சிறப்பு குழந்தைகளிடம் முதல் மதிப்பெண் வாங்கும் சென்னை ஆசிரியர் பற்றி தெரியுமா?

சிறப்பு குழந்தைகளிடம் முதல் மதிப்பெண் வாங்கும் சென்னை ஆசிரியர் பற்றி தெரியுமா?
படக்குறிப்பு, ஒவ்வொரு சிறப்பு குழந்தைக்கும் ஒவ்வொரு விதமாக சொல்லிக் கொடுக்கிறார் ஆசிரியர் பாக்கியலட்சுமி.
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

ஆசிரியர் என்றதும் உங்கள் மனதில் ஏற்படும் பிம்பங்கள் எதிலும் பொருந்தாத, சவால்கள் நிறைந்த நிஜவாழ்க்கையை வாழ்பவர் சென்னையை சேர்ந்த பாக்கியலட்சுமி(56). மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்து, அவர்களை அதிக மதிப்பெண் எடுக்கவைக்கும் ஆசிரியர்களை அதிகமாக கொண்டாடும் சமூகத்தில், இவரின் சாதனை வித்தியாசமானது. சென்னையில், பல மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள், மற்றவரின் துணை இன்றி, உடை உடுத்தவும், உணவை தாங்களாகவே உண்ணவும், சிறுநீர் கழிப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படவும் உழைத்த சிறப்பு ஆசிரியர் பாக்கியலட்சுமி.

சிறப்பு ஆசிரியர் என்பவர், மனவளர்ச்சி குன்றிய மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்று அறியப்படுகிறார். இதுபோன்ற ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு பாடங்களை கற்பிப்பதை காட்டிலும், அன்றாட வாழ்க்கையில் பிறரின் உதவி இல்லாமல் தன்னுடைய வேலைகளை சிறப்பு குழந்தை செய்துகொள்வதற்கு தயார் செய்வதுதான் முக்கியமானது.

சென்னையில் பல வீடுகளில் படுத்தபடுக்கையில் அல்லது சக்கரநாற்காலியில் அமர்ந்தநிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அடிப்படை வாழ்வியல் பாடங்களை சொல்லிக்கொடுக்கிறார் பாக்கியலட்சுமி.

சிறப்பு குழந்தைகளிடம் முதல் மதிப்பெண் வாங்கும் சென்னை ஆசிரியர் பற்றி தெரியுமா?
படக்குறிப்பு, சிறப்பு குழந்தைகள் மற்றவரின் துணையின்றி அன்றாட வாழ்வை வாழ பல வருடங்களாக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் பாக்கியலட்சுமி.

இந்த குழந்தைகள் பற்றிய விவரங்களை சேகரித்து, அருகில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளியில் பதிவு செய்து, அவர்களுக்கான சிறப்பு புத்தகங்களை கொடுத்து, அவர்களை மற்ற குழந்தைகளுக்கு இணையாக கருதும் மனோபாவத்தை பெற்றோரிடம் ஏற்படுத்துகிறார்.

''மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பொறுத்தவரை அவர்களுக்கு வயதுக்கு ஏற்ப மூளைவளர்ச்சி என்பது இருக்காது. ஆனால், தொடர்ந்து ஒரு பழக்கத்தை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம்தான் அவர்களுக்கு எதையும் புரியவைக்கமுடியும். சுமார் மூன்று மாதங்கள் வலியுறுத்தி, சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற எட்டு வயது மாணவனை, தானாகவே குளித்துவிட்டு, சிறுநீர் கழித்துவிட்டு, உடை மாற்றிக்கொள்ள வைத்தேன். அந்த குழந்தையின் பெற்றோர் கண்ணீருடன் எனக்கு நன்றி சொன்னார்கள். நான் முதல் மதிப்பெண் பெற்றது போல உணர்ந்தேன்,'' என பெருமிதத்துடன் சொல்கிறார் பாக்கியலட்சுமி.

ஆசிரியர் பாக்கியலட்சுமியின் கற்பித்தல் முறை குறித்து பிபிசிதமிழிடம் பேசிய மாணவன் சுரேஷின் தாயார் சந்தியா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன), ''என் மகனை போல பல சிறப்பு குழந்தைகளிடம் முதல் மதிப்பெண் பெற்ற ஆசிரியர் இவர். இவர் கற்பிப்பது எங்களைப் போன்ற பெற்றோர்களுக்கு எங்கள் குழந்தைகள் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது,'' என்றார்.

சிறப்பு குழந்தையை மறைக்கும் பெற்றோர்

சிறப்பு குழந்தைகளுக்கு, அவர்களின் செயல்திறனுக்கு ஏற்ப பயிற்சிகளை வழங்குவதுடன், வடிவங்கள், வண்ணங்கள், எழுத்துக்கள் போன்றவற்றை அவர்கள் அடையாளம் காண தயார்படுத்தவேண்டும். இதுபோன்ற பயிற்சிகளை தரும்போது, பெற்றோரின் பங்கேற்பு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார் பாக்கியலட்சுமி.

சிறப்பு ஆசிரியர்களுக்கு, குழந்தைகளுக்கு கற்பிப்பது கூட எளிதுதான். ஆனால் பெற்றோரிடம், அவர்களது குழந்தை சிறப்பு குழந்தை, அந்த குழந்தைக்கு உள்ள திறனை வளர்க்கமுடியும் என்று புரியவைப்பதுதான் கடினமான பணியாக இருப்பதாக சொல்கிறார்.

''ஒரு சில பெற்றோர்கள் தங்களுடைய குழந்தை சிறப்பு குழந்தை என்பதை ஏற்கவே மறுத்துவிடுவார்கள். அந்த குழந்தைகளால் சில வேலைகளை செய்யமுடியும் என்பதை நாம் சொன்னாலும், நம்ப மறுத்துவிடுவார்கள். படித்த, பட்டதாரி பெற்றோர்கள்கூட, சிலர், தங்களது குழந்தையை பற்றி யாரிடமும் சொல்லாமல் வீட்டில் வைத்தே வளர்ப்பதை நான் பார்த்திருக்கிறேன்,'' என்கிறார் இவர்.

மாற்றுத்திறன் படைத்த குழந்தைகளுக்கு எதுவுமே புரியாது என்ற கற்பிதம் பல பெற்றோர்களிடம் இருக்கிறது என்று சொல்லும் பாக்கியலட்சுமி, கற்றல் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்ட குழந்தைகளிடம் நல்ல மாற்றம் தென்பட்டுள்ளது என்கிறார்.

எடுத்துக்காட்டாக அவர் சில குழந்தைகளின் அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். நான்கு ஆண்டுகள் தொடர் பயிற்சி கொடுக்கப்பட்ட 15 வயது பெண் குழந்தை தற்போது வார்த்தைகளை எழுத்துக்கூட்டி படிக்கும் திறனை அடைந்துவிட்டதை சொல்கிறார்.

அடுத்ததாக, 13 வயது ஆண் குழந்தை, தொடக்கத்தில் எந்த கவனமும் கொடுக்கவில்லை என்றபோதும், நான்கு மாதங்களுக்கு பின்னர், வண்ணம் தீட்டுவதை சிறப்பாகச் செய்யத் தொடங்கியுள்ளதை பற்றி குறிப்பிட்டு, அந்த குழந்தை வரைந்த படங்களை நம்மிடம் காட்டினார்.

சிறப்பு குழந்தைகளிடம் முதல் மதிப்பெண் வாங்கும் சென்னை ஆசிரியர் பற்றி தெரியுமா?
படக்குறிப்பு, தங்கள் பிள்ளைகள் சிறப்பு குழந்தை என்பதை ஏற்றுக் கொண்டு, அவர்களின் திறன்களை வளர்க்க பெற்றோர் உதவி புரிய வேண்டும் என்கிறார் பாக்கியலட்சுமி.

சிறப்பு குழந்தைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடங்களை நடத்தமுடியாது என்றும் கற்பனை வளம் ஆசிரியருக்கு இருந்தால்தான், ஒவ்வொரு குழநதைக்கும் ஏற்ற வகையில் பாடங்களை சொல்லித்தர முடியும் என்றும் ஆசிரியர் பாக்கியலட்சும் கூறுகிறார்.

''நான் கற்பிக்கும் ஒரு குழந்தைக்கு பாடல் மூலமாக ஒன்று முதல் 10 வரை எண்களை எண்ணக் கற்று கொடுத்தேன். மற்றொரு குழந்தைக்கு பாசிகளை கோர்த்து சொல்லிக் கொடுத்தேன். மற்றொரு குழந்தைக்கு அவனிடம் உள்ள பொம்மைகளை வைத்து சொல்லிக் கொடுத்தேன்,'' என விதவிதமாக பாடம் நடத்துவது பற்றி விளக்குகிறார்.

பல சிறப்பு குழந்தைகள் பாடங்கள் சொல்லித்தரும்போது கவனிக்காமல் இருப்பது போல தோன்றும் என்றும் அந்த குழந்தைகளிடம் உள்ள குறைபாடுதான் காரணம் என்று நாம் புரிந்துகொண்டால், அதிக பொறுமையுடன் அவர்களுக்கு கற்பிக்கமுடியும் என்பது பாக்கியலட்சுமியின் அனுபவம்.

''சிறப்பு குழந்தைகள் பலரும் நாம் சொல்லிக் கொடுக்கும் போது, நம்மை நேராக பார்க்கமாட்டார்கள். அவர்கள் கவனிக்கவில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவர்கள் நாம் உதிர்க்கும் ஒவ்வொரு சொல்லையும், நம்மை பார்க்காமல், கவனமாக கேட்டுக் கொண்டு இருப்பார்கள். ஒரு சில குழந்தைகள் வகுப்பு முடிந்த பின்னர், பதிலை சொல்வார்கள். கால தாமதம் என்று நாம் உணரும் திறன் அவர்களுக்கு இருக்காது. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் திறனே இல்லை என்று நாம் தவறாக புரிந்துகொள்கிறோம்,''என விளக்குகிறார் பாக்கியலட்சுமி.

'சிறப்பு ஆசிரியர் ஆனதற்கு சிறப்பு காரணம் உண்டு'

சிறப்பு குழந்தைகளிடம் முதல் மதிப்பெண் வாங்கும் சென்னை ஆசிரியர் பற்றி தெரியுமா?
படக்குறிப்பு, சிறப்பு குழந்தையான தன் மகளுக்காக பயிற்சிகள் வழங்க ஆசிரியரை தேடும் பயணத்தில் தானே சிறப்பு ஆசிரியராக பயிற்சி பெற்று விட்டார் பாக்கியலட்சுமி.

தற்போது சென்னையில் சுமார் 30 சிறப்பு குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று, பாக்கியலட்சுமி கற்பித்துவருகிறார். சிறப்பு குழந்தைகளுக்கு கற்பிக்கவேண்டும் என்ற தீர்மானத்தை அவர் எடுக்க உத்வேகம் எங்கிருந்து பிறந்தது என்று கேட்டோம். அதற்கு சிறப்பு காரணம் உள்ளது என்றார்.

''என் மகள் கீர்த்தனாவுக்கு 'லேசான'- mild என்ற வகைப்படுத்தப்பட்ட மனவளர்ச்சி குறைபாடு இருந்தது. ஆனால் அவள் சரியாக படிக்கவில்லை, அவள் வேண்டுமென்றே சரியாக படிப்பதில்லை என பலமுறை திட்டி, அடித்திருக்கிறேன். அவளுக்கு பத்து வயதாகும்போது, அவள் பயின்ற பள்ளியில் இருந்த ஒரு ஆசிரியர் அடையாளம் கண்டறிந்து சொன்ன பிறகுதான் நான் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துவிட்டு பின்னர் என் குழந்தையின் இயல்பை ஒத்துக்கொண்டேன். அவளுக்காக பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்களை தேடி அலைந்தேன். அந்த பயணத்தில் சிறப்பு ஆசிரியர் பயிற்சி பட்டதை முடித்து, நானும் சிறப்பு ஆசிரியர் ஆனேன்,'' என்கிறார் பாக்கியலட்சுமி.

தற்போது பாக்கியலட்சுமியின் மகள் கீர்த்தனா ஒரு பட்டதாரி. அவருக்கு இருந்த குறைபாடுக்கு ஏற்ப பயிற்சிகள் கிடைத்ததால், அவர் இளநிலை பட்டப்படிப்பு பெறமுடிந்தது. தன்னை போன்ற சிரமங்களை சந்திக்கும் பெற்றோருக்கு உதவும் நோக்கத்தில் சிறப்பு ஆசிரியராக 15 ஆண்டுகளாக பாக்கியலட்சுமி பணியாற்றி வருகிறார்.

"வசதி உள்ளவர்கள் பலர் தனியாக ஒரு ஆசிரியருக்கு பணம் செலுத்தி, வீட்டிற்குள் குழந்தையை வைத்து படிக்க வைக்கிறார்கள். ஆனால் வசதியற்ற குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர் பலர் அரசு பள்ளி மூலமாக தன்னை போன்ற ஆசிரியர்களின் உதவியை பெறுகிறார்கள்," என்கிறார் அவர்.

''சிறப்பு குழந்தைகள் இந்த சமூகத்தில் சந்திக்கும் சவால்கள் ஏராளம். ஆனால் பெற்றவர்கள் அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் பெரிய சவால். அடுத்ததாக, அவர்களுக்கு கல்வியை கொடுத்துவிட்டால், அந்த குழந்தைகள் நிச்சயம் முன்னேறுவார்கள்,'' என சிறப்பு நம்பிக்கையுடன் உரையாடலை முடிக்கிறார் பாக்கியலட்சுமி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: