சொந்த மண்ணில் மீண்டும் தோற்ற விராட் கோலியின் வேதனைப் பேச்சுக்கு என்ன காரணம்?

பட மூலாதாரம், BCCI/IPL
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐ.பி.எல். டி20 தொடரின் 2வது பகுதியை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து வந்த அந்த அணி அனைத்து வீரர்களின் அர்ப்பணிப்பான பங்களிப்பால், ஆர்சிபியை வென்று தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த ஐ.பி.எல். டி20 போட்டியின் 36-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி. பெங்களூரு அணி முதலில் அதிரடியாக தொடங்கினாலும் வெற்றிக்கு தேவையான 200 ரன்களை அந்த அணியால் எட்ட முடியாமல் போனது.
201 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் துரத்திச் சென்ற ஆர்சிபி அணியிடம் இருந்து கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங் ஆகியவற்றால் வெற்றியைப் பறித்தது கொல்கத்தா ரைடர்ஸ் அணி.
இந்த வெற்றியின் மூலம், கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்விகள் என மொத்தம் 6 புள்ளிகளுடன் 7வது இடத்தில் இருக்கிறது. ஆர்சிபி அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது.
ஆர்சிபி-க்கு சுயாஸ் சர்மா கொடுத்த அதிர்ச்சி
நடப்பு ஐபிஎல் தொடரில் அறிமுகமாகியுள்ள 19 வயதான சுயாஸ் சர்மா சுழற்பந்து வீச்சில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய ஆட்டத்திலும் இது தொடர்ந்து.
முதல் 2 ஓவர்களுக்கு பெங்களூர் அணி 30 ரன்களை கடந்திருந்த நிலையில், மூன்றாவது ஓவரை வீச வந்த சுயாஸ் , டூ ப்பிளசிஸ் விக்கெட்டை வீழ்த்தி பெங்களூருக்கு அதிர்ச்சி கொடுத்தார். சுயாஸ் வீசிய அடுத்த ஓவரில் ஷாபாஸ் அகமத் (2) வெளியேற, பெங்களூரு அணிக்கு நெருக்கடி தொடங்கியது.

பட மூலாதாரம், BCCI/IPL
ஜேஸன் ராய் அடித்தளம்
கொல்கத்தா வெற்றிக்கும், ரன் குவிப்புக்கும் ஜேஸன் ராய் அடித்தளம் அமைத்துக் கொடுத்தார். ஜெகதீசனோடு சேர்ந்து களமிறங்கிய ஜேஸன் ராய், ஆர்சிபி பந்துவீச்சை சிதைத்துவிட்டார். பவுண்டரி, சிக்ஸர்கள் என பவர்ப்ளேயில் 10 ரன்ரேட்டை ஜேஸன் ராய் எகிறச் செய்தார். ஷாபாஸ் அகமது வீசிய ஓவரில் 4 சிக்ஸர்களை ராய் பறக்கவிட்டார். 2022-ஐபிஎல் தொடரில் இருந்து 11 தொடக்க ஜோடியை கொல்கத்தா பரிசோதித்த நிலையில் இப்போதுதான் சரியான நபரைப் பிடித்துள்ளது.
ஜேஸன் ராய் பேட்டிங் ஒருபுறம் அதிவேகத்தில் செல்ல, ஜெகதீசனின் ஆட்டமோ ஆமை வேகத்தில் இருந்தது. ஆர்சிபி பந்துவீச்சை நொறுக்கி எடுத்த ராய் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார். வியாசக் பந்துவீச்சில் யார்க்கரில் க்ளீன் போல்டாகி 56 ரன்களில் ராய் வெளியேறினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய ரிங்கு சிங், டேவிட் வீஸ் தங்கள் பங்களிப்பை வழங்கினார். அசுர ஃபார்மில் இருக்கும் ரிங்கு சிங், 10பந்துகளில் 18 ரன்களும், வீஸ் 2 சிக்ஸர்களுடன் 12 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்து 200 ரன்கள் ஸ்கோரை எட்ட உதவினர்.
ஆட்டத்தின் தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும் தொடங்கியதில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரன் ரேட்டுக்கு இணையாகவே ஆர்சிபி அணியும் சென்றது. இதனால் வெற்றி பெற்றுவிடும் என்றே ரசிகர்கள் நம்பினர்.
ஆனால், 12-வது ஓவரில் மகிபால் லாம்ரோர், கோலி கூட்டணி உடைந்தபின் ஆட்டத்தில் சரிவு தொடங்கியது. 113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த ஆர்சிபி அணி அடுத்த 41 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
சொந்த மண்ணில் 2-ஆவது தோல்வி
ஆர்சிபி அணி தனது சொந்த மைதானத்தில் இந்த சீசனில் சந்தித்த 2வது தோல்வி இதுவாகும்.
ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதால் 3வது முறையாக விராட் கோலி கேப்டன் பொறுப்பேற்றார். கோலி கேப்டன் பொறுப்பேற்று 2 முறையும், எதிரணியை டிபெண்ட் செய்து வென்றிருந்தது. ஆனால் , இந்த சீசனில் 2வது முறையாக சேஸிங் செய்து, அதில்ஆர்சிபி தோற்றுள்ளது.

பட மூலாதாரம், ANI
கோலியின் புதிய சாதனை
பெங்களூரு அணி தோல்வியை தழுவிய போதிலும், விராட்கோலி நேற்று புதிய சாதனையை படைத்தார். டி20 போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 3ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும், டி20 போட்டியில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 3ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
இதற்கு முன் வங்கதேச பேட்ஸ்மேன் முஸ்பிகுர் ரஹ்மான் மட்டும்தான் ஒரே மைதானத்தில் 2985 ரன்கள் குவித்து சாதனை செய்திருந்தார். அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 37 பந்துகளில் 54 ரன்கள்(6பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இந்த சீசனில் கோலி அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். மேலும், இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்களை நிறைவு செய்த முதல் இந்திய பேட்ஸ்மேனும் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீசன் தொடங்கியதில் இருந்தே விராட் கோலி பேட்டிங்கில் பட்டையைக் கிளப்பி வருகிறார். “கிளாசிக் கோலி”யை மீண்டும் ரசிகர்கள் பார்த்தது போன்ற பிரமிப்பையும், நினைவுகளையும் பேட்டிங் கிளறிவிடுகிறது.
குறிப்பாக இந்த சீசனில் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக கோலி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். வேகப்பந்துவீச்சில் 111 பந்துகளை எதிர்கொண்ட கோலி 190 ரன்களைக் குவித்துள்ளார், சராசரி 95 ஆகவும், 171 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்துள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
வெற்றியை தாரைவார்த்துவிட்டோம்
ஆட்டம் ஆர்சிபி பக்கம் சென்றதுபோன்று காணப்பட்டபோது, கோலி அடித்த ஒவ்வொரு பவுண்டரி, சிக்ஸருக்கும் அரங்கில் இருந்த ரசிகர்கள் அடித்த விசில், கரகோஷம் காதைப் பிளந்தது. ஆனால், ரஸல் வீசிய 13 ஓவரில் விராட் கோலி அடித்த ஷாட்டை லாங்கான் திசையில் வெங்கடேஷ் கேட்ச் பிடித்தபின், மைதானத்தில் ரசிகர்கள் திடீரென சோகமாகினர். கோலி ஆட்டமிழந்தவுடன், மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகத்தை இழந்து, திடீரென மாயன அமைதி நிலவியதைக் காண முடிந்தது.
தோல்விக்குப் பின் விராட் கோலி கூறுகையில். “நேர்மையாகச் சொன்னால், நாங்கள் வெற்றியைத் தாரைவார்த்துவிட்டோம். மைதானத்தில் பீல்டிங்கில் சிறப்பாகச் செயல்படாததால், இந்த தோல்விக்கு நாங்கள் தகுதியானவர்கள்தான்.
பந்துவீச்சாளர்கள் சிறப்பான பணியைச் செய்தார்கள், ஆனால், பேட்ஸ்மேன்கள் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. டி20 கிரிக்கெட்டில் இலவசம் என்பதைப் போல், வெற்றியை எளிதாக கொல்கத்தாவிடம் கொடுத்துவிட்டோம். இந்த ஆட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை.
அதேநேரம், விளையாடிய விதம் பெருமையாக இருக்கிறது, ஆனால் உயர்ந்த தரத்தில் இல்லை, இதற்கு வெட்கப்படுகிறேன். சில தருணங்களில் ஆட்டத்தை மாற்றக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டோம். கேட்சுகளைத் தவறவிட்டதால் கூடுதலாக 30 முதல் 40 ரன்களை இழக்க நேர்ந்தது” எனத் தெரிவித்தார்
ஆர்சிபி தோல்விக்கான காரணங்கள்
ஃபா டூப்பிளசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல் ஆகிய மும்மூர்த்திகள்தான் அணியின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்து வருகிறார்கள். இந்த 3 பேருமே அல்லது யாரேனும் இருவரும் மிகப்பெரிய ஸ்கோர் செய்யும் போதொல்லம் பெரும்பாலும் ஆர்சிபி வெல்கிறது. இந்த 3 பேட்ஸ்மேன்களும் சொதப்பும்போது ஆர்சிபி அணி தோல்வி அடைகிறது.
ஆர்சிபி அணியில் வலுவான நடுவரிசை பேட்ஸ்மேன்கள் இல்லை. விக்கெட்டை நிலைநிறுத்தி சேஸிங் செய்யவோ அல்லது ரன்களை குவிக்கவோ சரியான வீரர்கள் இந்த 3 பேட்ஸ்மேன்களைத் தவிர இல்லை என்பதே நிதர்சனம்.
இந்த சீசனில் முதல்முறையாக பவர்ப்ளேயில் ஆர்சிபி அணி 3 விக்கெட்டுகளை இழந்தது. பவர்ப்ளேயில் 58 ரன்களைச் சேர்த்தாலும், டூப்பிளசிஸ்(17), ஷாபாஸ் அகமது(2), மேக்ஸ்வெல்(5) ஆகிய 3பெரிய விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகும்.

பட மூலாதாரம், ANI
“கேட்ச் லாஸ், மேட்ச் லாஸ்”
ஒரு போட்டியில் ஒரு வீரர் கேட்சை நழுவவிடுவது ஆட்டத்தின் வெற்றியை நழுவவிடுவதற்கு சமம் என்பார்கள். ஆனால், நேற்று ஆர்சிபி அணி வீரர்கள், கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவின் கேட்சை ஒருமுறை அல்ல, 2 முறை தவறவிட்டனர். அந்த கேட்சை தவறவிட்டதற்கு வெற்றியை விலையாகக் கொடுத்தனர்.
13-வது ஓவரில் வியாசக் வீசிய ஓவரில் ராணா 5 ரன்னில் இருந்தபோது கொடுத்த கேட்சை சிராஜ் தவறவிட்டார். அதன்பின் சிராஜ் வீசிய 15வது ஓவரில் ராணா 19 ரன்களில் இருந்தபோது ஹர்சல் படேல் கேட்சைத் தவறவிட்டார்.
இரு கேட்சுகளை தவறவிட்டதால் ராணா ஆர்சிபி பந்துவீச்சை துவம்சம் செய்து 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து வெளியேறினார்.
முதல் வாய்ப்பிலேயே ராணா கேட்சை பிடித்திருந்தால், ஆர்சிபி அணி 43 ரன்களே சேமித்திருக்கும், 2வது வாய்ப்பில் கேட்சைப் பிடித்திருந்தால்கூட 29 ரன்களைத் தடுத்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக கொல்கத்தா அணியின் ஸ்கோரை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருக்கலாம். ஆதலால் ஆர்சிபி வீரர்கள் கேட்சைக் கோட்டவிடவில்லை, மேட்சைக் கோட்டைவிட்டனர்.
அபாரமான பந்துவீச்சு
ஆர்சிபி அணியின் பேட்டிங்தான் நேற்று மோசமாக இருந்ததேத் தவிர பந்துவீச்சு இந்த சீசனில் சிறப்பாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, புதிய பந்தில் பந்துவீசும்போது, 7 போட்டிகளில் பவர்ப்ளேயில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி பந்துவீச்சாளர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
அதிலும் முகமது சிராஜ் இந்த சீசனில் 15 விக்கெட்டுகளுடன் மீண்டும் ஊதா தொப்பியை கைப்பற்றினார். இந்த சீசனில் பவர்ப்ளேயில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை வைத்துள்ள சிராஜ், 4.9 ஸ்ட்ரைக் ரேட் என குறைவாக வைத்துள்ளார். இந்த சீசனிலேயே 100 டாட் பந்துகளை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையயைும் சிராஜ் செய்துள்ளார்.

பட மூலாதாரம், BCCI/IPL
“டிகே” மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா?
தினேஷ் கார்த்திக்(டிகே) மீது ரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்களா என்ற கேள்வி நேற்றைய ஆட்டத்தில் எழுந்துள்ளது. கோலி, டூப்பிளசிஸ், மேக்ஸ்வெல் ஆகிய 3 பேட்ஸ்மேன்கள் சென்றநிலையில், அனுபவமிக்க பேட்ஸ்மேன், ஃபினிஷராக இருக்கும் தினேஷ் கார்த்திக் நிலைத்து ஆடாமல் 22ரன்கள் விக்கெட்டை பறிகொடுத்தார்.
கொல்கத்தா அணியின் கேப்டனாகவும், பல ஆண்டுகள் அணியில் பயணித்த தினேஷ் கார்த்திக் அந்த அணியின் பந்துவீச்சை நன்கு அறிந்தவர். குறிப்பாக வருண் சக்ரவர்த்தி தமிழக அணியில் இருந்தபோதே அவரின் பந்துவீச்சை அதிகமாகச் எதிர்கொண்டு ஆடி இருப்பார். ஆனால், நேற்று வருண் பந்துவீச்சில் டிகே விக்கெட்டை இழந்தது வேதனை. அதிலும், அணியில் இக்கட்டான நிலையில் அனுபவமான பேட்ஸ்மேன் பொறுப்பற்ற முறையில் தவறான ஷாட்டை ஆடி ஆட்டமிழந்ததால் ஆர்சிபி ரசிகர்கள் டிகே மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் எனத் தெரிகிறது. இந்த சீசனில் டிகே-யின் மோசமான ஃபார்ம், ஆட்டம் தொடர்ந்து வருகிறது.
4 தமிழக வீரர்கள்
இந்த ஆட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 4 வீரர்கள் விளையாடினர். இதில் கொல்கத்தாவில் வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ், ஜெகதீசன் ஆகியோரும் ஆர்சிபியில் தினேஷ் கார்த்திக்கும் இருந்தனர்.
வருண் பந்துவீசும்போதெல்லாம், ஜெகதீசனும், வருணும் தமிழில் உரையாடியது ரசிகர்களுக்கு உற்சாகமாக அமைந்தது. ஆனால், ஜெகதீசன் நேற்று பேட்டிங்கில் சொதப்பியதும், மந்தமாக ஆடியதும் வருத்தத்திற்குரியது. வெங்கடேஷ் பொறுப்புடன் பேட் செய்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பட மூலாதாரம், BCCI/IPL
அதிக டாட் பால்கள்
கொல்கத்தா அணியோடு ஒப்பிடும்போது ஆர்சிபி குறைவான டாட் பந்துகளை நேற்று விட்டும் தோற்றுள்ளது. ஆர்சிபி அணி, 31 டாட் பந்துகளை அதாவது 5 ஓவர்களில் ரன் அடிக்காமல் கடந்தது. ஆனால், கொல்கத்தா அணி 37 டாட் பந்துகளை விட்டும் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை டூப்பிளசிஸ், விராட் கோலி அடித்து நொறுக்கியதை புரிந்துகொண்ட கேப்டன் ராணா விரைவாகவே சுயாஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தியை பந்துவீசச் செய்தார். நடுப்பகுதியில் சுனில் நரேன் பந்துவீச்சு என சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தி ஆர்சிபி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியளித்தார்.
அதற்கு ஏற்றார்போல் பவர்ப்ளேக்குள்ளாக டூப்பிளசிஸ், ஷாபாஸ் அகமது விக்கெட்டை சுயாஷ் ஷர்மாவும், மேக்ஸ்வெல் விக்கெட்டை வருணும் வீழ்த்தினர். நடுப்பகுதியில் லாம்ரோர், தினேஷ் விக்கெட்டையும் வருண் கைப்பற்றி அசத்தினார். வருண், சுயாஷ் இருவர் கட்டுக்கோப்பாக பந்துவீசினர், ஆனால், ஃபார்மில் இல்லாத நரேன் 41 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
குறிப்பாக ரஸலின் பந்துவீச்சு கடைசி நேரத்தில் ஆர்சிபிக்கு நெருக்கடியாக இருந்தது. விராட் கோலியின் விக்கெட்டை ரஸல் வீழ்த்தியபோதே, ஆட்டம் கொல்கத்தா அணியின் பக்கம் சென்றது. கோலி ஆட்டமிழந்த அந்தத் தருணம்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகும்.
வெற்றிக்கு பின் ராணா சொன்னது என்ன?
வெற்றி குறித்து கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணா கூறுகையில் “ நாங்கள் குழுவாக ஆடத் தொடங்கினால், வெற்றிவந்துவிடும் என்று கடந்த 4 ஆட்டங்களாக நான் தெரிவித்திருந்தேன், அது நடந்துவிட்டது.
ஓய்வறையில் வீரர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் பேசினார்கள், தன்னம்பிக்கையை இழக்காமல் ஆடியது வெற்றிக்கு இட்டுச் சென்றது. சிறந்த ஸ்கோரை அமைத்து, சுழற்பந்துவீச்சால் நம்பிக்கை பெற்றோம். ஆடுகளம் நன்கு உலர்ந்திருந்ததால், நன்றாக பந்துசுழன்றது. சுயாஷ் எந்த நேரத்தில் பந்துவீச அழைத்தாலும் தயாராக இருப்பார், சிறப்பாகப் பந்துவீசினார்” எனத் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












