மதுரை அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து 3 பெண்கள் மரணம் - மகப்பேறு பிரிவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் செம்மலர் என்ற பெண் கடந்த செப்டம்பர் மூன்றாம் தேதி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்கு பிறகு செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று குப்பி என்ற பெண்ணும் குழந்தை பிறந்த பிறகு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த மரணங்களை ஆவணங்களில் பதிவு செய்ததில் குளறுபடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த இரு மகப்பேறு மரணங்கள் தொடர்பாக தணிக்கை செய்ய, மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நடந்தது என்ன? மகப்பேறு பிரிவில் பெண்கள் இறப்புக்கான காரணத்தை மருத்துவர்கள் மாற்றினார்களா?
மகப்பேறு மரணத்தில் எழுந்த சிக்கல்
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்பு சிறப்பாக இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றனர்.
இந்தியளவில் மருத்துவ சுற்றுலாவுக்கான முக்கிய தேர்வாக தமிழ்நாடு விளங்கி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நகர்ப்புறத்தில் வாழும் மக்களுக்கு இணையான மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்கும் வகையில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களை அமைத்து மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமாக 2,200க்கும் மேற்பட்ட அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உள்ளன.
இங்கு அடிப்படை சிகிச்சைகள் வழங்குவது மட்டுமின்றி, பெண்களுக்கான பிரசவம் பார்க்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக சிறந்த மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ளது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை.
சென்னையைப் போல இங்கும் அரசு சார்பாக இலவச செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மதுரை நகரிலிருந்தும், மதுரையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தும் பிரசவத்திற்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வருவது வாடிக்கையான ஒன்று.

மதுரையில் ஆண்டுக்கு 43 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் இறப்பு விகிதம் ஒரு லட்சம் குழந்தைகளில் 13 குழந்தைகள் என உள்ளது.
அதேபோல் தாய்மார்கள் இறப்பை பார்க்கும் போது 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக 30 பெண்கள் மகப்பேறு காலத்தில் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 16ஆகக் குறைந்தது. இந்த ஆண்டில் தற்போது வரை 7 பெண்கள் பிரவசத்தின் போது உயிரிழந்துள்ளனர்.
இதில் 3 பேர் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்ய மதுரை மாநகர சுகாதார அலுவலரான மருத்துவர் வினோத், ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் சென்று பெண்ணின் ரத்த மாதிரியை பெற்றுச் சென்றார்.
ஆனால் மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவ அலுவலர், மகப்பேறு பிரிவிற்குள் அத்துமீறி நுழைந்து மருத்துவர்களை மிரட்டி ரத்த மாதிரிகளை வினோத் பெற்றுச் சென்றதாக கூறுகிறார்.
மருத்துவ அறிக்கையில் முரணான தகவல்கள்

பட மூலாதாரம், MDU PRO
இதையடுத்து, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த இரண்டு மகப்பேறு மரணங்கள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மருத்துவ அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர்.
இந்த விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், பெண்கள் இறப்பின் போது வழங்கப்பட்ட அறிக்கைக்கும், ஆட்சியரிடம் அளித்த அறிக்கைக்கும் இடையே பல்வேறு முரண்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறிப்பாக தாய்மார்கள் இறப்பிற்கான காரணங்கள், இறப்பின் போது அவர்களுக்கு இருந்த உடல் உபாதைகள் போன்ற தகவல்கள் மாறுபட்டிருந்தன. மேலும் சில இடங்களில் திருத்தம் செய்யப்படும், கையெழுத்து மாற்றப்பட்டும் இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக ராஜாஜி மருத்துவமனையின் டீன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடிக்கு, மாவட்ட ஆட்சியர் கடந்த மாதம் கடிதம் அனுப்பியிருக்கிறார்.
மருத்துவர்கள் போர்க்கொடி
மாவட்ட ஆட்சியரின் விசாரணை குறித்து தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் செந்தில், “மாவட்ட ஆட்சியர் மருத்துவ வல்லுநர் கிடையாது. மகப்பேறு மரணங்கள் தொடர்பாக சந்தேகம் இருந்தால் மாநில ஆய்வுக் குழுவை வைத்து விசாரணை செய்ய பரிந்துரை செய்து இருக்க வேண்டும். மாறாக அவரே முடிவு செய்து அவசர கதியில் பணியிடை நீக்கத்திற்குப் பரிந்துரை செய்கிறார்”, என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், மதுரை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும், அவரின் தலையீட்டின் பேரிலேயே ஆட்சியரின் பரிந்துரை அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
“இந்த மரணம் தொடர்பாக, மருத்துவர்கள் ஆவணங்களை ஏதும் திருத்தவில்லை. இறந்த பெண்களுக்கு டெங்கு இருந்தது தெரிய வந்திருந்தது. ஆனால் டெங்கு என்று மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டால், தனக்கு பிரச்னை வரக்கூடும் என்பதால் மாவட்ட ஆட்சியருக்கு, தவறான தகவல்களை மாநகராட்சி சுகாதார அலுவலர் தெரிவித்திருக்கலாம்,“ என்று செந்தில் சந்தேகத்தை எழுப்புகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலரான வினோத்தை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தினர் முன்வைத்துள்ளனர்.
மேலும், அவசரமில்லா அறுவை சிகிச்சை செய்யமாட்டோம் என்று கூறி அக்டோபர் மூன்றாம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் நோயாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய சில அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
‘டெங்கு மரணம் அல்ல’

