சீன ரசிகர்களுக்கு மெஸ்ஸி படைத்த விருந்து: 'அதிவேக' கோலால் ஆடிப்போன ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images
ஆட்டம் நேற்று இரவு தொடங்கியது. ஆஸ்திரேலிய கால்பந்து வீரர்கள் போட்டியின் தன்மையை உணர எத்தனித்தனர். ஆனால், அதற்குத் துளியும் இடம்கொடுக்காமல், ஆட்டம் தொடங்கிய ஒன்றரை நிமிடத்திலேயே அவர் கோல் அடித்தார்.
அரங்கத்தில் கூடியிருந்த சீன ரசிகர்கள் அத்தனை பேரும் 'மெஸ்ஸி... மெஸ்ஸி...' என்று அவரது புகழைப் பாடத் தொடங்கினார்கள். இத்தகைய அதிவேக கோல் தங்கள் வலைக்குள் வந்து விழுமென்று ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
பெய்ஜிங்கில் நடைபெற்ற இந்த கால்பந்தாட்ட போட்டியில், வெறும் 90 விநாடிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோல் அடித்தார் லியோனெல் மெஸ்ஸி. இது அங்கு கூடியிருந்த அவரது ஆயிரக்கணக்கான சீன ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
அங்கிருந்த பெரும்பாலான ரசிகர்கள் நீலமும் வெள்ளையும் கலந்த நிறத்திலான அர்ஜெண்டினா ஜெர்சிகளை அணிந்திருந்தனர். அந்த ஜெர்சிகளின் பின்னால் இருந்ததோ ஒரேயொரு பெயர், லியோனெல் மெஸ்ஸி.
அரங்கம் நீல, வெள்ளைக் கடல் போல் காட்சியளித்தது. ஆயிரக்கணக்கான மெஸ்ஸி ரசிகர்கள் அவரது அதிவேக கோலை ஆர்ப்பரித்துக் கொண்டாடியபோது, அந்த ரசிகர்கள் கடலில் அலைகள் எழும்புவதைப் போன்ற தோற்றம் ஏற்பட்டது.
ஒவ்வொரு கோடைக் காலத்திலும், பெய்ஜிங் நட்புரீதியிலான கால்பந்தாட்ட போட்டிகளை ஏற்பாடு செய்கிறது.
இந்த முறை இந்த விளையாட்டை ஒருங்கிணைத்தவர்கள், சீனாவில் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு விளையாட்டு வீரரையும், அவர் தலைமையிலான அணியையும் தேர்ந்தெடுத்தனர். அவர்தான் லியோனெல் மெஸ்ஸி.
சீனாவில் கால்பந்து விளையாட்டிற்குச் செய்யப்படும், ஒரு ஸ்டார் பவர் மார்க்கெட்டிங் (star power marketing) ஆக இது கருதப்படுகிறது.
நேற்றைய நட்புரீதியிலான போட்டி அர்ஜென்டினாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடத்தப்பட்டது.
போட்டி நடந்த மைதானம் முழுவதும் 'மெஸ்ஸி... மெஸ்ஸி...' என்ற பெயர்தான் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
இந்த விளையாட்டுப் போட்டிக்கான டிக்கெட்டுகள் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டன. சுமார் 400 டாலர்கள் முதல் 680 டாலர்கள் வரை இந்த டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.
இது குறித்து சீன சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்களும் எழுந்தன.
ஆனால் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டுப் பார்த்தால், இந்த டிக்கெட்கள் முழுவதும் விற்றுத் தீர்ந்தன என்பதுதான் உண்மை.
சீனாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 68,000க்கும் அதிகமான ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண்பதற்காக வந்திருந்தனர்.
இதற்கெல்லாம் காரணம் லியோனெல் மெஸ்ஸி என்ற ஒரு பெயர் மட்டுமே! அவர் இல்லையென்றால் இத்தனை பெரிய பிரமாண்டம் அங்கு நிகழ்ந்திருக்காது.
மெஸ்ஸி ஃபீவர் (messi mania) பெய்ஜிங்கில் இருக்கும் சீன ரசிகர்களுக்கும் தொற்றிக் கொண்டது. அர்ஜென்டினா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தங்கியிருந்த ஓட்டலின் முன்பு அவரது ரசிகர்கள் முகாமிட்டிருந்தனர்.
அவர்கள் செய்த ஆரவாரத்தால், மெஸ்ஸி மற்றும் அவரது அணியினரால் பயிற்சிக்குக்கூட செல்ல முடியாத நிலை உருவாகியது.
உலகக் கோப்பைக்கு தங்களது நாட்டை வழிநடத்திச் சென்ற வீரரைப் பார்த்துவிட மாட்டோமா என்ற நம்பிக்கையில், பலர் ஐந்து நட்சத்திர விடுதிகளில் பணம் செலுத்திவிட்டு காத்துக் கிடந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
‘தாவோபாவோ’ (taobao) என்னும் ஆன்லைன் விற்பனை தளம், சமீபத்தில் ரசிகர்களுக்கான லைவ்-ஸ்ட்ரீம் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
அது மெஸ்ஸியை அவரது ரசிகர்கள் பார்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தந்தது. வெறும் விளம்பர ரீதியிலான கேள்வி, பதில்களை உரையாடுவதற்குத்தான் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும் சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த ஆன்லைன் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
தற்போது பெய்ஜிங்கிற்கு வந்திருக்கும் மெஸ்ஸியின் வருகை மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவரைப் பார்ப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறோம், அவருடன் இரவு உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி சிலர் மோசடியில் ஈடுபடலாம்.
எனவே இத்தகைய மோசடிகளை நம்பி யாரும் ஏமாந்துவிட வேண்டாம் எனவும், அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டுமெனவும் காவல்துறை ரசிகர்களை எச்சரித்து வருகின்றது.
மெஸ்ஸி என்ற பெயர் சீனாவில் இப்போது மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. கால்பந்து விளையாட்டு பற்றி எதுவும் தெரியாதவர்களுக்குக் கூட 'மெஸ்ஸி’ என்ற பெயர் தெரிந்திருக்கிறது.
இந்த உலக சாம்பியன்கள், சீன தேசிய அணிக்கு எதிராக விளையாடாமல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவதுதான் இதில் சுவாரஸ்யமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டிகளை ஒருங்கிணைத்தபோது, அர்ஜென்டினா அணிக்கு எதிராக விளையாடுவதற்கு எந்த அணி வேண்டுமானாலும் வரலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேநேரம், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி தங்களது சொந்த நாட்டிற்கு எதிராக விளையாடாமல் பார்த்துக்கொள்வதற்கு, போட்டியை ஒருங்கிணைத்த குழு சில யுக்திகளைக் கையாண்டதாக சீனாவின் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
இறுதியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக விளையாடுவதற்கு, ஆஸ்திரேலியா அணி தேர்ந்தெடுக்கப்பட்டது.
கத்தாரில் நடந்த உலக கால்பந்து போட்டியில், அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியுற்ற பிறகு, ஆஸ்திரேலியா அணி அர்ஜென்டினாவுக்கு எதிராக இந்த பெய்ஜிங் போட்டியில் மீண்டும் கலந்துகொள்ளும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
பெய்ஜிங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் போட்டிக்காக, ஆஸ்திரேலியா தங்களது அணியின் சார்பாக பல இளம் வீரர்களை அழைத்து வந்திருந்தது.
அடுத்த உலகக் கோப்பைக்கு தங்களது வீரர்களைத் தயார் செய்வதற்கும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காகவும், அவர்கள் தங்களது இளம் வீரர்களை அழைத்து வந்திருந்தனர்.
இந்தப் போட்டியைக் காண வந்த ரசிகர்களில் மிகக் குறைந்த அளவிலேயே ஆஸ்திரேலியா அணியின் ரசிகர்கள் இருந்தனர். ஆனாலும் அவர்கள் ஆஸ்திரேலியா அணியை ஊக்குவிக்கும் விதமாக மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
மெஸ்ஸியின் முதல் கோலுக்கு பிறகும், அவர்கள் அர்ஜென்டினாவின் சரமாரியான தாக்குதல்களைத் தாக்குப் பிடித்தது மட்டுமின்றி, தாக்குதல் ஆட்டத்தையும் முன்னெடுத்தனர்.
இதற்கிடையில் சீனாவின் அர்ஜென்டினா ரசிகர்கள் கைதட்டி மிகுதியான ஆரவாரம் செய்ததால், கோல் போடும் பல வாய்ப்புகளை ஆஸ்திரேலியா அணி தவறவிட்டது.
நட்பு ரீதியாக நடைபெற்ற இந்தப் போட்டியில்கூட அர்ஜென்டினா தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. அவர்கள் அடித்த இரண்டாவது கோல், ஆட்டத்தை இறுதிக் கட்டத்திற்குக் கொண்டு வந்து முடித்து வைத்தது.
ஆட்டம் முடிவடைந்த பிறகு, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விளையாட்டு மைதானத்தை விட்டு வெளியேறி பெய்ஜிங்கின் சன்லுதில் மாவட்ட தெருக்களுக்குள் இறங்கினர்.
அவர்கள் அனைவரும் தங்களுடைய முகத்தில் வண்ணங்களைப் பூசிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இந்தப் போட்டியைக் காண வந்த மக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். ஒரு விளையாட்டிற்கு இவ்வளவு பணத்தை செலவு செய்திருக்கிறோம் என்ற வருத்தம் அவர்கள் யாரிடமும் தென்படவில்லை.
பிபிசியிடம் பேசிய இளம்பெண் ஒருவர், ‘இது மிகவும் மகிழ்ச்சியான தருணம்’ எனத் தெரிவித்தார்.
“மிக அதிகளவில் பணம் கொடுத்து நாங்கள் டிக்கெட் வாங்கியிருந்தாலும், அதற்கு இணையாக ஒரு சிறந்த ஆட்டத்தைக் கண்டிருக்கிறோம்.
ஓய்வு பெறுவதற்கு முன் மெஸ்ஸி மேற்கொள்ளும் கடைசி சீன பயணம் இதுவாக இருக்கலாம். எனவே இந்த ஆட்டம் மிகவும் மதிப்புக்குரியது” என்றும் அவர் கூறினார்.
பிபிசியிடம் பேசிய மற்றோர் இளைஞர், “இது ஒரு சிறப்பான ஆட்டம்” என்று கூறினார்.
அவருக்குப் பிடித்தமான கால்பந்தாட்ட வீரர் யார் என்று பிபிசி கேட்டபோது, அவர் திரும்பி தனது ஜெர்சியில் இருந்த ’மெஸ்ஸி’ என்ற பெயரைக் காட்டினார்.
சீனாவில் இந்த வாரம் முழுவதும், மெஸ்ஸிக்கு சொந்தமான நாட்களாக மாறிவிட்டன.
கிட்டத்தட்ட உலகின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு வந்து விளையாடிய அர்ஜென்டினா வீரர்கள், இவ்வளவு பெரிய கூட்டம் தங்களால் உற்சாகமடைவதைக் கண்ட நெகிழ்ச்சியால் திக்குமுக்காடிப் போயிருக்கிறார்கள். இந்த ஒட்டுமொத்த புகழுக்கும் ஒரே சொந்தக்காரர் மெஸ்ஸி மட்டுமே.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












