அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து: தொடரும் சர்ச்சை - என்ன நடக்கிறது?

மாணவர்கள் கோப்புப் படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறும் விவகாரத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தரப்பும், தமிழ்நாடு அரசும் எதிரும் புதிருமாக நிற்கின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது?

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தரலாம் என பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே. சூரப்பா மத்திய மனித வளத் துறைக்கு கடிதம் ஒன்றை தன்னிச்சையாக எழுதியது தற்போது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது. அரசிடம் சொன்னதையே கடிதமாக எழுதினேன் என்கிறார் துணைவேந்தர். அந்த அந்தஸ்தே தேவையில்லை எனத் தெரிவித்திருக்கிறார் உயர்கல்வித் துறை அமைச்சர்.

பிரச்சனையின் பின்னணி என்ன?

இந்தியாவில் உள்ள உயர்கல்வி அமைப்புகளை உலகளாவிய தரமுள்ளதாக ஆக்க, அவற்றுக்குக் கூடுதல் தன்னாட்சி அதிகாரத்தை வழங்கி, அவற்றுக்கு Institutes of Eminence என்ற அந்தஸ்து வழங்கப்படும் என 2016ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்போது அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பான முறையான அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) 2017ல் வெளியிட்டது. 10 தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் 10 அரசு பல்கலைக்கழங்களுக்கும் இந்த அந்தஸ்து வழங்கப்படும் என முடிவுசெய்யப்பட்டது.

இந்த அந்தஸ்து வழங்கப்படும் பல்கலைக்கழகங்களுக்கு நிர்வாக ரீதியாகவும் பாடத்திட்ட ரீதியாகவும் கூடுதலான தன்னாட்சி வழங்கப்படும். இதன் மூலம் இந்தக் கல்வி நிலையங்கள் பல்வேறு வெளிநாட்டு பல்கலைக்கழங்களுடன் இணைந்து செயல்பட முடியும். இவை அரசுப் பல்கலைக்கழகங்களாக இருக்கும்பட்சத்தில் அவற்றுக்கு 1000 கோடி ரூபாய் வரை மானியமாக வழங்கப்படும். தனியார் பல்கலைக்கழங்களுக்கு நிதி உதவி ஏதும் வழங்கப்படாது.

அண்ணா பல்கலைக்கழகம்

இந்த உயர்சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிலையங்களின் உரிமைகள், செயல்பாடுகள் குறித்து UGC (Declaration of Government Institutions as Institutions of Eminence) Guidelines, 2017 மற்றும் UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulations, 2017 என இரண்டு அறிவிப்புகளை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டது.

இந்த அந்தஸ்தைப் பெற 114 கல்வி நிலையங்கள் விண்ணப்பித்தன. இதில் அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. அந்த காலகட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் என யாரும் இல்லை. உயர்கல்வித் துறைச் செயலர் தலைமையில் நிர்வாகக் குழு மட்டுமே இருந்தது. அப்போது உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலராக ஐஏஎஸ் அதிகாரியான சுனில் பாலிவால் இருந்தார். இந்த அந்தஸ்தைப் பெற விண்ணப்பிக்க அந்தக் குழு முடிவுசெய்து, விண்ணப்பித்தது.

இந்த விண்ணப்பங்களைப் பரிசீலிக்க மத்திய அரசு அதிகாரமளிக்கப்பட்ட குழு (empowered Committee) ஒன்றை அமைத்திருந்தது. தங்கள் பல்கலைக்கழகம் குறித்து தெளிவாக விளக்கும்படி (presentaiton) இந்த அதிகாரமளிக்கப்பட்ட குழு அண்ணா பல்கலைக்கழகத்திடம் தெரிவித்தது. இதற்கிடையில் 2018 ஏப்ரலில் எம்.கே. சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு அக்டோபரில் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் முன்பாக இந்த பிரசன்டேஷனை அளித்தார் சூரப்பா.

2018ஆம் ஆண்டு ஜூலையில் உயர் சிறப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிலையங்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் அரசுக்குச் சொந்தமான மூன்று கல்வி நிலையங்களும் தனியாருக்குச் சொந்தமான மூன்று கல்வி நிலையங்களும் இடம்பெற்றிருந்தன (தனியாருக்குச் சொந்தமான, துவங்கவேபடாத ஜியோ இன்ஸ்ட்டிடியூட்டும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.)

மாணவிகள்

பட மூலாதாரம், Hindustan Times

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் 14 கல்வி நிலையங்களைக் கொண்ட இரண்டாவது பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் இடம்பெற்றிருந்தது. பொதுத் துறைப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்த 10 பல்கலைக்கழகங்களில் எட்டு, மத்திய அரசால் நடத்தப்படுபவையாக இருந்தன. அண்ணா பல்கலைக்கழகமும் ஜாதவ்பூர் பல்கலைக்கழகமும் மட்டுமே மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களாக இருந்தன. இதனால், யுஜிசி அளிப்பதாகச் சொன்ன தொகையில் பாதித் தொகையை அந்தந்தப் பல்கலைக்கழகங்களே திரட்ட வேண்டுமென கூறப்பட்டது.

இதையடுத்து நவம்பர் 19ஆம் தேதி தமிழக அரசு இது தொடர்பாக அமைச்சரவையைக்கூட்டி விவாதித்தது. அண்ணா பல்கலைக்கழகத்தை, அண்ணா பல்கலைக்கழகம் (இன்ஸ்ட்டியூட் ஆஃப் எமினன்ஸ்), அண்ணா பல்கலைக்கழகம் என இரு பல்கலைக்கழகங்களாகப் பிரிப்பது என்றும் இதற்கேற்றபடி 1978ஆம் ஆண்டின் அண்ணா பல்கலைக்கழகச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை உருவாக்குவதென்றும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இம்மாதிரி அண்ணா பல்கலைக்கழகத்தை 'இன்ஸ்ட்டியூட் ஆஃப் எமினன்ஸ்' என அறிவித்தால், மாநில அரசின் இட ஒதுக்கீட்டு கொள்கை என்னவாகும் என்பது குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்பது என்றும் இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை வைத்து முடிவெடுப்பது என்றும் அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து இடஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும்படி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்திய அரசிற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு டிசம்பர் 4ஆம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில், இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் அந்தஸ்து வழங்கப்பட்டாலும் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடரும் எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தக் குழுவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரத் துறை அமைச்சர் பி. தங்கமணி, மீன்வளத் துறை அமைச்சர் பி. ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், உயர் கல்வித் துறை அமைச்சர் கே.வி. அன்பழகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தற்போதைய அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் (இன்ஸ்ட்டியூட் ஆஃப் எமினன்ஸ்), அண்ணா பல்கலைக்கழகம் என இரண்டாகப் பிரிக்கப்படும் பட்சத்தில், இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்ஸ் பல்கலையில், மெட்ராஸ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் ப்ளானிங், கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்கு மண்டல மையங்கள், 13 உறுப்புக் கல்லூரிகள் ஆகியவை இடம்பெறுமென முடிவுசெய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு வழங்கப்படும்.

ஆனால், மாநில அரசின் கல்வி நிலையங்களாக இருந்தால் பாதி நிதியை மாநில அரசே ஏற்கவேண்டும் என்ற விதிமுறை தமிழக அரசுக்கு ஏற்புடையதாக இல்லை. இது தொடர்பாக நெருடல் இருந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பா 2020 மே மாதத்தில் தமிழக அரசுக்கு ஒரு விளக்கத்தை அளிக்கிறார். அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வருடத்திற்கு 314 கோடி ரூபாய் வருவாயாக வருவதாகவும் அதிலிருந்து மத்திய அரசு குறிப்பிடும் நிதியை பல்கலைக்கழத்திற்குச் செலவழிக்கலாம் என்கிறார்.

இந்த நிலையில், மே 25ஆம் தேதியன்று ஊடகம் ஒன்றிடம் பேசிய மத்திய உயர்கல்வித் துறைச் செயலர் அமித் காரே, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லையென்று கூறினார். மே 31ஆம் தேதிக்குள் தமிழக அரசு இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் சூழலில்தான் மே 29ஆம் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம், மத்திய மனித வளத்துறைக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்சாக மாற்ற, "agreed to the proposal in principle" என குறிப்பிட்டிருந்தார் (இந்தக் கடிதம், துணைவேந்தர் சூரப்பாவால் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் வெளியிடப்பட்டது).

இதற்குப் பிறகு, ஜூன் மாதத்தில் துணைவேந்தர் சூரப்பா, மத்திய உயர் கல்வித் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதத்தில் பல்கலைக்கழகம் எப்படி தேவையான நிதியைத் திரட்ட முடியுமெனவும் கூறியிருந்தார். இந்தக் கடிதம்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியானதில் சர்ச்சை ஏற்பட்டது.

தற்போது தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன், உயர் சிறப்பு அந்தஸ்து அண்ணா பல்கலைக்கழகத்திற்குத் தேவையில்லையெனக் கூறியிருக்கிறார்.

இட ஒதுக்கீட்டு உரிமைகள் பறிபோகுமா?

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து பெறுவது குறித்த விவகாரம் பேசப்பட ஆரம்பித்ததிலிருந்தே, இட ஒதுக்கீடு விவகாரம் ஒரு முக்கியப் பிரச்சனையாக விவாதிக்கப்பட்டு வந்தது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒட்டுமொத்தமாக 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 'இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டால், இந்த இட ஒதுக்கீடு நீடிக்குமா அல்லது மத்திய அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை அமலாகுமா என்ற கேள்வி இருந்தது.

இது தொடர்பாக கவலைகள் எழுந்த நிலையில், கடந்த டிசம்பர் 17ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பது ஏன் என விளக்கமளித்த தமிழக அரசு, "இடஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து தெளிவுபடுத்தும்படி மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கும் இந்திய அரசிற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசு டிசம்பர் 4ஆம் தேதி அனுப்பிய பதில் கடிதத்தில், 'இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' அந்தஸ்து வழங்கப்பட்டாலும் மாநில அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடரும் எனக் கூறப்பட்டிருந்தது" என்று கூறியது.

இதற்கிடையில், தமிழக அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என உறுதியளிக்கக்கோரி தான் மத்திய மனித வளத்துறைக்கு கடிதம் எழுதியதாக சூரப்பா தெரிவிக்கிறார். இதற்கு, மனிதவளத் துறையின் இணைச் செயலர் அனுப்பிய கடிதத்தில், மாநில அரசு சட்டங்களால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் விதிகளின்படியே நடத்தப்படும் என்று ஏற்கனவே அளித்த விளக்கம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

தகவல்கள்

ஆனால், யுஜிசி இந்த அந்தஸ்து குறித்து வெளியிட்ட இரண்டு அறிவிப்புகளும் இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் முரண்படுகின்றன. UGC (Declaration of Government Institutions as Institutions of Eminence) Guidelines, 2017ஐப் பொறுத்தவரை, மாநில அரசின் சட்டத்தால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அந்தச் சட்டப்படியே தொடர்ந்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மாநில அரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடரும் எனப் புரிந்துகொள்ளலாம்.

தகவலகள்

ஆனால், UGC (Institutions of Eminence Deemed to be Universities) Regulations, 2017ன் படி நாடாளுமன்றம் இயற்றும் சட்டமே பொருந்தும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

ஆகவேதான், 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன.

இந்த விவகாரத்தில் எழும் கேள்விகள்

தற்போது உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லையெனக் கூறும் தமிழக அரசு, இதற்கு முன்பாக அந்த அந்தஸ்தைக் கோரி விண்ணப்பித்தது ஏன் என்பது புரியவில்லை. இதற்கென ஒரு அமைச்சர்கள் குழுவே அமைக்கப்பட்ட நிலையில், தமிழக அரசு இப்போது பின்வாங்குவது ஏன் என்பதும் தெளிவாகவில்லை.

இட ஒதுக்கீடு தொடர்பாக ஒரு இணைச் செயலர் அளிக்கும் வாக்குறுதியை ஏற்க முடியாது என தற்போது கூறும் தமிழக அரசு, கடந்த ஆண்டு டிசம்பரில் இதே போன்று எழுதப்பட்ட ஒரு கடித்ததின் அடிப்படையிலேயே இந்த அந்தஸ்தைப் பெற ஒப்புக்கொண்டது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவைப் பொறுத்தவரை, அண்ணா பல்கலைக்கழகம் சுயமாக ஆண்டுக்கு 314 கோடி ரூபாயை ஈட்ட முடியும் என்கிறார். ஆனால், அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால், பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்திருப்பதற்காக வழங்கும் கட்டணங்கள் உள்ளிட்டவை மற்றொரு அண்ணா பல்கலைக்கழகத்திற்குக் கிடைக்காது. அந்தச் சூழலில் 'அண்ணா பல்கலைக்கழகம் - இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினன்ஸ்' மாணவர்களுக்கான தனது கல்விக் கட்டணங்களை உயர்த்த வேண்டிவரலாம் என்ற கவலையும் இருக்கிறது.

எம்.கே. சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தால் நியமிக்கப்பட்டதிலிருந்தே அவருக்கும் மாநில அரசுக்கும் இடையில் உரசல்கள் இருந்து வருகின்றன. கொரோனா காரணமாக எல்லா மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிப்பது குறித்த வெளிப்படையில் தமிழக அரசும் துணைவேந்தரும் வெளிப்படையாவே மோதிக்கொண்டனர். தற்போதைய சர்ச்சை, இந்த மோதலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று. 1978ஆம் ஆண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகளை வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: