கலப்பின தம்பதிக்கு பிறந்த வெள்ளை நிற பெண் - உண்மை தெரிந்த பிறகு கூறுவது என்ன?

ஆரஞ்சு பனியன் மற்றும் கருப்பு தொப்பி அணிந்த ஹதேயா, மற்றும் ஒரு தொப்பி அணிந்த அவரது தந்தை ஒரு டிரக்கின் பின்புறத்தில் இருக்கிறார்கள்..

பட மூலாதாரம், Hadeya Okeafor

படக்குறிப்பு, தனது தந்தையுடன் ஹதேயா
    • எழுதியவர், சண்ட்ரீன் லுங்கும்பு
    • பதவி, பிபிசி உலக சேவை

ஹதேயா தான் உண்மையில் யார் என்று நினைத்தாரோ, அவர் இல்லை என்று கண்டுபிடித்த நாள் மற்ற நாட்களைப் போலவே இருந்தது.

அப்போது அவருக்கு 12 வயது. சோஃபாவில் தன் தாயுடன் ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது அம்மா, "இதுவே உனக்கு நடந்தது என்று நான் சொன்னால் என்ன செய்வாய்?" என்று கேட்டு, அங்கிருந்து உரையாடலைத் தொடங்கினார்.

முதன்முறையாக, தான் ஐவிஎஃப் (செயற்கை கருத்தரிப்பு) மூலம் கருத்தரிக்கப்பட்டதாகவும், ஆனால் அதில் ஒரு குளறுபடி நடந்ததாகவும் ஹதேயா கேள்விப்பட்டார்.

"இது ஒரு பைத்தியக்காரத்தனமான கதை என்று நான் நினைத்தேன். ஆனால், 'இதை நான் ஏன் இதற்கு முன் கண்டுபிடிக்கவில்லை?' என்றும் நான் நினைத்தேன். ஆனால் நான் ஒரு குழந்தை என்பதால், நான் அதைப் பற்றி அதிகம் யோசிக்கவில்லை என்பது நியாயமானதுதான்," என்று ஹதேயா கூறுகிறார்.

இந்த தருணத்தை ஹதேயா "ஒரு பைத்தியக்காரத்தனமான கண்டுபிடிப்பு" என்று விவரிக்கிறார்.

"ஏதோ சரியாக இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிந்தது, ஆனால் நான் அதைப் பற்றி ஒருபோதும் கேள்வி கேட்டதில்லை. நான் உயிரியல் பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை, என் தாயார் வெள்ளை இனத்தவர் என்பதால் நானும் வெள்ளை இனத்தவர் என்று நினைத்தேன்," என்று கனடாவில் வசிக்கும் 26 வயதான தொல்பொருள் ஆராய்ச்சியாளரான அவர் நினைவு கூர்ந்தார்.

"எனவே, நான் ஒரு கலப்பின கானா குடும்பத்தில் பிறந்த ஒரு பெண், ஆனால் இது நோக்கமில்லாமல் நடந்தது," என்று அவர் கூறுகிறார்.

1978 இல் இந்த சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகளவில் 10 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் செயற்கை கருத்தரிப்பு மூலம் பிறந்துள்ளனர் என்று யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன் மருத்துவமனையில் மகப்பேறு, மகளிர் மருத்துவம் மற்றும் இனப்பெருக்க மருத்துவம் ஆலோசகர் டிமிட்ரியோஸ் மேவ்ரெலோஸ் பிபிசியிடம் தெரிவித்தார்.

குளறுபடிகள் அரிதானவை – ஆனால் குறைவான விதிமுறைகளே இருந்த செயற்கை கருத்தரிப்பின் ஆரம்ப நாட்களில் குளறுபடிகள் அதிகமாகவே இருந்தன.

'என் குழந்தைப் பருவம் ஒரு பொய் அல்ல'

ஹதேயா, ஒரு சூரியகாந்தி உடை அணிந்த குழந்தையாக, தனது தந்தையுடன் இருக்கிறார். அவர் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறார்.

பட மூலாதாரம், Hadeya Okeafor

படக்குறிப்பு, "அவர் எப்போதும் என் தந்தையாகவே இருந்தார், அவர் தான் என்னை வளர்த்தார்," என்கிறார் ஹதேயா

கிழக்குக் கடற்கரையில் உள்ள பிரின்ஸ் எட்வர்ட் தீவில் ஒரு சிறிய நகரத்தில் வளர்ந்த ஹதேயாவின் குடும்பம், தங்கள் நகரத்தில் "தனித்துத் தெரிந்தது" என்று அவர் கூறுகிறார்.

உயர்நிலைப் பள்ளியில் தான் சில இனவெறிக் கேலிகளை எதிர்கொண்டதாக ஹதேயா கூறுகிறார்.

"நீ 'கருப்பாக இருந்திருக்க வேண்டும்' அல்லது 'ஆப்பிரிக்கராக இருப்பதைப் பற்றி' கிண்டல்கள் செய்யும் கருத்துக்கள் மற்ற குழந்தைகளிடமிருந்து வந்தன," என்று அவர் கூறுகிறார்.

தனது இளைய கலப்பினச் சகோதரர்கள் எதிர்கொண்டதைப் போல தனது இனவெறி அனுபவம் அவ்வளவு கொடியதாக இல்லை என்று அவர் கூறுகிறார் (செயற்கை கருத்தரிப்பு மூலம் ஹதேயாவைப் பெற்றெடுத்த பிறகு அவரது பெற்றோர் இயற்கையாக மேலும் நான்கு குழந்தைகளைப் பெற்றனர்).

"நாங்கள் ஒரு சிறிய மீன்பிடி நகரத்தில் இருந்தோம், அதனால் அவர்கள் என்னுடன் உறவினர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளிப்படையான இனவெறியை எதிர்கொண்டனர்," என்று அவர் விளக்கினார்.

ஹதேயாவைப் பொறுத்தவரை, அவர் கருத்தரிக்கப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது பற்றிய "பைத்தியக்காரத்தனமான" கண்டுபிடிப்பு அவரது தந்தையுடனான அவரது உறவை மாற்றவில்லை, மாறாக அவரது வாழ்க்கையைப் பற்றிய ஒரு உண்மையை உறுதிப்படுத்தியது.

"அது எனக்கு இருந்த ஒரு கேள்விக்குப் பதிலளித்தது, ஆனால் நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கும் முடிவை (closure) அது எனக்குத் தரவில்லை," என்று அவர் கூறுகிறார், இந்தக் குழப்பம் எப்படி நடந்தது என்பது குறித்து சில விளக்கங்களை இன்னும் தேடி வருவதாகவும் அவர் கூறினார்.

"அவர் எப்போதும் என் தந்தையாகவே இருந்தார், அவர் தான் என்னை வளர்த்தார். நான் பிறந்த நாளிலும், அதற்கு முந்தைய பயணத்திலும் அவர் அங்கே இருந்தார். இன்றும் அவர் அங்கேயே இருக்கிறார், எனவே இதைப் பற்றி நான் ஒருபோதும் வித்தியாசமாக உணர்ந்ததில்லை," என்று அவர் கூறுகிறார்.

"என் குழந்தைப் பருவம் ஒரு பொய் அல்ல, உணவைச் சாப்பிடுவது, மொழியை அடையாளம் கண்டுகொள்வது ஆகியவற்றால் இன ரீதியாக நான் கானாவைச் சேர்ந்தவராகவே ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அடையாளம் காணப்படுகிறேன். என்னால் அந்த மொழியை பேச முடியாது, ஆனால் சில சமயங்களில் நான் அதைக் காது கொடுத்து கேட்க முடியும்."

ஹதேயா (இடதுபுறம்) தனது பெற்றோருடன் குழந்தையாக இருக்கிறார். அவர்கள் வெளியில் நெருக்கமாக அமர்ந்திருக்கிறார்கள், பின்னணியில் மரங்களும் பசுமையும் உள்ளன. ஹதேயா நீல நிற ஸ்லீவ்லெஸ் ஆடை அணிந்திருக்கிறார், அவரது அம்மா பிரகாசமான சிவப்பு டி-சர்ட் அணிந்திருக்கிறார், அவரது அப்பா வெளிர் சாம்பல் நிற டாப்ஸ் அணிந்திருக்கிறார். இந்த காட்சி சாதாரணமாகவும் ஓய்வாகவும், ஒரு வெதுவெதுப்பான நாளில் இருப்பது போலத் தெரிகிறது.

பட மூலாதாரம், Hadeya Okeafor

படக்குறிப்பு, ஹதேயாவின் பெற்றோர் டொராண்டோவில் சந்தித்து 1990களில் திருமணம் செய்து கொண்டனர்.

ஹதேயாவின் பெற்றோர் 1990 களில் டொராண்டோவில் சந்தித்து ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்து கொண்டனர்.

"என் தந்தை கானாவின் கடலோர நகரமான தீமாவில் வளர்ந்தார், அவருக்கு 20 வயதின் ஆரம்பத்தில், அவர் கனடாவுக்கு வந்து டொராண்டோவில் வசித்தார். அவர் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நார்த் ரஸ்டிகோவைச் சேர்ந்த என் தாயைச் சந்தித்தார்."

பல ஆண்டுகள் குழந்தைப்பேறின்மையால் போராடிய பிறகு, அவர்கள் இப்போது காலமாகிவிட்ட மருத்துவர் ஃபெரூஸ் கம்சி நடத்தும் டொராண்டோ கருவுறுதல் மற்றும் கருத்தடை நிறுவனத்தில் (Toronto Fertility and Sterility Institute) செயற்கை கருத்தரித்தல் சிகிச்சையை நாட முடிவு செய்தனர்.

ஐவிஎஃப் என்பது ஒரு பெண்ணின் கருமுட்டைகள் ஆய்வகத்தில் ஒரு ஆணின் விந்தணுக்களால் கருவுறச் செய்யப்பட்ட பிறகு பெண்ணின் கருப்பையில் பொருத்தப்படும் ஒரு செயல்முறையாகும்.

"அவர்கள் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கருத்தரிக்க முயற்சித்தார்கள் என்று நினைக்கிறேன், அதன் பிறகுதான் அது வெற்றியடைந்தது," என்று அவர் கூறுகிறார், "எனவே அது ஒரு நீண்ட IVF செயல்முறையாக இருந்தது."

அந்தத் தம்பதியினர் ஒரு தெளிவான கோரிக்கையை வைத்தனர். இரு பெற்றோரின் பாரம்பரியத்தையும் மீண்டும் உருவாக்க அவர்கள் ஒரு கருப்பின விந்தணு தானம் செய்பவரை விரும்பினர்.

"நான் பிறந்தபோது, என் பெற்றோர்கள் என் வெளிர் நிறத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டனர். அவர்கள் IVF மருத்துவமனையை அழைத்தபோது, நான் 'நிறம் மாற' ஒரு வருடம் அவகாசம் கொடுக்கும்படி அவர்களிடம் கூறப்பட்டது."

ஆனால் ஒரு வருடத்திற்குப் பிறகு, ஹதேயாவின் தாயார் இது குறித்து மேலும் ஆய்வு செய்ய மருத்துவமனையிடம் கேட்டார். விந்தணு தானம் செய்தவர் காகேசியன் இனத்தைச் சேர்ந்தவர் என்றும், சிவப்பு முடி கொண்டவர் என்று விவரிக்கப்பட்டார் என்றும் அந்த மருத்துவமனை உறுதி செய்தது.

"ஒரு வருட கால அவகாசத்தில், தானம் செய்தவரின் சிரிஞ்ச் எண்ணில் தவறு நடந்துள்ளது என்று மருத்துவமனை உறுதிப்படுத்தியது," என்று அவர் கூறுகிறார்.

ஹதேயா பின்னர் தனது உயிரியல் தந்தைக்கு பழுப்பு நிற முடி இருப்பதாகவும், அவர் சிவப்பு முடி கொண்டவர் அல்ல என்றும் கண்டுபிடித்தார்.

மருத்துவர் கம்சியுடனான ஒரு சந்திப்பில், அவர் ஹதேயாவின் பெற்றோரிடம், "உங்களிடம் இருப்பதற்கு நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும், உங்களுக்கு ஒரு அழகான குடும்பம் கிடைத்துள்ளது, நீங்கள் விரும்பியதைப் பெற்றீர்கள். நீங்கள் விரும்பினால் என்னை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லுங்கள், ஆனால் அதற்காகத்தான் காப்பீடு உள்ளது," என்று கூறியிருக்கிறார்.

ஹதேயா ஒகாஃபோர் சூரியன் மறையும் நேரத்தில் ஒரு அகலமான நதியின் மீதுள்ள கல் பாலத்தில் நின்று கொண்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Hadeya Okeafor

2003 இல், அவரது பெற்றோர் அந்த மருத்துவமனைக்கு எதிராக ஒரு சிவில் வழக்குத் தொடுத்தனர், மேலும் ஒரு வெளிப்படுத்தப்படாத தொகைக்கு வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்று அவர் கூறுகிறார்.

"இது வேடிக்கையானது, ஏனென்றால் நீதிமன்றத்தில், நான் ஒரு காகேசியன் குழந்தை என்பதை அவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்றும், அதற்கு அவர்களுக்கு டிஎன்ஏ சோதனை தேவைப்படும் என்றும் அவர்கள் கூறினர். ஆனால் அது மிகவும் வெளிப்படையானது, இது ஒரு வகையில் மருத்துவ உளவியல் உத்தி(medical gaslighting) போன்றது, இதில் சட்டச் செயல்முறை நிறைய காணப்பட்டது."

அவரது வழக்கில் இருந்து "நேரடி விளைவுகள் எதுவும்" ஏற்படவில்லை, மருத்துவமனை அது மூடப்படும் வரை தொடர்ந்து செயல்பட்டது என்று ஹதேயா கூறுகிறார்.

மருத்துவர் கம்சி மார்ச் 2011 இல் ஒன்டாரியோவின் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கல்லூரியில் (சிபிஎஸ்ஓ) இருந்து ராஜினாமா செய்தார். அவரது பராமரிப்பு, சிகிச்சை மற்றும் 26 நோயாளிகளுக்கான பதிவுகளைப் பற்றிய சந்தேகங்கள் தொடர்பான விசாரணையை கைவிட மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பு ஒப்புக்கொண்டதையடுத்து அவர் ராஜினாமா செய்தார் என்று சிபிஎஸ்ஓ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அவர் ஒன்டாரியோவிலோ அல்லது வேறு எந்த மாகாணங்களிலோ ஒரு மருத்துவராகப் பதிவு செய்ய விண்ணப்பிக்க மாட்டேன் என்றும் ஒப்புக்கொண்டார்.

தானம் மூலம் பிறந்த பதினைந்து சகோதரர்கள்

2019 இல், ஹதேயா தனது உயிரியல் தந்தை பற்றி மேலும் அறியும் ஆர்வத்தில் ஒரு டிஎன்ஏ சோதனை செய்தார், ஆனால் அப்போது எதுவும் கிடைக்கவில்லை.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, டிஎன்ஏ பொருந்துவதாக கூறி அவரை ஒருவர் தொடர்பு கொண்டார். இது அவருக்கு 12 ஒன்றுவிட்ட உடன்பிறப்புகள் இருப்பது பற்றி அறிய வழிவகுத்தது.

பெரும்பாலான உடன்பிறப்புகள் 1994 மற்றும் 1998 க்கு இடையில் அதே விந்தணு தானம் செய்தவர் மூலம் கருத்தரிக்கப்பட்டனர்.

"எனக்கு 12 உடன்பிறப்புகள் இருப்பது அப்போது தெரிந்தவுடன் அது மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருந்தது. அதன் பிறகு நான் உண்மையில் மேலும் மூன்று பேரைக் கண்டுபிடித்துள்ளேன்.

"நீங்கள் இருக்கக்கூடாது என்று நினைக்கும் ஒரு மருத்துவப் புள்ளிவிவரத்தைப் போல உணர வைக்கிறது, நிச்சயமாக 1% இல் இருப்பது போன்ற உணர்வு, ஆனால் இதைக் கண்டுபிடித்தது மிகவும் கனமாக இருந்தது," என்று அவர் மேலும் கூறுகிறார்.

"சகோதரர் குழுவில் நான் மட்டுமே குளறுபடியால் பிறந்தவளாக இருக்க மாட்டேன் என்று நாங்கள் கண்டுபிடித்தோம், அது மேலும் கேள்விகளுக்கு வழிவகுத்தது மற்றும் எனது சொந்தக் கதையை மேலும் விசாரிப்பதற்கும் வழிவகுத்தது," என்று அவர் கூறுகிறார்.

"ஒருவரது தானத்தின் மூலம் ஆறு முதல் எட்டு குழந்தைகளுக்கு மேல் கருத்தரிக்கப்பட மாட்டார்கள் என்று எங்கள் தாய்மார்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வாக்குறுதி அளிக்கப்பட்டது தெரிகிறது," என்று அவர் கூறுகிறார்.

ஆனால் தானம் செய்தவரின் விந்தணுக்கள் குறைந்தது 15 ஐவிஎஃப் சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டன.

இந்தச் செய்தி இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும், குறிப்பாகத் தாங்கள் விந்தணு தானம் மூலம் கருத்தரிக்கப்பட்டவர்கள் என்று தெரியாத உடன்பிறப்புகளுக்கு ஒரு அதிர்ச்சியாக இருந்தது.

விந்தணு தானம் செய்தவர் 1994 இல் மருத்துவ ஆராய்ச்சிக்காக கால்கரி பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்வதாக நினைத்தார், ஆனால் எப்படியோ அந்த விந்தணு மருத்துவமனையில் முடிந்தது என்று அவரது இயற்கையான மகள்கள் ஹதேயாவிடம் தெரிவித்தனர்.

கனடாவில், தானங்கள் அல்லது ஒரு தானம் செய்பவருக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சட்ட வரம்பு எதுவும் இல்லை, ஆனால் சில மருத்துவமனைகள் தங்கள் தொழில்முறை நெறிமுறைகளைப் பயன்படுத்தி தமக்கு சொந்த வரம்புகளை விதிக்கின்றன.

'இரு கலாசாரங்களைக் கொண்டிருப்பது ஒரு ஆசீர்வாதம்'

ஹதேயா, நடுவில் அவரது சகோதரர் மற்றும் தந்தை

பட மூலாதாரம், Hadeya Okeafor

படக்குறிப்பு, தனது தந்தை மற்றும் சகோதரருடன் ஹதேயா

விந்தணு தானத்தின் மூலம் பிறந்த உடன்பிறப்புகள் பெரும்பாலானோர் ஒருவரையொருவர் அறிந்துகொள்ளவும் தொடர்பில் இருக்கவும் அமைக்கப்பட்ட ஒரு அரட்டை குழுவில் இணைந்தனர்.

"எனக்கு கிழக்குக் கடற்கரையில் வசிக்கும் ஒரு உயிரியல் சகோதரர் இருக்கிறார், நாங்கள் ஒருவருக்கொருவர் இரண்டு தெருக்களுக்கு அப்பால் வசித்து வந்தோம், ஆனால் எங்களுக்குத் தெரியாது."

ஒட்டுமொத்தமாக, ஹதேயா ஒரு இரட்டைக் கலாசார குடும்பத்தில் வளர்க்கப்பட்டதை ஒரு "ஆசீர்வாதமாகக்" கருதுகிறார்.

"என் தந்தை கனடாவுக்கு வந்த முதல் தலைமுறை குடியேறியவர், அவர் தனது கலாசாரத்தைப் பற்றி மிகவும் பெருமைகொண்டவர், அதை பறைசாற்றிக்கொண்டவர். எனவே எனக்கு ஒரு வகையான இரட்டை கலாசாரப் பார்வை கிடைத்தது மிகவும் அதிர்ஷ்டம், அங்கு நான் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் கானா கலாசாரம் மற்றும் பிரெஞ்சு அகாடியன் கலாசாரம் ஆகிய இரண்டையும் அனுபவித்தேன்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு