'பீனிக்ஸ் பறவைகள்' ரஹானே, இஷாந்த், பியூஷ் ஆகிய சீனியர் வீரர்கள் மீண்டு வந்தது எப்படி?

பட மூலாதாரம், R.SATISH BABU
- எழுதியவர், பராக் பதாக்
- பதவி, பிபிசி மராத்தி சேவை
கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில், 35 வயதுக்கு மேல் ஆகிவிட்டாலே அது அவர்கள் விளையாட்டுப் பயணத்தின் இறுதிக் கட்டம் என்று கருதப்படுகிறது. டி20 வகை கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் இந்த முறை ஐபிஎல் சற்று வித்தியாசமானது.
கேரீரின் கடைசி கட்டத்தில் இருக்கும் பல வீரர்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
இந்தப் பட்டியலில் ரஹானே, அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் உள்ளனர்.
அஜிங்க்யா ரஹானே
ஐபிஎல் தொடரில் சதம் அடித்து அதிக ரன்களை குவித்து, இந்திய அணிக்குத் தலைமை தாங்கிய வீரர். ஆனால் இந்த சீசனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகம் எழுந்தது.
காயமடைந்த வீரர்களுக்குப் பதிலாக அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர் ஒரு புதிய அவதாரம் எடுத்தார்.
கடந்த டிசம்பர் 22ஆம் தேதி கொச்சியில் நடந்த ஏலத்தில் இவரை எடுக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே ஆர்வம் காட்டியது.
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காகச் சிறப்பாகச் செயல்படாத நிலையில், ரஹானேவுக்கு வாய்ப்பு கொடுக்க மற்ற அணிகள் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், ரஹானே தனது அடிப்படை விலையான ரூ 50 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்தார். அவரது போராட்டம் இத்துடன் ஓயவில்லை. மார்ச் 27 அன்று, பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது, அதில் அஜிங்க்யா ரஹானேவின் பெயர் இல்லை.
காலில் ஏற்பட்ட காயம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக விளையாட முடியவில்லை. மொயின் அலியும் உடல் தகுதி பெறவில்லை. இதன் காரணமாக ரஹானேவுக்குப் போட்டியில் வாய்ப்பு கிடைத்தது.
இப்போட்டியில் சென்னை அணி மும்பையை 157 ரன்களுக்குச் சுருட்டியது. இந்த இலக்கு மிகப்பெரியதாக இல்லையெனினும், முதல் ஓவரிலேயே கான்வேயிடம் விக்கெட்டை இழந்தது சென்னை.
ஸ்டோக்ஸ் அணியில் இல்லை. காயம் காரணமாக தோனி கடைசியாக பேட்டிங் செய்ய இறங்குகிறார். அத்தகைய சூழ்நிலையில், பவர்பிளே ஓவர்களைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்வது அவசியமாக இருந்தது.
அந்தப் போட்டியில் அஜிங்க்யா ரஹானே 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார். அந்த இன்னிங்ஸ் தான் சென்னையின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
2020க்குப் பிறகு ஐபிஎல்லில் அவர் அடித்த முதல் அரை சதம் இதுவாகும்.
கொல்கத்தாவுக்கு எதிராக அஜிங்க்யா 29 பந்துகளில் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரஹானே.
இந்த இன்னிங்ஸ் சென்னையின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
ரஹானே தனது தனிச் சிறப்பு வாய்ந்த, பாரம்பரிய பாணிக்குப் பெயர் பெற்றவர். அவர் நிச்சயமாக அதிரடியாக ரன்களை எடுக்கக்கூடியவர் தான் என்றாலும், சிறப்பான எந்த ஒரு ஸ்ட்ரோக்கையும் அடிப்பதில்லை. ரஹானேவின் பேட்டிங்கை பார்ப்பது எப்போதும் பார்வையாளர்களுக்கு இனிமையான அனுபவமாக இருந்து வருகிறது.
இந்த சீசனில், அவரது அணுகுமுறை வித்தியாசமாகப் பரிமளிக்கிறது. அழுத்தம் இல்லாமல் சுதந்திரமாக விளையாடி வருகிறார்.
ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியை பிசிசிஐ தேர்வு செய்தது, அதில் அஜிங்க்யா ரஹானே பெயர் இடம் பெற்றுள்ளது.
காயம் காரணமாக இந்தப் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் விளையாட முடியாது. அத்தகைய சூழ்நிலையில், சிறந்த பார்மில் விளையாடிய இவரது அனுபவம் அணிக்கு முக்கியமானது.
ரஹானேவின் கடின உழைப்புக்குப் பலன் கிடைத்தது. இவரது ஐபிஎல் சிக்ஸர்களால், இந்திய அணியின் கதவு திறந்தது
இஷாந்த் ஷர்மா

பட மூலாதாரம், NOAH SEELAM
இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா, தற்போது டீம் இந்தியாவில் இடம் பெறுவது கடினமாக உள்ளது. பிசிசிஐயின் நம்பிக்கையை அவர் பெறவில்லை போலத் தோன்றுகிறது.
சமீபத்தில், பிசிசிஐ தனது வருடாந்திர ஒப்பந்தப் பட்டியலில் இருந்து இஷாந்தை நீக்கியது.
இரண்டு ஆண்டுகளாக இஷாந்த் ஐபிஎல் தொடரில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த அனுபவமிக்க பந்து வீச்சாளர் மீண்டும் இடம்பெறக் கடுமையாக உழைத்தார்.
டெல்லி அணியின் ஆரம்ப ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், இஷாந்துக்கு வாய்ப்பு அளிக்க டெல்லி அணி நிர்வாகம் முடிவு செய்தது.
இஷாந்த் மீண்டும் களமிறங்கியது மட்டுமின்றி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
இஷாந்த் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லியின் அருண் ஜெட்லி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் இஷாந்தின் அன்னை பூமி போன்றது.
இங்கு விளையாடிய அனுபவம் உள்ள இஷாந்த், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவை வீழ்த்தினார். ராணா பல ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வருகிறார்.
உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் ராணா, இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
அவரை அவுட் செய்து கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி அளித்தார் இஷாந்த். பிஞ்ச் ஹிட்டராக ஆட வந்த சுனில் நரைனையும் இஷாந்த் அவுட்டாக்கினார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும் டெல்லி இஷாந்தை நம்பியது. மூன்று ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து ராகுல் திரிபாதியின் விக்கெட்டை இஷாந்த் கைப்பற்றினார்.
இஷாந்த் இதுவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
34 வயதான இஷாந்த் இன்னும் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவறுவதில்லை என்று நிரூபித்துள்ளார்.
ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 50 லட்சம் கொடுத்து இஷாந்தை அணியில் சேர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கெரீரின் கடைசி கட்டத்தில் இருக்கும் இஷாந்த், பௌண்டரிகளும் சிக்ஸர்களும் அடிக்கும் அதிரடி பேட்ஸ்மேன்களுக்கிடையில், டி 20 -ல் தன்னை நிரூபிக்க முடியுமா என்ற ஐயப்பாடு எழுந்தது.
இஷாந்த் போன்ற மூத்த வீரர்கள் இம்பேக்ட் பிளேயர் போல் 40 ஓவர்கள் முழுவதுமாக விளையாட வேண்டிய அவசியமில்லை.
நான்கு ஓவர்கள் பந்து வீசிய பிறகு, அவருக்கு பேட்ஸ்மேன் என்ற இடம் வழங்கப்படுகிறது.
முதலில் பேட்டிங்க் என்றால், ஒரு பேட்ஸ்மேனுக்குப் பதிலாகப் பின்னர் அவருக்கு இடம் வழங்கப்படும். ஐ பி எல்-ல் முதல் பட்டியலிலேயே இடம் பெறும் குறிப்பிட்ட சிலருக்குள் இஷாந்தும் ஒருவர்.
மோஹித் ஷர்மா

"நெட் பந்துவீச்சாளராக இருப்பது ஒரு மோசமான விஷயம் அல்ல. பெரிய வீரர்களுடன் விளையாட வாய்ப்பு கிடைக்கும். உடற்தகுதியை பராமரிக்க வாய்ப்பு கிடைக்கும். விளையாட்டுடன் தொடர்பில் இருப்பது தான் எனக்கு முக்கியம். எங்கள் அணி ஐபிஎல் முதல் சீசனிலேயே கோப்பையை வென்றதால், நெட் பௌலர் என்பதில் எனக்கு வருத்தமில்லை. நாங்கள் மிகச் சிறப்பாக அந்த வெற்றியைக் கொண்டாடினோம். அணியும் எந்த பாரபட்சமும் காட்டவில்லை." - இவை மோஹித் ஷர்மாவின் வார்த்தைகள்.
மோஹித் ஷர்மாவின் பெயர் கிரிக்கெட் பிரியர்களுக்கு புதிதல்ல. 2014ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மோஹித் ஷர்மா பர்பிள் கேப் விருதை வென்றார்.
ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பந்துவீச்சாளர்களுக்கு ஊதா நிறத் தொப்பி வழங்கப்படும்.
2015ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணியில் மோஹித் இடம்பெற்றார். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் போது, மகேந்திர சிங் தோனி டெத் ஓவர்களுக்கு அவரை வெகுவாக நம்பினார்.
சென்னையைத் தொடர்ந்து மோஹித் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். அவரது ஃபார்ம் குறைந்துவிட்டது.
பின்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடத் தொடங்கினார். 2020 மற்றும் 2021 ஐபிஎல் சீசன்கள் உட்பட நான்கு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
2022 சீசனுக்கான ஏலத்தில் அவருக்கு எந்த அணியும் இடம் கொடுக்கவில்லை.
புதிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா அவரை அழைத்தார்.
நெட் பௌலராக அணியில் சேர முடியுமா என்று கேட்டார்.
முதுகு அறுவைசிகிச்சைக்குப் பிறகு திரும்பி விளையாடத் தயாரான மோஹித், நெஹ்ரா அளித்த இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார்.
இதற்கு முன்னர், முன்னணி பந்துவீச்சாளராக விளையாடிய அனுபவம் கொண்ட மோஹித், நெட் பௌலரானார். அதாவது, பேட்ஸ்மேன்களின் பயிற்சியின் போது, இளம் பந்துவீச்சாளர்களை பந்துவீச வைக்கிறார்கள். மோஹித் இந்தப் பணியைத் திறம்படச் செய்தார்.
2023 சீசனுக்கு முன் நடந்த ஏலத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியில் மோஹித் சேர்க்கப்பட்டார்.
தொடக்க ஆட்டங்களில் மோஹித்துக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் மோஹித் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அந்தப் பந்துவீச்சிற்காக மோஹித் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.
ஏப்ரல் 22 அன்று, மோஹித் மற்றொரு சாதனையை நிகழ்த்தினார்.
லக்னோவில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா ஸ்டேடியத்தின் ஸ்லோ பிட்சில் குஜராத் டைட்டன்ஸ் அணி 135 ரன்கள் எடுத்தது.
இந்த இலக்குடன் அடுத்து ஆடிய லக்னோ அணி தடுமாறியது. கடைசி ஓவரில் 6 பந்துகளில் 12 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது.
கே.எல்.ராகுலையும், மார்கஸ் ஸ்டோயின்ஸையும் ஆட்டமிழக்கச் செய்து மோஹித் சர்மா ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.
அந்த ஓவரில் நான்கு ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டு, குஜராத் அணி அபார வெற்றியைப் பதிவு செய்தது.
மோஹித் மீண்டும் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.
சந்தீப் ஷர்மா

ஐபிஎல் 16வது சீசனுக்கு முன் நடந்த ஏலத்தில் சந்தீப் ஷர்மாவின் பெயர் வந்ததால், அவரை அணிகள் ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை.
ஐபிஎல்லில் 100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய சந்தீப்பின் அனுபவம் பயனுள்ளதாக இருந்திருக்கும். ஆனால் சந்தீப் ஏமாற்றம் அடையவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா, காயம் காரணமாக போட்டியிலிருந்து முற்றிலும் விலகினார். கால விரயம் செய்யாமல், உடனடியாக, சந்தீப்பைச் சேர்த்தது ராஜஸ்தான் அணி.
சென்னைக்கு எதிரான போட்டியில் சந்தீப் தனது வாழ்க்கையில் மிக முக்கியமான பந்து வீச்சைப் பதிவு செய்தார்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்றது. சென்னை அணிக்கு 6 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டது.
ஆடுகளத்தில் மகேந்திர சிங் தோனியும் ரவீந்திர ஜடேஜாவும் இருந்ததால் சென்னை ரசிகர்கள் வெற்றியை எதிர்பார்த்தனர்.
சந்தீப்பின் முதல் பந்து வைட் ஆனது. இரண்டாவது பந்தும் வைட் ஆனது. இதனால் சந்தீப் மீதான அழுத்தம் அதிகரித்தது.
ஆனால் மூன்றாவது பந்து டாட் பால் ஆனது. தோனி போன்ற ஃபினிஷருக்கு முன்னால் சந்தீப் யார்க்கரை வீசினார்.
இரண்டாவது பந்தில் தோனி சிக்ஸர் அடித்தார். பந்துகளில் 13 ரன் தேவை என்றானது. மூன்றாவது பந்தில் தோனி மேலும் ஒரு சிக்சர் அடித்தார்.
சந்தீப் தடுமாறினாலும், நான்காவது பந்தில் ஒரு சிங்கிள் ரன் மட்டுமே தோனி ஒட முடிந்தது.
ஐந்தாவது பந்தில் ஜடேஜாவும் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் சென்னைக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. மைதானம் முழுவதும் தோனிக்காக கோஷம் எழுப்பியது.
ஒரு சிறிய தவறு கூட தோனிக்கு சிக்ஸரைக் கொடுத்திருக்கலாம். ஆனால் சந்தீப் தனது யார்க்கர் பந்தை நம்பினார்.
தோனி இறக்கி அடிக்க முயன்றார். ஆனால் மீண்டும் ஒரு சிங்கிள் ரன் மட்டுமே சாத்தியமானது.
கடவுளுக்கு நன்றி சொல்லி சந்தீப் வானத்தைப் பார்த்தார். தோனி போன்ற சிறந்த பேட்ஸ்மேனை வெற்றியிலிருந்து விலக்கி வைத்தார் சந்தீப்.
ஏலத்தில் விற்பனையாகாமல் போன இந்தப் பந்து வீச்சாளர் அந்தப் போட்டியின் முக்கியமான கட்டத்தில், தனது திறமையை வெளிப்படுத்தினார்.
பியூஷ் சாவ்லா

34 வயதான பியூஷ் 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார்.
இவர் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் பியூஷ் மீது ஆர்வம் காட்டியது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் பியூஷின் சுழற்பந்து வீச்சு பேட்ஸ்மேன்களுக்கு இன்னும் தலைவலியை ஏற்படுத்தி வருகிறது.
ஏப்ரல் 22ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இது நிரூபணம் ஆனது.
பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்தது. பியூஷ் சாவ்லாவைத் தவிர அனைத்துப் பந்து வீச்சாளர்களின் பந்துகளும் எதிரணியின் ஸ்கோரை அதிகரிக்க உதவின.
மூன்று ஓவர்களில் 15 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கேப்டன் ரோஹித் ஷர்மா, நான்காவது ஓவரை அவருக்கு வழங்காமல் இருந்தது கிரிக்கெட் பிரியர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது.
பியூஷ் விக்கெட்டுகளை வீழ்த்துவது மட்டுமின்றி, ரன் ரேட்டையும் கட்டுப்படுத்துகிறார். இந்த சீசன் மும்பை அணிக்கு சவாலானது.
முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக களமிறங்கவில்லை.
ஜோஃப்ரா ஆர்ச்சரும் இன்னும் முழு உடல் தகுதி பெறவில்லை. பந்துவீச்சில் அனுபவம் வாய்ந்தவர்களின் பற்றாக்குறை இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் பியூஷ் சாவ்லா அணிக்கு வலு சேர்த்துள்ளார்.
அமித் மிஷ்ரா

பட மூலாதாரம், NURPHOTO
ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இவர் உள்ளார்.
இந்தப் போட்டியில் மூன்று முறை ஹாட்ரிக் அடித்துள்ளார். 40 வயதான அமித் மிஷ்ரா ஐபிஎல்-ல் பெரும் பெயர் பெற்றவர்.
அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சேர்த்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஆனால் அமித் மிஷ்ரா தனது செயல்பாட்டால் விமர்சகர்களுக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
அமித் மிஷ்ரா தொடர்ந்து முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி மிகக் குறைவான ரன்களைக் கொடுத்து வருகிறார்.
அமித் மிஷ்ராவின் நான்கு ஓவர்களில் பெரிய ஸ்ட்ரோக்குகளை விளையாடும் ரிஸ்கை பேட்ஸ்மேன்கள் எடுப்பதில்லை.
அவரது நான்கு ஓவர்களில், எதிரணியின் ரன் குவிப்பு வேகம் குறைகிறது.
டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடிய அமித் மிஷ்ராவின் அனுபவம் லக்னோ அணிக்குப் பயனுள்ளதாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












