சிஎஸ்கே வீரர்களிடம் 'கேப்டன் கூல்' தோனி கோபப்பட்டது ஏன்? ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நடந்து என்ன?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
அடுத்தடுத்த 2 தோல்விகளுக்குப் பின், துவண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனில் 2வது முறையாக சிஎஸ்கே அணியை நேற்று வீழ்த்தி புதிய உற்சாகம் பெற்றுள்ளது. ஜெய்ப்பூர் சவாய்மான் சிங் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 37-வது லீக் ஆட்டத்தில், சிஎஸ்கே அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோற்கடித்துள்ளது.
டாஸ்வென்று முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த மைதானத்தில் முதல்முறையாக 200 ரன்களுக்கு மேல், (5 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள்) குவித்தது. 203 ரன்களைத் துரத்திய சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்து 32 ரன்களில் தோல்வி அடைந்தது.
ஜெய்ப்பூர் சவாய்மான் சிங் மைதானத்தில் 3 ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
சிஎஸ்கே, குஜராத் டைட்டன்ஸ் அணிகளைவிட அதிக நிகர ரன்ரேட் (0.939) வைத்திருப்பதால் ராஜஸ்தான் அணி முதலிடத்துக்கு முன்னேறியது.
ஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கிடைத்த 5 வெற்றிகளில் 4 வெற்றி என்பது முதலில் பேட் செய்து, எதிரணியை சுருட்டி அதன் மூலம் கிடைத்துள்ளது என்பது குறிப்படித்தக்கது.
சிஎஸ்கே மீது ஆதிக்கம் செய்யும் ராஜஸ்தான்
சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்தில் தொடர்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம், தற்போது ஜெய்பூரில் நடைபெற்ற ஆட்டம் என ராஜஸ்தான் ராயல் அணியுடன் மோதிய இரண்டு ஆட்டங்களிலுமே சிஎஸ்கே அணி தோல்வியையே தழுவியுள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்த 2020ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சிஎஸ்கே அணியும் 6 முறை மோதியுள்ளன. இதில் 5 முறை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே வென்றுள்ளது, ஒருமுறை மட்டுமே சிஎஸ்கே வென்றுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என ஒட்டுமொத்தமாகவே சிறப்பாகச் செயல்பட்டதால்தான் வலிமையான சிஎஸ்கே அணியை வீழ்த்த முடிந்தது.
அதிலும் ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் இருந்தே துணிச்சலான முடிவுகளை எடுத்தது. டாஸ் வென்றதும், மெதுவான ஆடுகளமான ஜெய்ப்பூர் மைதானத்தில் முதலில் பேட் செய்தது, பவர்ப்ளேயில் சிஎஸ்கே அணி பந்துவீச்சை துவம்சம் செய்ய முடிவு செய்தது, பந்துவீச்சில் சிஎஸ்கே அணிக்கு நெருக்கடியளிக்கும் திட்டம் என அனைத்துமே துணிச்சலானவை.

பட மூலாதாரம், BCCI/IPL
பட்டாசாக வெடித்த ஜெய்ஸ்வால்
ஒட்டுமொத்தத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சிஎஸ்கே அணிக்கு எதிராக திட்டமிட்டு “ஹோம் ஓர்க்” செய்து களத்தில் இறங்கியதற்கு முழுமையான வெற்றி கிடைத்திருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர் யாஹஸ்வி ஜெய்ஸ்வால் (43 பந்துகளில் 77 ரன்கள்) அமைத்துக் கொடுத்த அடித்தளம் முக்கியமானதாகும். சிஎஸ்கே அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால், பவர்ப்ளேயில் 10 ரன்ரேட்டுக்கு உயர்த்தினார். அணியின் ஸ்கோரை 10 ஓவர்களுக்குள் 100 ரன்களுக்கு கொண்டு சென்றார்.
ஜூரேல், படிக்கல் அதிரடி
நடுப்பகுதியில் நடுவரிசை வீரர்கள் சற்று மந்தமாக பேட் செய்ததால் ராஜஸ்தான் ஸ்கோர் 200 ரன்களுக்குள் குறைந்துவிடும் என்று எண்ணப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஜூரேல் (15 பந்துகளில் 34), தேவ்தத் படிக்கல்(13 பந்துகளில் 27) இருவரும் ஆடிய “ கேமியோ” ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் உயர்த்தியது.
அதிலும் துருவ் ஜூரேல் இந்த ஐபிஎல் சீசனில்தான் அறிமுகமாகினார். 22வயதான ஜூரேல் இதுவரை தான் களமிறங்கிய ஆட்டங்களில் எல்லாம் கடைசி நேரத்தில் அருமையான கேமியோவை ஆடி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்துள்ளார். அதாவது 32(15பந்துகள்), 8(3), 4(6), 18(10),0(1), 34(16), 34(15) என ஜூரேல் ஃபினிஷராக உருவெடுத்துள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஹெட்மயர், சாம்ஸன் ஏமாற்றம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வால் அருமையான தொடக்கத்தை அளித்தனர். ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட, அவருக்கு துணையாக பட்லர் ஆட்டத்தைத் தொடர்ந்தார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர், பட்லர் 27 ரன்னில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த சஞ்சு சாம்ஸன்(17), ஹெட்மயர்(8) இருவருமே ஸ்கோர் செய்யத் தவறினர். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் ஜெய்ஸ்வால் அதிரடியை நிறுத்தவில்லை, 26 பந்துகளில் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால், 43 பந்துகளில் 77 ரன்களில் எடுத்திருந்தபோது தேஷ்பாண்டே பந்துவீச்சில் வெளியேறினார். அவரது ரன் கணக்கில் 4 சிக்ஸர்கள், 8பவுண்டரிகள் அடங்கும்.
ஜெய்ஸ்வால், சாம்ஸன் இருவரும் ஆட்டமிழந்தபின் ராஜஸ்தான் ராயல்ஸ் ஸ்கோர் வேகம் திடீரெனக் குறைந்தது. அதாவது 14 ஓவர் முதல் 17-வது ஓவர் வரை வெறும் 28 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் துருவ் ஜூரேல், படிக்கல் இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர், இருவரும் 48 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். ஜூரேல் 34 ரன்னில் தோனியால் ரன்அவுட் செய்யப்பட்டார்.

பட மூலாதாரம், BCCI/IPL
வீரர்களை கடிந்துகொண்ட தோனி
சிஎஸ்கே அணி நேற்று படுமந்தமாக பீல்டிங் செய்தது. பல தருணங்களில் பீல்டிங்கை கோட்டைவிட்டது கேப்டன் தோனிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது. பலமுறை வீரர்களை சைகை மூலம் தோனி கடிந்து கொண்டார். குறிப்பாக பத்திரனா வீசிய 16-வது ஓவரில் ரன்அடித்து ஓட முயன்றபோது தோனி பீல்டிங் செய்து நான்-ஸ்ட்ரைக்கர் பகுதியில் ரன்அவுட் செய்ய பந்தை எறிந்தார். அப்போது குறுக்கே பத்திரனா வந்து பந்தைப் பிடித்ததால் களத்திலேயே சத்தமிட்டு தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ‘கேப்டன் கூல்’ தோனி.
முக்கிய விக்கெட்களை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஸம்பா
ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிரன்ட் போல்ட் காயம் காரணமாக விளையாடாததால் அணியில் இடம் பெற்ற ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா நேற்று அற்புதமான பங்களிப்பை வழங்கினார். குறிப்பாக ருதுராஜ் கெய்க்வாட்(47), கான்வே(8), மொயின் அலி(23) என முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கியக்காரணமாக இருந்தார். ஆடம் ஸம்பா 3 ஓவர்கள் மட்டுமே வீசி 7 டாட் பந்துகளுடன் 22ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். சிஎஸ்கே அணியின் ரன் சேர்ப்புக்கு பெரிய பிரேக் போட்டது என்பது ஆடம் ஸம்பா என்பதில் சந்தேகமில்லை.

பட மூலாதாரம், BCCI/IPL
"சிஎஸ்கே-னா அஸ்வினுக்கு அல்வா"
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இருந்து தனது வாழ்க்கையை தொடங்கியவர் அஸ்வின். ஆனால், அந்த அணியால் கழற்றிவிடப்பட்டத்தில் இருந்து, சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டம் என்றாலே அஸ்வினுக்கு புதிய உற்சாகம் பிறந்துவிடுகிறது. பந்துவீச்சிலும் துல்லியத்தை வெளிப்படுத்திவிடுகிறார். முடிந்தவரை சிறப்பாகச்செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி அளிப்பது என அஸ்வினுக்கு சிஎஸ்கேவுக்கு எதிரான ஆட்டம் என்றாலே அல்வா சாப்பிடுவது போன்று இருக்கிறது.
இந்த ஆட்டத்திலும் அஸ்வின் 4 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து ரஹானே, ராயுடு ஆகிய இரு விக்கெட்டுகளை ஒரே ஓவரில் வீழ்த்தி சிஎஸ்கே பேட்டிங் வரிசையை ஆட்டம் காணவைத்தார். அதிலும் அசுர ஃபார்மில் இருக்கும் ரஹானேவுக்கு அருமையான கேரம் பந்துவீசி விக்கெட்டை அஸ்வின் தூக்கினார். ராயுடு வந்த வேகத்தில் ஸ்வீப் ஆட முயன்று அஸ்வினிடம் விக்கெட்டை இழந்தார். இருவரையும் திட்டமிட்டு தூக்கியதுபோல் அஸ்வினின் பந்துவீச்சு இருந்தது.
மற்றொரு சுழற்பந்துவீச்சாளர் யஜூவேந்திர சஹலுக்கு நேற்று 2 ஓவர்கள் மட்டுமே வழங்கப்பட்டது. இவரும் கட்டுக்கோப்பாக பந்துவீசியபோதிலும் கூடுதலாக ஓவர்கள் தரப்படவில்லை.
கண்டுகொள்ளப்படாத சந்தீப் சர்மா
இந்திய அணியால் இன்னும் கண்டு கொள்ளப்படாத வேகப்பந்துவீச்சாளராகவே சந்தீப் சர்மா உள்ளார். மாற்றுவீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சந்தீப் சர்மாவை ஏலத்தில் விலைக்கு வாங்கியது. ஆனால், ஒவ்வொரு ஆட்டத்திலும் சந்தீப் சர்மா பந்துவீச்சு அற்புதமாக அமைந்துள்ளது. இந்த ஆட்டத்திலும் துல்லியமான யார்கர்கள், லைன் லென்த்தில் வீசிய சந்தீப் சர்மா 4 ஓவர்கள் வீசி10 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் மட்டுமே கொடுத்து டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்டாக மாறினார். இவருக்கு துணையாகப் பந்துவீசிய குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் வீசிய 18 ரன்கள் கொடுத்து ஒருவிக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஹோல்டர் வீணாக்கப்படுகிறாரா?
ஜோஸன் ஹோல்டர் மட்டும் நேற்றை ஆட்டத்தில் ரன்களை சற்று வாரி வழங்கியிருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சாளராகவே பயன்படுத்தி அவரை வீணாக்கி வருவது வேதனையானது. ஹோல்டர் பேட்டிங், ஆல்ரவுண்டர் என்பதையே அந்த அணி மறந்துவிட்டது. பந்துவீச்சைவிட பேட்டிங்கில் ஹோல்டர் சிறப்பாக ஆடக்கூடியவர், நேற்றைய ஆட்டத்தில்கூட அஸ்வினுக்கு பதிலாக ஹோல்டரை களமிறக்கி கேமியோ ஆட வைத்திருக்கலாம்.
சிஎஸ்கே-வின் பலவீனத்தை கச்சிதமாக ஊகித்த ராஜஸ்தான்
சிஎஸ்கே அணி பேட்ஸ்மேன்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மந்தமாக ஆடக்கூடியவர்கள் எனக் கணித்து நேற்றைய ஆட்டத்தில் 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் ராஜஸ்தான் களமிறங்கியது வெற்றிக்கு முதல் காரணமாகும்.
டாஸ் வென்றவுடன் பேட் செய்து,சேஸிங்கில் வலிமையான சிஎஸ்கேவை சுருட்ட திட்டமிட்ட துணிச்சலான முடிவு, தொடக்கத்தில் இருந்தே ஜெய்ஸ்வாலின் அதிரடி ரன் குவிப்பு ஆகியவையும் காரணமாகும். குறிப்பாக நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பெரிதாக பீல்டிங்கில் கோட்டை விடவில்லை, ரன்களை முடிந்தவரை கட்டுப்படுத்தி பீல்டிங் செய்ததும், கேட்சுகளை நழுவவிடாமல் பிடித்ததும் சிஎஸ்கே அணியின் ரன்குவிப்பையும், விக்கெட் சரிவையும் ஏற்படுத்தியது.
அட்டாக்..அட்டாக் மட்டுமே
வெற்றிக்கு பின் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், "இந்த வெற்றி எங்களுக்கு அவசியமானது. ஜெய்ஸ்வால், தேவ்தத், ஜூரேல் ஆகியோர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. ஓய்வறையில் நாங்கள் பேசியது, எதிரணியை அட்டாக் செய்வது, அட்டாக் அட்டாக் மட்டும்தான். பேட்டிங்கில் துவம்சம் செய்வது மட்டும்தான் வெற்றியை எளிமையாக்கும் என ஆலோசித்தோம். அதை செய்தோம். எங்கள் வெற்றிக்கு பின்னால் பலரின் உழைப்பு இருக்கிறது, ஜெய்ஸ்வால் ஆடிய விதம் குறித்து பெருமையாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
தோனியின் தவறான முடிவுகள்
ஜெய்ப்பூர் மைதானம் மெதுவான ஆடுகளம். இங்கு வேகப்பந்துவீச்சு பெரிதாக எடுபடாது, சுழற்பந்துவீச்சு அதிலும் மெதுவாக வீசும் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல பலன் அளிக்கும் எனத் தெரிந்தும் வேகப்பந்துவீச்சுக்கு தோனி முக்கியத்துவம் கொடுத்தார்.
சிஎஸ்கே வேகப்பந்துவீச்சாளர் பதிரண அல்லது ஆகாஷ் சிங்கிற்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளர் மிட்ஷெல் சான்ட்னரை களமிறக்கி இருந்தால், ராஜஸ்தான் ரன் குவிப்பை கட்டுப்படுத்தி இருக்கலாம்.
சிஎஸ்கே அணியில் இருக்கும் வழக்கமான சுழற்பந்துவீச்சாளர்களான தீக்சனா, ஜடேஜா இருவருமே நேற்று ரன்களை கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீசியதால் சான்ட்னரும் சேர்க்கப்பட்டிருந்தால் கூடுதல் பலமாகியிருக்கும்.
அதுமட்டுமல்லாமல் மொயின் அலி நேற்று 2 ஓவர்கள் மட்டுமே வீசினார். அவருக்கு கூடுதலாக 2 ஓவர்களை வழங்காமல் தோனி தவிர்த்துவிட்டது தவறான முடிவாகும். மொயின் அலி ரன்களை வழங்கினாலும் விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்.
பதிரண பந்துவீச்சு- தோனி சொன்னது என்ன?
சிஎஸ்கே கேப்டன் தோனி பேசும்போது, "இந்த ஸ்கோர் சற்று அதிகமானதுதான். நாங்கள் அதிகமான சிக்ஸர்களை வழங்கிவிட்டோம். அதேசமயம், ஆடுகளம் பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைத்தது. நடுப்பகுதியில் எங்கள் பந்துவீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டார்கள், ஆனால், பல பவுண்டரிகள் பேட்டின் முனையில்பட்டு சென்றன. பவர்ப்ளேயில் எங்களுக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை.
பதிரண நன்றாகப் பந்துவீசுகிறார் என்றே நான் நினைக்கிறேன். அவர் மோசமாக செயல்படவில்லை. அவர் எவ்வளவு சிறப்பாக பந்துவீசினாலும் ஸ்கோர்கார்டில் அது பிரதிபலிக்கவில்லை என்ரு நினைக்கிறேன். ஜெய்ஸ்வால், ஜூரேல் சிறப்பாக பேட் செய்தனர். எனக்கு இந்த மைதானம் முக்கியமானது, விசாகப்பட்டினத்தில் நான் அடித்த எனது முதல் ஒரு நாள் சதம், எனக்கு கூடுதலாக 10 ஆட்டங்களைப் பெற்றுக்கொடுத்தது. ஆனால்,இந்த மைதானத்தில் நான் அடித்த 183 ரன்கள், எனக்கு மேலும் ஒரு வருடத்தை பெற்றுக்கொடுத்தது. மீண்டும் இங்கு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
ஏமாற்றம் அளித்த பேட்ஸ்மேன்கள்
200 ரன்களுக்கு மேல் சேஸிங் என்றாலே பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தி, ரன்ரேட்டை உயர்த்தினால்தான் வெல்ல முடியும். நடுப்பகுதி ஓவர்களையோ அல்லது கடைசி ஓவர்களையே நம்ப இருத்தல்கூடாது. ஆனால், நேற்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி, பவர்ப்ளேயில் 1 விக்கெட்டை இழந்து 42 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
டேவிட் கான்வே ஆட்டமிழந்தது மிகப்பெரிய பலவீனமாகும். அடுத்துவந்த ரஹானே அசுர ஃபார்மில் இருந்தாலும், சுழற்பந்துவீச்சுக்கு எதிரான அவரின் பேட்டிங் பலவீனமாகும். ரஹானே இந்த சீசனில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 48 பந்துகளைச் சந்தித்து 122 ரன்களைக் குவித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 254 வைத்துள்ளார். ஆனால், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக இந்த அளவு ரன் குவிக்கவில்லை.
ரஹானே(15) ரன்னில் ஆட்டமிழந்தது, அடுத்துவந்த நம்பிக்கை நாயகர் ராயுடு டக்அவுட்டில் வெளியேறிது என முக்கியத்தூண்கள் வீழ்ந்தது சிஎஸ்கே அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. களத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்தபோதிலும் நிதானமாக ஆடிய கெய்க்வாட்டும் 47ரன்னில் நடையைக் கட்டியது, தேவைப்படும் ரன்ரேட்டை அதிகப்படுத்தியது.
நடுவரிசையில் ஷிவம் துபே, மொயின் அலி இருவரும் ஆடத் தொடங்கியபோது, சிஎஸ்கே ரசிகர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. 9 ஓவர்களில் வெற்றிக்கு 130 ரன்கள் தேவைப்பட்டது. ஷிவம் துபேவின் சரவெடி ஆட்டம், மொயின்அலியின் டைமிங் ஷாட்கள் ஆகியவை ரன்களை குவித்தன. இந்த ஜோடி, அடுத்த 3 ஓவர்களில் 4சிக்ஸர்கள், 4பவுண்டரிகளை அடித்ததால் ரன்ரேட்எகிறியது.
கடைசி 5 ஓவர்களில் 90 ரன்கள் சிஎஸ்கே வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஆனால், மொயின் அலி விக்கெட்டை பறிக்க அழைக்கப்பட்ட ஸம்பா அதை கச்சிதமாகச் செய்து முடித்தார். கடைசிவரை போராடிய துபே 32 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து(4சிக்ஸர்,2பவுண்டரி) ஆட்டமிழந்தார். இந்த சீசனில் துபே தொடர்ச்சியாக அடித்த 3வது அரைசதமாகும்.

பட மூலாதாரம், BCCI/IPL
150 கி.மீ வேகத்தில் பந்து வீசிய பதிரண
சிஎஸ்கே அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் பதிரண நேற்று 150 கி.மீ வேகத்தில் பந்துவீசினார். இந்த ஆட்டத்தில் 4 ஓவர்கள் வீசி 49 ரன்கள் என வாரி வழங்கினாலும், பந்துவீச்சில் அதிகரிக்கும் வேகம் கேப்டன் தோனிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. எதிர்காலத்தில் அணிக்காக வலிமையான வேகப்பந்து வீச்சாளரை தயார் செய்து வருகிறது சிஎஸ்கே. சிஎஸ்கேவுக்கு பதிரண தயாராகிறாரோ இல்லையோ வரும் உலகக் கோப்பைப் போட்டியில் இலங்கை அணியில் பதிரணவுக்கு இடம் கிடைப்பது நிச்சயம்.
சிஎஸ்கே-வை தொடரும் மஞ்சள் படை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி இந்த தொடரோடு ஓய்வுப் பெறக்கூடும் என பேசப்பட்டு வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக சிஎஸ்கே விளையாடும் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸின் மஞ்சள் படை (ரசிகர்கள்) அதிகமாக குவிந்து விடுகின்றனர். சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈடன் கார்டன் மைதானமா அல்லது சேப்பாக்கம் மைதானமா என கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு தோனிக்காக ரசிகர்கள் குவிந்தனர். இந்த ஆட்டத்திலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைவிட, சிஎஸ்கேவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












