குரங்குகளை சித்ரவதை செய்யும் கும்பல்; பணம் கட்டி ரசிக்கும் 'கொடூர நபர்கள்' - பிபிசி கள ஆய்வு

குரங்குகள் சித்திரவதை
    • எழுதியவர், ஜோயல் குண்டர், ரெபேக்கா ஹென்ஸ்கே, அஸ்டுடெஸ்ட்ரா அஜெங்க்ராஸ்ட்ரி
    • பதவி, பிபிசி ஐ புலனாய்வாளர்கள்

எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள உள்ளடங்கம் உங்களை சங்கடப்படுத்தலாம்

கடந்த ஓராண்டாக பிபிசி நடத்திய விசாரணையில் குரங்குகளை கொடூரமாக சித்ரவதை செய்து ரசிக்கும் சர்வதேச கும்பல் குறித்துத் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்தோர் இந்தோனீசியா தொடங்கி அமெரிக்கா வரை பரவியுள்ளனர்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்தோனீசியாவில் உள்ள நபர்களுக்கு பணம் கொடுத்து குரங்குகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதையும் கொல்லப்படுவதையும் பார்த்து ரசிப்பது பிபிசி விசாரணையில் தெரிய வந்தது.

முதலில் யூட்யூப் செயலியில் இந்தக் குழு தமது தொழிலைத் தொடங்கியது. பின்னர், டெலிகிராமில் உள்ள தனிப்பட்ட குழுக்களில் செயல்படத் தொடங்கின.

தற்போது, இந்த சித்ரவதை தொடர்பான வீடியோக்களை வாங்குபவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெலிகிராமில் செயல்படும் இத்தகைய சித்ரவதை குழுக்களில் ஒன்றில் பிபிசி செய்தியாளர்கள் தங்கள் அடையாளத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் நுழைந்து விசாரணை மேற்கொண்டனர். அங்கு நூற்றுக்கணக்கான மக்கள் கூடி, கொடூரமான சித்ரவதை யோசனைகளைக் கொண்டு வந்து, இந்தோனீசியாவிலும் பிற ஆசிய நாடுகளிலும் உள்ள நபர்களிடம் அவற்றைச் செயல்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

நீண்ட வால் கொண்ட மக்காக் குரங்கு குட்டிகளை சித்ரவதை செய்தும் சில நேரங்களில் கொலை செய்தும் வீடியோக்களை உருவாக்குவதே குழுவில் இருந்த கொடுமன இன்பத் துய்ப்பாளர்களின் (Sadists) குறிக்கோளாக இருந்தது.

இந்தோனீசியாவில் குரங்குகளை சித்ரவதை செய்தவர்கள், அமெரிக்காவில் இது தொடர்பான வீடியோக்களை விநியோகம் செய்தவர்கள் மற்றும் வாங்குபவர்கள் ஆகியோரை பிபிசி கண்டுபிடித்தது. மேலும், அவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான சர்வதேச சட்ட அமலாக்க முயற்சிக்கான அனுமதியையும் பெற்றது.

இந்த விவகாரம் தொடர்பாகத் தற்போது, உலகளவில் குறைந்தது 20 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர். இதில், கடந்த ஆண்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்ட, பிரிட்டனில் வசிக்கும் மூன்று பெண்கள் மற்றும் கடந்த வாரம் குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க மாகாணமான ஓரிகானை சேர்ந்த நபர் ஒருவரும் அடங்குவர்.

அமெரிக்காவை சேர்ந்த முக்கிய வீடியோ விநியோகஸ்தர் மைக் மெக்கார்ட்னி, "தி டார்ச்சர் கிங்" என்று அழைக்கப்படுகிறார். அவர் பிபிசியுடன் பேச ஒப்புக்கொண்டார். மேலும் அவர் டெலிகிராமில் செயல்படும் குரங்கு சித்ரவதைக் குழுவில் தான் முதன்முதலாக சேர்ந்த தருணத்தை நம்மிடம் விவரித்தார்.

குரங்குகள் சித்திரவதை

பட மூலாதாரம், JOEL GUNTER/BBC

"சுத்தியலால் சித்ரவதை செய்ய வேண்டுமா? இடுக்கியால் சித்ரவதை செய்ய வேண்டுமா அல்லது ஸ்க்ரூ டிரைவர் மூலம் சித்ரவதை செய்ய வேண்டுமா என்று அவர்கள் தங்களுக்குள் வாக்கெடுப்பை நடத்திக்கொண்டனர். இதைத் தொடர்ந்து நான் பார்த்த வீடியோ, நான் பார்த்தவற்றிலேயே மிகவும் கொடூரமானது," என்று அவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிள் குழுவின் முன்னாள் உறுப்பினரான மைக் மெக்கார்ட்னி இந்த குரங்குகளை சித்திரவதை செய்யும் குழுவில் இணைவதற்கு முன்பாக சிறைக்குச் சென்று திரும்பியவர். டெலிகிராமில் பல்வேறு சித்ரவதை குழுக்களை அவர் உருவாக்கிப் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.

"போதைப் பொருளை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்திற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை," என்று அவர் கூறினார். "போதைப் பொருளை விற்பது மூலம் கிடைக்கும் பணம் அசிங்கமான கைகளில் இருந்து வருகிறது, இந்தப் பணம் ரத்தம் தோய்ந்த கைகளில் இருந்து வருகிறது," என்கிறார்.

இப்போது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விசாரித்து வரும் மற்ற இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் பிபிசி அடையாளம் கண்டுள்ளது. ஒருவர் சாடிஸ்டிக் என்று அறியப்படும் அலபாமாவை சேர்ந்த 40 வயதான ஸ்டேசி ஸ்டோரி, மற்றொருவர் ரிங்லீடரான "மிஸ்டர் ஏப்". பாதுகாப்பு காரணங்களுக்காக இவர்களது உண்மையான பெயரை நாங்கள் வெளிப்படுத்தவில்லை.

குறைந்தபட்சம் நான்கு குரங்குகள் இறந்ததற்கும் இன்னும் பல குரங்குகள் சித்ரவதை செய்யப்பட்டதற்கும், தான் காரணம் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் "மிஸ்டர் ஏப்" ஒப்புக்கொண்டார். "மிகவும் மிருகத்தனமான" வீடியோக்களை, தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

குரங்குகள் சித்திரவதை

ஸ்டோரியின் மொபைலை கைப்பற்றிய உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், குரங்குகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் அதில் இருந்ததைக் கண்டறிந்தனர். மேலும், சில வீடியோக்களை உருவாக்குவதற்கு அவர் பணம் செலுத்தியதற்கான ஆதாரங்களையும் அவர் கண்டுபிடித்துள்ளனர்.

காவல்துறையின் கூற்றுப்படி, இந்த மாதத் தொடக்கத்தில் ஸ்டோரி ஒரு சித்திரவதைக் குழுவில் தீவிரமாக இயங்கி வந்துள்ளார். ஜனவரி மாதத்தில் ஸ்டோரியை பிபிசி சார்பில் அணுகினோம். அப்போது, தான் ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாகக் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

'மிஸ்டர் ஏப்', ஸ்டேசி ஸ்டோரி மற்றும் மைக் மெக்கார்ட்னி ஆகியோர் தற்போது உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் விசாரணை வளையத்தில் உள்ள 5 நபர்களில் முக்கியமான மூவராக உள்ளனர்.

அவர்கள் மீது இன்னும் குற்றம் சாட்டப்படவில்லை. எனினும், உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குத் தொடரப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.

இதில் கூறப்படும் குற்றங்களின் தன்மையால் சட்ட அமலாக்கத்துறையில் உள்ள அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக இந்த விசாரணையை தலைமைத் தாங்கி நடத்திவரும் சிறப்பு அதிகாரி பால் வோல்பர்ட் கூறுகிறார்.

இதுபோன்ற குற்றங்களைச் செய்ய யாராவது துணிவார்களா என்று எனக்குத் தெரியவில்லை எனக் கூறிய அவர், "வழக்கறிஞர்கள், நீதிபதிகள் மற்றும் இதுகுறித்துப் படிக்கும் அனைவருக்குமே இது ஓர் அதிர்ச்சியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

குரங்குகள் சித்ரவதை செய்யப்படும் வீடியோக்களை வாங்கி ரசித்தவர்கள், அதை விற்பனை செய்தவர்கள் என்று யாருமே காவல்துறையிடம் இருந்து தப்பிக்க முடியாது என்றும் வோல்பர்ட் தெரிவித்தார்.

குரங்குகள் சித்திரவதை

பட மூலாதாரம், ED OU/BBC

குரங்குகளை சித்ரவதை செய்ததாக சந்தேகத்தின் பேரில் இந்தோனீசியாவில் இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விலங்குகளை சித்ரவதை செய்ததாகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை விற்பனை செய்ததாகவும் அசெப் யாதி நூருல் ஹிக்மா என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

விலங்குகளை சித்ரவதை செய்ததாக அஜிஸ் ரஸ்ஜனாவுக்கு அதிகபட்ச தண்டனையான 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குரங்கு சித்ரவதை செய்யப்படும் வீடியோக்கள் டெலிகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்றவற்றில் தற்போது எளிதாக அணுகும் அளவில் அதிகமாகக் காணப்படுகின்றன. பல்வேறு குழுக்களில் குரங்குகள் சித்ரவதை செய்யப்படும் ஆயிரக்கணக்கான வீடியோக்களை பிபிசி கண்டறிந்தது.

இதுபோன்ற கொடூரமான வீடியோக்களை முன்பு எளிதாகப் பார்க்க முடியாத நிலையில், தற்போது ஃபேஸ்புக்கில் அதிகளவில் பகிரப்படுவதை நாங்கள் கண்டோம் என்று விலங்குகள் நல தொண்டு நிறுவனமான ஆக்‌ஷன் ஃபார் ப்ரைமேட்ஸின் இணை நிறுவனர் சாரா கைட் கூறினார்.

தங்கள் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்ட குழுக்களை நீக்கியுள்ளதாக பிபிசியிடம் ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

"விலங்குகளை சித்ரவதை செய்வதை ஆதரிக்கும் உள்ளடக்கங்களை எங்கள் தளங்களில் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், இது குறித்து எங்களுக்குத் தெரிய வந்தால் உடனடியாக அந்த உள்ளடக்கத்தை நீக்கிவிடுவோம்," என்று ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நம்மிடம் கூறினார்.

விலங்குகளைக் கொடுமைப்படுத்துவதற்காக பணம் செலுத்துபவர்கள் மீது வழக்குத் தொடுப்பதை எளிதாக்கும் வகையில் பிரிட்டனின் சட்டங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று கைட் கூறுகிறார்.

"விலங்குகள் துஷ்பிரயோகத்திற்கு தங்கள் பக்கத்தில் இடம் இல்லை" என்று பிபிசியிடம் தெரிவித்துள்ள யூடியூப், "கட்டுப்பாடுகளை மீறும் உள்ளடக்கத்தை அகற்றக் கடுமையாக உழைத்து வருகிறோம்," என்றும் கூறியது.

"எங்களின் கொள்கைகளை மீறியதற்காக இந்த ஆண்டில் மட்டும் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வீடியோக்களை நாங்கள் அகற்றியுள்ளோம். ஆயிரக்கணக்கான சேனல்களை தடை செய்துள்ளோம்," என்றும் யூடியூப் அளித்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெலிகிராம் அளித்த விளக்கத்தில், "பயனர் தனியுரிமை மற்றும் பேச்சு சுதந்திரம் போன்ற மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்," என்று தெரிவித்தது. மேலும், தனியார் குழுக்களின் உள்ளடக்கங்களை முன்பே ஆய்வு செய்ய முடியாது என்றும் டெலிகிராம் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: