ஒசூர் அருகே பட்டாசுக் கடை விபத்தில் 13 பேர் உடல் கருகி பலி - தீப்பிடித்தது எப்படி?

ஒசூர் அருகே பட்டாசுக் கடையில் தீ

ஒசூர் அருகே தமிழக எல்லையின் சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடக எல்லைக்குட்பட்ட பட்டாசு கடை ஒன்றில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. அங்கே 5 மணிநேரத்திற்கு மேலாக தொடரும் மீட்பு பணிகள் தொடர்கின்றன. இதுவரை 13 தொழிலாளர்களின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பட்டாசுக் கடையில் திடீரென பற்றிய தீ

ஒசூர் அடுத்த தமிழக மாநில எல்லையான ஜூஜூவாடியிலிருந்து சில மீட்டர்கள் தூரத்தில் கர்நாடகா மாநிலம், அத்திப்பள்ளி சோதனை சாவடி அருகே நவீன் என்பவர் பாலாஜி கிராக்கர்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். தீபாவளியையொட்டி அதன் அருகிலேயே மேலும் 2 கடைகளை அவர் வைத்துள்ளார். இங்கு தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த டி.அம்மாபேட்டை, கள்ளக்குறிச்சி எடவாய் நத்தம், வாணியம்பாடி ஆகிய பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்ப்பட்ட தமிழக இளைஞர்கள் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை 3:30 மணியளவில் கண்டெய்னர் லாரியில் இருந்து பட்டாசுகளை இறக்கி, 2 டாடா ஏஸ் வாகனங்களில் பட்டாசுகளை ஏற்றி வைத்த போது திடீரென தீப்பிடித்தது. கடைக்குள் தீ பரவியதால் பட்டாசுகள் வெடித்து சிதறி கடை முழுவதும் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் கரும்புகையுடன் மளமளவென தீப்பற்றி எரிந்தது.

அத்திப்பள்ளி தீயணைப்பு வாகனங்கள் மூன்று மணிநேரமாக போராடி தீயை அணைத்து வருகின்றனர். இங்கு வேலை பார்த்து வந்த அனைவரும் தமிழர்கள் என்கிற நிலையில் இதுவரை 13 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. காயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்டனர். மேலும் தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடையில் வேலை செய்து வந்த மற்றவர்கள் பின்வாசல் வழியாக தப்பினார்களா, அல்லது விபத்தில் சிக்கினார்களா என்கிற அச்சம் நிலவுகிறது.

தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாகவே இந்த தீ விபத்து ஏற்ப்பட்ட நிலையில் சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் தீ விபத்தை காண நூற்றுக்கணக்கில் குவிந்துள்ளனர்.

ஒசூர் அருகே பட்டாசுக் கடையில் தீ

பட்டாசு விபத்துக்கு காரணம் என்ன?

பட்டாசு விபத்து எப்படி ஏற்பட்டது என்பதற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. பட்டாசுகளை கண்டெய்னர் லாரியில் இருந்து இறக்கிய போது தீப்பிடித்ததா அல்லது கடையின் மீது தாழ்வாக செல்லும் மின்கம்பி உரசி தீப்பற்றியதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)