ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதலில் ஐபிஎல் எஃபெக்ட்; ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்'

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்தியாவில் ஐபிஎல் டி20 போட்டியை பார்த்தபின் அதுபோன்று டி20 உலகக் கோப்பை இல்லையே என்று ரசிகர்களுக்கு இருந்த ஏக்கம் நேற்று மாறியது. பேட்டர்களின் ஆதிக்கம், சிக்ஸர்கள், பவுண்டரிகளை பறக்கவிடும் ஆட்டத்தைப் பார்த்த மனநிறைவு நேற்று ரசிகர்களுக்கு ஏற்பட்டது.
பர்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுன் நகரில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் பி பிரிவில் 17-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலியா அணி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வார்னர், ஹெட் அதிரடி தொடக்கம்
இங்கிலாந்து அணி தனது டி20 வரலாற்றில் முதல்முறையாக சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து பந்துவீச்சைத் தொடங்கியது. ஆனால், காய்ந்துபோன பர்படாஸ் விக்கெட்டில் இந்த பந்துவீச்சு எடுபடவில்லை. மொயின் அலி வீசிய முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட், வார்னர் ஜோடி 3 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். இருவருமே இடதுகை பேட்டர்கள் என்பதால், ஆப் ஸ்பின்னர் மொயின் அலியைப் பயன்படுத்தினர்.
ஆனால், 14 சர்வதேச டி20 போட்டிகளில் மட்டுமே பந்துவீசிய அனுபவம் கொண்ட வில் ஜேக்ஸுக்கு பந்துவீச கேப்டன் பட்லர் வாய்ப்பளித்தார். ஆனால், ஜேக்ஸ் பந்துவீச்சை வெளுத்த வார்னர் 4 பந்துகளில் 3 பவுண்டரிகளை விளாசினார்.
அதன்பின் மார்க் உட் பந்துவீச வந்தபின், வார்னர், ஹெட் வெளுத்து வாங்கினர். குறிப்பாக குறைந்த தொலைவு கொண்ட ஸ்குயர் பவுண்டரி பகுதியில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் வார்னர் வெளுத்தார். வார்னர் அதிரடியாக ஆடி வந்த நிலையில் மொயின் அலி பந்துவீச்சில் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டபோது போல்ட் ஆகி 39 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு வார்னர்-ஹெட் ஜோடி 4.6 ஓவர்களில் 70 ரன்கள் சேர்த்தது. பவர்ப்ளேயில் ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் சேர்த்தனர்.
காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் பழைய வேகம், ஸ்விங் காணப்படவில்லை. தோள்பட்டை வலி காரணமாக பந்துவீச்சு ஆக்ஸனை மாற்றியதால், ஆர்ச்சரின் பந்துவீச்சின் வேகம் குறைந்துவிட்டது. இருப்பினும் பர்படாஸ் மைதானத்தில் ஹெட்டை கிளீன் போல்டாக்கி முதல் விக்கெட்டை ஆர்ச்சர் எடுத்தார். டி20 உலகக் கோப்பையில் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி 74 ரன்களைச் சேர்த்தது.
அதன்பின் மிட்ஷெல் மார்ஷ்(35), மேக்ஸ்வெல்(28), ஸ்டாய்னிஷ்(30) என நடுவரிசை பேட்டர்கள் விரைவாக ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். இதனால் 15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் ஸ்டாய்னிஷ், டிம் டேவிட்(11) மேத்யூ வேட்(17) ஆகியோரின் கேமியோ 200 ரன்களைக் கடக்க உதவியது.

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து பந்துவீச்சு படுமோசம்
நடப்பு சாம்பியன் என்று சொல்லும் அளவுக்கு இங்கிலாந்து பந்துவீச்சு தரமானதாக இல்லை. 7 பந்துவீச்சாளர்களில் ஆர்ச்சர், லிவிங்ஸ்டன் தவிர மற்றவர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் வாரி வழங்கினர். அதிலும் மார்க் உட் பந்துவீச்சில் பந்து எந்தவிதமான ஸ்விங்கும் ஆகாமல் நேராக பேட்டரை நோக்கியே வந்தது அடித்து ஆட வசதியாக இருந்தது.
அதேபோல கிறிஸ் ஜோர்டன், அடில் ரஷித் இருவரும் ரன்களை வாரி வழங்கினர். கட்டுக்கோப்புடன், லைன் லென்த்தில் இங்கிலாந்து பந்துவீசியிருந்தால், ஆஸ்திரேலியாவை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியிருக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images
சால்ட், பட்லர் நம்பிக்கை
சவாலான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் பட்லர்(42), பில் சால்ட்(37) இருவரும் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். குறிப்பாக ஹேசல்வுட், ஸ்டார்க் இருவரின் பந்துவீச்சையும் சால்ட், பட்லர் வெளுத்துக் கட்டினர். ஸ்டார்க் பந்துவீச்சில் 106 மீட்டர் சிக்ஸரை சால்ட் அடித்தபோது, கொல்கத்தா அணியின் சக வீரரான சால்ட்டைப் பார்த்து ஸ்டார்க் சிரித்துக்கொண்டே சென்றார்.
வழக்கமாக இங்கிலாந்து-ஆஸ்திரேலிய வீரர்கள் முறைத்துக் கொள்ளும் சூழலில் ஐபிஎல் தொடர் இரு நாட்டுவீரர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டார்க் வீசிய 7வது ஓவரில் பட்லர், சால்ட் சேர்ந்து 19 ரன்கள் சேர்த்தனர். இருவரையும் பிரிக்க ஆடம் ஸம்பா கொண்டுவரப்பட்டார்.

பட மூலாதாரம், Getty Images
திருப்புமுனை ஓவர்கள்
ஸம்பா வீசிய முதல் ஓவரில் சால்ட் தாழ்வாக வந்த பந்தை அடிக்க முற்பட்டு போல்டாகி வெளியேறினார். ஸம்பாவின் 2வது ஓவரில் பட்லர் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஆடம் ஸம்பா எடுத்த 2 விக்கெட்டுகள்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும். இந்த விக்கெட்டுகளுக்குப்பின் ஆட்டமே தலைகீழாக மாறியது.
விக்கெட் சரிவு
இருவரும் ஆட்டமிழந்தபின் இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்டது. பேர்ஸ்டோ 13 பந்துகளை வீணாக்கி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 3 சிக்ஸர்களை மேக்ஸ்வெல் ஓவரில் வெளுத்து 25 ரன்களில் கேமியோவுடன் பெவிலியன் திரும்பினார்.
லிவிங்ஸ்டன்(15), ஜேக்ஸ்(10) இருவருமே நடுப்பகுதியில் நிலைத்து ஆட தவறிவிட்டனர். ஹாரி ப்ரூக்(20), ஜோர்டன்(1) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
யாரும் அரைசதம் அடிக்கவில்லை
டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து 200 அதற்கு மேலான ரன்கள் சேர்க்கப்பட்ட முதல் போட்டி இதுதான். அது மட்டுமல்லாமல் பவர்ப்ளேயில் அதிகபட்சமாக வார்னர், ஹெட் சேர்ந்து 74 ரன்கள் சேர்த்த முதல் ஆட்டமும் இதுதான். ஆஸ்திரேலிய அணியில் எந்த பேட்டரும் அரைசதம் அடிக்கவில்லை.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், பில் சால்ட் கூட்டணியைப் பிரித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீ்ச்சாளர் ஆடம் ஸம்பா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரன் குவிப்புக்கு உதவிய மைதான 'ரகசியம்'
கென்னிங்ஸ்டன் ஓவல் மைதானத்தின் அமைப்பு ஆஸ்திரேலிய அணி 200 ரன்கள் சேர்க்க பெரிதும் உதவியது. மைதானத்தின் அமைப்பை தெரிந்து கொண்ட ஆஸ்திரேலிய பேட்டர்கள் அதை தங்களின் ரன் குவிப்புக்கு சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
அதாவது இந்த மைதானத்தின் ஒருபுறம் ஸ்குயர் பவுண்டரி அளவு மற்றொரு புற பவுண்டரி அளவைவிட 9 மீட்டர் குறைவாக 58 மீட்டர் அளவுடையது. இதனால் குறைந்த தொலைவுள்ள பக்கத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பது பேட்டர்களுக்கு எளிதாக இருக்கும் என்பதால், இரு அணியின் பேட்டர்களும் அந்தப்பகுதியை குறிவைத்தனர்.
இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர் வில் ஜேக்ஸ் தொடக்கத்திலேயே பந்துவீச, அதை சரியாகப் பயன்படுத்தி வார்னர் 3 சிக்ஸர்களை சிறிய ஸ்குயர் பவுண்டரி பகுதியில் விளாசினார். மார்க் உட் வீசிய ஓவரையும் வார்னரும், டிராவிஸ் ஹெட்டும் இதே பகுதியில் 22 ரன்களைக் குவித்தனர்.
இதே பாணியைக் கடைபிடித்த இங்கிலாந்து வீரர்கள் ஜாஸ் பட்லர், பில் சால்ட் இருவரும் துவக்கத்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஸ்டார்க் ஓவரில் 3 சிக்ஸர்களை பட்லரும், சால்ட்டும் பறக்கவிட்டு, மைதானத்தின் சூரிய ஒளித் தகட்டை உடைத்தனர். பவர்ப்ளேயில் 54 ரன்களை இங்கிலாந்து எட்டுவதற்கு மைதானத்தின் பவுண்டரி எல்லைக்கான தூரம் குறைவான பகுதியும் உதவியது.
பட்லர், சால்ட் ஜோடி 73 ரன்கள் எடுத்தது. இருவரையும் தனது அடுத்தடுத்த ஓவர்களில் ஆடம் ஸம்பா வெளியேற்றியபின். இங்கிலாந்து பேட்டிங் வரிசையே ஆட்டம் கண்ட, அடுத்த 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது. குறிப்பாக நடுவரிசை பேட்டர்கள் யாரும் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை எதிர்கொண்டு விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
"பாடங்களைக் கற்றுக்கொண்டோம்"
வெற்றிக்குப் பின் ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ஷெல் மார்ஷ் கூறுகையில் “ சிறந்த ஆட்டம், அனைத்து தரப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டோம். பவர்ப்ளேதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது. முதல் போட்டியில் பல பாடங்களைக் கற்றுக்கொண்டோம். பந்துவீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்தனர், அனுபவம் வாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
கம்மின்ஸ் சிறப்பாகப் பந்துவீசினார். அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சும், ஓவர்களும் தேவை என்பதை நிரூபித்தார். இந்த சூழலை, காலநிலையை, காற்று அடிக்கும் திசையை பார்த்துவிட்டோம். இனி அதற்கு ஏற்றாற்போல் எங்களை மாற்றுவோம். தொடர்ந்து வெற்றிகளைப் பெற முயல்வோம்” எனத் தெரிவித்தார்
இங்கிலாந்துக்குச் சிக்கல்
ஆஸ்திரேலிய அணி தனது வெற்றி மூலம் சூப்பர்-8 சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது. ஆனால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை சிக்கலில் கோர்த்துவிட்டுள்ளது. தற்போது 2 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று ஆஸ்திரேலியா வலுவாக முதலிடத்தில் இருக்கிறது.
ஆனால், இங்கிலாந்து அணிக்கு முதல் போட்டி மழையால் ரத்தானதால் ஒரு புள்ளி கிடைத்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியால் 2 போட்டிகளில் ஒரு புள்ளியுடன் இருக்கிறது. 2வது இடத்தில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து இருக்கிறது. ஆதலால், இனிவரும் இரு ஆட்டங்களிலும் இங்கிலாந்து அணி கட்டாயம் வென்று நிகர ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். அதேசமயம், ஸ்காட்லாந்து அணி அடுத்துவரும் இரு போட்டிகளிலும் தோற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி லீக் சுற்றோடு நடையைக் கட்ட வேண்டியதிருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












