உலகக்கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்த இந்தியாவுக்கு உதவிய ஹர்திக்கின் அநாயசமான கோல்

ஹாக்கி போட்டியில் இந்தியா ஸ்பெயினை வீழ்த்த உதவிய ஹர்திக்கின் அநாயசமான கோல்

பட மூலாதாரம், YEARS

உலகக்கோப்பை ஹாக்கி டி பிரிவு போட்டியில், ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றியோடு தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த வெற்றி, டி பிரிவில் இந்தியாவால் முதலிடத்தை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணிக்கு வெற்றி தேடித் தரும் வகையில் அமித் ரோஹிதாஸ், ஹர்திக் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்தப் போட்டியில் பந்து யார் தரப்பில் அதிகமாக வைத்திருந்தார்கள் என்பதே வெற்றியைத் தீர்மானித்துள்ளது. இந்தியா பந்தை 67 சதவீத நேரத்திற்குத் தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த உத்தி பயனளித்துள்ளது.

பந்து அதிக நேரம் இந்திய அணியிடம் இருந்ததால், அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்ற ஸ்பெயினின் முயற்சி வெற்றி பெறவில்லை.

சளைக்காமல் ஆடிய முன்கள வீரர்கள்

இந்திய முன்கள வரிசையில் ஆடிய வீரர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பு வெளிப்பட்டது. இரு பக்கங்களிலும் தாக்குதல் ஆட்டத்தை சிறப்பாக முன்னெடுத்ததே முன்வரிசையின் சிறப்பு.

இதனால், ஸ்பெயினுடைய தற்காப்பு ஆட்டத்தில் ஏற்பட்ட விரிசலை இந்திய அணி முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.

நீண்ட காலமாக ஒரே அணியாக விளையாடி வரும் லலித் உபாத்யாய், அபிஷேக், சுக்ஜீத், மன்தீப், ஆகாஷ்தீப், ஷம்ஷேர் சிங் ஆகியோரிடையே இருந்த பரஸ்பர புரிதல் இந்த ஆட்டத்தில் நன்றாகத் தெரிந்தது. ஆகவே, ஸ்பெயினை விடவும் இந்தியாவின் தாக்குதல் ஆட்டத்தில் துல்லியம் காணப்பட்டது.

அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்ள வேண்டும். அதனால், தாக்குதல்களை கோல்களாக மாற்றுவதில் இந்திய அணி இன்னும் திறமையாகச் செயல்பட வேண்டியுள்ளது.

இந்திய அணி முன்னிலை பெற்ற பிறகு கடைசி கால் பகுதியில் அந்த முன்னிலையைக் கைவிட்டுவிடுவது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்று.

ஹாக்கி போட்டியில் இந்தியா ஸ்பெயினை வீழ்த்த உதவிய ஹர்திக்கின் அநாயசமான கோல்

பட மூலாதாரம், YEARS

காமன்வெல்த் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 4-1 என்று முன்னிலை பெற்ற பிறகு, 4-4 என்று டிரா செய்யும் அளவுக்கு இங்கிலாந்துக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்தப் போட்டியில் இந்திய அணியின் தற்காப்பு ஆட்டக்காரர்கள் திறம்படச் செயல்பட்டனர்.

ஸ்பெயின் கடைசி ஐந்து நிமிடங்களில் ஒரு கோலை பெறுவதற்காக தாக்குதல் அணுகுமுறையைக் கடைபிடித்து இந்திய வீரர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முயன்றது. ஆனால், இந்தியாவின் தற்காப்பு ஆட்டக்காரர்கள், பதற்றத்தைக் காட்டாமல் நிதானமாக விளையாடி, பந்தைத் தடுத்தார்கள்.

ஸ்பெயினுக்கு அதிக பெனால்டி கார்னர்களை இந்தியா விட்டுக்கொடுக்காததே இந்தியாவின் தற்காப்பு ஆட்டம் சிறப்பாக அமைந்ததற்கான சான்று.

இதுபோக, தனது எல்லைக்குள் வரும் பந்துகள் கோலாக மாறாமல் தடுப்பதிலும் இந்திய தற்காப்பு வீரர்கள் வெற்றி கண்டார்கள்.

எஃப்ஐஎச் ப்ரோ லீக் போட்டியில் இந்திய தற்காப்பு, ஸ்பெயினுக்கு 19 பெனால்டி கார்னர்களை கொடுத்தது, இந்தியாவின் தோல்விக்குக் காரணமாக அமைந்தது. ஆனால், அந்தத் தவறு இம்முறை நடக்காமல் அணி வீரர்கள் பார்த்துக் கொண்டனர்.

ஹாக்கி போட்டியில் இந்தியா ஸ்பெயினை வீழ்த்த உதவிய ஹர்திக்கின் அநாயசமான கோல்

பட மூலாதாரம், YEARS

ஹர்திக்கின் அற்புதமான ஆட்டம், சுவராக நின்ற கிருஷ்ணா பதக்

இந்திய மிட்ஃபீல்டர் ஹர்திக் சிங்கின் ஆட்டத்தை எவ்வளவு பாராட்டினாலும் போதாது. தாக்குதல் வாய்ப்பை உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்காற்றியது மட்டுமின்றி, இரண்டாவது காலிறுதியின் 11வது நிமிடத்தில் அவர் அடித்த துல்லியமான கோலும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது.

பந்தை இடது பக்கமாக வைத்துக்கொண்டு, தனியாக நான்கு தற்காப்பு ஆட்டக்காரர்களைச் சமாளித்து, கோல் போஸ்டுக்கு அருகில் பந்தை கொண்டு சென்று கோல் அடித்து, எதிரணியைத் திகைக்க வைத்தார்.

மூன்றாவது காலிறுதியில் ஆகாஷ் தீப்பின் முயற்சியால் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்திருந்தாலும், அதற்கும் அடித்தளமிட்டவர் ஹர்திக். அவர்தான் தாக்குதலில் இறங்கி, பந்தை ஆகாஷ் தீப் சிங்கிடம் கொடுத்தார்.

அந்த வாய்ப்பை இந்தியா கோலாக மாற்றியிருந்தால், 3-0 என்று வலுவான முன்னிலையை எட்டியிருக்கக்கூடும். ஆனால், ஹர்மன் ப்ரீத்தின் முயற்சியை ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் ஆண்டர்ஸ் ரஃப் சிறப்பாகத் தடுத்துவிட்டார்.

ஹாக்கி போட்டியில் இந்தியா ஸ்பெயினை வீழ்த்த உதவிய ஹர்திக்கின் அநாயசமான கோல்

பட மூலாதாரம், YEARS

பி.ஆர்.ஸ்ரீஜேஷுக்கு நிகரான வீரரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இந்திய அணி குறித்து அடிக்கடி கூறப்படுவதுண்டு. ஆனால், இந்த முக்கியமான போட்டியில் இந்திய பயிற்சியாளர் கிரஹாம் ரீட், கிருஷ்ணா பதக் அப்படியிருப்பார் என்று நம்பினார். கிருஷ்ணா அந்த நம்பிக்கைக்கு முழுமையாகப் பாத்திரமானவர் என்பதை இந்தப் போட்டியில் நிரூபித்தார்.

கிருஷ்ணா பதக் குறைந்தது நான்கு முறையாவது சிறப்பான முறையில் கோல்களை தடுத்து, இந்திய அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்.

ஆட்டத்தின் முதல் கால் பகுதியில், பின்தங்கும் அணி, இரண்டாவது கால் பகுதியில் மீண்டு வருவதற்கு அபார முயற்சிகளை மேற்கொள்வது வழக்கம். ஸ்பெயினும் அதையே செய்தது. அந்த முயற்சியில் முதல் பெனால்டி கார்னரை பெறுவதிலும் வெற்றியடைந்தது.

அந்தச் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட ஷாட்டில், கிருஷ்ணா பதக், வலது பக்கம் டைவ் செய்து, தனது ஸ்டிக்கால் பந்தைத் தடுத்து இந்தியாவை காப்பாற்றினார். இதுமட்டுமின்றி, கோல் விழும் அபாயம் ஏற்பட்டபோதெல்லாம் ஒரு சுவரைப் போல நின்றுகொண்டார் பதக்.

பொதுவாக, ஒரு கோல்கீப்பரின் செயல்பாட்டில் தற்காப்பு செயல்திறன் மிகவும் முக்கியம். இந்தப் போட்டியில் தனது தற்காப்பு செயல்திறனை மிகவும் கவனமாக வெளிப்படுத்தியதன் மூலம் அவர் மீதும் கவனம் குவிந்தது.

ஹாக்கி போட்டியில் இந்தியா ஸ்பெயினை வீழ்த்த உதவிய ஹர்திக்கின் அநாயசமான கோல்

பட மூலாதாரம், YEARS

கடைசி நிமிட தவறுகளைத் தவிர்க்க வேண்டும்

ஆட்டம் முடிய 11 நிமிடங்கள் இருந்த நிலையில், அபிஷேக் தவறான தடுப்பாட்டம் செய்து யெல்லோ கார்ட் வாங்கினார். அதனால், கடைசி 10 நிமிடங்களுக்கு இந்தியா 10 வீரர்களை மட்டும் வைத்து விளையாட வேண்டியிருந்தது. இது ஸ்பெயினுக்கு சாதகமாக இருந்தது.

அபிஷேக் வெளியேறியவுடன், இந்திய அணி தனது எல்லைக்குள் தற்காப்பில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. இருப்பினும் விரைவில் தற்காப்பை விட்டு, தாக்குதல் ஆட்டத்திலும் இறங்கியது.

அபிஷேக் ஃபவுல் செய்ததைத் தவிர்த்திருக்கலாம். 2-0 என்பது அதிக முன்னிலை என்பதாலும், ஒரு கோல் அடிக்கப்பட்டவுடன் எதிரணிக்கு மீண்டும் முன்னிலை வரும் வாய்ப்பு கிடைத்துவிடும் என்பதும் நடைமுறை. ஆகவே, கடைசி நிமிட தவறுகளைச் சரி செய்வது இந்திய அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: