ப்ரீ-எக்ளாம்ப்சியா என்பது என்ன? கர்ப்பிணிகளை 20-வது வாரத்திற்கு பின் அச்சுறுத்தும் ஆபத்து

ப்ரீ-எக்ளாம்ப்சியா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

'சரிவர கண்காணிக்காவிட்டால் இறப்பு கூட நேரிடலாம்,' என கர்ப்பிணிகள் பலருக்கும் ஏற்படும் ப்ரீ-எக்ளாம்ப்சியா எனப்படும் பிரச்னை குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், இது ஏற்படுவதற்கான தெளிவான காரணம் கண்டறியப்படவில்லை என்றும், முழுமையாக தடுப்பதற்கான வழிமுறைகளும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

ப்ரீ-எக்ளாம்ப்சியா உலகம் முழுவதிலும் 2-8% கர்ப்பிணிகளை பாதிப்பதாக, உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆண்டுதோறும் சுமார் 46,000 கர்ப்பிணிகள் இதனால் இறக்கின்றனர், சுமார் 50,000 சிசுக்கள் அல்லது பச்சிளம் குழந்தைகள் இறக்கின்றன. ஆசியாவில் சுமார் 10% கர்ப்பிணிகளின் இறப்புக்கு ப்ரீ-எக்ளாம்ப்சியா காரணமாக உள்ளது.

"பெரும்பாலும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முதல் காரணமாக ப்ரீ-எக்ளாம்ப்சியா உள்ளது. இரண்டாவதாக, ரத்தப்போக்கு உள்ளது." என்கிறார் மகப்பேறு மருத்துவர் உமையாள்.

இது ஏன் ஏற்படுகிறது, அறிகுறிகள், கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இங்கே அறியலாம்.

ப்ரீ-எக்ளாம்ப்சியா என்பது என்ன?

"கர்ப்பிணிகள் பலருக்கும் 20-வது வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட வாரங்களில் ஏற்படும் பிரச்னை இது. ஒவ்வொரு கர்ப்பிணிக்கும் இது ஏன் வருகிறது என்பதற்கான காரணம் மாறுபடும். " என்கிறார், மகப்பேறு மருத்துவர் உமையாள்.

இதற்கு வேறு சில காரணங்களும் நவீன அறிவியலில் கண்டறியப்பட்டுள்ளதாக, மற்றொரு மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் கூறுகிறார்.

"ஃபோலிக் அமிலம், கால்சியம் போன்ற சத்துக் குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன." என்கிறார் சாந்தி ரவீந்திரநாத்.

யாருக்கு ப்ரீ-எக்ளாம்ப்சியா வரும் ஆபத்து அதிகம்?

ப்ரீ-எக்ளாம்ப்சியா

பட மூலாதாரம், Getty Images

இதற்கான காரணங்களை பட்டியலிடுகிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

  • மிக குறைவான வயது மற்றும் அதிக வயதில் (30 வயதுக்கு மேல்) கர்ப்பமாகும் பெண்கள்.
  • முதல் கர்ப்பத்தில் இது ஏற்படுவதறான வாய்ப்புகள் உள்ளன. அதே நபருடன் உறவு கொண்டு மீண்டும் கர்ப்பமாகும் போது பெரும்பாலும் இந்த பிரச்னை இரண்டாவது கர்ப்பத்தில் ஏற்படாது. ஆனால், வேறொரு நபருடன் இணைந்து கர்ப்பமானால் இப்பிரச்னை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • உடல் பருமன்
  • ஏற்கெனவே ரத்த அழுத்தம் உள்ளவர்கள், அல்லது மரபணு ரீதியாக ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளவர்கள்

இவைதவிர, வேறு காரணங்களும் உள்ளதாக கூறுகிறார் மருத்துவர் உமையாள்.

"நீரிழிவு, மனஅழுத்தம், பணி ரீதியான அழுத்தம், தூக்கமின்மை, இரண்டுக்கு மேற்பட்ட கர்ப்பங்கள் உள்ளிட்டவையும் ப்ரீ-எக்ளாம்ப்சியா ஏற்பட காரணங்களாக அமைகின்றன," என்கிறார் மருத்துவர் உமையாள்.

அறிகுறிகள்

ப்ரீ-எக்ளாம்ப்சியா

பட மூலாதாரம், Getty Images

  • அசாதாரணமான அளவில் உடல் எடை அதிகமாதல்
  • தலைவலி
  • தலை சுற்றல்
  • காலில் வீக்கம்
  • வயிற்றில் ஆரஞ்சு நிறத்தில் தோலின் நிறம் மாறுதல்
  • கர்ப்பப் பையில் வீக்கம்
  • சிறுநீர் கழிக்கும் பகுதியில் வீக்கம்
  • சிறுநீரில் புரதம் வெளியேறுதல் (proteinuria)
  • சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பது

அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.

என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்?

லேசாக ஏற்படக்கூடிய எக்ளாம்ப்சியாவும் உண்டு. ஆனால், தீவிரமான எக்ளாம்ப்சியா ஏற்படும் போது கர்ப்பிணியின் உள்ளுறுப்புகள் கூட பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறுகிறார் மருத்துவர் உமையாள்.

"கல்லீரல், சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரில் யூரியா, கிரியாட்டினின் அளவு அதிகமாகும், கண் பார்வை மங்கலாதல், மூளை பாதிப்பு உள்ளிட்டவையும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு" என்கிறார் அவர்.

கருவில் உள்ள குழந்தைக்கு என்ன பிரச்னை ஏற்படும்?

ப்ரீ-எக்ளாம்ப்சியா

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து விளக்குகிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

  • கர்ப்பிணியின் பனிக்குடத்தில் (Amniotic sac) தண்ணீர் (Amniotic fluid) குறைவாக இருக்க வாய்ப்புண்டு.
  • இதனால் குழந்தையின் எடை குறைதல் உள்ளிட்ட வளர்ச்சி குறைபாடு ஏற்படலாம்.
  • நஞ்சுக்கொடி (placenta) மூலம் குழந்தைக்கு சத்துகள் செல்வதில் குறைபாடு.

ப்ரீ-எக்ளாம்ப்சியாவை கண்டறிவது எப்படி?

இதனை 20வது வாரத்தில் மேற்கொள்ளப்படும் ஸ்கேன், ரத்த அழுத்தப் பரிசோதனைகள் என அடிப்படையான பரிசோதனைகள் மூலமே கண்டறியலாம்.

ரத்த அழுத்தத்தைத் தொடர்ந்து கண்காணித்தல் இதற்கு அவசியம்.

"110/70 என்பது பொதுவாக கர்ப்பிணிகளுக்கு பரிந்துரைக்கப்படும் இயல்பான ரத்த அழுத்த அளவு. அப்படியில்லாமல், 140/90 என்ற அளவில் ரத்த அழுத்தம் அதிகமாகும்போது கர்ப்பிணிக்கு ப்ரீ-எக்ளாம்ப்சியா வருவதற்கான வாய்ப்புண்டு," என்கிறார் மருத்துவர் உமையாள்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கட்டுப்படுத்துவது எப்படி?

"இதனை முற்றிலும் தடுப்பதற்கான வழிமுறை இல்லை. எனினும், கவனத்துடன் இருந்தால் பெரும்பாலும் பிரச்னைகள் வராது. நஞ்சுக்கொடி மூலமாகத்தான் இந்த பிரச்னை ஏற்படும் என்பதால், கூடுமானவரை நிலைமையின் தீவிரத்தைப் பொறுத்து குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. அதன்பின், நஞ்சுக்கொடியை அகற்றிவிடுவார்கள் என்பதால், இப்பிரச்னையின் தீவிரம் குறையும். குழந்தையை வயிற்றில் வைத்துக்கொண்டே ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறோம் என்பது நல்லதல்ல. தீவிரமான சூழலில் தாயின் உயிர்தான் முக்கியம் என்பதை மனதில் வைத்து அணுக வேண்டும்." எனக்கூறும் உமையாள், இதைக் கட்டுப்படுத்தும் சில வழிமுறைகளையும் பரிந்துரைத்தார்.

  • கர்ப்ப காலத்தில் உடல் எடை மிகவும் அதிகமாகாமல் கட்டுப்படுத்துதல்
  • ஃபோலிக் அமிலம், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் கண்காணித்தல்
  • உணவில் உப்பு குறைவாக சேர்த்தல்
  • போதுமான ஓய்வு
  • தாய்-குழந்தையை தீவிரமாக கண்காணித்தல்

"அதிக ஆபத்து உள்ளவர்களுக்கு குறைவான டோஸ் கொண்ட ஆஸ்பிரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன." என்கிறார், மருத்துவர் உமையாள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு