நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தால் இந்தியாவுக்கு என்ன பயன்?

இந்தியா, அமெரிக்கா, மோதி, பைடன், ரஷ்யா, புதின்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுபைர் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சந்தேகமே இல்லாமல், ஜூன் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையிலான பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்தின்போது அனைவரது பார்வையும் அவர்மீதுதான் இருக்கும்.

இதற்குமுன் அதிகார்ப்பூர்வமாக நான்கு முறை மோதி அமெரிக்கா சென்றிருந்தாலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரை உபசரிக்க இருப்பது இதுதான் முதல்முறை.

மோதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். 2016ஆம் ஆண்டு ஒருமுறை அங்கு உரையாற்றியதால், அமெரிக்க நாடளுமன்றத்தில் இரண்டுமுறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் ஆகவிருக்கிறார்.

அரசாங்கப் பயணங்கள் பல சடங்குகளைக் கொண்டவை.

வெள்ளை மாளிகையில் 21 குண்டுகள் முழங்க வரவேற்பு, உபசரிப்பு விழா, இரவு விருந்து, ராஜிய பரிசுப் பரிமாற்றம், மற்றும் அமெரிக்க அதிபரின் விருந்தாளிகள் மாளிகையில் தங்குவதற்கான அழைப்பு ஆகியவை அடங்கும்.

சிலநாட்களுக்கு முன், அமெரிக்க நாடாளுமன்றத்தின் குழு ஒன்று ஒரு பரிந்துரை செய்திருந்தது. நேட்டோ பிளஸ் (NATO Plus) அமைப்பில் இந்தியாவை இணைத்துக்கொள்வதன் மூலம் இந்தியாவை மேற்கத்திய பாதுகாப்பு அமைப்பான நேட்டொவில் (NATO) இணைய அழைப்பு விடுக்க வேண்டும் என்பதுதான் அது.

ஆனால் இந்தியா இதற்கு இதுவரை பதிலளிக்கவில்லை. இந்தியா இதற்கு ஒப்புக்கொள்ளாது. ஏனெனில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், இந்தியா எந்தக் கூட்டணியிலும் அங்கம் வகிக்காது என்று பலமுறை கூறியிருக்கிறார். அதற்கு பதிலாக அவர் நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவையே நம்புகிறார்.

இப்பயணத்தின் மூலம் அமெரிக்காவுக்கு என்ன பலன் கிடைக்கும்?

இந்தியா, அமெரிக்கா, மோதி, பைடன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இப்பயணத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் நலன் ஒளிந்திருப்பதாகக் கூறுகின்றனர் வல்லுநர்கள்

அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாகச் செல்வது எந்த ஒரு நாட்டின் தலைவருக்கும் ஒரு கௌரவம்தான்.

ஆனால் மோதியின் இப்பயணத்தின்மூலம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் என்ன பலன்கள் கிடைக்கும்?

இப்பயணத்திற்குப் பின்னால் அமெரிக்காவின் நலன் ஒளிந்திருப்பதாகக் கூறுகிறார் லண்டனில் வசிக்கும் மூத்த பத்திரிகையாளர் பிரசூன் சோன்வால்கர். “அமெரிக்க-இந்திய உறவின் வரலாற்றில், அமெரிக்கா எப்போதும் தனது நலன் சார்ந்தே இயங்கி வந்திருக்கிறது. அது இந்தியாவை ஆத்திரமூட்டினாலும் கூட. இப்போதும், இரு நாடுகளின் கொள்கைகளும் வேறாக இருப்பினும், அமெரிக்கா இந்தியாவை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கும்,” என்கிறார்.

அதேபோல், அமெரிக்காவின் பல பெரிய நிறுவனங்கள் வேலையாட்களுக்காக இந்தியாவை நம்பியிருப்பதால், பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவுக்கு இந்தியா முக்கியம், என்று கூறுகிறார் குருகிராமிலுள்ள Management Development Instituteஐச் சேர்ந்த பேராசிரியர் அஜய் ஜெயின்.

இருநாட்டு உறவு, பொருளாதாரம், உலக நாடுகளுக்கிடையே இந்தியாவின் இடம், ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் மோதியின் இப்பயணம் அமையும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இந்தியாவை ரஷ்யாவிடமிருந்து விலக்க முயலுமா அமெரிக்கா?

இந்தியா, அமெரிக்கா, மோதி, பைடன், ரஷ்யா, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 'அமெரிக்காவோ ரஷ்யாவுடன் இந்தியா மிகவும் நெருங்குவதைத் தடுக்கப் பார்க்கும்'

அத்தனை நாடுகளோடும் இணக்கமாக இருப்பதன் மூலம் அவர்களுடன் தொழில்-வர்த்தக உறவுகளைப் பேண இந்தியா முயல்வதாகக் கூறுகிறார் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறைப் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே. “அதுதான் இந்தியாவின் நலனுக்கு ஏற்றது. ஆனால் அமெரிக்காவோ ரஷ்யாவுடன் இந்தியா மிகவும் நெருங்குவதைத் தடுக்கப் பார்க்கும். மெற்கத்திய நாடுகளின் மீதான இந்தியாவின் சந்தேகப் பார்வையை போக்கவும் பார்க்கும்,” என்கிறார் அவர்.

மோதியின் இந்தப் பயணம் அமெரிக்காவுடனான தொழில் உறவையும் , ராணுவத் தளவாட உற்பத்தியில் இணக்கத்தையும் மேம்படுத்தும் என்கிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் பேராசிரியரான ஸ்வரண் சிங்.

இந்தியா சீனாவுடன் பெரிய அளவில் தொழில் செய்தாலும், தற்போது இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவும் பதற்றத்தினால், இந்தியா அமெரிக்காவுடன் தனது தொழில் உறவை மேலும் வளர்த்திக்கொள்ளும் என்கிறார். “இந்திய-அமெரிக்க தொழில் உறவு இவ்வாண்டில் 190 அமெரிக்க பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது,” என்கிறார் சிங்.

இந்தியா, அமெரிக்கா, மோதி, பைடன், ரஷ்யா, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, உலகில் அதிகப்படியான ஆயுத இறக்குமதி செய்யும் நாடு இந்தியா.

மேலும், இதுநாள்வரை இந்தியாவுக்கு அதிகப்படியான ஆயுதங்களை விற்றுவந்தது ரஷ்யா தான். ஆனால் நடந்துவரும் யுக்ரேன் யுத்தத்தால் இது தொடருமா என்பது கேள்விக்குறி. “எனவே அமெரிக்கா, தனது ஆயுதங்களை விற்பதற்கு சிறந்த சந்தையாக இந்தியாவைப் பார்க்கிறது,” என்கிறார் சிங்.

உலகின் மிகப்பெரும் ஆயுத ஏற்றுமதியாளர் அமெரிக்கா தான். உலகின் 40% ஆயுத ஏற்றுமதியைச் செய்கிறது.

அதேபோல் உலகில் அதிகப்படியான ஆயுத இறக்குமதி செய்யும் நாடு இந்தியா.

“இருப்பினும் இந்தியா அமெரிக்காவின் வாடிக்கையாளர் பட்டியலில் இன்னும் இடம்பெறவில்லை. விரைவில் அது நடக்கலாம்,” என்கிறார் சிங்.

ஆனாலும் அமெரிக்காவுடனான இந்த நெருக்கத்தால், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுகளைத் தளர்த்திக்கொள்ளவில்லை என்கிறார் அவர். குறிப்பாக யுக்ரேன் போரில் எப்பக்கமும் சாயாமல் இருப்பது.

பாதுகாப்பு விஷயத்தில் அமெரிக்க-இந்திய உறவு இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அதிகரித்து, இப்பகுதியின் பாதுகாப்பினையும், பயங்கரவத எதிர்ப்பினையும் வலுப்படுத்தியிருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, மோதி, பைடன், ரஷ்யா, புதின்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க-வாழ் இந்தியர்களுடனான மோதியின் உரையாடல்கள் கலாசார உறவுகளை வலுப்படுத்த உதவியிருக்கின்றன, என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மோதிக்கு இதனால் என்ன கிடைக்கும்?

மோதியின் இப்பயணம் இந்தியாவும் அமெரிக்காவும் சமமான நண்பர்கள் என்பதையும், மோதியின் பிம்பம் உலகளவில் வளர்ந்துள்ளது என்பதையும் காட்டுகிறது என்கிறார் அஜய் ஜெயின்.

அமெரிக்கா வாழ் இந்தியர்களுடனான மோதியின் உரையாடல்கள் கலாசார உறவுகளை வலுப்படுத்த உதவியிருக்கின்றன, என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

கடந்த 2019ஆம் ஆண்டின் ‘ஹௌடி மோதி’ நிகழ்வு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் மற்றும் இந்தியா இடையே இருக்கும் பிணைப்பைக் காட்டுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவின் நற்பிம்பத்தை மேம்படுத்துகிறது, என்று அஜய் ஜெயின் கருதுகிறார்.

இப்பயணத்தின் மூலம் மோதி அடுத்த வருடம் நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலிலும் லாபம் ஈட்டப்பார்ப்பார், என்கின்றனர் வல்லுநர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: