எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’: பிரதமர் மோதிக்கு சவாலாக இருக்குமா?

பட மூலாதாரம், TWITTER/@KHARGE
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்தி
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில், காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் நேற்று (ஜுலை18) நிறைவடைந்துள்ளது.
இந்தக் கூட்டத்தின் முக்கிய அம்சமாக, தேசிய அளவில் ‘மஹாகத்பந்தன்’ என்று இதுநாள்வரை அழைக்கப்பட்டு வந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரை இனி, இந்திய தேசிய வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த கூட்டணி ‘இந்தியா’ (INDIA) என்று அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 26 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து எடுத்துள்ள இந்த முடிவையும், அக்கட்சிகள் அனைத்தும் மீண்டும் ஒன்றுகூடி முக்கிய ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளதையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிரான உறுதியான நடவடிக்கையாகவே அரசியல் ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
அதே நேரம், எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைந்த இந்த செயல்பாடு ஓர் நல்ல தொடக்கமாக இருந்தாலும், பாஜகவை வீழ்த்த அவை இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியுள்ளது என்றும் கூறுகின்றனர் அவர்கள்.
தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் தங்களுக்குள் நிலவும் சிக்கல்களுக்கு 2024 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாவது எதிர்க்கட்சிகள் தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது என்பதே அரசியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
நல்ல தொடக்கம் மட்டும் தான்
பிகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் ஒன்றுகூடி இரண்டாவது முறையாக ஆலோசனை மேற்கொண்டன. அத்துடன் தங்களது மெகா கூட்டணியின் பெயரை மாற்றவும், கூட்டணியை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல குழு அமைக்கவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
"பாஜகவுக்கு எதிரான இந்தக் கூட்டணியின் முக்கியத்துவம் குறித்து எதிர்க்கட்சிகள் எந்த அளவுக்கு உணர்ந்துள்ளன என்பதேயே பெங்களூரு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் காட்டுகின்றன” என்று பிபிசியிடம் கூறியுள்ளார் டெல்லியைச் சேர்ந்த அரசியல் விமர்சகரான ஆனந்த் சஹாய்.
“இந்த முடிவுகள் மட்டும் எதிர்க்கட்சிகளை எந்த அளவுக்கு தொடர்ந்து ஒற்றுமையாக வைத்திருக்க உதவும் என்று கூற முடியாது. ஆனால், ஒப்பீட்டளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிளவுபட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான ஒற்றுமை கண்கூடாக தெரிகிறது. இதுவே பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கில், ‘இந்தியா’ எனும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியை உருவாக்கி உள்ளது” என்றும் கூறுகிறார் அவர்.
ஆனால், ஆனந்த் சஹாயின் இந்த கருத்தை அரசியல் விமர்சகர்கள் பலர் மறுத்தலித்துள்ளனர். “எதிர்க்கட்சிகளின் இந்த வெளிப்பாடு ஒரு நல்ல தொடக்கமாக இருக்கலாம்; ஆனால், கட்சிகளுக்கு இடையிலான இந்த ஒற்றுமை தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதே முக்கியம்” என்று பிபிசி ஹிந்தி சேவையிடம் கூறியுள்ளார் மற்றொரு அரசியல் வல்லுநரான சந்தீப் சாஸ்திரி.

பட மூலாதாரம், TWITTER/@KHARGE
பாரத் Vs இந்தியா
எதிர்க்கட்சிகள் தற்போது அறிவித்துள்ள கூட்டணியின் பெயரை (இந்தியா) போன்று, கடந்த காலங்களில் எப்போதும், மக்களவைத் தேர்தலுக்கு முன் கூட்டணியின் பெயர் முன்னெடுக்கப்பட்டதில்லை என்று மற்றொரு மூத்த அரசியல் விமர்சகரான ராதிகா ராமசேஷன் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தங்களது பிரசாரங்களில் ‘பாரத்’ என்ற வார்த்தையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயரிட்டுள்ளதன் மூலம், பாரத்துக்கும், இந்தியாவுக்கும் இடையேயான வேறுபாட்டை மிகவும் சாதுரியமாக நீக்கி உள்ளார் ராகுல் காந்தி. ஆனாலும், 2024 தேர்தலை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கைகளின் நடுநாயகமாக பிரதமர் நரேந்திர மோதி திகழ்கிறார்” என்பது ராதிகா ராமசேஷனின் பார்வையாக உள்ளது.
பாட்னாவில் கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 16 கட்சிகளே பங்கேற்றிருந்த நிலையில், பெங்களூருவில் நேற்று நடைபெற்று முடிந்துள்ள கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம் ஆத்மி அதிருப்தி
பாட்னா கூட்டத்திற்கு பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பை ஆம் ஆத்மி கட்சி புறக்கணித்திருந்தது. டெல்லி அரசு நிர்வாகம் தொடர்பாக, மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணை விவகாரத்தில் காங்கிரஸ் தங்களை ஆதரிக்காததை சுட்டிக்காட்டி ஆம் ஆத்மி, செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தது.
இந்த நிலையில், பெங்களூருவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எதிர்க்கட்சிகளுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. ஆனால் இவை விரைவில் தீர்க்கப்பட்டு விடும்” என்று கூறினார்.
இதை கருத்தில் கொண்டே, எதிர்க்கட்சிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து கொண்டு செல்ல ஒரு குழுவை அமைக்கவும், பிரசாரங்களை நிர்வகிக்க டெல்லியில் ஓர் தலைமையகத்தை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் கார்கே தெரிவித்தார்.
காங்கிரஸுடன் இணக்கம் காட்டும் மம்தா
இதனிடையே, தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டுப் பிரசாரங்களை மேற்கொள்ளலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அளித்துள்ள ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அத்துடன், கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா, பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை இரவு அளித்த விருந்தில் மம்தா பானர்ஜியும், சோனியா காந்தியும் அருகருகே அமர்ந்து இணக்கமாக உரையாடியதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும், மம்தா பானர்ஜியின் முன்னிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்ற பெயரை ராகுல் காந்தி பரிந்துரைத்ததும் காங்கிரஸுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் இடையேயான இணக்கத்தை கண்கூடாக வெளிப்படுத்தி உள்ளதாகவே கருதப்படுகிறது.
‘இந்தியா’ குறித்து கேள்வி எழுப்பிய நிதிஷ்
இருப்பினும், கூட்டணிக்கான பெயரை முடிவு செய்வதில் இடதுசாரி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கியதாக தெரிகிறது.
இதேபோன்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டுவது சரியாக இருக்குமா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
இருப்பினும், எவ்வித சர்ச்சையும் இன்றி ‘இந்தியா’ என்ற பெயரை மம்தா பானர்ஜி அறிவித்தார்.
காங்கிரஸின் நோக்கம் என்ன?
மத்தியில் ஆட்சி, அதிகாரத்தை கைப்பற்றுவது காங்கிரஸின் இலக்கு அல்ல. அரசியலமைப்பு சட்டத்தையும், சமூக நீதியையும் பாதுகாப்பதே அதன் நோக்கம் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருந்தார்.
பெங்களூரு ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் முக்கியமாக, இந்தக் கூட்டணி வெற்றி பெற்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது கார்கேவின் சமூக நீதி கூற்றை பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
எதிர்க்கட்சிகளுக்கு முன்னுள்ள முக்கிய சவால் என்ன?
ஆனால்,மக்களவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான இட ஒதுக்கீடு தான் முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையை நேற்றைய கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பி இருந்த நிலையிலும், இதுகுறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படவில்லை.
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே. நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இந்த முறையும் இதில் பங்கேற்கவில்லை. சென்னை திரும்புவதற்கான விமானம் புறப்படும் நேரம் காரணமாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

பட மூலாதாரம், @INC
விடை காணப்பட வேண்டிய வினாக்கள்
இவ்வாறு எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சுமூகமாக நிறைவடைந்துள்ளதாக தெரிந்தாலும். அவர்களுக்குள் விடை காணப்பட வேண்டிய நிறைய கேள்விகள் உள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
“ ‘இந்தியா’ சரியான அரசியல் இயக்கத்தை முன்னெடுத்துள்ளதாக கருதுகிறேன்” என்கிறார் சந்தீப் சாஸ்திரி. ஆனால், “தேர்தல் கூட்டணியில், வெவ்வேறு மாநிலங்களில் கட்சிகளுக்கு உள்ள செல்வாக்கு மற்றும் அவற்றுக்கு இடையேயான போட்டிகளுக்கு மத்தியில் தொகுதி பங்கீடு எவ்வாறு மேற்கொள்ளப்பட உள்ளது என்பதே எதிர்க்கட்சிகளுக்கு முன்னுள்ள மிகவும் சிக்கலான சவால்” என்கிறார் அவர்.
இதேபோன்று கூட்டு தேர்தல் பிரசாரம் என்ற மம்தா பானர்ஜியின் யோசனையை பல்வேறு கட்சித் தலைவர்களின் 'தான்' என்ற எண்ணத்திற்கு இடையே செயல்படுத்த முடியுமா என்ற கேள்விக்கும் விடை காண வேண்டியுள்ளது என்கிறார் சாஸ்திரி.
“பாஜகவை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளின் பொது செயல் திட்டம்” என்ற ராதிகா ராமசேஷனின் கருத்தை ஒப்புக் கொள்கிறார் சாஸ்திரி. இந்த செயல் திட்டத்தில் வெற்றி பெற, தலைமைத்துவத்தை விட கொள்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மோதியின் செல்வாக்கு குறைந்துள்ளதா?
“நாட்டு மக்கள் மத்தியில் 2014 இல் மோதிக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பது உண்மைதான். ஆனால் அதேநேரம், பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை மோதி சவாலாக கருதுவாரா என்று சொல்வதற்கில்லை. இந்த நிலையில் கல்வி உள்ளிட்ட பொதுமக்களுக்கு அடிப்படை விஷயங்களை அளிப்பது குறித்து எதிர்க்கட்சிகள் என்ன நினைக்கின்றன என்ற கேள்வி மிகவும் முக்கியமானது” என்கிறார் ராமசேஷன்.
ஆனால், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸையோ, கர்நாடகத்திலோ கடந்த கால தேர்தல்களில் மோதி வெற்றி பெறவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் சஹாய்.
இதேபோன்று, “ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் தான் பாஜகவுக்கு நேரடி போட்டியாக விளங்குகிறது. அதாவது வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் பாஜகவிற்கு சவாலாக உள்ளன. எனவே, இதனடிப்படையில்தான் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு அமைய வேண்டும்” என்று யோசனை கூறுகிறார் அவர்.
“அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் புகழ்ச்சி வார்த்தைகளை தவிர்த்து பார்த்தால், மோதியின் புகழ் குறையத்தான் செய்துள்ளது. ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா மிகப்பெரிய சந்தை என்பதால் தான் ஜோ பைடனும், மேக்ரோனும் மோதியை புகழ்கின்றனர்” என்கிறார் சஹாய்.
ஊழல் குறித்த மோதியின் பிரசாரம்
எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். அவர்களில் சிலர் பிணையில் வெளியே இருந்து வருகின்றனர். இத்தகைய சூழலில், தமது தேர்தல் பிரசாரங்களில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது மோதி பிரதானமாக முன்வைத்து வரும் ஊழல் குற்றச்சாட்டுகளை முறியடிப்பதில் எதிர்க்கட்சிகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார் ராமசேஷன்.
“எதிர்க்கட்சிகள் ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று பிரதமர் மோதி எப்போதும் கூறி வருகிறார். ஆனால் அவரது இக்கூற்றை பொய்ப்பிக்கும் விதத்தில், எதிர்க்கட்சிகள் தற்போது ஒருங்கிணைந்துள்ளன. இது பாஜகவுக்கு பின்னடைவு என்பதை அக்கட்சியினர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்” என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








