பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்: MQ-9 ரக ஆளில்லா விமானம் முக்கியமாக பேசப்படுவது ஏன்?

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம், WWW.GA-ASI.COM

படக்குறிப்பு, MQ-9B ரக ஆளில்லா விமானம்
    • எழுதியவர், ராகவேந்திரா ராவ்
    • பதவி, பிபிசி செய்திகள்

பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்க பயணத்தின் போது, ​​அந்நாட்டிடமிருந்து 31 ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியாவின் திட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனால் தான் இந்த தகவல் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அண்மையில், இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், ஜெனரல் அட்டாமிக்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஆயுதம் தாங்கிய MQ-9 ரக ஆளில்லா விமானங்களை வாங்க, ஆயுத கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

இருப்பினும், பாதுகாப்பு தொடர்பான கேபினட் அமைச்சரவை குழுவிடமிருந்து இந்த திட்டத்திற்கு இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை.

பிரதமர் மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த பாதுகாப்பு உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, மொத்தமுள்ள 31 ஆளில்லா விமானங்களில் 15 விமானங்கள், கடற்படைக்கும், ராணுவம் மற்றும் விமானப்படைக்கு தலா 8 விமானங்களும் வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

இந்த விமானங்களை கொள்முதல் செய்ய சுமார் ரூ. 25,000 கோடி (மூன்று பில்லியன் டாலர்கள்) செலவிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான இந்தியாவின் முயற்சி, நாட்டின் ஆளில்லா பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பெரிய பகுதியாக இருக்கும்.

இந்த MQ-9 ரக விமானங்களைப் பயன்படுத்தி இந்தியா தனது எல்லைகளில் கண்காணிப்பு திறனை அதிகரிக்கவும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களை மிகவும் திறம்பட கையாளவும் உதவும் என்று நம்பப்படுகிறது.

இதுமட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதுபோன்ற வெளிநாட்டு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் இந்த ஆளில்லா விமானங்கள் பயன்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம், WWW.GA-ASI.COM

MQ-9 ரக ஆளில்லா விமானத்தின் சிறப்புகள் என்ன?

MQ9 ரக ஆளில்லா விமானங்களில், MQ9A மற்றும் MQ9B ஆகிய இரண்டு வகையான விமானங்கள் உள்ளன. இதில் MQ9A என்பது நில எல்லைகளைக் கண்காணிக்கவும், MQ9B என்பது கடல் எல்லைகளைக் கண்காணிக்கவும் பயன்படுகின்றன. இந்த இரண்டு வகை ஆளில்லா விமானங்களையும் வாங்க இந்தியா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிரி நாட்டின் விமானங்கள் பறந்துகொண்டிருக்கும் போது, அவற்றை நோக்கி ஏவுகணைகளை ஏவவும், ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தவும் இந்த ஆளில்லா விமானங்கள் பேருதவியாக இருக்கும்.

MQ9 ரக ஆளில்லா விமானங்கள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்வதுடன், உளவு பார்க்கும் பணிகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டவை. இது மட்டுமின்றி, அவற்றின் ஆயுத தொகுப்பில் 'ஹெல்ஃபயர்' ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காரணங்களுக்கு மட்டுமின்றி, இந்த விமானங்கள் மூலம் ஆபத்து காலங்களில் பொதுமக்களுக்கு உதவி செய்தல், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட ஏராளமான வழிகளில் பயன்படுத்தமுடியும்.

இத்துடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கடற்கொள்ளை போன்ற குற்றங்களைக் கண்காணித்து அவற்றை முறியடிக்கவும் இந்த விமானத்தைப் பயன்படுத்தலாம்.

மேலும், இந்த விமானங்கள் மழை, வெயில் என எந்த வானிலை நிலவினாலும், ஒரே நேரத்தில் சுமார் 30 முதல் 40 மணி நேரம் வரை பறக்கும் திறன் பெற்றவை. அதிகபட்சமாக இந்த விமானங்கள் 40,000 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டவை.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம், WWW.GA-ASI.COM

நேட்டோ நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த விமானங்கள்

இது போன்ற ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், இதுபற்றி அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முடிவு நீண்டகாலமாகவே கிடப்பில் போடப்பட்டிருந்திருக்கிறது.

பாதுகாப்புத் துறை குறித்து ஆய்வு செய்துவரும் ராகுல் பேடி இது பற்றிக் கூறுகையில், "இந்த விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா பெரும் முயற்சி செய்துள்ளது. விமானங்களைத் தயாரிக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தான் இதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டுவந்துள்ளது," என்றார்.

"இதற்கிடையே, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குவது குறித்து பேசப்பட்டது. மேலும் 30 விமானங்களுக்குப் பதிலாக 18 விமானங்கள் மட்டுமே வாங்க முதலில் முடிவெடுக்கப்பட்டிருந்தாலும், தற்போது அந்த எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. இவற்றை இந்தியாவுக்கு விற்பனை செய்வதன் மூலம், பாதுகாப்புத் துறையில் அமெரிக்காவும் பாரபட்சமின்றிச் செயல்படுவதை வெளிக்காட்டிக் கொள்ள முயல்கிறது."

கடந்த 2016-ம் ஆண்டு ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் (Missile Technology Control Regime) அதிகாரபூர்வ உறுப்பினராக இந்தியா இணைந்ததிலிருந்து இந்த ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்த பேச்சு தொடர்ந்து முக்கியத்துவம் பெறத் தொடங்கியது என்று ராகுல் பேடி கூறுகிறார்.

ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பின் உடன்படிக்கையில் இந்தியா கையெழுத்திடாமல் இருந்திருந்தால், இந்த ஆளில்லா விமானங்களைப் பெற்றிருக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.

"அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பின் இந்த ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களை வாங்க அமெரிக்காவிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. இதுவரை 'நேட்டோ' நாடுகளுக்கு மட்டுமே இந்த விமானங்களை அமெரிக்கா வழங்கிய நிலையில் தற்போது, இந்தியாவுக்கும் வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், நேட்டோவில் உறுப்பினராக இல்லாமல் இந்த விமானங்களை வாங்கும் முதல் நாடு என இந்தியாவுக்கு பெயர் கிடைக்கும்." என்கிறார் ராகுல் பேடி.

ராகுல் பேடியின் கூற்றுப்படி, இந்தியா இந்த ஆளில்லா விமானங்களை வாங்க விருப்பம் தெரிவித்தபோது, ​​​​அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இந்தியாவுக்கு அவற்றை விற்பனை செய்ய அனுமதித்தது என்று தெரியவருகிறது.

இது தொடர்பாக அவர் பேசுகையில், "அப்போது ராணுவம், விமானப்படை மற்றும் கடற்படைக்கு 30 ஆளில்லா விமானங்களை வாங்குவது பற்றி பேசப்பட்டது. ஆனால் இந்த ஆளில்லா விமானங்களின் விலை அதிகம் என்பதால் அதற்கு பதிலாக 18 விமானங்களை மட்டும் வாங்க இந்தியா முடிவு செய்தது. ஆனால் இப்போது திடீரென்று 31 விமானங்களை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது." என்கிறார் ராகுல் பேடி.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம், WWW.GA-ASI.COM

குறைந்த செலவில் இந்த விமானங்களை இயக்கவோ, பராமரிக்கவோ முடியாது

இந்த ட்ரோன்களின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், இவற்றை இயக்குதலும் செலவு மிக்க ஒன்றாகவே இருக்கும். எனவே இவற்றை வாங்குவதும், இயக்குதலும் அதிக செலவு பிடிக்கும் செயல்கள் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

"கண்காணிப்பு பணிகளைப் பொறுத்தவரை இந்த விமானங்கள் உலகின் சிறந்த விமானங்கள் என்ற முடிவுக்கு நாம் வரமுடியும்," என்று ராகுல் பேடி கூறுகிறார், ஆனால் அதே நேரத்தில் இவற்றை வாங்குவது குறித்து அவர் ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்புகிறார்.

"ரூ. 25,000 கோடி செலவில் இந்த ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குகிறது. ஆனால் அவற்றை எங்கு பயன்படுத்துவது? இந்த ஆளில்லா விமானங்களை இயக்குவது மிகவும் செலவு மிக்கது. இவற்றைப் பயன்படுத்தும் போது ஒவ்வொரு நிலைக்கும் ஆகும் செலவு மிக அதிகம். எனவே இவற்றை, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் தீவிரவாதிகளைக் கண்டறிந்து முறியடிக்கப் பயன்படுத்த முடியுமா? அதுவும் அதிக செலவு மிக்க பணி என்ற நிலையில், சில தீவிரவாதிகளைக் கொல்வதற்காக இத்தனை செலவு மிக்க நடவடிக்கையை எடுக்க முடியாது.

மறுபுறம் சீன எல்லையில் தாக்குதல் நடத்த இந்த விமானங்களைப் பயன்படுத்தினால் அந்நாட்டு ராணுவமும் பதிலடி கொடுக்கும். எனவே, கண்காணிப்புப் பணிகளுக்காக மட்டும் இந்த விமானங்களை இந்தியா பெரிய அளவில் பயன்படுத்த முடியும். வேறு பணிகளுக்கு இந்த விமானங்கள் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை." என்கிறார் அவர்.

பொதுவாகவே அமெரிக்க தயாரிப்புக்களின் மிகப்பெரிய குறைபாடு, அவை செலவு மிக்கவையாகவே இருக்கும் என்றும் ராகுல் பேடி கூறுகிறார்.

பிரதமர் மோதியின் அமெரிக்க பயணம்

பட மூலாதாரம், Getty Images

பாதுகாப்பு தொடர்பாக வலுவடையும் உறவுகள்

அண்மைக் காலங்களில் அமெரிக்காவிடமிருந்து பல முக்கியமான பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா வாங்கியுள்ள நிலையில், இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அதிகரித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் ஹெவி-லிஃப்ட் ஹெலிகாப்டர்கள், 10 சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விமானங்கள் 3, P8I கடல்சார் கண்காணிப்பு விமானம் மற்றும் M777 ஹோவிட்சர் பீரங்கி துப்பாக்கிகளை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ளது.

MQ 9 ரக ஆளில்லா விமானங்களை இந்தியா வாங்குவது, நாட்டின் பாதுகாப்புக்கு பயனுள்ள ஒரு நடவடிக்கை தான் என விமானப் படையில் இருந்து ஓய்வுபெற்ற ஏர் கமடோர் மற்றும் இந்திய விமானப்படையின் வியூக விவகாரங்களின் விமர்சகர் பிரசாந்த் தீட்சித் கூறுகிறார்.

"இந்த உடன்படிக்கை இந்தியாவின் இராணுவ நவீனமயமாக்கல் திட்டத்திற்கு உதவுகிறதா என்றால் நிச்சயமாக உதவுகிறது என்றே சொல்ல முடியும். இந்திய கடற்படைக்கு ஆளில்லா விமானங்களை வாங்குவதில் ஏற்கெனவே சில அனுபவங்கள் இருக்கின்றன. எனவே இந்த ஆளில்லா விமானங்களை வாங்குவது உண்மையில் ஒரு பயனுள்ள முதலீடாகும்," என்கிறார் அவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கண்காணிப்பை அதிகரிக்க அமெரிக்காவிடமிருந்து இரண்டு MQ 9 ட்ரோன்களை இந்தியா வாடகைக்கு எடுத்துள்ளது. அந்த ஆளில்லா விமானங்கள் தமிழ்நாட்டின் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே அமைந்துள்ள இந்திய கடற்படை விமான நிலையமான ஐஎன்எஸ் ராஜாளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ஆளில்லா விமானங்களின் குத்தகை 2024ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது என தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உடன்படிக்கையை இறுதி செய்வதற்கு முன், ஆளில்லா விமானங்களை வாங்கிய பின் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமா என்பதை இந்திய அரசு சரிபார்க்க வேண்டும் என்று ஏர் கமடோர் தீட்சித் கருதுகிறார்.

"கடந்த காலங்களில் அமெரிக்க அரசின் பாதுகாப்பு தொடர்பான பல விஷயங்களில் அந்நாட்டு நாடாளுமன்றம் தலையிட்ட பல சந்தர்ப்பங்கள் உள்ளன. எனவே, இங்கு நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த விமானங்களை நாம் வாங்கிப் பயன்படுத்தும் போது, எதிர்காலத்தில் அவற்றுக்கான பாகங்கள் தேவைப்பட்டால் அப்போது எழும் சிக்கல்களைப் பற்றி நிச்சயமாக ஆராயவேண்டும். ஒரு வேளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் தலையீட்டின் காரணமாக உதிரிபாகங்கள் கிடைக்காவிட்டால் நாம் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்," என எச்சரிக்கிறார் அவர்.

இந்த உடன்படிக்கை குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால், பரவலாக அறியப்படும் செய்திகளின்படி, 31 ஆளில்லா விமானங்களை பராமரிப்பது, பழுதுபார்ப்பது, மாற்றியமைத்தல் போன்ற அனைத்து செலவுகளும் இந்த ரூ. 25,000 கோடியில் அடக்கம் என்றே தெரியவருகிறது.

இதற்கிடையே, பிரதமர் மோதியின் அமெரிக்க பயணத்தின் போது இந்த விமானங்களை வாங்குவது குறித்த உடன்படிக்கையை உறுதி செய்யுமாறு இந்தியாவுக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் கொமடோர் பிரசாந்த் தீட்சித் பேசிய போது, "அமெரிக்காவுடனான நமது உறவுகள் நன்றாக வளர்ந்துள்ளன, ஆனால் அந்நாட்டுடன் ஒரு உத்தி சார்ந்த கூட்டு உடன்படிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. அதனால் நாம் கவனமாகச் செயல்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

அமெரிக்கா மற்றும் அமெரிக்க தொழில்துறையினர் எப்போதும் வணிக நோக்கத்துக்குத் தான் முன்னுரிமை தருவார்கள். முதலில் கதவைத் திறந்து அனுமதிக்க முயல்வார்கள். அதன் பின் அந்த அனுமதியை மேலும் விரிவாக்க முயற்சிப்பார்கள். எனக்கு புரிந்த வரையில், இந்திய கடற்படைக்கு F-18 ஹார்னெட்டை விற்பனை செய்வதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. பிரதமர் மோதியின் தற்போதைய பயணத்தின் போது, காம்பட் ஏர்கிராப்ட் இன்ஜின்களை விற்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திட்டால், அதுவே மிகப் பெரிய விஷயமாக இருக்கும்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: