தென்மேற்கு வங்கக் கடலில் உருவான திட்வா புயல் – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

பட மூலாதாரம், IMD
"தென்மேற்கு வங்கக் கடலில், இலங்கையை ஒட்டிய பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அந்தப் புயல் புதுவையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 610கி.மீ தொலைவிலும் சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கே 700கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது," என தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் அமுதா செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்தப் புயலுக்கு திட்வா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
"இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 30ஆம் தேதி அதிகாலையில் வட தமிழகம், புதுவை மற்றும் அதையொட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ளக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?

பட மூலாதாரம், Getty Images
மேலும், இந்தப் புயலின் காரணமாக, அடுத்த 24 மணிநேரத்தில் ஐந்து டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்வதற்கு வாய்ப்புள்ளது என்றும் பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புண்டு எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய தகவலின்படி, நவம்பர் 28ஆம் தேதியன்று, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நான்கு டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்ததாக 29ஆம் தேதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர் பத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், "வட தமிழகத்தின் பெரும்பாலான கடலோர மாவட்டங்களுக்கு கன முதல் அதிகன மழையும், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, காரைக்கால் ஆகியவற்றின் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 30ஆம் தேதியன்று, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
மழை தொடர்பான வானிலை ஆய்வு மைய தகவல்களைத் தெரிவித்த தென்மண்டல தலைவர் அமுதா, மீனவர்களுக்கான எச்சரிக்கைகளையும் குறிப்பிட்டார்.
அப்போது, "புயல் மையமிட்டுள்ள பகுதிகளில் சூறாவளிக் காற்றும் கடும் காற்றும் மணிக்கு அதிகபட்சமாக 60 முதல் 80கி.மீ வேகத்திலும் இடையிடையே 90கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் புயலின் மையப் பகுதியைவிட்டு, வெளிப்புறப் பகுதிகளில் 35 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55கி.மீ வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.

அதேபோல, அரபிக் கடல் பகுதிகளிலும் கேரள கடலோரங்கள், லச்சத்தீவு பகுதிகளில் 35 முதல் 45கி.மீ வேகத்திலும் இடையிடையே 55கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் தெற்கு வங்கக்கடல் பகுதிகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று தெரிவித்தார்.
மேலும், அடுத்த ஐந்து தினங்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். குறிப்பாக, தமிழக கடலோர பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 7 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
அதேபோல், பாம்பன், தூத்துக்குடி ஆகிய இரண்டு துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