பட மூலாதாரம், Getty Images
மதுரை வண்டியூர் பகுதியைச் சேர்ந்த திலகவதிக்கு, கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் அருகிலிருந்த சக்கிமங்கலம் புறநகர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், திலகவதியை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல செவிலியர்கள் பரிந்துரை செய்துள்ளனர். அங்கு சென்ற அவருக்கு நள்ளிரவு 12.45 மணிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இருந்த திலகவதியின் உறவினர்களை தொடர்பு கொண்டு தாய்-சேய் உடல்நலம் குறித்து, சக்கிமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் செவிலியர்கள் கேட்டுள்ளனர். மருத்துவமனையில் தங்களிடம் எந்த பதிலும் சொல்லவில்லை என்று செவிலியர்களிடம் திலகவதியின் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக பிபிசியிடம் பேசிய, அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத மாநகர சுகாதார அலுவலர் ஒருவர், தகவல் அறிந்து ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு சென்ற போது, தீவிர சிகிச்சை பிரிவில் திலகவதி அனுமதிக்கப்பட்டிருந்ததால் பார்க்க முடியாமல் திரும்பியதாக கூறினார்.
“செவிலியர்களிடம் பேசிய போது, அவருக்கு காய்ச்சல் இருப்பதாகவும், ரத்தப்போக்கு இருப்பதாக என்னிடம் கூறினார்கள். நான் திலகவதிக்கு உரிய சிகிச்சை வழங்குமாறு மருத்துவமனையின் டீன் மற்றும் மகப்பேறு துறையின் தலைவரிடமும் கூறினேன். மேலும் திலகவதியின் ரத்த மாதிரியை பெற்றுக் கொண்டு திரும்பிவிட்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகமாக இருந்ததால் திலகவதி சிகிச்சை பலனின்றி இரவு 1.30 மணியளவில் இறந்துள்ளார்.
“திலகவதியின் ரத்த மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை செய்ததில் ரத்தத்தில் டெங்குகாய்ச்சலுக்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதியானது. ஆனால், அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் டெங்கு என குறிப்பிடப்பட்டு இருந்தது,“ என்று அவர் கூறினார்.
ஒரே மாதத்தில் 3 பெண்கள் இறப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் செம்மலர், குப்பி, திலகவதி என்ற மூன்று பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழந்தனர். அதீத ரத்தப் போக்கு, உடல் சார்ந்த பிரச்னை காரணமாக அவர்கள் உயிரிழந்ததாக மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரும் விசாரணையை மேற்கொண்டு அறிக்கையை சுகாதார துறைக்கு அனுப்பியுள்ளார் என்று மாநகர சுகாதார அலுவலர் கூறினார்.
மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் மகப்பேறு மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் குறித்து விசாரணை செய்ய 3 பேர் அடங்கிய குழுவை நியமித்து சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
டீன் என்ன சொல்கிறார்?
மருத்துவமனையின் சார்பில் அனைத்துத் தகவல்களும் குழுவிடம் வழங்கப்பட்டு இருப்பதாக கூறுகிறார் மதுரை அரசு மருத்துவ கல்லூரியின் டீன் ரத்னவேல்.
இதுதொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசும் போது, "இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பதால் அது தொடர்பாக நான் எதுவும் கூற இயலாது. விசாரணைக் குழுவிடம் இந்த மரணம் தொடர்பான காரணத்தை விளக்கி அறிக்கை வழங்கியிருக்கிறேன்,” என்று கூறினார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, “மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை செய்யக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அந்தக் குழுவினர் தற்போது விசாரணையை நடத்தி வருகின்றனர். அந்தக் குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்", எனக் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












