திலக் வர்மாவை கோலியுடன் ஒப்பிடும் நிபுணர்கள் - புள்ளி விவரம் கூறுவது என்ன?

திலக் வர்மா, இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரவீன்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

"திலக் வர்மா பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியைப் போலவே ஒரு இன்னிங்ஸை விளையாடினார், அதுவும் இறுதிப் போட்டியில்."

ஞாயிற்றுக்கிழமை, துபையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒன்பதாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.

போட்டி முடிந்த பிறகு, சமூக ஊடகங்களிலும் ஆசியக் கோப்பையின் அதிகாரபூர்வ ஒளிபரப்பிலும் ஒருவரைப் பற்றி பரவலாகப் பேசப்பட்டது. அவர் தான் திலக் வர்மா.

முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்ஃபான் பதான், திலக் வர்மாவின் இன்னிங்ஸை 2022-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி ஆடிய இன்னிங்ஸுடன் ஒப்பிட்டார்.

முன்னதாக மெல்போர்னில், விராட் கோலி 82 ரன்கள் ஆட்டமிழக்காமல் விளையாடி, இந்தியாவுக்கு சவாலான ஒரு ஆட்டத்தில் வெற்றியை எளிதாகப் பெற்றுத் தந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியிலும் இதேபோன்ற சூழ்நிலை உருவானதைக் காண முடிந்தது.

147 ரன் என்ற இலக்கைத் துரத்திய இந்தியா, நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்தது.

பாகிஸ்தானைத் தோற்கடிப்பது இந்திய அணிக்கு கடினமாக இருக்கும் எனத் தோன்றியது.

ஆனால் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சொன்ன ஒரு விஷயத்தை திலக் வர்மா சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரூபித்தார்.

'திலக் வர்மாவின் திறமை'

திலக் வர்மா, இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் திலக் வர்மா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஐபிஎல் 2022-க்காக மும்பை இந்தியன்ஸ் அணி திலக் வர்மாவை ஒப்பந்தம் செய்தது. தனது முதல் சீசனில் அவர் 14 போட்டிகளில் 397 ரன்கள் எடுத்து, எதிர்காலத்தில் அதிகம் பேசப்படக்கூடிய வீரராக மாறும் திறனை வெளிப்படுத்தினார்.

முதல் சீசனின் வெற்றிக்குப் பிறகு, ரோஹித் சர்மா 'திலக் வர்மாவுக்கு சிறப்பான திறமை இருக்கிறது' என்று பாராட்டினார்.

அந்த வெற்றியைத் தொடர்ந்து திலக் வர்மா, ஐபிஎல் 2023-ல் 11 போட்டிகளில் 343 ரன்கள் எடுத்தார்.

"கடந்த ஆண்டு நான் இதைப் பற்றி யோசித்தேன், இப்போது உறுதியாக நம்புகிறேன். திலக் வர்மா ஒரு சிறந்த வீரராக மாறப் போகிறார்" என்று திலக் வர்மாவின் ஆட்டத்திற்குப் பிறகு, மூத்த விளையாட்டு பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான ஹர்ஷா போக்லே எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இரண்டு வெற்றிகரமான சீசன்களுக்கு பிறகு, திலக் வர்மா இந்திய அணிக்குள் நுழையும் பாதை அமைந்தது. ஆகஸ்ட் 2023-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் அவர் அறிமுகமானார்.

அதன்பின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில், அவர் இந்திய அணியில் தனக்கென இடத்தை உறுதிசெய்தார். அணி அவருக்கு மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை வழங்கியது.

அந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திய திலக் வர்மா, 56 பந்துகளில் 107 ரன்கள் அடித்தார்.

அடுத்து நடந்த போட்டியில், மேலும் ஒரு படி மேலே போய் 47 பந்துகளில் 120 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, ஆட்ட நாயகனாகவும் தொடர் நாயகனாகவும் அவர் ஜொலித்தார்.

'மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸ்'

திலக் வர்மா, இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குறுகிய காலத்தில் திலக் வர்மா பல முக்கிய சாதனைகளை படைத்துள்ளார்.

திலக் வர்மா ஆசியக் கோப்பையில் இந்தியாவின் வெற்றி நாயகனாக உருவெடுத்துள்ளார்.

கடினமான சூழ்நிலையில் தொடர்ந்து விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், 22 வயதான திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 69 ரன்கள் எடுத்து போட்டியை வென்று கொடுக்கும் திறன் தன்னிடம் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு சுப்மன் கில், குல்தீப் யாதவ், இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் திலக் வர்மாவை பாராட்டியுள்ளனர்.

"திலக் வர்மாவின் இன்னிங்ஸ் ஒரு மாஸ்டர் கிளாசாக இருந்தது. இன்று அவரை யாராலும் வெல்ல முடியவில்லை" என்றார் குல்தீப் யாதவ்.

நான்கு ஓவர்களில் 20 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு இலக்கைத் துரத்துவது எளிதான காரியமல்ல. ஆனால் திலக் வர்மாவின் இன்னிங்ஸ் வெற்றியை சாத்தியமாக்கியது என்று ஷுப்மான் கில் குறிப்பிட்டார்.

"இலக்கு பெரிதாக இல்லை. ஆனால் ஆரம்பத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்த போது நிலைமை சிக்கலாக இருந்தது. அப்போது சஞ்சு சாம்சனுடன் திலக் வர்மா பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது" என்று ஷுப்மான் கில் தெரிவித்தார்.

"இறுதிப் போட்டியில் அழுத்தம் இருந்தது. ஆனால் திலக் வர்மா , சஞ்சு சாம்சன் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் கூட்டணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது" என்று மோர்கல் கூறினார்.

22 வயதான திலக் வர்மா ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியா ஆரம்பத்திலேயே மூன்று விக்கெட்டுகளை இழந்தபோதும், அவர் முதலில் சஞ்சு சாம்சனுடன் 57 ரன்கள், பின்னர் ஷிவம் துபேயுடன் 60 ரன்கள் சேர்த்து அணியை நிலைநிறுத்தினார்.

இறுதியில், 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடி இந்தியாவுக்கு வெற்றியையும் பெற்றுத் தந்தார்.

'ஒரு அற்புதமான இளம் வீரர்'

திலக் வர்மா, இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திலக் வர்மா தனது இரண்டு வருட கிரிக்கெட் அனுபவத்தில் இந்தியாவிற்கு ஒரு சவாலான வெற்றியைப் பரிசளித்துள்ளார்.

திலக் வர்மாவும் தன் மீது அதிக அழுத்தம் இருந்ததை ஒப்புக்கொண்டார்.

போட்டிக்குப் பிறகு பேசிய அவர், "நிறைய அழுத்தம் இருந்தது. பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது. சாம்சன் நன்றாக ஒத்துழைப்பு அளித்தார். துபேயின் இன்னிங்ஸும் சிறப்பாக அமைந்தது" என்று கூறினார்.

மேலும், "நான் மிகவும் கடினமாக உழைத்தேன். இது என் வாழ்க்கையின் மிகச் சிறப்பான இன்னிங்ஸ்களில் ஒன்று. இந்த வெற்றி அனைத்து இந்தியர்களுக்குமானது"என்றும் குறிப்பிட்டார்.

திலக் வர்மா, இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

புள்ளி விவரம் கூறுவது என்ன?

சர்வதேச டி20 போட்டிகளில் திலக் வர்மாவின் சாதனை, அவர் இந்தியாவுக்கு ஒரு சிறந்த பினிஷராக மாறக்கூடிய திறமை கொண்டவர் என்பதைக் காட்டுகிறது.

அணியில் திலக் வர்மா இருந்த போது இந்தியா வென்ற 11 டி20 போட்டிகளில், 92.50 சராசரியுடன் 370 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று அரைசதங்கள் அடங்கும். அவரது ஸ்டிரைக் ரேட் சுமார் 135.

திலக் வர்மா இந்தியாவுக்காக 32 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவற்றில் 53 ரன் சராசரி மற்றும் 149 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 962 ரன்கள் எடுத்துள்ள அவர், நான்கு அரைசதங்கள் மற்றும் இரண்டு சதங்களையும் அடித்துள்ளார்.

இது, திலக் வர்மாவுடைய வளர்ச்சியின் தொடக்கம் என்கிறார் ஹர்ஷா போக்லே.

"அவர் ஒரு சிறந்த இளம் வீரர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அழுத்தம் நிறைந்த சூழ்நிலையில் அவர் விளையாடிய இந்த இன்னிங்ஸ், அவரது வளர்ச்சியின் தொடக்கம்" என்று ஹர்ஷா போக்லே கூறியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.