படைவீரர்கள் வந்து தங்கிய இரணியல் அரண்மனை தற்போது எப்படி உள்ளது?

 இரணியல் அரண்மனை
    • எழுதியவர், எஸ். மகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கன்னியாகுமரி மாவட்டத்தில் சிதிலமடைந்து கிடந்த பாரம்பரியமிக்க இரணியல் அரண்மனையை புனரமைக்கும் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. பழமை மாறாமல் கட்டுமான பணிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு முன்பாக திருவனந்தபுரம் முதல் ஆரல்வாய்மொழி வரையிலான பகுதி வேணாடு என்று அழைக்கப்பட்டது. இதன் தலைநகராக இரணியல் இருந்ததாக கூறப்படுகிறது. இரணியலில் உள்ள அரண்மனை இதற்கு சான்றாக கூறப்படுகிறது.

'இரணியல் கொட்டாரம்’ என இந்த கட்டடம் அழைக்கப்படுகிறது. (கொட்டாரம் என்ற மலையாள சொல்லின் தமிழாக்கம் சிறிய அரண்மனை). வேணாடு மற்றும் திருவிதாங்கூர் மன்னர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் இந்த அரண்மனை நாகர்கோவிலில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இரணியல் அரண்மனை 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறுகிறார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளரான முனைவர் அ.கா.பெருமாள்.

"அரண்மனை குறித்து கல்வெட்டுகளோ செப்பேடுகளோ எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இரணியல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து, முன்பு இவ்வூர் இரணிய சிங்க நல்லூர் என அழைக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும் இவ்வூர் ஒரு வணிக நகரமாகவும் திகழ்ந்துள்ளதை கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது.

திருவிதாங்கூர் ராஜ்ஜியத்தின் தலைநகராக இருந்த பத்மநாபபுரம் 1790ம் ஆண்டில் திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்கு முன்பு வரை இரணியல் இரண்டாவது தலைநகராக செயல்பட்டுள்ளது.

அதன் பிறகு இந்த அரண்மனை முக்கியத்துவம் இழந்து மன்னரின் உறவினர்கள், உயர் அதிகாரிகள் அல்லது படை வீரர்கள் தங்குவதற்கான இடமாக பயன்பட்டிருக்கிறது,"என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "1956ல் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த இரணியல் அரண்மனை தமிழகத்துக்குதான் உரிமையாக இருந்தது. கேரள அரசு உரிமை கோரவில்லை. அப்போதைய கேரள முதலமைச்சர் பத்மநாபபுரம் அரண்மனையைத் தான் தங்களுக்கு உரிமை கோரினார். சரியாக பராமரிக்கப்படாததால் மெல்ல மெல்ல இந்த அரண்மனை சிதிலமடைய தொடங்கியது," என்றார்.

 இரணியல் அரண்மனை

தற்போது எப்படி உள்ளது இரணியல் அரண்மனை

சுமார் 2.16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அரண்மனை வளாகத்தில் ‘குதிரை மாளிகை’ என அழைக்கப்படும் பிரதான அரண்மனை முதல் பகுதியாகவும், அதன் பின் பகுதியில் வசந்த மண்டபம் எனப்படும் மன்னரின் படுக்கை அறையும் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் கட்டட கலை பாணியில் அமைந்துள்ள இந்த அரண்மனையின் குதிரை மாளிகை கட்டை குத்து முறையில் சுத்துகட்டு பாணியில் கட்டப்பட்டுள்ளது.

குதிரை மாளிகையின் முன்பகுதியில் ஒரு தர்பார் மண்டபம், உள் பகுதியில் நான்கு அறைகளும் உள்ளது. வசந்த மண்டபத்தில் அழகிய வேலைப்பாடுகளுடன் கருங்கல்லில் செதுக்கப்பட்ட மன்னரின் கட்டில் உள்ளது. மேலும் அரண்மனை வளாகத்தில் ஒரு சிறிய குளமும் உள்ளது.

வசந்த மண்டபத்தில் மன்னரின் படுக்கையறை சுவர்களில் அழகிய மர வேலைபாடுகள் செய்யப்பட்டு அதில் இரண்டு அடுக்காக ராமாயண கதைகள், மன்னரின் ஊர்வலத்தில் பங்குபெறும் யானை மற்றும் வீரர்கள் குறித்த தாவர சாய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது. ஆனால் தற்போது வசந்த மண்டபத்தில் மன்னரின் கருங்கல் கட்டில் மட்டுமே எஞ்சியுள்ளது. படுக்கையறையின் கூரை, சுற்றிலும் உள்ள சுவர்கள் அனைத்தும் சிதிலமடைந்துவிட்டன.

 இரணியல் அரண்மனை
படக்குறிப்பு, "30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்தவர்களிடம் நான் பேசியபோது படை வீரர்கள் இங்கு இருந்ததாக கூறினார்கள்" - முனைவர் அ.கா.பெருமாள்

"1980களில் கூட நன்றாக இருந்தது"

பிரதான அரண்மனையின் முதல் தளத்தில், அங்கு தங்கும் பெண்களின் வசதிக்காக கழிவறை வசதி செய்யப்பட்டிருந்தது. அதே போல் மன்னரின் படுக்கையறை சுவர்களில் அழகிய மர வேலைபாடுகள் செய்யப்பட்டு அதில் இரண்டு அடுக்காக ராமாயண கதைகள், மன்னரின் ஊர்வலத்தில் பங்குபெறும் யானை மற்றும் வீரர்கள் குறித்த தாவர சாய ஓவியங்கள் வரையப்பட்டிருந்தது எனவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் இரணியல் அரண்மனையை கள ஆய்வு செய்யும் போது அவற்றை பார்த்ததாகவும் கூறுகிறார் முனைவர் அ.க.பெருமாள்.

"30 ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஊரைச் சேர்ந்தவர்களிடம் நான் பேசியபோது படை வீரர்கள் இங்கு இருந்ததாக கூறினார்கள். இது ஓரளவு உண்மையாக இருக்கலாம். 1799ல் திருவதாங்கூரில் வரியை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து உழவர்களும் வணிகர்களும் கிளம்பி வேலுதம்பி தளவாய் தலைமையில் இரணியலில் இருந்து கிளம்பி திருவதாங்கூர் செல்கிறார்கள். இது தொடர்பாக குறிப்புகள் உள்ளன. 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் கூட இந்த கட்டடம் செயல்பாட்டில் இருந்துள்ளது. வீரர்கள் இங்கு தங்கி இருந்துள்ளனர்," என்றார்.

1980களில் ஆரம்பங்களில் கூட இந்த கட்டடம் ஓரளவு நன்றாக இருந்தது என்றும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது வசந்த மண்டபத்தில் மன்னரின் கருங்கல் கட்டில் மட்டுமே எஞ்சியுள்ளது. படுக்கையறையின் கூரை, சுற்றிலும் உள்ள சுவர்கள் அனைத்தும் சிதிலமடைந்துவிட்டன.

 இரணியல் அரண்மனை

ரூ.4.75 கோடியில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள்

2014ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா இரணியல் அரண்மனைக் கட்டடத்தை புதுப்பிக்க ரூ. 3 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். எனினும் புனரமைப்பு பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில், தற்போது இரணியல் அரண்மனை ரூ 4.75 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு இப்பணிகள் துவங்கியுள்ளன.

நீண்ட காலம் பராமரிப்பு இல்லாமல் இருந்ததாலும், அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்டிருந்ததாலும் அரண்மனை சுவர்கள் முழுவதும் செங்குத்தாக விரிசல்கள் ஏற்பட்டு முற்றிலும் சிதிலமடைந்துவிட்டது. இதனால் தற்போது அரண்மனையை மீண்டும் மறு கட்டமைப்பு செய்கிறோம் என அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முற்றிலும் புராதான முறையில் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தி அரண்மனையின் சுவர்கள் மீண்டும் கட்டப்படுகின்றன. சுவர்கள் கட்டுவதற்கான பிரத்யேக செங்கல் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகின்றன.

 இரணியல் அரண்மனை

புராதான கட்டடங்கள் புனரமைப்பதில் புகழ்பெற்ற விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை பகுதியை சேர்ந்த கலைஞரான கலைபாண்டியன் தலைமையிலான குழுவினர் இரணியல் அரண்மனை புனரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். `சிதிலமடைந்த பழைய அரண்மனையில் பெரிய அளவிலான அலங்கார வேலைபாடுகளோ, மரவேலைபாடுகளோ இல்லை. எனினும் சிதிலமடைந்த அரண்மனையில் இருந்து கிடைத்த பழைய மரசாமான்களில் இருந்த வேலைபாடுகளை மாதிரியாக கொண்டு அதே போன்ற மர வேலைபாடுகளை புதிதாக செய்து வருகிறோம்` என அவர் தெரிவித்தார்.

தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி மூலம் பிரதான அரண்மனையை மட்டும்தான் சீரமைக்க உள்ளோம், என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுண்ணாம்பு கலவையால் செய்யப்படும் பாரம்பரிய கட்டுமான முறை என்பதால் புனரமைப்பு பணிகள் மெதுவாக தான் நடந்து வருகிறது. புனரமைப்பு பணிகள் முடிவடைய இன்னும் ஒரு வருட காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: