-ஆவது ஓவரில் ரிஸ்வானை க்ளீன் போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்தார். பும்ரா பந்தை ஸ்விங் செய்வார் என கிராஸ்பேட் போட்ட ரிஸ்வானுக்கு, பும்ராவின் மின்னல் வேக கட்டர் ஸ்டெம்பை பதம் பார்த்தது.

பட மூலாதாரம், Getty Images
ரிஸ்வான் விக்கெட் வீழ்ந்ததும், பும்ரா தனக்கே உரிய பாணியில் கைகளை அகலவிரித்து, புன்னகையுடன் விக்கெட்டைக் கொண்டாடினார். அவர் மட்டுமல்ல 30ஆயிரம் ரசிகர்களின் சத்தத்தால் நியூயார்க் நகரம் அதிர்ந்தது. ஏனென்றால்தான், இதுதான் ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கான திறவுகோலாக இருந்தது. அதேபோல இப்திகார் அகமது விக்கெட்டை 19-ஆவது ஓவரில் பும்ரா வீழ்த்தியபோதும் இதேபோன்ற கரகோஷம், சத்தம் காதை கிழித்தது. பும்ரா வீசிய 24 பந்துகளில் 15 டாட் பந்துகள் என்பது குறிப்பிடத்தக்கது.
பும்ராவை 3-ஆவது ஓவரே கொண்டுவந்த ரோஹித் சர்மா 2 ஓவர்கள் வீசச் செய்துவிட்டு நிறுத்திவிட்டார். பொதுவாக புதிய பந்தில் பும்ராவை பந்துவீசச் செய்திருந்தால், பந்தின் பளபளப்பைப் பயன்படுத்தி விக்கெட்டை வீழ்த்தி இருப்பார். ஆனால் எந்த அதிசயமும் நிகழவில்லை என்பதால், 15-ஆவது ஓவர்வரை ரோஹித் சர்மா காத்திருந்தார்.
ஹர்திக் பாண்டியாவின் ஷார்ட் பால்
ஹர்திக் பாண்டியா தனது பந்துவீச்சில் அவ்வப்போது ஷார்ட் பந்துகளை வீசுவதை வழக்கமா வைத்துள்ளார். இது பேட்டர்களுக்கு சில நேரங்களில் எரிச்சலாகவும், மிரட்டலாகும் இருக்கும். அந்த வகையில் பாண்டியா வீசிய ஷார்ட் பந்தை அடிக்க முற்பட்டு ஃபக்கர் ஜமான் ரிஷப் பந்திடம் கேட்சாக மாறினார். அது மட்டுமல்ல சதாப் கான் விக்கெட்டையும் பாண்டியா வீழ்த்தி, வெற்றிக்கு உதவி செய்தார்.
அதேபோல் 2 ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசிய அக்ஸர் படேல் 11 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். டெத் ஓவர்களில் துணிச்சலாக கேப்டன் ரோஹித் சர்மா வாய்ப்பு வழங்கவே, அக்ஸர் படேல் அதை கச்சிதமாக வீசி பாகிஸ்தானுக்கு நெருக்கடி அளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ரிஷப் பந்த் துணிச்சல் பேட்டிங்
நியூயார்க் மைதானத்தில் இதுவரை நடந்த ஆட்டங்களில் இதுதான் ஓரளவுக்கு சிறந்த விக்கெட் எனக் கூறப்படுகிறது. ஆனால், இந்த விக்கெட்டிலேயே பேட்டர்கள் திணறினால் மற்ற விக்கெட்டுகளில் எவ்வாறு இருக்கும் என்பதை ரசிகர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம்.
ஆனால்,இந்த விக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆட்டமிழந்தபின் பொறுப்புடனும், துணிச்சலுடன் பேட் செய்த ரிஷப் பந்த் ஆட்டம் சிறப்பாக இருந்தது. நிதானமாகவும், அவ்வப்போது அதிரடிக்கு முயன்று 4 முறை கேட்ச் வாய்ப்புகளில் இருந்து ரிஷப் பந்த் தப்பினார். இந்திய அணி சேர்த்த 119 ரன்களில் ரிஷப் பந்த் பங்களிப்பு மட்டும் 42 என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் என வலுவாக இருந்தது. ஆனால், அதன்பின் 38 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஐசிசி முழுநேர உறுப்பினர் அணி கடைசி 10 ஓவர்களில் சேர்த்த 2-ஆவது குறைந்தபட்ச ஸ்கோராக அமைந்தது.
இது தவிர அக்ஸர் படேல் திடீரென 4-ஆவது வீரராகக் களமிறக்கிவிடப்பட்டு சிறிய கேமியோவுடன் பெவிலியன் திரும்பினார். கடைசி வரிசை ஆட்டக்காரர்கள் சிராஜ், அர்ஷ்தீப் சிங் சேர்த்த 6 ரன்கள்தான் வெற்றியின் வித்தியாசமாக இருந்தது என்பதுதான் பெரிய ஸ்வரஸ்யமாகும். இதுபோன்று ஒவ்வொரு வீரரும் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் வெற்றிக்கு பங்களிப்பு செய்தனர்.
பாகிஸ்தான் அணி எங்கு தோற்றது?
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு நேற்று மிக நேர்த்தியாக இருந்தது. குறிப்பாக முகமது அமீர், நசீம் ஷா இருவருமே இந்திய பேட்டர்களை திணறவைத்தனர். 4 ஓவர்கள் வீசிய நசீம் ஷா 21 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார், இதில் 15 டாட்பந்துகள் அடக்கம். அதேபோல, முகமது அமீர் 4 ஓவர்கள் வீசி 23 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார், 15 டாட் பந்துகளை வீசினார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் பாபர் ஆஸம், ரிஸ்வான் ஆகியோரின் ஆட்டத்தை நம்பியே கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி பயணித்து வருகிறது. இருவரும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்துவிட்டாலே மற்ற வீரர்கள் நம்பிக்கையிழந்து விடுகிறார்கள். இதுதான் நேற்றும் நடந்தது. ஆனால், பாபர் ஆஸமும், ரிஸ்வானும் தங்களின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பவர்ப்ளே ஓவர்களை பயன்படுத்த தவறியது தோல்விக்கான முக்கியக் காரணமாகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












