டைம்டு அவுட் சர்ச்சையை தாண்டி இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம் - இங்கிலாந்துக்கு புது சிக்கல்

பட மூலாதாரம், Getty Images
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக எழுந்த டைம்டு அவுட் சர்ச்சையைத் தாண்டி இலங்கையை வங்கதேச அணி வீழ்த்தியுள்ளது. இலங்கை நிர்ணயித்த 280 ரன் இலக்கை வங்கதேச அணி எளிதில் எட்டியது. அந்த அணியில் கேப்டன் ஷகிப் அல் ஹசன், ஷான்டோ ஆகிய இருவரும் அசத்தலாக ஆடினர். இலங்கை சார்பில் சாரித் அசலங்கா அடித்த சதம் வீணாய் போனது.
இந்தப் போட்டியின் முடிவைக் காட்டிலும் இலங்கை பேட்டிங் செய்த போது 25வது ஓவரில் நடந்த சம்பவமே பெருமளவில் பேசுபடு பொருளாக மாறியுள்ளது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் அதுகுறித்த விவாதமாகவே தென்படுகிறது. அப்போது என்ன நடந்தது? டைம்டு அவுட் என்றால் என்ன? ஐ.சி.சி. என்ன சொல்கிறது?
உலகக்கோப்பையைப் பொருத்தவரை, தற்போதைய நிலையில் இரு அணிகளுமே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டன. ஆனாலும், வங்கதேசத்தின் வெற்றியால் இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. அது என்ன?
இலங்கை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி
டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தல் வங்கதேச அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இலங்கை அணிக்கு குசால் பெரேரா - பதும் நிசாங்கா ஜோடி தொடக்க வீரர்களாக களம் கண்டது. முதல் ஓவரின் கடைசிப் பந்திலேயே குசால் பெரேரா ஒரு பவுண்டரி மட்டும் அடித்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
அடுத்து வந்த இலங்கை அணி கேப்டன் குசால் மெண்டிசை 19 ரன்களில் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் வெளியேற்றினார். இலங்கையின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் குசால் மெண்டிசின் அவுட் இலங்கை ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்தது. அடுத்த சிறிது நேரத்திலேயே, மறுமுனையில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் நிசாங்காவும் ஆட்டமிழந்தார். அவர் 36 பந்துகளில் 41 ரன் எடுத்தார்.
சமரவிக்ரம - அசலங்கா நிதான ஆட்டம்
72 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்ததால் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தும் முயற்சியில் சமரவிக்ரமவும் அடுத்து வந்த அசலங்காவும் இறங்கினர். நிதானம் காட்டிய இருவரும் சற்று நேரம் நிலைத்து ஆடினர்.
12 ஓவர்களுக்கு மேலாக பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய இருவரும் 63 ரன்கள் சேர்த்தனர். சமரவீரா 41 ரன் எடுத்திருந்த போது 25-வது ஓவரின் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகுதான் இன்று பெருமளவில் பேசுபடு பொருளாக மாறியுள்ள அந்த சம்பவம் நடந்தேறியது.
ஏஞ்சலோ மேத்யூஸ் டைம்டு அவுட்
நான்காவது விக்கெட்டாக சமரவிக்ரம அவுட்டானதும் இலங்கை அணியின் மூத்த வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளே வந்தார். ஆனால், குறிப்பிட்ட 2 நிமிடங்களுக்குள் அவர் பேட்டிங் செய்ய தயாராகாததால் டைம்டு அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
2 நிமிடங்களுக்குள்ளாக களத்திற்குள் வந்துவிட்டாலும் ஹெல்மெட்டில் உள்ள பட்டைகள் (ஸ்டிராப்ஸ்) சரிவர வேலை செய்யாததால் அவரால் உடனே பேட்டிங்கிற்கு தயாராக முடியவில்லை. இதையடுத்து, வங்கதேச அணி அவுட் கேட்டு முறையிட்டதால் ஐ.சி.சி. விதிகளின் படி நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.
ஹெல்மெட்டில் உள்ள பிரச்னை குறித்தும், அதனால்தான் தன்னால் சரியான நேரத்திற்குள் பேட்டிங் செய்ய தயாராக முடியவில்லை என்றும் கூறி, முறையீட்டை திரும்பப் பெறுமாறு வங்கதேச அணி கேப்டன் ஷகிப்பிடம் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசினார். ஆனால், அவர் தனது அப்பீலை திரும்பப் பெற முன்வரவில்லை.
இதனால் விரக்தியடைந்த ஏஞ்சலோ மேத்யூஸ் ஹெல்மெட்டை கீழே தூக்கி எறிந்தார். பின்னர் வேறு வழியின்றி பெவிலியனை நோக்கி அவர் நடக்கத் தொடங்கினார்.
ஐ.சி.சி. விதிகள் கூறுவது என்ன?
ஐசிசி விதிகளின்படி, கிரீஸில் இருக்கும் வீரர் அவுட் ஆனதும், அவருக்குப் பதிலாக வரும் வீரர் அதிகபட்சமாக மூன்று நிமிடங்களுக்குள் பந்துவீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
ஆனால், நடப்பு உலகக்கோப்பையை பொருத்தவரை அந்த கால அவகாசம் 2 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆண், பெண் இரு பாலரிலும் சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்று எந்தவொரு வீரரும் இதுவரை அவுட் ஆனதே இல்லை. முதல் முறையாக அதுவும் மிகவும் முக்கியமான உலகக்கோப்பையில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் அவுட்டாகியுள்ளார்.
பந்துவீச்சு முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு வெளியேறினால், அவரை அவுட்டாக்கும் மன்கட் முறையைப் போலேவே இந்த டைம்டு அவுட் முறையும் கிரிக்கெட் விளையாட்டின் உத்வேகத்திற்கு எதிரானது என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
அசலங்கா சதம் - இலங்கை 279 ரன்
இலங்கை அணிக்கு ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபடி இருந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய அசலங்கா அவ்வப்போது அதிரடியும் காட்டினார். அவருக்கு ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்த தனஞ்ஜெய டி சில்வா 34 ரன்களும், தீக்ஷனா 21 ரன்களும் எடுத்தனர்.
அபாரமாக ஆடிய அசலங்கா சதம் அடித்து அசத்தினார். 5 சிக்சர்கள், 6 பவுண்டரிகளுடன் அவர் 108 ரன்கள் சேர்த்தார். கடைசியில் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 50-வது ஓவரில் 279 ரன்களில் ஆல் அவுட்டானது. அசலங்காவின் சதத்தால் இலங்கை அணி சவாலான இலக்கை வங்கதேசத்திற்கு நிர்ணயித்தது.
வங்கதேசத்திற்கு ஷான்டோ - ஷாகிப் அபார ஆட்டம்
வங்க தேச அணிக்கும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. அந்த அணி 41 ரன்களிலேயே தொடக்க வீரர்களை இழந்துவிட்டது. ஹாசன் 9 ரன்களிலும், லிட்டன் தாஜம் 23 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த ஹூசைன் ஷான்டோவும் கேப்டன் ஷாகிப் அல் ஹசனும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர். களத்தில் நிலைத்து நின்ற இருவரும் அதிரடியிலும் மிரட்டினர். இதனால், வங்கதேச அணியின் ரன் ரேட் 6 ரன்களுக்கும் மேலாகவே தொடர்ந்து இருந்தது. இருவருமே அரைசதம் அடித்து சதத்தை நெருங்கினர்
வங்கதேச அணியின் வெற்றியை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திய பிறகே அந்த ஜோடி பிரிந்தது. சதமடிப்பார்கள் என்று கருதப்பட்ட இருவருமே அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷான்டோ 90 ரன்களும், ஷாகிப் 65 பந்துகளில் 82 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் வந்த வீரர்கள் சற்று தடுமாறினாலும் அணியின் வெற்றிக்கு குறைந்த ரன்களே தேவைப்பட்டதால் சிரமம் ஏற்படவில்லை. 42-வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த நிலையில் வங்கதேச அணி வெற்றி இலக்கை எட்டியது. 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் அதிரடியாக 82 ரன்களையும் குவித்து ஆல்ரவுண்டராக மிரட்டிய வங்கதேச அணி கேப்டன் ஷாகிப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல்
இலங்கையை வென்றதன் மூலம் வங்கதேச அணி 4 புள்ளிகளுடன் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இலங்கை அணி அதே நான்கு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் 8-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடைசி இரு இடங்களில் நெதர்லாந்தும், இங்கிலாந்தும் உள்ளன.
வங்கதேச அணியின் வெற்றியால் இங்கிலாந்து அணிக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. என்னவெனில், உலகக்கோப்பையில் முதல் 7 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்து வரும் சாம்பியன்ஸ் டிராபிக்கு நேரடியாக தகுதி பெறும். அந்த வகையில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறுவது கேள்விக்குறியாகியுள்ளது.
நான்காவது நடுவர் விளக்கம்
போட்டியின் நான்காவது நடுவர் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், "ஏஞ்சலோ மேத்யூஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராக இல்லாததால், விதிகளின்படி அவுட் செய்யப்பட்டார்" என்று அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்.
விக்கெட் விழும்போது, டிவி நடுவர் இரண்டு நிமிடங்கள் கண்காணித்து, அதன் பிறகு, கள நடுவர்களுக்கு தகவல் அளிப்பார் என்று அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக, பீல்டிங் அணியின் கேப்டன் நடுவரிடம் டைம் அவுட் கேட்டு முறையிடலாம் என்றும், இந்தச் சம்பவத்திலும் அதுதான் நடந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
களத்துக்குள் நுழையும் முன் அவரது விளையாட்டு உபரகணங்களை சரிபார்ப்பது பேட்ஸ்மேனின் பொறுப்பு என்றும் நான்காவது நடுவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












