தமிழ்நாட்டில் புலிகளை வேட்டையாடிய பவாரியா கும்பல் சிக்கியது எப்படி?

புலி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழ்நாட்டில் புலி வேட்டையில் ஈடுபட்ட வட இந்திய பவாரிய கும்பல் வனத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலுக்கு பின்னணியில் சர்வதேச வலைப்பின்னல் உள்ளதா என்பது தொடர்பாகவும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் அரசூர் என்கிற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய இடத்தில் சில நாட்களாக வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் கொண்ட ஒரு கும்பல் தற்காலிக இருப்பிடம் அமைத்து தங்கி வந்துள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த உள்ளூர் மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறையினர் மாறு வேடத்தில் அந்தப் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகம் வலுக்கவே அந்த கும்பலை சோதனை செய்ததில் விலங்கு வேட்டைக்கான ஆயுதங்கள் இருப்பதைப் பார்த்த வனத்துறையினர் அவற்றை பறிமுதல் செய்து ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.

முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் பஞ்சாப்பைச் சேர்ந்த ரத்னா (40), மங்கல் (28), கிருஷ்ணன்(59) மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த ராம்சந்தர் (50) என்பது தெரியவந்தது. இவர்களுடன் இருந்த இரண்டு பெண்களையும் வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடமிருந்து புலித்தோல், புலி நகம், மற்றும் இரண்டு எலும்புகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பவாரியா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

புலிவேட்டை

நீலகிரியில் வேட்டையாடிய கும்பல்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் கிருபாசங்கர் பிபிசி தமிழிடம் பேசுகையில், “வேட்டை கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட புலி நீலகிரி வனப்பகுதிக்குள் வேட்டையாடப்பட்டிருப்பதாக தெரிந்ததையடுத்து அவர்களை நீலகிரிக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டோம். இந்த கும்பல் மேலும் ஒரு சிறுத்தையையும் வேட்டையாடியிருப்பது தெரியவந்தது.

நீலகிரிக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அவலாஞ்சி வனப்பகுதிக்கு அருகில் தான் புலியை வேட்டையாடியது தெரியவந்தது. மேலும் இவர்கள் வேட்டையாடிய சிறுத்தையின் தோலும் வேட்டைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

நீலகிரியில் வேட்டையாடிவிட்டு வனப்பகுதி வழியாகவே சத்தியமங்கலத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர். இத்தகைய வேலைகளை செய்பவர்கள் நாடோடிகள் போல இடம் மாறிக் கொண்டே தான் இருப்பார்கள்.

சமீப நாட்களில் புலி வேட்டை சம்பவம் இப்போது தான் பதிவாகியுள்ளது. விலங்குகள் வேட்டை என்பது எப்போதுமே ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நடக்காது. தேசிய, சர்வதேச அளவில் இதன் வலைப்பின்னல் நீழும். இவர்களுடன் உள்ளூரைச் சேர்ந்தவர்கள், வெளிமாநிலத்தவர்கள் என வேறு யாரெல்லாம் சம்மந்தப்பட்டுள்ளார்கள் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன் சங்கிலி தொடரை அடையாளம் காண பிற வனக்கோட்டங்களிலும் பரந்துபட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இது தனித்த சம்பவமா அல்லது பெரிய வலைப்பின்னலில் இவர்கள் ஒரு அங்கமா, இந்த கும்பல் வேறு வேட்டையில் ஈடுபட்டுள்ளார்களா என்பது பற்றி தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது" என்றார்.

புலி வேட்டை

சீனா வரை நீழும் கள்ள சந்தை

வனக் குற்ற தடுப்பு பிரிவின் தென் மண்டலத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி காஞ்சனா விலங்கு வேட்டை தொடர்பாக மேலும் விவரித்தார்.

“புலி நகம் மற்றும் தோல் போன்றவை சீனாவில் மிகப்பெரிய சந்தை உள்ளது. இந்தியாவில் வேட்டையாடப்படும் புலி, சிறுத்தை சார்ந்த பொருட்கள் வட கிழக்கு மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து எல்லை கடந்து சீனாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

இதை வாங்குபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலே இருக்க மாட்டார்கள். இதில் பல இடைத்தரகர்கள் இருப்பார்கள். தற்போது கைதாகியுள்ள கும்பல் யாரிடம் விற்பதற்காக வைத்திருந்தார்கள் என்பதை விசாரித்து வருகிறோம்." என்றார்.

பவாரியா சமூகத்தின் குற்றப் பின்னணி

புலி வேட்டை

"பவாரியா சமூகத்தைச் சேர்ந்த இவர்களுக்கு வன விலங்கு வேட்டை என்பது மிக இயல்பாகவே வரும். பவாரியாக்கள் இலக்கு வைத்து திருடுவதை வாடிக்கையாக கொண்டவர்கள். கம்பளி விற்பது தான் இவர்களுடைய வேலை.

அந்தப் போர்வையில் தான் பல ஊர்களுக்குச் செல்வார்கள். ஊர்களை நோட்டமிட்டு குறிப்பிட்ட வீடு அல்லது கொள்ளையடிக்க திட்டமிட்டிருக்கும் இடத்தை குறிவைத்து பின்னர் தான் திருடுவார்கள். வட இந்தியாவில் இவர்கள் அதிகம் காணப்படுவார்கள். தமிழ்நாடு போன்ற தென்னிந்திய மாநிலங்களில் அரிதாக தென்பட்டாலும் இவர்களின் இருப்பு இங்கு உள்ளது நிஜம்.

புலி போன்ற வலிய வன விலங்குகளையும் மிக எளிதாக கையாள்வார்கள். தற்போது கைதாகியுள்ள கும்பலின் குற்றப் பின்னணியை விசாரித்த வரை இதற்கு முன்பாக எந்த வழக்கும் இவர்கள் மீது பதிவாகவில்லை. பவாரியா சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேட்டை இயல்பாக வருமென்றாலும் விலங்கு வேட்டையில் இவர்கள் கைதாவது தென்னிந்தியாவில் இப்போது தான் பார்க்கிறோம். வட இந்தியாவில் புலிகள் வேட்டை பதிவாகியிருந்தாலும் தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களில் புலி வேட்டை பதிவாகுவது இது தான் முதல் முறை.

இந்த கும்பலின் பின்னணி என்ன, இவர்களுடன் யார் தொடர்பில் இருந்தார்கள், இவர்கள் யாருக்கு விற்க எடுத்துச் சென்றார்கள் என்கிற கோணங்களில் விசாரித்து வருகிறோம். விலங்கு வேட்டை என்பது வனக்கோட்டம், மாநில எல்லைகளை எல்லாம் கடந்து நடப்பவை. அதனால் தமிழ்நாட்டிலும் அண்ண்ட மாநிலங்களிலும் உள்ள இதர மற்ற வனக்கோட்டங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் வலைப்பின்னலை அடையாளம் காண்பதற்கான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார் வனத்துறை அதிகாரி காஞ்சனா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: