தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: சந்தேகங்களும் பதில்களும்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
பிகார் மாநிலத்தை அடுத்து தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (Special Intensive Revision - SIR) நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிகாரில் நடந்த சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது பல லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உண்மையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது என்ன நடக்கும்?
இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் பிகார் மாநிலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்டது.
இந்தத் திருத்தத்தின் இறுதியில் பிகாரில் இருந்த 7.24 கோடி வாக்காளர்களில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மரணம், இடமாறுதல், இரு இடங்களில் வாக்குரிமை இருந்தது, தகவல் இன்மை போன்ற காரணங்களால் இவர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறியது.
ஆனால், இந்த விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பலரது பெயர்கள் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டின. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்களே இருக்கும் நிலையில், இது பிகார் மாநிலத்தில் மிகப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது.
2026ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறது. இந்த நிலையில், அக்டோபர் மாதம் முதல் தமிழ்நாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகிவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்றால் என்ன, பிகாரில் என்ன நடந்தது, இது போன்ற தீவிர திருத்தங்கள் எதற்காக மேற்கொள்ளப்படுகின்றன என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை இங்கே காணலாம்.
பிகாரில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் சர்ச்சையானது ஏன்?
பிகாரில் சட்டமன்றத் தேர்தல்கள் இந்த ஆண்டின் இறுதியில் நடக்கவிருக்கின்றன. இந்த நிலையில், பிகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ளப்போவதாக ஜூன் மாதத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கு முன்பாக, 2003ஆம் ஆண்டில் இதுபோன்ற சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பிஹாரில் நடந்தது. 22 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு பிஹாரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவுசெய்திருந்தது.
இந்தப் பணிகள் ஜூலை மாதம் துவங்கின. ஓரு மாதம் நடந்த பணிகளின் முடிவில் வரைவு வாக்காளர் பட்டியல் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 65 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன.
இவ்வளவு பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை எதிர்த்து Association for Democratic Reforms என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தேர்தல் ஆணையம், நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை வெளியிட வேண்டிய அவசியம் இல்லையென்றும், பெயர் நீக்கத்திற்கான காரணங்களை சொல்ல வேண்டிய அவசியமில்லையென்றும் பதில் மனு தாக்கல் செய்தது.
இந்த விவகாரம் பிகாரில் பெரிதாக வெடித்தது. நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியலை வெளியிட இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஆகஸ்ட் மாத மத்தியில் நீக்கப்பட்டோரின் பட்டியல் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டன. பெயர் நீக்கம் செய்யப்பட்டோர் இது குறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடலாம் என அறிவிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சிறப்பு தீவிரத் திருத்தம் ஏன் செய்யப்படுகிறது?
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (RP Act 1950) 21வது பிரிவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பது, திருத்துவது குறித்துப் பேசுகிறது. இந்தப் பிரிவின்படி, இந்தியத் தேர்தல் ஆணையம் எந்த நேரத்திலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள முடியும்.
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வேகமான நகர்ப்புறமயமாக்கமும் உள்நாட்டு இடப்பெயர்வும் வாக்காளர் பட்டியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், ஒரே நபரின் பெயர் வாக்காளர் பட்டியலில் பல முறை இடம் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியலில் இந்திய குடிமக்கள் மட்டுமே இடம்பெறுவதை உறுதி செய்யவும் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
இதற்காகவே, நாடு முழுவதும் ஒரு சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவுசெய்தது. இந்த நடவடிக்கை பிகாரில் இருந்து துவங்கியது.

பட மூலாதாரம், Getty Images
சிறப்பு தீவிரத் திருத்தம் எப்படி மேற்கொள்ளப்படும்?
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, பூத் மட்டத்திலான அதிகாரிகள் ஒவ்வொரு வீடாகச் சென்று, வாக்காளர் விவரப் படிவங்களைக் கொடுத்து பூர்த்தி செய்து திரும்பப் பெறுவார்கள். எந்த மாநிலத்தில் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடக்கிறதோ, அந்த மாநிலத்தில் அதற்கு முன்பு சிறப்புத் திருத்தம் நடந்த பிறகு உருவாக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் தங்கள் படிவங்களை மட்டும் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது.
ஏற்கெனவே இருந்த வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத, மற்றவர்கள் பிறந்த தேதியையும் இடத்தையும் உறுதிசெய்ய தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சான்றாக அளிக்கவேண்டும். பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், கல்விச் சான்றிதழ் உள்ளிட்டவை இதில் ஏற்கப்படும்.
வழக்கமான அடையாள அட்டைகளான வாக்காளர் அடையாள அட்டைகள், பான் கார்டுகள், ஆதார் அட்டைகள், ரேஷன் கார்டுகள், 100 நாள் வேலைத் திட்ட கார்டுகள் இந்த பட்டியலில் இல்லை. (சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்ற அமர்வு, இதில் ஆதார் அடையாள அட்டையை ஏற்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்திருக்கிறது.)
படிவங்களை பூர்த்தி செய்து பெறும் பூத் மட்டத்திலான அதிகாரி, அந்த வாக்காளர் குறித்த பரிந்துரையை அதில் குறிப்பிடுவார்கள். இந்தப் படிவங்களின் அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.
இதற்குப் பிறகு விடுதல்கள், ஆட்சேபனைகள் இருந்தால் அது தொடர்பாக வாக்காளர்கள் விண்ணப்பித்து, திருத்த வாய்ப்பளிக்கப்படும். அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் ஆணையம் பட்டியலிட்டிருக்கும் ஆவணங்களில் ஒன்றை அளிப்பது, பிஹார் போன்ற ஒரு பின்தங்கிய மாநிலத்தில் வசிக்கும் ஏழைகளால் இயலாத காரியம் என பல எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இதையடுத்து ஜூலை 6ஆம் தேதி தேர்தல் ஆணையம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் "இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்களைத் தர இயலவில்லையெனில் தேர்தல் பதிவு அதிகாரி (ERO) உள்ளூர் மட்டத்தில் விசாரணை செய்து முடிவெடுப்பார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சிறப்பு தீவிர திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் நடவடிக்கை தவிர, வேறு சில நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதாவது, வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கைகள், தொகுதிகளின் எல்லைகள் மாற்றியமைக்கப்படும். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மிகாமல் இருக்கும்படி வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படும். தேவையான இடங்களில் புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக சிறப்புத் தீவிரத் திருத்தம் எப்போது நடைபெற்றது?
தமிழ்நாட்டில் இதற்கு முன்பாக இதுபோன்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2002- 2005 காலகட்டத்தில் நடந்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வைத்து வாக்காளர்களைச் சரிபார்க்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்றது.
இந்த நடவடிக்கைகளின்போது தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. தேர்தல் ஆணையத்தில் உள்ள புள்ளிவிவரங்களின்படி 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ்நாட்டில் 4,72,52,271 வாக்காளர்கள் இருந்தனர். 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது இந்த எண்ணிக்கை 4,66,03,352 பேராகக் குறைந்தது. அதாவது 6,48,919 வாக்காளர்கள் குறைந்தனர்.
2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு நடந்த சரிபார்ப்பு நடவடிக்கையின்போது வாக்காளர் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்தது. அதாவது 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது 4,66,03,352ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, 4,16,20,460ஆகக் குறைந்தது. அதாவது முந்தைய தேர்தலோடு ஒப்பிட்டால் 49,82,892 பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தன.

சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கைகளில் உள்ள கவலைகள் என்ன?
பிகார் மாநிலத்தை உதாரணமாகக் கொண்டால், தேர்தல் ஆணையம் சான்றுகளைக் கேட்கும்போது பலரால் தேர்தல் ஆணையம் குறிப்பிடும் 11 சான்றுகளில் ஒன்றைக் காட்ட முடியாமல் இருப்பது மிகப் பெரிய கவலையாக உள்ளது.
இதனால் எல்லோருமே வைத்திருக்கக்கூடிய ஆதார், குடும்ப அட்டை போன்ற ஆவணங்களை ஏற்க வேண்டுமென அரசியல் கட்சிகள் பலவும் வற்புறுத்துகின்றன. அடுத்ததாக, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பலர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்குச் சென்றிருப்பதால் அவர்களது பெயர்கள் நீக்கப்படக்கூடாது என்பது மற்றொரு கவலை.
ஆனால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் வேலை தேடி வந்துள்ள வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்போது தேர்தல் முடிவுகளில் எவ்விதமான தாக்கம் ஏற்படும் என்பது இங்குள்ள அரசியல் கட்சிகளின் கவலையாக இருக்கிறது.
எல்லைப் புற மாநிலங்களில் ஆவணங்களைத் தர முடியாதவர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக அடையாளம் காணப்படுவார்களோ என்ற அச்சமும் இருக்கிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












