பிகார் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு : களத்தில் உள்ள நட்சத்திர வேட்பாளர்கள் யார் ?

பட மூலாதாரம், Getty Images
243 தொகுதிகளை கொண்ட பிகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதி இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ல் நடக்க உள்ளது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த நிதிஷ்குமார் முதலமைச்சராக உள்ளார்.
நவம்பர் 6-ஆம் தேதி 121 தொகுதியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியிருந்தன. மீதமுள்ள 122 தொகுதிகளுக்கு நவ. 11 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல்கட்ட வாக்குப்பதிவு
பிகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, 18 மாவட்டங்களில் உள்ள 121 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்றது.
மொத்தம் 1,314 வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் போட்டியிட்டனர்.
இதன் சிறப்பு என்னவென்றால், பிகார் அரசியலில் முக்கியமான தலைவர்களின் தொகுதிகள் பலவும் முதல்கட்ட வாக்குப்பதிவிலேயே இடம்பெற்றுள்ளன.
தற்போது பாட்னா, முசாபர்பூர், தர்பங்கா, மாதேபுரா, சஹர்சா, கோபால்கஞ்ச், சிவான், சரண், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசராய், லக்கிசராய், முங்கர், ஷேக்புரா, நாளந்தா, பக்சர் மற்றும் போஜ்பூர் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
அதேசமயம், பிரசாந்த் கிஷோர் தலைமையிலான 'ஜன் சுராஜ்' கட்சியும் இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. இதனால் வழக்கமான அரசியல் கணக்கீடுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
பல தொகுதிகளில் சிறிய கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்களும் முக்கிய பங்கை வகிக்கலாம்.
1. தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், Getty Images
முதல்கட்ட வாக்குப்பதிவில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவராக, பிகாரின் முன்னாள் துணை முதலமைச்சரும் மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் இடம்பெற்றுள்ளார்.
தேஜஸ்வி ரகோபூர் தொகுதியில் போட்டியிடுகிறார், அங்கு அவர் பாஜகவின் சதீஷ் குமார் சிங்கை எதிர்கொள்கிறார். தேஜஸ்வி இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆனால், 2010 தேர்தலில், இதே ரகோபூர் தொகுதியில், சதீஷ் குமார் ஜே.டி.யு. வேட்பாளராக போட்டியிட்டு, முன்னாள் முதலமைச்சரும் தேஜஸ்வியின் தாயாருமான ராப்ரி தேவியை தோற்கடித்தார்.
அதனால், ரகோபூர் தொகுதிக்கான போட்டி சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
2. தேஜ் பிரதாப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images
ஆர்ஜேடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு, தேஜ் பிரதாப் யாதவ் 'ஜனசக்தி ஜனதா தளம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.
ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப், மஹுவா தொகுதியில் இந்த முறை போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர், கடந்த தேர்தலில் இதே மஹுவா தொகுதியில் வெற்றி பெற்ற ஆர்ஜேடி வேட்பாளர் முகேஷ் ரோஷன்.
3. சாம்ராட் சவுத்ரி

பட மூலாதாரம், Getty Images
நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில், பாஜக தரப்பில் துணை முதலமைச்சராக இருந்த சாம்ராட் சவுத்ரி, இந்த தேர்தலில் தாராப்பூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார். இந்த தொகுதியில் அவர் முதல் முறையாக போட்டியிடுகிறார்.
சாம்ராட் சவுத்ரி இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், கட்சிக்குள் அவரது அந்தஸ்து மேலும் உயரக்கூடும் என்று கருதப்படுகிறது.
இந்தத் தொகுதியில் அவர் ஆர்ஜேடி வேட்பாளர் அருண் குமாருக்கு எதிராக நேரடிப் போட்டியைச் சந்திக்கக் கூடும். 2021 இடைத்தேர்தலில், அருண் குமார் ஜேடியு வேட்பாளர் ராஜீவ் குமார் சிங்கிடம் 4,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
4. விஜய் குமார் சின்ஹா

பட மூலாதாரம், Getty Images
நிதிஷ் குமார் அரசாங்கத்தில் முன்னாள் துணை முதலமைச்சராக பணியாற்றிய விஜய் குமார் சின்ஹா, லக்கிசராய் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவர் இந்தத் தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாகப் போட்டியிடுகிறார்.
ஒரு காலத்தில் நிதிஷ் குமாரை பெரிதும் விமர்சித்தவர் என அறியப்பட்ட விஜய் குமார் சின்ஹா, தற்போது பிகார் மாநிலத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
5. கேசரி லால் யாதவ்

பட மூலாதாரம், Getty Images
போஜ்புரி பாடகரும் நடிகருமான சத்ருகன் யாதவ் (கேசரி லால் யாதவ் என்றும் அறியப்படுகிறார்) சப்ரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து ஆர்ஜேடி வேட்பாளராக முதல்கட்டத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இது ஒரு நகர்ப்புற தொகுதி. பாரம்பரியமாக இது ஆர்ஜேடியின் வலுவான ஆதரவுப் பகுதி என கருதப்படுவதில்லை.
ஆனால், கேசரி லால் யாதவுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், அந்த நிலையை மாற்ற முயற்சி செய்து வருகிறது ஆர்ஜேடி.
இந்தத் தொகுதியில் அவருக்கு எதிராக பாஜக வேட்பாளர் சோட்டி குமாரி போட்டியிடுகிறார். சோட்டி குமாரிக்கு ஆதரவாக, போஜ்புரி திரைப்பட நட்சத்திரங்களான பவன் சிங் மற்றும் தினேஷ் லால் யாதவ் (நிராஹுவா) பரப்புரை செய்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












