என். வளர்மதி: இஸ்ரோவில் சாதித்த தமிழ் பெண் விஞ்ஞானியின் கதை

வளர்மதி
    • எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
    • பதவி, பிபிசி தமிழ்

(பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் பலரும் அந்த உச்சத்தை தொடும் முன்பு, பல தடங்கல்களையும் சவால்களையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அத்தகைய பெண்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தங்களின் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொள்ளும் தொடரை பிபிசி தமிழ் வழங்குகிறது. அதில் மூன்றாவது கட்டுரை இது.)

24 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் மட்டுமே உறக்கம். வீட்டில் கணவர், குழந்தைகளை கவனித்து கொள்ள வேண்டும், அதிக நேர அலுவலகப்பணி. முக்கியமாக இந்தியாவின் பெருமைக்குரிய RISAT 1 செயற்கைகைக்கோள் திட்டத்தின் திட்ட இயக்குநர்.

10 ஆண்டுகள் விஞ்ஞானி வளர்மதியின் வாழ்க்கை இதுதான்.

இன்று பெண்கள் வேலைக்கு போவது வெளிநாட்டிற்கு போவதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் 1980களில் ஒரு பெண் வெளிமாநிலத்திற்கு வேலை பார்க்க போவதும், அதுவும் அந்த வேலை விண்வெளித்துறையில் இருப்பதும் சாதாரண விஷயம் கிடையாது.

விண்வெளித்துறையில் இந்தியாவின் வளர்ச்சி இன்று பெருமளவிற்கு உயர்ந்ததற்கு பின்னால் பல பெண்களின் முயற்சியும், உழைப்பும், தியாகமும் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரான, வெளிச்சம் இல்லாத நேரத்திலும் படம் எடுத்து பூமிக்கு அனுப்பக்கூடிய செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியதற்கு பின்னால் வளர்மதி மற்றும் அவரது குழுவின் 10 ஆண்டு உழைப்பு இருக்கிறது.

மயில்சாமி அண்ணாதுரை, சிவன் என பல ஆண்கள் விண்வெளித்துறையில் தங்களின் பெயர்களை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி வளர்மதிக்கும் ஒரு தனி இடம் இருக்கிறது.

2011ஆம் ஆண்டு ஜிசாட்-12 திட்ட இயக்குநராக விஞ்ஞானி டி.கே அனுராதா இருக்க, இஸ்ரோ நிறுவனத்தில் இவ்வாறான மிகப்பெரிய திட்டத்திற்கு தலைமை தாங்கிய இரண்டாவது பெண் வளர்மதி.

RISAT-1 - விவசாய நிலங்கள், மண் ஈரப்பதம், புவியியல், கடலோர கண்காணிப்பு, வெள்ள பாதிப்புகளை அறிதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்காணிக்கும் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டு 2012ஆம் ஆண்டு ஏவப்பட்டது. அதன் பாகங்களில் இருந்து, அதில் பணியாற்றவர்கள், மாதிரிகள் என இந்த செயற்கைக்கோள் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் என்ற சிறப்பை பெற்றது.

வளர்மதி

"120 பேர் கொண்ட எங்கள் குழு, இதற்காக இரவும் பகலுமாக 10 ஆண்டு காலம் உழைத்தோம்" என்கிறார் வளர்மதி.

விண்வெளித்துறையில் கால் பதித்து சாதித்த ஒருசில பெண்களில் ஒருவரான வளர்மதி குறித்து இந்தக்கட்டுரையில் பார்ப்போம்.

தடைகளை கடந்த இளமை பருவம்

தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் 1959ஆம் ஆண்டு பிறந்தார் வளர்மதி. ராமசீதா, நடராஜன் தம்பதியின் மகளான இவர், தனது வீட்டில் மிகவும் கண்டிப்புடன் ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டதாக கூறுகிறார்.

"என் அப்பா, அரசுப்பணியில் இருந்தார். மாத வருமானம், நடுத்தர குடும்பம்தான். பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு வர வேண்டும், கொடுக்கும் சத்தான உணவை சாப்பிட வேண்டும் என்று சிறு வயதில் நானும் என் உடன் பிறந்தவர்களும் கண்டிப்புடனே வளர்க்கப்பட்டோம்" என்கிறார் அவர்.

இவ்வளவு பாதுகாப்பாக, கண்டிப்பாக வளர்க்கப்பட்ட வளர்மதி, பெரிதும் சாதித்திருப்பது பின்னால் இருந்ததும் ஒரு பெண்தான். அது அவரது தாய்.

"அம்மா அந்த காலத்தில் படித்து இருந்தும் வேலைக்கு போகவில்லை. அம்மாவை வேலைக்கு போக அவரது வீட்டில் விடவில்லை. அம்மாவுடன் படித்த பலரும் வேலைக்கு சென்றார்கள். அந்த வருத்தம் அவருக்கு இருந்தது. அதனால், தன் மகள்கள் படித்து நிச்சயம் வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. அதுதான் இவை அனைத்துக்கும் ஆரம்பம்" என்று அவர் கூறுகிறார்.

"ஆனால், எனக்கு வெளி உலகத்தை காட்டியது அப்பாதான்,"

"வீட்டில் நான்தான் மூத்தவள் என்பதால், எப்போதுமே எனக்கு பொறுப்பு அதிகம். சிறு வயதில் இருந்தே நானும் பொறுப்பை எடுத்து அதை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் செய்வேன். என்னிடம் அந்த தலைமை பண்பு சிறு வயதில் இருந்தே வளர்க்கப்பட்டது" என்று அவர் தெரிவிக்கிறார்.

"எனக்கு விளையாட்டிலும் அதிக ஆர்வம் உண்டு. ஆனால், வீட்டில் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். இருந்தும் நான் தெரியாமல் சென்று வென்று வருவேன்" என தன்னுடைய இளமைபருவ நாட்களை வளர்மதி நினைவு கூர்ந்தார்.

பியுசி வரை அரியலூரில் படித்த வளர்மதி, தனது பட்டப்படிப்புக்காக முதல்முறையாக வீட்டை விட்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

"1974-75ஆம் ஆண்டு இருக்கும். அப்போது எல்லாம் ஆண்கள் பொறியியல் படிப்பது என்பதே மிகப்பெரிய கனவு. அந்த சமயத்தில்தான், பெண்களையும் பொறியியல் படிப்புக்கு எடுத்துக் கொள்ள ஆரம்பித்த நேரம். இது எனது ஆசிரயர் ஒருவர் மூலமாக எனக்கு தெரிய வந்தது. நான் அதை என் அம்மா அப்பாவிடம் வந்து சொன்னேன். அது எமர்ஜென்சி காலம்.

என்னை பொறியியல் படிப்பதற்காக வெளியூருக்கு எல்லாம் அனுப்ப வேண்டாம் என்று என் அப்பாவிடம் பலரும் கூறினார்கள். கட்டணம் அதிகம், ஹாஸ்டல் செலவுகள் எல்லாம் இருக்கிறது. அதெல்லாம் முடியுமா என்று அவரிடம் கேட்டு குழப்பினார்கள்.

அப்போதெல்லாம் பொறியியல் படிப்பு 5 வருடங்கள். அந்த காலத்தில் பெண்ணை 5 வருடங்கள் படிக்க அனுப்புவது எல்லாம் பெரிய விஷயம். உள்ளூரிலேயே படித்து, திருமணம் செய்து வைக்கலாம் என உறவினர்களும் அப்பாவிடம் கூறினார்கள்.

ஆனால், என் அம்மா எனக்காக அப்பாவிடம் பேசி, இருவரும் என்னை படிக்க அனுப்ப முடிவு செய்தார்கள். அரசு தொழில்நுட்ப கல்லூரி, கோவையில் எனக்கு இடம் கிடைத்தது. என் குடும்பத்தில் இவ்வாறு படிக்க சென்ற முதல் பெண் நான்தான்" என்கிறார் வளர்மதி.

கிராமத்தில் இருந்து நகர்ப்புறத்திற்கு சென்ற அனுபவங்களையும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"கிராமத்தில் வீட்டில் இருந்தே வளர்ந்த எனக்கு திடீரென்று நகர்ப்புறத்துக்கு சென்றது கடினமான மாற்றமாக இருந்தது. நகரத்தில் இருப்பவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். நான் படித்தது தமிழ்வழியில். அவர்களது உடை, பாவனை எல்லாம் வேறு மாதிரி இருந்தது. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக படிப்பு ரீதியாக நான் திறமையானவளாக இருந்தேன். ஆனால், இதுபோன்ற காரணங்களால் முன்னுக்கு வர எனக்கு தயக்கமாக இருந்தது. இப்படியாகதான் என் படிப்பை முடித்தேன்.

ஆனால், என் பெற்றோரின் ஆதரவு எனக்கு இருந்தது. அவர்கள் துணிந்து ஒரு முடிவை எடுத்தார்கள். நான் மேலும் படித்தால், திருமணம் எல்லாம் தள்ளிப்போகும் என்று தெரிந்தும் என்னை படிக்க வைத்தார்கள்" என தனது பொறியியல் படிப்பு கல்லூரி நாட்களை வளர்மதி பகிர்ந்து கொண்டார்.

ஆனால், அடுத்து மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்தது.

'அதிகம் படித்தால் மாப்பிள்ளை கிடைக்காது'

"எனக்கு எம்.ஈ மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால், முடியாது என்று வீட்டில் சொல்லி விட்டார்கள். ஏனென்றால் அதற்கும் மேலே படித்தால் மாப்பிள்ளை தேடுவது கடினமாகிவிடும்.

பொறியியல் படிப்புக்கே, மாப்பிள்ளை பார்ப்பது கடினம். அதிலும் மேற்படிப்பு படித்தால் அவ்வளவுதான் என்றார்கள். ஆனால், என்னுடன் படித்தவர்கள் பலரும் மேற்படிப்புக்கு விண்ணப்பித்தார்கள். நான் மட்டும் இப்படி இருக்க விரும்பவில்லை. கண்டிப்பாக படிக்க வேண்டும் என்ற வெறி வந்தது.

நீங்கள் சொன்னால் நம்ப மாட்டீர்கள். ஒருநாள் இரவு முழுவதும் அழுது நான் ஏன் படிக்க வேண்டும் என்பதை என் பெற்றோரிடம் விளக்கினேன்.

எனக்கு செலவு செய்ய வேண்டாம். நானே என் செலவை பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினேன். அப்போதெல்லாம் பொறியியல் பட்ட மேற்படிப்புக்கே, மாதம் 600 ரூபாய் ஊக்கத்தொகை உண்டு.

பிறகு ஒரு வழியாக என் அப்பா அதிகாலை 3 மணிக்கு எனக்கு அனுமதி வழங்கினார்.

அப்படிதான் அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்காக சேர்ந்தேன்.

இறுதியாண்டு முடிக்கும்போது பிறகு செய்தித்தாள் விளம்பரங்களில் வந்த பல வேலைவாய்ப்புகளுக்காக விண்ணப்பித்து இருந்தேன். அதில் சென்னை தூர்தஷன், பெங்களூரூ ISRO மற்றும் DRDO ஆகிய மூன்றிலுமே ஒரு சிறு இடைவெளிகளில் தேர்வானேன்.

எதனை தேர்வு செய்வது என்பதில் பெரும் குழப்பம் இருந்தது. அப்போது என்னுடைய பழைய ஆசிரியரும் நலம்விரும்பியுமான ஒருவர், இஸ்ரோ நிறுவனம் வளர்ந்து வரும் ஒன்று என்றும், அதில் பணியில் சேர்ந்தால் நல்ல எதிர்காலம் அமையும் என்றும் அதனால் அதனை தேர்வு செய்யுமாறு என்னிடம் கூறினார்.

அப்போதுதான் எனக்கு ஒரு உணர்வு வந்தது. இன்றை இளைய தலைமுறைக்கும் இதை கூற விரும்புகிறேன். உங்களுக்கு என்று ஒரு வழிகாட்டியை தேடிக் கொள்ளுங்கள். அவர் படித்தவராகவோ, மிகவும் அறிவாளியாகவோ இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், குழப்பமான வேலைகளில் உங்களுக்கு உதவும் நபராக அவர் இருப்பார்" என்கிறார் வளர்மதி.

1984ஆம் ஆண்டு இஸ்ரோவில் அவர் சேர்ந்தார்.

வளர்மதி

IRS 1A, INSAT 2A திட்டங்கள்

பெங்களூரூ வரை சென்று பணிபுரிய வீட்டில் எப்படி அனுமதித்தார்கள் என்பது குறித்து வளர்மதியிடம் கேட்டோம்.

"எனக்கு வேலைக்கான தேர்வு கடிதம் என் வீட்டிற்குதான் சென்றது. அந்த காலத்தில் இஸ்ரோ குறித்து பெரிதும் யாருக்கும் தெரியாது. இப்போது ஊடகங்களால் இஸ்ரோவின் பல சாதனைகள் வெளியில் தெரிய வந்துள்ளன. அப்போது அப்படி இல்லை. என் வீட்டை பொறுத்த வரை எனக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. அவ்வளவுதான்.

ஆனால், அந்த வேலை பெங்களூரில் என்பதுதான் அவர்களது கவலையாக இருந்தது. எனினும், என்னைப்போன்ற எலக்ட்ரானிக்ஸ் படித்தவர்களுக்கெல்லாம் அங்குதான் வேலை கிடைக்கும் என்று தெரிந்திருந்தது. அதனால் அவர்கள் என்னை அனுமதித்தார்கள்" என்று இஸ்ரோவின் ஆரம்ப நாட்களை பகிர்ந்தார்.

பி.இ, எம்.இ என அனைத்துற்கும் தனியே சென்ற வளர்மதி, இஸ்ரோவில் சேரும்போது மட்டும் தனது தந்தையை உடன் கூட்டிச் சென்றதாக கூறுகிறார்.

"நான் இஸ்ரோவில் வேலைக்கு சேரும் போது அங்கு 10-15 சதவீதம் பெண்கள்தான் இருந்தார்கள். அடுத்த 5 ஆண்டுகளில் அதிக அளவில் பெண்கள் இஸ்ரோவில் சேர்ந்தார்கள்.

நான் இஸ்ரோவில் சேர்ந்த போது பல புதிய திட்டங்கள் வரத் தொடங்கின. என் குழுவில் 10 பேர் இருந்தார்கள்.

நாங்கள் சேர்ந்தபோதுதான் IRS 1A, INSAT 2A திட்டப்பணிகள் நடந்து கொண்டிருந்தன. அந்தகாலத்தில் திட்டப்பணிகளுக்கு ஆறில் இருந்து ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொள்வோம்.

அப்போது நாங்களாகவே இதற்கான பல வேலைகளை எடுத்து செய்வோம். மேலும் அப்போதுதான் எங்கள் குழுவில் பலருக்கும் திருமணம் நடந்து கைக் குழந்தைகள் வைத்திருந்தோம்."

1986ல் வளர்மதிக்கு திருமணம் நடந்தது.

அதே ஆண்டு இறுதியில் அவருக்கு குழந்தையும் பிறந்தது.

"வீட்டு வேலை வீட்டில். அலுவலக வேலை அலுவலகத்தில். இரண்டையும் கலக்க மாட்டேன். என் மகனுக்காக அலுவலகம் செல்லாமல் கூட இருப்பேன். ஆனால், அங்கு நான் ஏற்கனவே அனைத்து வேலைகளையும் பார்த்து முடித்துவிட்டே வீட்டிற்கு வருவேன்.

வீட்டில் காலையிலேயே மூன்று வேலைக்குமான சமையல் செய்துவிட்டு அலுவலகம் செல்வேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

போருக்கு செய்து கொடுத்த செயற்கைக்கோள்

"காலநிலையை கண்காணிப்பது, தொலைதொடர்புக்காக, விவசாய நிலங்களுக்காக, அல்லது கடல் கண்காணிப்புக்கு என பல வகையான செயற்கைகோள்கள் இருந்தன. ஒரு கட்டத்தில் ராணுவ தேவைக்காக கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் இந்தியாவுக்கு தேவைப்பட்டன.

2001ஆம் ஆண்டு கார்கில் போரின்போது, அதற்காக உடனடியாக ஒரு செயற்கைக்கோள் இந்திய ராணுவத்திற்கு தேவைப்பட்டது. மிக குறுகிய கால நேரத்தில்தான் இந்த திட்டம் இஸ்ரோவுக்கு வழங்கப்பட்டது.

வளர்மதி

அந்த திட்டத்தில் விண்கலத்தின் ஒருங்கிணைப்பு, பரிசோதனை மற்றும் அதனை விண்வெளிக்கு அனுப்பும் குழுவிற்கு அனுப்புவது என முழுவதற்கும் நான் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன். மேலும் அந்த ஏவுதலுக்கு, முதல்கட்ட அனுமதியை நான் வழங்க வேண்டும். இதுபோன்ற பொறுப்புகள் பெண்களுக்கு வழங்கப்படுவது, அதாவது பாதுகாப்புக்கான செயற்கைக்கோள் திட்டத்திற்கு ஒரு பெண் நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறை. இந்த திட்டத்தின் துணை திட்ட இயக்குநராக நான் இருந்தேன்.

அந்த திட்டம் பெரும் வெற்றி பெற்றது. அதோடு, கார்கில் போருக்கு உதவும் வகையில் நாட்டின் தேவையை அந்த செயற்கைக்கோள் சரியாக பூர்த்தி செய்தது."

அதற்கு அடுத்த ஆண்டுதான் RISAT-1 செயற்கைக்கோளுக்கான பொறுப்பு வளர்மதியிடம் வழங்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட செயற்கைக்கோள், சூரியன் இருந்தால் மட்டுமே, வெளிச்சம் இருந்தால் மட்டுமே செயல்படும். ஆனால், வெளிச்சம் இல்லாத நேரத்தில் புகைப்படங்கள் எடுக்க முடியாது.

ஆனால் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட RISAT1, வெளிச்சம் இல்லாத நேரங்களில் கூட புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பும் திறன் கொண்டது.

இதற்கான பணிகள் 2001-02 இல் தொடங்கப்பட்டது.

"இதற்காக நானும் சுமார் 120 பேர் கொண்ட என் குழுவும் சுமார் 10-12 ஆண்டுகள் உழைத்தோம். இந்த செயற்கைக்கோள் வன்பொருள் மற்றும் மென்பொருள் என இரண்டும் சார்ந்த சிக்கலான தொழில்நுட்பத்தை கொண்டது

இதற்கு முன் இல்லாத திட்டமாக இது அமைந்திருந்தது. ஒரு புகார் கூட இருக்காமல் செயல்படுத்தப்பட்ட திட்டம் என்ற பெயரை RISAT 1 எடுத்திருக்கிறது" என்று கூறுகிறார் வளர்மதி.

இந்தக்காலம் முழுவதும் தன் குடும்பத்தின் முழு ஆதரவும் தனக்கு இருந்ததாக அவர் தெரிவிக்கிறார்.

வளர்மதி

"என் காரில்தான் அலுவலகத்திற்கு செல்வேன். என் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு என்னுடைய கவனம் தேவைப்பட்டது. அப்போது மாலை 4 மணிக்கு என் வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களை கவனிக்க வீட்டிற்கு வந்துவிடுவேன். அவர்களுக்கு என்ன தேவையோ அதை செய்வது, வீட்டில் மீண்டும் சமைத்துவிட்டு, குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் எல்லாம் கற்றுகொடுத்துவிட்டு, குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டு விட்டு, மீண்டும் அலுவலகம் செல்வேன். நள்ளிரவு 1 அல்லது 2 மணிக்கு தனியாக கார் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வருவேன்.

4 மணி நேரம் தூங்கிவிட்டு மீண்டும் காலை 7 மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகள் முடித்து 8 மணிக்கு கிளம்பி முதல் ஆளாக அலுவலகத்தில் இருப்பேன்.

இந்த திட்டத்தை செயல்படுத்த நாங்கள் உழைத்த 10 ஆண்டுகளில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தேன். ஆனால், வீட்டிற்கு வந்தவுடன் உறுதுணையாக என் கணவரும், குழந்தைகளும் இருந்தார்கள். என் குழந்தைகள் எனக்கு ஊக்கமளிப்பார்கள். வீட்டில் எதுவும் செய்ய வேண்டாம், அலுவலக வேலையை பார் என்பார்கள்"

தான் ஒரு பெண்ணாக இருந்தும், தனக்கு கீழ் பணிபுரிந்த அனைவரும், தன்னை தலைமை பண்பு கொண்ட ஒருவராகவே பார்த்ததாக கூறும் வளர்மதி, பாலின பாகுபாடு இல்லாமல் அனைவரும் RISAT-1 திட்டத்திற்கு ஒத்துழைத்தாக கூறுகிறார்.

"ஆண்,பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அங்கு அனைவரும் பொறியாளர்கள்தான்"

ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது

RISAT-1 திட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தியதற்காக 2015ஆம் ஆண்டு வளர்மதிக்கு தமிழக அரசு ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருதை வழங்கி கௌரவித்தது.

அதுகுறித்து பேசிய வளர்மதி, அப்துல் கலாம் பெயரில் விருது கிடைக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை என்றும், எவ்வளவோ பேர் இருந்தும் தனக்கு இந்த விருது வழங்கியது மகிழ்ச்சியை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது

"ஜெயலலிதா அவர்களிடம் அப்துல் கலாம் விருது கிடைத்தது எனக்கு அந்த 2 நிமிடங்கள் பதற்றமாக இருந்தது. அந்த தருணங்களை மறக்க முடியாது. அப்துல் கலாம் விண்வெளித்துறையில் மிகப்பெரிய மேதை. அவர் பெயரில் தமிழக அரசிடம் விருது பெற்றது மறக்க முடியாத ஒன்று" என்று அவர் தெரிவித்தார்.

அதனைதொடர்ந்து இஸ்ரோவில் வளர்மதிக்கு பல்வேறு பிற பொறுப்புகள் வழங்கப்பட்டன. கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற வளர்மதி, தற்போது குடும்பத்துடன் பெங்களூரூவில் வசித்து வருகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: