கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா: பள்ளி மாணவர்களை கண்காணிக்க பிரத்யேக செவிலியர்கள்

செவிலியர்
படக்குறிப்பு, நிஷா
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கேரளாவில் திருவனந்தபுரம் புழநாடு கிராம பஞ்சாயத்தில் உள்ள சுமார் 3,000 குழந்தைகள் நிஷாவை அம்மா என்றுதான் அழைக்கின்றனர். பள்ளி மாணவர்களுக்கான பிரத்தியேக செவிலியராக நிஷா பணியாற்றுகிறார்.

சிறு வயதில் முதல் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை குடிமக்களுக்கு அளிக்கும் திட்டங்களில் ஒன்றாக செயல்படுத்தப்படும் பள்ளிக்கூட செவிலியர் திட்டத்தின் கீழ், நிஷா பணியாற்றுகிறார்.

2009 முதல், கேரளாவில் மழலைகள், குழந்தைகள் மற்றும் பதின் பருவ மாணவர்களின் உடல் மற்றும் மன நலனை தினமும் அக்கறையோடு கவனிக்க பள்ளிக்கூட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது 1,070 பயிற்சிபெற்ற செவிலியர்கள் கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றுகிறார்கள்.

கொரோனா காலத்தில் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க, நிஷாவை போன்ற பள்ளிக்கூட செவிலியர்கள் நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு செல்கிறார்கள்.

''பள்ளிக்கூடம் எப்போது திறக்கும்?''

செவிலியர்

குழந்தைகள் மற்றும் மாணவர்கள், வீட்டுக்குள் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், விளையாட்டுப் பொருட்கள், கதை புத்தகங்கள் போன்றவற்றோடு சென்று செவிலியர் நிஷா, அவர்களிடம் நலம் விசாரிக்கிறார். அவர் செல்லும் வீடுகளில் குழந்தைகள் ஆசையாக அவரிடம் உரையாடுகிறார்கள்.

கொரோனா பரவல் கேரளாவில் அதிகரித்து வருவதால், அவர் மிகவும் கவனமாக இருப்பதாகக் கூறுகிறார் நிஷா.

குழந்தைகளை இரண்டு மீட்டர் தூரம் தள்ளி இருந்து பேசவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்துகிறார்.

''ஒரு தாயை வயிற்றில் பிறந்த குழந்தை மட்டும்தான் அம்மா என அழைக்கும். நான் ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூடத்திற்கு சென்று குழந்தைகளின் நலன் விசாரித்து, அவர்களின் உடல் மற்றும் மன நலனில் அக்கறை எடுத்துக்கொள்வதால், சுமார் 3,000 குழந்தைகள் என்னை அம்மா என அழைக்கிறார்கள். அவர்களை என்னுடைய குழந்தைகளாக உணர்கிறேன்,'' என்கிறார் நிஷா.

''கடந்த ஒன்பது ஆண்டுகளாக பள்ளிக்கூட செவிலியராக உள்ளேன். புழநாடு பகுதியில் உள்ள குழந்தைகளை நான் அறிவேன். சாலையில் ஒரு குழந்தையை பார்த்தவுடன், அந்த குழந்தையின் வீடு எங்குள்ளது, அந்த குழந்தை பள்ளிக்கூடத்தில் எவ்வாறு நடந்துகொள்ளும் என எல்லாம் வரிசையாக ஞாபகம் வந்துவிடும். தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. குழந்தைகளை போலவே நானும் பள்ளிக்கூடம் திறப்பதற்காக காத்திருக்கிறேன்,'' என்கிறார் நிஷா.

Banner image reading 'more about coronavirus'
Banner

ஊரடங்கு காலம் முதல் குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் கொடுப்பதற்காக வீடுகளுக்கு செல்லும் நிஷா, கொரோனா தாக்கம் குறித்த பயத்தை நீக்கி குழந்தைகள் விழிப்புணர்வுடன் இருப்பதற்கு உதவியதாக கூறுகிறார்.

வீட்டில் என்ன விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடலாம் என்றும் எளிய யோகா பயிற்சிகளை செய்வது பற்றியும் எடுத்துரைக்கிறார். பெற்றோரிடம் குழந்தைகளுக்கு வீட்டில் சமைத்த உணவை மட்டுமே கொடுக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

செவிலியர்
படக்குறிப்பு, புழநாடு குடும்ப நல சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் வினோஜ் (இடது)

''கொரோனா பற்றிய பயம் வளர்ந்தவர்களுக்கு இருக்கும்போது, மாணவர்களுக்கு அது பற்றிய அச்சம் மேலும் அதிகமாக இருக்கும். ஆரம்ப கட்டம் முதல், அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று சொல்வதோடு நோயின் தீவிரத்தை அவர்களுக்கு புரியும்வகையில் விளக்கினேன். அண்டை வீடுகளுக்கு கூட செல்ல குழந்தைகள் செல்வது, சிக்கல் ஏற்படுத்தும் என்பதால் அவர்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை அளித்தேன். முதலில் தயக்கம் காட்டிய குழந்தைகள், பின்னர் அவர்களின் பெற்றோர் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணியவேண்டும் என வற்புறுத்தும் அளவுக்கு முன்னேறிவிட்டார்கள். கை கழுவவேண்டும், பொது இடங்களில் கூட்டமான இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என பெற்றோர்களுக்கு குழந்தைகள் கற்பிக்கிறார்கள் என்பது என்னை போன்ற செவிலியர்களுக்கு கிடைத்த வெற்றி,'' என்கிறார் நிஷா.

