கிரேட் அட்ராக்டர்: சூரியன்களை விழுங்கும் பிரபஞ்சத்தின் புரியாத புதிர்

சூரிய குடும்பம்

பட மூலாதாரம், Getty Images

சூரியக் குடும்பத்தின் மாதிரி படத்தை வரையச் சொல்லி பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் அளிக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர் வானியல் ஆய்வாளர்கள்.

சூரியக் குடும்பத்தில் உள்ள பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியனை மையமாக கொண்டு சுற்றி வருகின்றன என்பது நாம் அறிந்ததே. இதேபோன்று, சூரியன் நிலையாக இருப்பதாகவும், பூமி உள்ளிட்ட பிற கோள்கள் தான் அதனை சுற்றி வருகின்றன என்றும் நமக்கு கற்பிக்கப்பட்டது.

எனினும், சூரியக் குடும்பம் அமைந்துள்ள பால்வெளி மண்டலம், விண்மீன் மண்டலத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்கள் உள்ளிட்டவை பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தின் வழியாக வினாடிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்து வருகின்றன என்கின்றனர் வானியலாளர்கள். பல ஆண்டுகளாக தொடரும் இந்த பயணத்திற்கு ஓர் இலக்கு உண்டு என்றும் அறியப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த பிரபஞ்சத்தில் பெரும் சக்தியின் இருப்பை 1970 களில் வானவியலாளர்கள் குழுவின் கண்டுபிடிப்புகள் தீர்மானித்தன. இந்த சக்திக்கான மூலத்தை நோக்கி, விண்வெளி மண்டலத்தின் பயணம் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இந்த சக்தியே கிரேட் அட்ராக்ட்டர் (Great Attractor) என்று அழைக்கப்படுகிறது.

கிரேட் அட்ராக்ட்டர் எனும் புதிர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இருண்ட ஆற்றல் போன்ற, விஞ்ஞானம் இதுவரை அறியாத பல சக்திகள் பிரபஞ்சத்தில் உள்ளன

நம்மால் தெளிவாக காண இயலாத ஒன்றின் திசையில் விண்மீன் திரள்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகால அண்ட பரிணாம வளர்ச்சியின் விளைபொருளான கிரேட்டர் அட்ராக்ட்டர் தான் இந்த இயக்கத்தின் மையப் புள்ளி என்று பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார் நியூயார்க்கின் ஸ்டோனி புரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் துறை பேராசிரியரும், அண்டவியல் நிபுணருமான பால் சுட்டர்.

ஈர்க்கக்கூடிய வேகத்தில் பயணிக்கும் திறனை விண்மீன்கள் பெற்றிருந்தாலும், கிரேட் அட்ராக்ட்டரால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கை நோக்கிய இவற்றின் பயணம் தோல்வி அடையக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

கண்ணுக்கு தெளிவாக புலப்படாத இருண்ட ஆற்றலின் (dark energy) முடுக்க விசை, சில பில்லியன் ஆண்டுகளில் இந்த பிரபஞ்சத்தை அழிக்கலாம் என்பதால், விண்மீன் திரள்கள் உள்ளிட்டவை தங்களது இலக்கை ஒருபோதும் அடையாது என்கிறார் பால் சுட்டர்.

கிரேட் அட்ராக்ட்டர் எனும் புதிர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரேட் அட்ராக்ட்டர் அமைவிடத்தைக் காட்டும் ஹப்பிள் தொலைநோக்கியின் படம்

நாசா விளக்குவது போல, இருண்ட ஆற்றல் என்பது பிரபஞ்சத்தை ஊடுருவி அதன் விரிவாக்கத்தை துரிதப்படுத்தும் ஓர் மர்ம சக்தியாகும்.

இந்த சக்தியானது விண்மீன் திரள்களுக்குள் ஊடுருவி, தற்போது நாம் அறிந்திருக்கும் பிரபஞ்சத்தின் கட்டமைப்பு அழியும்வரை பரவக்கூடும்.

எனவே, கிரேட் அட்ராக்ட்டரின் விளைவுகளை புரிந்து கொள்வது, பிரபஞ்சத்தின் கட்டமைப்பை அறியும் முயற்சியுடன் தொடர்புடையது.

இருண்ட பொருளான கிரேட்டர் அட்ராக்ட்டர் விண்மீன் திரள்களை ஈர்ப்பத்துடன், பிரபஞ்சத்தை ஒருங்கிணைத்து வைத்திருக்க உதவுகிறது. ஆனால், இதற்கு மாறாக, இருண்ட ஆற்றல் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

பிரபஞ்சத்தை பற்றிய ஆய்வில், அது எப்படி ஓர் ஒழுங்கமைப்புடனும், பல்வேறு பரிணாமங்களுடனும் ஏன் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவது மிகவும் முக்கியமானது என்று பிபிசி முண்டோவிடம் விளக்குகிறார் பொகோட்டா கோளரங்கத்தில் பணியாற்றும் கொலம்பிய வானியற்பியல் அறிஞரான கார்லோஸ் அகஸ்டோ மோலினா.

‘கிரேட் அட்ராக்ட்டர்’ கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?

20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ;ஹப்பிள்’ தொலைநோக்கி விண்வெளியில் நிறுவப்பட்டதன் பயனாக விண்வெளி ஆய்வுகளில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த தொலைநோக்கியின் மூலம் விண்வெளியில் தாங்கள் காணும் எல்லாவற்றையும் எப்படியாவது ஒழுங்குப்படுத்த வேண்டும் என்று பெரிய சவாலை வானியல் ஆய்வாளர்கள் எதிர்கொண்டனர்.

வானியல் ஆராய்ச்சிகளின் பயனாக, நமது சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன் மண்டலத்தின் இயக்கம் ஆகியவை குறித்து 1970 களில் விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர். அத்துடன் இவற்றின் இயக்கம் அருகில் உள்ள விண்மீன் திரள்களின் இயக்கத்துடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அதில், இவை அனைத்தும் பிரபஞ்சத்தின் விரிவாக்கத்தில் ஒரே திசையில் செல்வதாக தோன்றியது என்கிறார் சுட்டர்.

கிரேட் அட்ராக்ட்டர் எனும் புதிர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரேட் அட்ராக்ட்டரை நோக்கி செல்லும் விண்மீன் மண்டலம் மற்றும் பால்வெளி மண்டலம்

இருப்பினும் சூரியக் குடும்பம், விண்மீன்கள் மண்டலம் உள்ளிட்டவற்றின் இயக்கத்திற்கு கூடுதலாக ஒரு தெளிவற்ற திசையமைப்பு இருக்கலாம் என்ற முக்கியமான அம்சத்தையும் வானியல் ஆய்வாளர்கள் கவனிக்க தொடங்கினர்.

தொலைநோக்கிகளின் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வந்ததன் பயனாக, உண்மையில் அனைத்து விண்மீன் திரள்களின் பயண திசை பொதுவானது என்பதை 1986இல் விஞ்ஞானிகளால் தீர்மானிக்க முடிந்தது.

இந்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக, கிரேட் அட்ராக்ட்டர் என்பது உண்மையில் என்ன என்று வானியல் ஆய்வாளர்கள் கண்டறிய முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

ஆனாலும் இதுகுறித்த முக்கிய கோட்பாடு ஒன்று உள்ளது. அதன்படி, ‘லானிகேயா’ எனப்படும் விண்மீன் திரள்களின் பெரும் கூட்டத்துக்குள் அமைந்துள்ள இருண்ட கட்டமைப்பே ‘கிரேட் அட்ராக்ட்டர்’ என்று கருதப்படுகிறது. இது 300 மில்லியன் ஒளி ஆண்டுகளுக்கு மேல் அல்லது அதற்கு குறைவான தொலைவில் விண்மீன் திரள்களை இழுக்கும் திறனை கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.

விண்மீன் திரள்களை இழுக்கும் திறன் படைத்த கிரேட் அட்ராக்ட்டர், பூமியில் இருந்து சுமார் 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

பிரபஞ்சத்தின் புதிரான கூறுகளில் ஒன்றாக இருக்கும் இந்த இருண்ட கட்டமைப்பு கவனிக்க முடியாத காரணியாக உள்ளது. பிரபஞ்சத்தின் மீது செலுத்தும் ஈர்ப்பு காரணியாக கிரேட் அட்ராக்ட்டர் இருக்கிறது.

வானியல் தொடர்பான ஆய்வுகள் மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருந்தாலும், கிரேட் அட்ராக்ட்டர் என்றால் உண்மையில் என்ன என்பது குறித்த மர்மம் நீடித்து கொண்டே தான் இருக்கிறது. இதுவே இதுகுறித்து கூடுதலாக ஆராய வேண்டும் என்ற தூண்டுதலை பால் சுட்டருக்கு ஏற்படுத்தியது.

கிரேட் அட்ராக்ட்டர் எனும் புதிர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்மீன் மண்டலத்தில் இருந்து 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள கிரேட் அட்ராக்ட்டர்

கிரேட் அட்ராக்ட்டரின் அமைவிடம், ஆய்வாளர்கள் இதுதொடர்பாக கூடுதலாக அறிய முடியாமல் செய்கிறது. இது நமது விண்மீன் மண்டலத்திற்கு முற்றிலும் எதிர்புறத்தில் அசெளரிகமான இடத்தில் அமைந்துள்ளது என்று சுட்டர் சுட்டிக்காட்டுகிறார்.

பிரபஞ்சத்தில் இயங்கும் ஆயிரக்கணக்கான நட்சத்திரங்கள், கோள்கள் உள்ளிட்டவை இந்த சக்தி குறித்து முழுமையாக பகுப்பாய்வு செய்ய அனுமதிக்கவில்லை என்கிறார் சுட்டர். நட்சத்திரங்கள், கோள்கள் உள்ளிட்டவற்றின் இயக்கங்களால் எழும் சத்தம், கிரேட் அட்ராக்ட்டர் மீதான கவனத்தை சிதைக்கின்றன என்கிறார் அவர்.

இது கருந்துளை அல்ல

கிரேட் அட்ராக்ட்டர் கருந்துளை அல்ல என்று தெளிவாகக் கூறும் சுட்டர் மற்றும் மோலினா, இது முற்றிலும் வேறுபட்ட சக்தி. பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளைகளுக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்கின்றனர் அவர்கள்.

சூரியனில் ஹைட்ரஜன் வாயு ஹீலியமாக மாறும் செயல் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கும். இதன் விளைவாக சூரியனின் மையப் பகுதியில் அதிக ஈர்ப்பு விசை ஏற்படும். இந்த செயல் நிகழாமல் போகும்போது கருந்துளை என்ற ஒன்று உருவாகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இவ்வாறு தீர்மானிப்பதன் மூலம் விண்மீன்களை இழுக்கும் தன்மை கொண்ட வழக்கத்துக்கு மாறான சக்திகள், பிரபஞ்சத்தின் பிற பகுதிகளும் இருந்தன என்பதை ஆய்வாளர்களால் நிறுவ முடிந்தது.

இதனைப் பற்றி அறிவது, பிரபஞ்சத்தைப் பற்றிய புரிதலுக்கான அடிப்படை பணிகளில் ஆய்வாளர்களுக்கு மிகவும் உதவியாக உள்ளது என்று கூறும் மோலினா, கிரேட் அட்ராக்ட்டர் போன்ற கட்டமைப்புகள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றி அறியவும், ஈர்ப்புத் திறனுக்கேற்ப இவற்றை வகைப்படுத்தவோ, தரவரிசைப்படுத்தவோ இயலும் என்கிறார் அவர்.

கிரேட் அட்ராக்ட்டர் போன்ற பெரும் சக்திகள் ஒளி, ஈர்ப்பு உள்ளிட்ட பிற சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு கொள்கின்றன என்பது குறித்து கூடுதலாக அறிவதன் மூலம், இந்த பிரபஞ்சத்தின் கட்டமைப்பை வகைப்படுத்த இயலும் என்கிறார் மோலினா.

கிரேட் அட்ராக்ட்டர் எனும் புதிர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபஞ்சம் குறித்த வானியல் ஆய்வாளர்களின் ஆய்வு பயணத்தில் புதிய தொடக்கத்தை அளிக்கும் கிரேட் அட்ராக்ட்டர்.

இந்த கட்டமைப்புகளை பற்றி அறிந்து கொள்வதன் மூலம் விண்வெளி சூழலின் எதிர்காலத்தைப் பற்றி அறிஞர்களால் ஆராய இயலும் என்பதும் இதில் மற்றொரு முக்கியமான அம்சம்.

விண்மீன்கள் எவ்வளவு வேகத்தில் நகர்கின்றன மற்றும் அவை எங்கு செல்கின்றன என்பதை பற்றியெல்லாம் அறிவது எதிர்காலத்தில் இவை எவ்வாறு செயல்படும் என்பது குறித்து ஆராய்வதற்கு உதவும் என்கிறார் சுட்டர்.

விண்மீன் திரள்களின் பயணம் குறித்த ஆய்வுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் மூலம், இந்த பயணத்தின் போக்கை விஞ்ஞானிகள் அறிந்திருக்கிறார்கள்.

பிரபஞ்சத்தில் மற்றொரு சக்தி வாய்ந்த ஆற்றல் இருப்பதாக கூறும் சுட்டர், அது இருண்ட ஆற்றல் (Dark Energy) என்று அழைக்கப்படுவதாக கூறுகிறார். ஈர்ப்பு விசைக்கு முற்றிலும் எதிரான இந்த ஆற்றல், பொருட்களை தன்பால் இழுப்பதற்கு பதிலாக அவற்றை தள்ளும் என்கிறார் அவர்.

இதன் காரணமாக, இன்னும் சில மில்லியன் ஒளி ஆண்டுகளில் பால்வெளி மண்டலத்தில் உள்ள கோள்கள், விண்மீன் திரள்கள் உள்ளிட்டவை உண்மையில் கிரேட் அட்ராக்ட்டரை நெருங்கும். அப்போது நாம் மிகக் குறைவாக அறிந்திருக்கும் இருண்ட ஆற்றல், கிரேட் அட்ராக்ட்டரை நோக்கிய விண்மீன்களின் பயணத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். அதன் விளைவாக இந்த பிரபஞ்சத்தில் ஏற்கெனவே உள்ள அனைத்தும் அழிய அதிக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் விஞ்ஞானிகள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: