இட்லி கடை விமர்சனம்: தனுஷின் கிராம பின்னணி படம் ரசிகர்களை கவர்ந்ததா?

பட மூலாதாரம், Danush
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் இட்லி கடை. இதற்கு முன்பு அவரது இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான 'ராயன்', 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்நிலையில், குறுகிய இடைவெளியில் 'இட்லி கடை' இன்று (அக். 01) வெளியாகியிருக்கிறது.
கிராமத்துப் பின்னணியில் அமைந்த குடும்ப படமாக வெளியாகியிருக்கும் 'இட்லி கடை' படத்தில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ராஜ்கிரண், ஷாலினி பாண்டே, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி என நட்சத்திர பட்டாளமே உள்ளது. இட்லி கடை ரசிகர்களை கவர்ந்ததா? இப்படம் குறித்து பல்வேறு ஊடகங்களில் வெளியாகியிருக்கும் விமர்சனங்களைக் காணலாம்.
'இந்து தமிழ் திசை' இணையதளத்தில் வெளியான விமர்சனத்தில் படத்தின் கதை குறித்து இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கிராமத்தில் சிறிய இட்லி கடை வைத்து குடும்பத்தை காப்பாற்றும் சிவநேசன் (ராஜ்கிரண்). கேட்டரிங் படித்து முடிக்கும் அவரது மகன் முருகன் (தனுஷ்), வெளிநாட்டில் பெரும் பணக்காரரான விஷ்ணு வர்தனின் (சத்யராஜ்) ரெஸ்டாரன்ட்டில் வேலைக்கு சேர்கிறார். இங்கு அவரது திறமைக்கு பாராட்டுகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கின்றன.
இது விஷ்ணுவர்தனின் மகன் அஸ்வினுக்கு (அருண் விஜய்)-க்கு ஒருவித தாழ்வு மனப்பான்மையை உருவாக்குகிறது. முருகனின் மீது காதல் வயப்படும் தனது இளைய மகள் மீராவுக்கு (ஷாலினி பாண்டே) அவரை திருமணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறார் விஷ்ணு வர்தன். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கிறார். எனினும் ஒரு மரணத்தால் ஹீரோ எடுக்கும் முடிவு அஸ்வினுக்கு முருகனின் மீது பகையை ஏற்படுத்துகிறது. இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே 'இட்லி கடை' படத்தின் திரைக்கதை.

பட மூலாதாரம், dhanushkraja
'யூகிக்கக் கூடியதே பலவீனம்'
"முதல் பாதியில் வரும் தனுஷ், ராஜ்கிரண் இடையிலான காட்சிகளே படத்தின் பலம். இதுபோன்ற வேடங்களில் ராஜ்கிரணின் நடிப்பு குறித்து சொல்லவே வேண்டியதில்லை. அவர் வரும் காட்சிகள் உணர்வுபூர்வமாக ஆடியன்ஸ் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது." என பாராட்டுகிறது இந்து தமிழ்.
முதல் பாதி தந்தை - மகன் சென்டிமென்ட், தனுஷின் வளர்ச்சி, சத்யராஜ் குடும்பத்துடனான தனுஷின் உறவு என இடைவேளை வரை தொய்வின்றியே செல்கிறது திரைக்கதை என கூறியுள்ள இந்து தமிழ் திசை, எனினும், சத்யராஜ் குடும்பம் தொடர்பான காட்சிகளில் ஒருவித இயல்புத்தன்மை இல்லாத உணர்வு ஏற்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
இடைவேளைக்குப் பிறகு படத்தின் காட்சிகள் யூகிக்கக் கூடியதாக அமைந்ததே மிகப் பெரிய பலவீனம் என்று 'இந்து தமிழ் திசை' விமர்சித்துள்ளது.
என்றாலும், நடிகர்களை வெகுவாக பாராட்டியுள்ளது. "நடிகராக தனுஷ் மேலும் ஒருபடி மெருகேறியிருக்கிறார். வெற்றியை நோக்கி ஓடும் இளைஞனின் மனப்பான்மையை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
தனக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். ஈகோ தலைக்கேறிய பணக்கார வீட்டுப் பிள்ளையாக அருண் விஜய் குறையில்லாத நடிப்பு. சத்யராஜ், பார்த்திபன், ஷாலினி பாண்டே, கீதா கைலாசம் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாய் செய்திருக்கின்றனர். ஒப்பீட்டளவில் குறைவான காட்சிகளே வந்தாலும் நித்யா மேனன் தனித்து நிற்கிறார்." என பாராட்டியுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் மீண்டும் தனது பின்னணி இசையால் ஈர்க்கிறார் என்றும் 'என் பாட்டன் சாமி', 'என்ன சுகம்' பாடல்கள் இனிமையாக உள்ளது என்றும் கூறியுள்ளது.
கிரண் கவுசிக்கின் கேமரா கண்ணுக்கு குளிர்ச்சி என நேர்மறையான விஷயங்களை குறிப்பிட்டுள்ள இந்து தமிழ், ஆக்ஷன் காட்சிகளில் பெரிய சுரத்தை இல்லை என விமர்சித்துள்ளது.
"கிராமத்து பின்னணி, குடும்ப சென்டிமென்ட் விரும்பும் ஆடியன்ஸை டார்கெட் செய்யும் எளிய கதைக்களத்துடன் இறங்கி, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ள தனுஷ், இன்னும் நேர்த்தியான திரைக்கதையையும் எழுதியிருந்தால், ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினர் படமாக தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் போனி ஆகியிருக்கும் இந்த 'இட்லி கடை'" என தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், dhanushkraja
இயக்குநராக தான் விட்ட இடத்தை நோக்கிய பயணத்தில் தனுஷ் கொஞ்சம் மும்முரமாகியிருக்கிறார் என பாராட்டியுள்ளது 'தினமணி'. "கதையிலும், எழுத்திலும், இயக்கத்திலும் ராயனைக் கடந்துவிட்டார் என கண்டிப்பாகச் சொல்லலாம்."
தினமணியும் நடிகர்களின் நடிப்பை குறிப்பிட்டு பாராட்டியுள்ளது.
"அருண் விஜய்க்கு திரையில் தனி இடம் கொடுக்கப்பட்டு, அதை அவர் நன்றாகவும் கையாண்டிருக்கிறார். நித்யா மேனன் கிராமத்துப் பெண்ணாக, வெகுளியாக வந்து கவர்கிறார். சிவநேசன் கதாபாத்திரத்தின் தூய்மையான மனநிலையை ராஜ்கிரண் இயல்பான நடிப்பால் காட்டியிருக்கிறார்.
அம்மாவாக நடித்துள்ள கீதா கைலாசம் நல்ல நடிப்பால் மனதில் நிற்கிறார்.
மற்றபடி சமுத்திரக்கனி, இளவரசு, பார்த்திபன் ஆகியோரெல்லாம் சிறிய கதாபாத்திரங்கள் போல் தோன்றினாலும் நல்ல கதாபாத்திரங்களாக வடிவமைக்கப்பட்டு, அதை அவர்கள் அழகான முறையிலும் திரையில் காட்டியிருக்கிறார்கள்." என தெரிவித்துள்ளது 'தினமணி'.
'நல்ல கதை'

பட மூலாதாரம், dhanushkraja
விளம்பர நிகழ்ச்சிகளில் தனுஷ் சொன்னதுபோல, இது ஒரு சாதாரணக் கதை என்றும் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் பொறுமையாக நகரும் கதை என்றும் தினமணி தெரிவித்துள்ளது.
"அப்பாவின் தொழிலை நான் செய்வேன்! எனது மகன் பேரன்களுக்கும் கற்றுத்தருவேன்" என்பது மாதிரியான வசனங்கள் கொஞ்சம் நெருடலாகத் தெரிந்தாலும், கதையின் போக்கு சொல்லவரும் கதை வேறு என்பதை பல இடங்களில் உணர்த்திவிடுகிறது." என்கிறது 'தினமணி'
கிரண் கௌஷிக்கின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய அளவில் உதவியுள்ளது என்றும் சண்டைக் காட்சிகளும் சரி, சமையல் காட்சிகளும் சரி, அவரது பங்கு படத்தை நல்லமுறையில் கொண்டுசேர்த்துள்ளது, அந்த ஊரைக் காட்டிய விதமும், அந்த ஊர் மக்களைக் காட்டிய விதமும் எழுத்திலும், கலை வடிவமைப்பிலும் கவனம் பெருகின்றன என நேர்மறையான விஷயங்களை குறிப்பிட்டுள்ளது தினமணி.
"மொத்தத்தில் இந்த இட்லிக்கடை குடும்பத்துடன் சென்று ரசித்துவிட்டு வரக் கூடிய அளவில் மென்மையாக, பொறுமையாக நல்ல கதையாகவே வந்து சேர்ந்திருக்கிறது." என்கிறது அந்நாளிதழ்.

பட மூலாதாரம், Danush
இட்லி கடையில், அனைவருக்கும் நன்கு பரிச்சயமான கதாபாத்திரங்களுக்கான அம்சங்கள் படம் நெடுக இருப்பதாக தெரிவித்துள்ளது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' விமர்சனம். கதையின் பல பகுதிகள் முன்பே யூகிக்கும் விதமாக உள்ளதாக விமர்சித்துள்ளது.
"தந்தையின் நோக்கத்திற்காக, வில்லன் அஷ்வினுடன் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என முருகன் முடிவெடுத்தது பற்றி சுவாரஸ்யமான முறையில் சொல்லப்படவில்லை. கிராமங்களிலிருந்து சிறந்த வாழ்க்கைக்காக இடம்பெயர்வதை குற்ற உணர்வுடன் சித்தரித்திருப்பது பிற்போக்குத்தனமாக உள்ளது." என விமர்சித்துள்ளது.
படம் சில இடங்களில் உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், நடிகர்களின் நடிப்பே அக்கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதத்திலிருந்து மேம்பட்டு காட்டியிருப்பதாகவும் பாராட்டியுள்ளது.
முருகன் - கயலுக்கு இடையேயான காதல் குறிப்பிடப்பட வேண்டியது என்றும் தேவர் மகனில் வரும் கமல்ஹாசன் - ரேவதி பகுதியை புதுவிதத்தில் சித்தரிப்பது போன்றுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ்.

தனுஷ் இயக்கிய படங்களில் உணர்வுபூர்வமான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுவதை கவனிக்கலாம் என தெரிவித்துள்ள இந்தியா டுடே, இப்படத்திலும் அந்த அம்சத்தை தனுஷ் தவறவிடவில்லை என கூறியுள்ளது.
"இட்லி கடை மிகவும் நாடகத்தன்மை கொண்டதாக உள்ளது. கிராமத்து வாழ்க்கையை மிகையானதாகவும் கிராமங்களிலேயே வாழ்பவர்களை மேலானவர்களாகவும் காட்டியுள்ளனர். பல காட்சிகள் யூகிக்கக்கூடியதாக உள்ளன." என குறைகளை சுட்டிக்காட்டியுள்ளது இந்தியா டுடே.
"காவல்துறையை சேர்ந்தவராக வரும் பார்த்திபன் சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். தனுஷின் நடிப்பே இத்திரைப்படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறது. நித்யா மேனனும் திறம்பட நடித்துள்ளார். உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு மத்தியில் தனுஷ், நித்யா மேனன் மற்றும் இளவரசு ஆகியோருக்கு இடையிலான நகைச்சுவை காட்சிகள் சிரிப்பை வரவழைக்கிறது" என பாராட்டியுள்ளது 'இந்தியா டுடே'.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