குழந்தைகளுக்கு தோழியாக மாறிவிட்ட நிஷா

புழநாடு கிராமத்தில் உள்ள அரசாங்க குடும்ப நல சுகாதார மையத்தில் செவிலியர் நிஷாவுக்காக சில பெற்றோர் காத்திருந்தனர். தனது தந்தையுடன் அங்கு வந்திருந்த பள்ளி மாணவி மாலா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிபிசிதமிழிடம் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்பினார். 11 வயதான மாலா இரண்டு மாதகாலமாக நிஷாவிடம் மனநல ஆலோசனை பெற்றுவருகிறார்.

செவிலியர்

''செவிலியர் நிஷா எனக்கு உற்ற தோழியாக மாறிவிட்டார். எனக்கு வகுப்பில் உள்ள தோழிகளிடம் பேசுவது போல, பள்ளிக்கூடத்தில் இவரை சந்திக்கும் நேரத்தில் என்னுடைய பிரச்சனைகளை பேசமுடிந்தது. என் வீட்டில் என் பெற்றோர் என்னிடம் அன்பு செலுத்தவில்லை என நான் உணர்ந்தேன். என்னை விட என்னுடைய சகோதரியிடம் அன்பு செலுத்துகிறார்கள் என வருத்தப்பட்டேன். நிஷா அம்மாவிடம் ஒரு நாள் மனம்திறந்து சொல்லி அழுதுவிட்டேன். என் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் பேசி எனக்கு தைரியம் கொடுத்தார். என் பெற்றோர் என்னை நேசிப்பதாக உறுதிகொடுத்தார்கள். என்னிடமும், என் தங்கையிடமும் சமமாக பழகுகிறார்கள். நானும் என் பெற்றோரை ஏற்றுக்கொண்டேன், என் தங்கையுடன் விளையாடுகிறேன்,'' என புன்னகையுடன் பேசினார் மாலா.

மாலாவை போல பல மாணவர்கள், நிஷாவிடம் மனம் விட்டு உரையாடுகிறார்கள். நம்முடன் நிஷா இருந்த நேரத்தில், ஒரு வீடியோ அழைப்பு வந்தது. ஒரு மாணவி கொரோனா எப்போது முடியும், எப்போது மீண்டும் பள்ளி திறக்கும் என நிஷாவிடம் ஆர்வத்துடன் கேட்டார்.

கற்றல் குறைபாடுகளை விரைவில் கண்டறிய உதவி

பத்து ஆண்டுகளை கடந்து செயல்படும் பள்ளிக்கூட செவிலியர் திட்டத்தின் பயனாக மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கு அரசின் நல திட்டங்களை எளிதாக கொண்டுசேர்க்க முடிகிறது என்கிறார் புழநாடு குடும்ப நல சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் வினோஜ்.

செவிலியர்

''புழநாடு பஞ்சாயத்தில் எங்களுடைய குடும்ப சுகாதார நிலையத்தில் பள்ளிக்கூட செவிலியர் மூலம் பதின்பருவ குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவோம். எல்லா அரசு பள்ளிகளையும் இந்த செவிலியர் பார்வையிடுவார். தனியார் பள்ளி குழந்தைகளையும் சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள செய்கிறோம்.கொரோனா பரவல் காரணமாக அந்த கூட்டங்களை தற்போது நடத்துவதில்லை. முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்ற குழந்தைகள் அவர்களின் சுகாதார பிரச்சனைகள், அவர்களின் கிராமத்தின் பிரச்சனைகளை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள், அவர்களுக்கு உள்ள மன அழுத்தம் போன்றவற்றை எளிதாக தீர்த்துக்கொள்ள இந்த பள்ளிக்கூட செவிலியர் திட்டம் உதவுகிறது,''என்கிறார் வினோஜ்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜாவிடம் பேசியபோது, பள்ளிக்கூட செவிலியர் திட்டம் மூலம் குழந்தைகளின் கற்றல் குறைபாடுகளை சிறுவயதில் கண்டறியமுடிகிறது என்றார். மேலும் இந்த திட்டம் மூலம் குழந்தைகள் எதிர்கொள்ளும் பாலியல் வன்கொடுமைகளை விரைவாக கண்டறிய முடிகிறது என்றும் தெரிவித்தார்.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: