ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப்: உலகின் மிகப்பெரிய ராக்கெட் வெடித்த பிறகும் மனஉறுதி குலையாத ஈலோன் மஸ்க்

ஸ்பேஸ்எக்ஸ்

பட மூலாதாரம், SPACEX

விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் அனுப்ப வடிவமைக்கப்பட்ட விண்கலன் வியாழக்கிழமை நடந்த அதன் முதல் சோதனையின்போது, மேலே பறந்த சில நிமிடங்களிலேயே வெடித்துச்சிதறியது.

உலகிலேயே இதுவரை கட்டப்படாத மிக சக்திவாய்ந்த ராக்கெட் ஆக ஸ்பேஸ்க்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் கருதப்படுகிறது.

அமெரிக்கா டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள தனியார் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிலையமான ஸ்டார்பேஸில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 8:33 மணிக்கு இந்த பிரமாண்ட ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

ஸ்டார்ஷிப் விண்கலன், மூன்று நிமிட பயணத்துக்குப் பிறகு முதல்-நிலை ராக்கெட் பூஸ்டரில் இருந்து பிரிய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் எதிர்பார்த்தபடி அந்த பிரியும் நடவடிக்கை கைகூடாமல் ராக்கெட் வெடித்தது.

ராக்கெட் வெடித்துச் சிதறிய சில நிமிடங்களில், "இந்த சோதனை போதுமான அளவு உற்சாகமளிக்காதது போல, ராக்கெட் பிரிப்புக்கு முன்பே திட்டமிடப்படாத நிலையை அனுபவித்தது" என்று ஸ்பேஸ்எக்ஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு இடுகையை பகிர்ந்தது.

இந்த முழு சோதனையும் நிறைவடையாமல் போனாலும் தமது முயற்சி வெற்றி பெற்றதாக ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்தது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

மேலும், "எங்கள் ஒரே நம்பிக்கையாக இருந்த ஏவுதள கோபுரத்தை விட்டு ராக்கெட் சரியாக புறப்பட்டது," என்று ஸ்பேஸ்எக்ஸ் தர அமைப்பு பொறியாளர் கேட் டைஸ் கூறினார்.

"இது போன்ற ஒரு சோதனை மூலம், நாம் கற்றுக் கொண்ட படிப்பினையில் இருந்தே வெற்றி வருகிறது. மேலும் இன்றைய சோதனை ஸ்டார்ஷிப்பின் நம்பகத்தன்மையை மேம்படுத்த உதவும்," என்றும் ஸ்பேஸ்எக்ஸ் ட்வீட் செய்தது.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சந்திரனுக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப ஸ்டார்ஷிப் விண்கலத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது. ஆர்ட்டெமிஸ் III என அழைக்கப்படும் அந்த விண்வெளி திட்டம், 1972இல் முடிவடைந்த அப்பல்லோ திட்டத்துக்குப் பிறகு சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முதல் திட்டமாகும்.

ஸ்டார்ஷிப் என்பது 230-அடி உயரமுள்ள முதல்-நிலை சூப்பர் ஹெவி பூஸ்டர் ராக்கெட்டின் மேல் அமர்ந்திருக்கும் பயணிகள் மற்றும் சரக்குகளை எடுத்துச் செல்ல வடிவமைக்கப்பட்ட 164-அடி (50-மீட்டர்) உயரமான விண்கலனாகும்.

ஸ்பேஸ்எக்ஸ் கடந்த பிப்ரவரியில் 33 மிகப்பெரிய ராப்டார் என்ஜின்களின் முதல்-நிலை பூஸ்டர் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. ஆனால் ஸ்டார்ஷிப் விண்கலமும் சூப்பர் ஹெவி ராக்கெட்டும் முதல் முறையாக ஒன்றாகப் பறக்க விடப்பட்டது இதுவே முதல் முறை.

இந்த இரண்டும் சேர்ந்து பறந்தால் ஏற்படும் திறனை மதிப்பிடவே ஒருங்கிணைந்த சோதனைக்கு திட்டமிடப்பட்டது.

முன்னதாக, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் ஈலோன் மஸ்க், ராக்கெட் ஏவுதலுக்கு முன்னதாக தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்றும் தொடக்க சோதனை எதிர்பார்ப்புகளை சற்றே குறைத்துக் கொள்ளும்படியும் கூறியிருந்தார்.

இருப்பினும் இன்றைய சோதனை முடிவுக்குப் பிறகு தமது அணியினருக்கு வாழ்த்து கூறிய அவர், படிப்பினையில் இருந்து கற்றுக் கொள்வோம் என்று குறிப்பிட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: