‘சந்திரயான்’ மயில்சாமி அண்ணாதுரை – ஏழ்மையை கல்வியால் துடைத்தெறிந்து இஸ்ரோவில் சாதித்தது காட்டிய தமிழர் #தமிழர்_பெருமை

'சந்திரயான்' மயில்சாமி அண்ணாதுரை
    • எழுதியவர், அறவாழி இளம்பரிதி
    • பதவி, பிபிசி தமிழ்

(தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் 14வது கட்டுரை.)

அக்டோபர் மாதம் 22ஆம் தேதி 2008ஆம் ஆண்டு ஆந்திரத்தின் ஸ்ரீஹரிக்கோட்டாவில் அமைந்திருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து காலை 6.22 மணிக்கு பல கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்தபடி நிலவை நோக்கி சந்திரயான்-1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட மொத்த இந்தியாவும் ஒரு மனிதரை உச்சி முகர்ந்து கொண்டாடியது.

கோவை மாவட்டம் கோதவாடி கிராமமக்கள் விண்வெளித்துறையில் இந்தியாவின் இந்த அசுர பாய்ச்சலை பெருமையாக கொண்டாடினார்கள். காரணம், சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை.

கோதவாடி கிராமத்தில் 1958 ஆண்டு ஜுலை 2ஆம் தேதி பிறந்தார் மயில்சாமி அண்ணாதுரை. அவருடைய தந்தை மயில்சாமி ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியர். அண்ணாதுரையுடன் பிறந்தவர்கள் 4 பேர். இந்த குடும்பத்தை தூணாக தாங்கிப் பிடித்தது அண்ணாதுரையின் தாய் பாலசரஸ்வதி.

Annadurai
படக்குறிப்பு, நடுவில் மயில்சாமி அண்ணாதுரை

தன்னுடைய முதல் கல்வி வகுப்பு மாட்டுக் கொட்டகையில் நடந்ததாக கூறும் மயில்சாமி அண்ணாதுரை, "அந்த காலத்தில் பள்ளிக்கூடங்களுக்கென தனி கட்டடங்கள் எதுவும் கிடையாது. அரசுப் பள்ளிகள் வராத காலம் அது. ஒரு விவசாயி தன்னுடைய மாட்டுக் கொட்டகையை எங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்திருந்தார். வகுப்புகள் தொடங்குவதற்குமுன், மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்ய வேண்டும். மூக்கைத் துளைக்கும் மாட்டுச் சாணம், மாட்டு மூத்திர வாசத்தில்தான் என்னுடைய படிப்பைப் படித்தேன். இரண்டாம் வகுப்பு வந்தபோது மாரியம்மன் கோயில் திண்ணையில் படித்தேன். மூன்றாம் வகுப்பு வந்தபோதுதான் பள்ளிக்கென தனிக் கட்டடம் வந்தது" என்று தன் கிராமத்து மண்ணின் நினைவுகளை அசைபோடுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

 தான் பள்ளிக்கு செல்வதற்கு முன்பே ஒன்றாம் வகுப்பு பாடங்களை படித்ததாக கூறும் மயில்சாமி அண்ணாதுரை, கல்வி மீதான தீரா பிரியத்துக்கு தன் தந்தை முக்கிய காரணம் என்றும், பள்ளிக்குச் செல்லும்போது மகிழ்வுடனே சென்றதாகவும் நினைவு கூர்கிறார் மயில்சாமி.

தமிழகத்தில் 5 வயதில் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஒரு நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. அதாவது, குழந்தைகள் வலது கையை எடுத்து தலையை சுற்றி இடது காதைப் பிடிக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகளுக்கு 5 வயது என்று நம்பி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள்.

"அப்போது எனக்கு 5 வயது பூர்த்தியாகவில்லை. ஆனால், என்னை பள்ளியில் சேர்த்துவிட வேண்டும் என்று அப்பா விரும்பினார். நான் பள்ளியில் சேருவதற்கு 15 நாட்கள் முன்பே தினமும் காலையில் எழுந்தவுடன் வலது கையை எடுத்து தலையை சுற்றி இடது காதைப் பிடிக்க பயிற்சி எடுப்பேன். பள்ளி சேர்க்கை அன்று வீட்டிலிருந்து பள்ளிக்கு காதைப் பிடித்து கொண்டே சென்றேன்," என்று சொல்லி சிரிக்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

எட்டாவது, ஒன்பதாவது படிக்கையில் தினமும் 10 கிலோமீட்டர் நடந்து சென்று பள்ளிக்கூடத்தில் படித்ததாக கூறும் மயில்சாமி அண்ணாதுரை, நிலச்சொத்து இல்லாத நம் குடும்பத்துக்கு கல்வி மட்டுமே மூலதனம் என்றும், ஏழ்மை நிலையை கல்வியால் மட்டுமே விரட்ட முடியும் என்றும் தனது அப்பா வலியுறுத்தியதாக கூறுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

சிறுவயதிலிருந்தே செய்தித்தாள்களை படிப்பதையும், ரேடியோ கேட்பதையும் தினசரி பழக்க வழக்கமாக வைத்துள்ளார் மயில்சாமி. சிறுவயதின் போது, மொழி மீதான பற்று காரணமாக எதிர்காலத்தில் தமிழ் ஆசிரியராக வரவேண்டும் என்று நினைத்திருந்தார். திராவிடம் மீதான அப்பாவின் ஈர்ப்பு தனக்குள்ளும் ஆளுமை செலுத்தியதாக கூறுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

 "அண்ணா மற்றும் குன்றக்குடி அடிகளாரின் கூட்டங்களுக்கு அப்பா செல்வார். அப்போது, என்னையும் சைக்கிளில் அழைத்து கொண்டு செல்வார்" என்று கூறும் மயில்சாமி அண்ணாதுரை, பள்ளி வகுப்பறையைத் தாண்டி அரசியல் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின் பேச்சுகள் தனது அறிவை மேலும் செறிவூட்டியதாக கூறுகிறார்.

மயில்சாமி அண்ணாதுரை

"கல்லூரி நாட்களில் செங்கல் சூளைக்கு செல்வோம்"

1976ல் கோவையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரில் பட்டம் பெற்ற மயில்சாமி 1982ல் கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பட்டமேற்படிப்பும் முடித்துள்ளார்

தன் கல்லூரி நாட்கள் குறித்து பேசும் மயில்சாமி,"விடுமுறை நாட்களில் செங்கல் சூளை, நூற்பாலை போன்ற வித விதமான தொழிற்சாலைகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தேன். வகுப்பில் சொல்லித் தருவதை தாண்டி நேரில் தொழிற்சாலைகளில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எனக்கு இருந்தது. கல்லூரி காலத்திலும் நான் அதிக நேரம் லேப்களில் செலவழிப்பேன். அப்படித்தான், 1975 மற்றும் 1976 காலக்கட்டங்களில், ரேடியோ ஆன் செய்தால் தானகவே ஆஃப் ஆகும் ஒரு டைமரை நானே கண்டுபிடித்தேன்" என்கிறார் அவர்.

1982ல் பல முன்னணி தனியார் நிறுவனங்கள் மயில்சாமி அண்ணாதுரைக்கு பணி வழங்கத் தயாராக இருந்தன. ஆனால், அப்போதுதான் விண்வெளித் துறையில் இந்தியா கால்பதித்து ஒரு தசாப்தத்துக்கும் அதிகமான ஆண்டுகள் ஆகியிருந்தது. இந்த காலக்கட்டத்தில், இந்தியா உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, அரசியல் மற்றும் நிதிப்பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணிகளால் விண்வெளித்துறையில் சற்று பின்தங்கியே இருந்தது. இப்படியான ஒரு தருணத்தில்தான் இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தில் சேர்ந்தார் மயில்சாமி அண்ணாதுரை.

இஸ்ரோவின் முகத்தை மாற்றிய மயில்சாமி அண்ணாதுரை

1962ல் இந்திய தேசிய விண்வெளி ஆய்வு குழு உருவாக்கப்பட்டு பின்னர் 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கலைக்கப்பட்டது. அதே நாள், இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது.

1975 - 1982ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இந்தியா 8 செயற்கைக்கோள்கள் மட்டுமே ஏவி இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில், இந்தியாவுக்கென தனி விண் ஊர்தி கிடையாது. ஆரம்ப கட்டத்தில் செயற்கைக் கோள்கள் வெளிநாடுகளில் வடிவமைக்கப்பட்டு, பின் அவை ராக்கெட்டை ஏவும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அந்நாடுகள் இந்திய செயற்கைக் கோளை விண்வெளி செலுத்தி புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தி விடுவார்கள். அதனைத் தொடர்ந்தே, இந்திய விண்வெளி ஆய்வு மையம் செயற்கைக் கோளை கட்டுப்பாட்டில் எடுக்கும். இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டாவை 1975ல் ரஷ்யா ஏவியது.

மயில்சாமி அண்ணாதுரை

பெங்களூரில் பணியில் சேர்ந்த காலம் இஸ்ரோவுக்கென தனி சொந்த கட்டடம்கூட இல்லை என்று கூறும் மயில்சாமி, "நான் இஸ்ரோ பணியில் சேர்ந்து இரண்டு மாதங்களான நிலையில், இஸ்ரோ தலைவரிடம் ஒரு பரிந்துரையை அளித்தேன். நம்முடைய செயற்கைக் கோள்களை வெளிநாடுகளே தயாரிக்கின்றன. அவர்களே விண்வெளிக்கு அனுப்பவும் செய்கிறார்கள். செயற்கைக் கோளை எப்படி இயக்க வேண்டும் என்பதையும் அவர்கள் கொடுக்கும் கையேடு கொண்டு இயக்குகிறோம். இதில் என்ன ஆய்வுப்பணியை நாம் செய்யப் போகிறோம் என்பதன் ஆதங்கத்தின் வெளிப்பாடாக அந்த பரிந்துரை இருந்தது."

"செயற்கைக் கோளை முதலில் வன்பொருளாக அல்லாமல் மென்பொருளில் செய்து பார்ப்போம் என்று பரிந்துரைத்திருந்தேன். ஒவ்வொன்றுக்கும் வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்காது என்றேன். எதிர்காலத்தில் நாமே சொந்தமாக செயற்கைக் கோள்களை வடிவமைக்கும்போது நமக்கு சிரமம் இருக்காது என்பதை வலியுறுத்தினேன். என்னுடைய பரிந்துரையை படித்து பார்த்துவிட்டு, 'இதை ஏன் நீயே செய்யக் கூடாது' என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் இதன் பட்ஜெட் தொகை 8 லட்ச ரூபாய். அப்போது நான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளம் வெறும் 700 ரூபாய். என்னை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை கொடுத்தார்கள்," என்கிறார் உற்சாகம் பொங்க. 

சர்வதேச அளவில் இந்தியாவால் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை அனுப்ப முடிவதற்கான முக்கிய காரணம் குறித்து பேசும் மயில்சாமி, "ஒரு செயற்கைக் கோளை நாம் ஏவப்போகிறோம் என்றால் நாம் ஒரே ஒரு செயற்கைக் கோளை மட்டுமே தரமாக எவ்வித பிரச்சனைகளின்றி மிகவும் கவனமாக செய்வோம். ஆனால், பிற நாடுகள் திட்டத்தின் தொடக்க நிலையில் ஒன்று, பரிசோதனை செய்ய ஒன்று மற்றும் இறுதியாக விண்ணில் செலுத்த ஒன்று என மூன்று செயற்கைக் கோள்களை செய்வார்கள். அதனால்தான் குறைந்த செலவில் நம்மால் நிலவுக்கு ராக்கெட் அனுப்ப முடிந்தது. ஆனால், நாம் செயற்கைக் கோளை ஏவுவதற்குமுன், பல முறை அதை ஸ்டுமிலேட்டர்கள் மூலம் ஒன்றுக்கு நூறு முறை பரிசோதித்து விடுவோம்," என்கிறார் அவர். 

1988ஆம் ஆண்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட IRS-1A செயற்கைக் கோள் ரஷ்யாவிலிருந்து வெற்றிகரமாக ஏவப்படுகிறது. இதுதான் இந்தியாவின் முதல் தொலைநிலை உணர்திறன் செயற்கைக் கோள். இத்திட்டத்தின் செயல்பாட்டு மேளாலராக மயில்சாமி அண்ணாதுரை இருந்தார். அதேபோல், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் INSAT 2Aவுக்கும் மயில்சாமி செயல்பாட்டு மேளாலராக நியமிக்கப்பட்டார். 

"இந்தியாவுக்காக முதல் செயற்கைக்கோள் IRS-1Aவை செய்கிறோம் என்கிற போது ஒருவித பதற்றம் இருந்தது. அது ரஷ்யாவிலிருந்து ஏவப்பட்டது. அப்போது நம்மிடம் சொந்த ராக்கெட்டுகள் இல்லை. இஸ்ரோவின் மொத்த ஊழியர்களும் அந்த ஒரு செயற்கைக்கோளுக்காக 4,5 வருடங்கள் கடுமையாக உழைத்திருந்தனர். அது வெற்றிகரமாக ஏவப்பட்டு பூமியின் புவிவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட தருணம் மனதுக்கு அப்படி ஒரு சந்தோஷம். சக நண்பர்கள் என எல்லோரும் ஆர்ப்பரித்தோம். இது வெற்றியடைந்தவுடன் எனக்கு மற்றோரு பொறுப்பு கொடுக்கப்பட்டது. கடமையை செய் பலனை எதிர்பார்க்கதே என்பார்கள். ஆனால், இஸ்ரோவை பொறுத்தவரை கடமையை செய்தால் அடுத்தடுத்து பெரிய பொறுப்புகள் கூடும் என்பது நான் என் வாழ்க்கையில் அனுபவித்த ஒன்று. அதன் பிறகு, கிட்டத்தட்ட 12 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவினோம்" என்று உற்சாகம் பொங்க நினைவு கூர்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் திட்டத்தை முன்னெடுக்க இந்தியாவுக்கு என்ன அவசியம்?

இரு தசாப்தங்களுக்கு முன்பு, உலகளவில் விண்வெளித்துறையில் இந்தியா தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை பிடிக்காவிட்டாலும், பல முக்கிய சாதனைகளை செய்திருந்தது. இஸ்ரோவை அந்த நிலைக்கு உயர்த்த அதன் விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்திருந்தனர். ஆனால், அதேசமயம் இஸ்ரோவிலிருந்து பல விஞ்ஞானிகள் தனியார் நிறுவனங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தனர். ஐஐடி மற்றும் நாட்டின் முன்னணி பொறியியல் கல்லூரிகளில் படித்திருந்தவர்கள்கூட இஸ்ரோவில் இணைவதற்கு பெரியளவில் ஆர்வம் காட்டவில்லை.

பெங்களூரில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கால் பதிக்கத் துவங்கி போட்டிப் போட்டுக் கொண்டு பொறியியல் பட்டதாரிகளை தேர்வு செய்த காலம் அது. எதிர்காலத்தில் இஸ்ரோவில் செயற்கைக்கோள்களை செய்ய ஆள்பற்றாகுறை ஏற்படும் அபாயம் இருந்தது.

இந்த காரணங்களால், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு திட்டத்தை செய்ய வேண்டிய கட்டாயம் இஸ்ரோவுக்கு ஏற்பட்டதாக கூறுகிறார் மயில்சாமி. இந்தத் திட்டம், இஸ்ரோவின் இமேஜை உயர்த்தியது மட்டுமின்றி, நிறைய மாணவர்கள் இஸ்ரோவை தங்கள் எதிர்காலமாக தேர்வு செய்ய வழிவகை செய்தததாக கூறுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

இதுமட்டுமின்றி, எதிர்காலத்தில் விண்வெளித்துறையில் இனி வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய தேவை இருக்காது என்பதற்காகவும், பிற நாடுகளின் செயற்கைக்கோள்களை வர்த்தக ரீதியில் இந்தியா சுமந்து செல்லும் அளவுக்கு வளரும் என்பதற்காகவும் இத்திட்டம் முக்கியமானதாக இஸ்ரோ கருதியது.

மயில்சாமி அண்ணாதுரை

பட மூலாதாரம், Getty Images

மயில்சாமியின் வாழ்வை மாற்றிய சந்திரயான்-1

இஸ்ரோவில் 22 ஆண்டுகள் பணியை அப்போது நிறைவு செய்திருந்தார் மயில்சாமி அண்ணாதுரை. அவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக சந்திரயான் - 1 திட்டம் அமைந்தது. சந்திரயான் -1 தன் வாழ்வில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை.

"இந்தியாவின் முதல் ரிமேட் சென்சிங் செயற்கைக்கோளின் போது நான் இருந்தேன். நாட்டின் முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளின் போதும் நான் இருந்தேன். இப்போது, இந்தியாவின் முதல் பெருமைமிகு திட்டம், நிலவுக்குச் செல்ல வேண்டும். சந்திரயான் - 1 திட்டத்தின் இயக்குநராக இஸ்ரோ தலைவரால் நியமிக்கப்பட்டேன். அப்போது, எனக்கு 45 வயது. பலத்த போட்டிகளுக்கு இடையே நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். எப்படியாவது இதை வெற்றிப் பெற வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே எனக்குள் இருந்தது" என்று கூறும் அவர் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

"ஒருபுறம் சந்திரயான்-1 திட்டத்தின் இயக்குநர் பணி மறுபுறம் இன்சாட் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநர் பணி இந்த இரண்டில் எதை வேண்டுமே தேர்ந்தெடுத்து கொள்ள சுதந்திரம் என்னிடம் இருந்தது. இதுதவிர்த்து, என்னுடைய பணிகளை பார்த்து இஸ்ரோவில் வழங்கப்பட்ட சம்பளத்தைவிட கூடுதல் சம்பளத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் முக்கியப்பணியும் கிடைத்தது. எனக்கு எதைத் தேர்வு செய்யவேண்டும் என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. அப்போதுதான், நானும், என் மனைவியும் கலந்தாலோசித்தோம். சந்திரயான்-1 திட்டத்தில் நான் பணியாற்றினால் என்னால் வீட்டுக்கு சரியான நேரத்துக்கு வர முடியாது. திட்டம் வெற்றிப்பெற்றால் வரலாற்றில் என்பெயர் இருக்கும். தோல்வி என்றால் எல்லாமே சிக்கலாகும் என்றேன். அவர்தான் சந்திரயான் - 1 திட்டத்தை தேர்வு செய்யும்படி என்னை ஊக்கப்படுத்தினார்," என்கிறார் மயில்சாமி.

சந்திரயான் - 1 திட்டத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒதுக்கிய தொகை ரூபாய் 386 கோடி. அன்றைய தேதியில் இது மிகப்பெரிய தொகை என்றாலும்கூட, ஒரு நாட்டின் பெருமை வாய்ந்த அதுவும் நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்துக்கு வெறும் 386 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது பல வளர்ந்த நாடுகளை ஆச்சரியப்பட வைத்தது. அதுமட்டுமின்றி, செயற்கைக்கோள் தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களும் கட்டடங்களும் இஸ்ரோ வசம் இருந்தபோது, நிலவுக்கு பயணம் மேற்கொள்ளும் திட்டத்துக்கான அடிப்படை விஷயங்கள்கூட இஸ்ரோ வசம் இல்லை.

"சந்திரயான்-1 விண்ணில் ஏவப்பட்டவுடன் அதை கட்டுப்படுத்துவதற்கான தரை கட்டுப்பாட்டு அறை, பெரிய ஆண்ட்டெனாக்கள் போன்ற பல வசதிகள் நம்மிடம் இல்லை. ஏன் அப்போது, தொலைத்தூரத்தில் உள்ள நிலவுக்கு செல்வதற்கான ராக்கெட் நம்மிடம் இல்லை. நாம் பிஎஸ்எல்வி ராக்கெட் வைத்திருந்தோம். ஆனால், அதைவைத்து நிலவுக்குச் செல்ல முடியாது. ஆரம்பக் கட்டத்தில், இத்திட்டத்தில் வெறும் இந்தியா மட்டுமே பங்கேற்க இருந்தது. ஆனால், உலக நாடுகள் இந்தத் திட்டத்தில் ஆர்வம் காட்டின. மற்றொரு உண்மை என்னவெனில், நீங்கள் ஒரு சாதனையை தனியாக சென்று முடிப்பதை காட்டிலும், உங்களுடன் ஒருவரை நீங்கள் அழைத்து சென்றால் அந்த சாதனை வெகு சீக்கிரத்தில் அங்கீகரிக்கப்படும். அதனால், வளர்ந்த நாடுகளிடம் சில கருவிகளை எடுத்துச்செல்ல திட்டமிட்டோம். நாங்கள் ஒன்று அல்லது இரண்டு நாடுகள் ஆர்வம் காட்டும் என்று எண்ணினோம். ஆனால், ஆச்சரியப்பட வைக்கும் வகையில், பல்வேறு நாடுகள் 26 கருவிகளை கொடுக்க முன்வந்தார்கள். அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது இந்தியாவின் இந்தத் திட்டத்தை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன," என்கிறார் மயில்சாமி அண்ணாதுரை பெருமிதத்தோடு.

மயில்சாமி அண்ணாதுரை

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுடன் கைக்கோர்த்த 'நாசா'

சந்திரயான் - 1 விண்கலத்தில் கொண்டுச் செல்ல கருவிகள் தேர்வில் பெரும் குழப்பத்தை எதிர்கொண்டதாக சொல்கிறார் மயில்சாமி அண்ணாதுரை. வளர்ந்த நாடுகள் இந்தியாவின் நிலவுத்திட்டத்துக்காக 26 கருவிகளை கொடுக்க முன்வந்தன. இவை அனைத்தையும் எடுத்துச் செல்வது என்பது சாத்தியமற்றதாக இருந்தது. காரணம், விண்கலத்தில் இந்த கருவிகளை பொருத்தும் போது, எடைக்கூடும். அது அதிகமாகும் போது, பயணத்தில் பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என சந்திராயன் -1 குழு கணித்திருந்தது.

"இந்த 26 கருவிகளில், நான் முக்கியமாக கருதியது அமெரிக்க விஞ்ஞானிகளின் கருவியைதான். அதில் ஒன்று, நிலவின் துருவப்பகுதியில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தும் கருவிதான் இது. இந்த இரு கருவிகளை நாசா பரிந்துரைத்து இருந்தது. இறுதியில், குழுவினருடன் பேசி, 26 கருவிகளில் 6 கருவிகளை எடுத்துச் செல்ல திட்டமிட்டோம். இது அந்த காலக்கட்டத்தில் நாங்கள் எடுத்த மிகப்பெரிய முடிவு. ஏற்கனவே திட்டத்துக்கு குறைந்தளவு தொகையே நிதியாக ஒதுக்கப்பட்டது. இப்போது, கூடுதலாக 6 கருவிகளை பிஎஸ்எல்வி ராக்கெட் எடுத்துச்செல்ல வேண்டும் என்பதால் இதை எப்படி சாத்தியமாக்க வேண்டும் என்பதில் மிகத்தீவிரமாக யோசித்தோம்." என்கிறார் மயில்சாமி ஆச்சரியம் விலகாமல்.

மத்திய அரசு சந்திரயான் திட்டத்துக்கு ஒதுக்கிய 386 கோடி ரூபாயில், 250 கோடி ரூபாயை எதிர்கால சந்திரயான் திட்டங்களுக்காக முதலீடாக பயன்படுத்தியுள்ளார் மயில்சாமி அண்ணாதுரை.

அதுமட்டுமின்றி 6 கருவிகளை சந்திரயானில் எடுத்துச் செல்வதற்கான மற்றொரு காரணத்தை கூறும் மயில்சாமி அண்ணாதுரை, "6 கருவிகளை எடுத்துச் செல்லும் பட்சத்தில், அந்த சம்பத்தப்பட்ட நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பெங்களூருவில் தங்குவது வழக்கம். சில நேரங்களில் 100 பேர் வரைகூட தங்கிப் பணி புரிவார்கள். அப்போது, 4 ஆண்டுகளுக்கு அவர்கள் இங்கு செலவு செய்யும் தொகையை கணக்கிட்டாலே சந்திரயான் -1 திட்டத்துக்கான பட்ஜெட்டுக்கு ஒத்த தொகை வந்துவிடும்," என்று கூறி சிரிக்கிறார். 

சந்திரயான் திட்டம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் தானே இஸ்ரோவைவிட்டு விலகி இருப்பதாக சொல்லும் மயில்சாமி அண்ணாதுரை, இந்த ஒரு திட்டம் இஸ்ரோவின் பல முக்கிய விஞ்ஞானிகள் ராஜினாமாவை தடுத்திருப்பதாக கூறுகிறார்.

நிலவுக்குச் செல்லும் திட்டத்துக்கு மயில்சாமி அண்ணாதுரைக்கு 10 ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், அதை 4 ஆண்டுகளிலேயே வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். 

'சந்திரயான்' மயில்சாமி அண்ணாதுரை

அப்துல் கலாமின் ஆசையை நிறைவேற்றிய மயில்சாமி

சந்திரயான்-1 திட்டத்தின் போது, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் குறித்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளை நம்முடன் பகிர்ந்த மயில்சாமி, "சந்திரயான்-1ல் வெளிநாட்டினரின் 6 கருவிகளும், இந்தியாவின் 6 கருவிகளும் வெற்றிகரமாக பொருத்தப்பட்டபின் அதைப்பார்த்து பாரட்டிய கலாம், நிலவில் இந்தியக் கொடியுடன் தரையிறங்கினால் நன்றாக இருக்கும் என்றார். நான் அவரிடம், 'கஷ்டம் சார்' என்றேன். அதற்கு அவ்ர், 'கஷ்டமாதான்பா இருக்கும் திரும்ப பண்ணுனு' என்று சொல்வார்."

"அவருக்காக 6 மாதங்கள் உழைத்து, வடிவமைப்பை மாற்றி இந்திய கொடியை பொருத்தினோம். அதனால்தான் வடிவமைப்பிற்காகவே சர்வதேச அளவில் சந்திரயான் இரண்டு விருதுகளை பெற்றது. சந்திரயான்-2 போலவே நிலவின் மேற்பரப்பை நோக்கி ஒரு கலன் செல்லும், ஆனால் இந்த கலனில் என்ன வித்தியாசம் என்றால் இது பரப்பில் மோதும் வரை அனைத்து படங்களையும் உடனுக்குடன் எடுத்து பூமிக்கு அனுப்பிவிடும். அதாவது அது நிலவின் மேற்பரப்பில் மோதி சிதறும் வரை அனைத்து படங்களையும் எடுத்து அனுப்பிவிட்டது."

"அப்போதுதான், கலனின் இருந்த ஒரு கருவி மூலம், நிலவில் வளிமண்டலம் என்ற ஒன்று இருக்கிறது என்பது உறுதியானது. அந்த வலி மண்டலத்தின் காற்றில் நீரின் அறிகுறிகள் போன்ற தெரியும். அப்போதுதான், நிலவில் நீர் இருப்பதற்கான முதல் சமிக்கையை இந்த கருவி வெளிப்படுத்தியது. அந்தத் தருணத்தின் போது, இந்திய குடியரசுத் தலைவராக இருந்த அப்துல் கலாம் எங்களோடுதான் இருந்தார்."

"சந்திரயான் திட்டத்தின் வெற்றி குறித்தும், நிலவில் நீர் இருப்பதற்கான இந்தியா கண்டுபிடித்த ஆதரம் குறித்தும் அதிகாரபூர்வமாக தெரிவித்த பின்னர் கலாமிடம் கையை கொடுத்தேன். அவர் என் கையைப் பிடித்தபடி, 'வாட்ஸ் நெக்ஸ்ட்' என்றார். நான், 'சந்திரயான்-2 பண்ணுவோம், மங்கள்யான் பண்ணுவோம் சார்' சொன்னேன். மகிழ்ச்சியோடு தோளைத் தட்டிக்கொடுத்தார்," என்று அந்த தருணத்தை அப்படியே கண்முன் நிறுத்துகிறார் மயில்சாமி.

தள்ளிப்போன சந்திரயான்-2; கைகொடுத்த மங்கள்யான்

2008ல் சந்திரயான்-1 முடித்த கையோடு சந்திரயான்-2 திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின்படி, ஆர்பிட்டர் கலன் மற்றும் ரோவரை இந்தியா செய்யும். லேண்டரை ரஷ்யா செய்ய வேண்டும். ஆனால், நிலவுக்கு சீனாவும், ரஷ்யாவும் மேற்கொண்ட ஒரு பயணம் தோல்வியில் முடிய, தொடர்ந்து பல காரணங்களால் இந்தியா ரஷ்யா இடையே போடப்பட்ட ஒப்பந்தமும் ரத்தானது. அதோடு, சந்திரயான்-2 திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. அப்போது உதயமானதுதான் மங்கள்யான் திட்டம். செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் பயணம். ஆசிய நாடுகளிலே செவ்வாய் கிரகத்தின் வட்டப்பாதையில் வெற்றிகரமாக செயற்கைக்கோளை அனுப்பியது இந்தியா மட்டுமே. அதுமட்டுமின்றி, உலகிலேயே முதல் முயற்சியில் செயற்கைக்கோள் அனுப்பி வெற்றி கண்ட நாடும் இந்தியாதான்.

"இந்தியாவிடம் இப்போது லேண்டர் இல்லை. பல பிரச்சனைகளால் ரஷ்யாவுடனான ஒப்பந்தம் முறிந்தது. நாம் ஒரு புது லேண்டரை செய்ய குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளாகும். அதற்குள் தயார் நிலையில் இருக்கும் ஆர்பிட்டர் கலனை என்ன செய்வது? இப்படி பல குழப்பங்கள் இருந்தன. அப்போதுதான், செவ்வாய் கிரகத்துக்கு செல்வதற்கான ஓர் அரிய வாய்ப்பு கிடைத்தது. 26 மாதங்களுக்கு ஒருமுறை இப்படியொரு வாய்ப்பு வரும். அதனால்தான் இந்த திட்டத்தை வெறும் 11 மாதங்களில் செய்து முடிக்க முடிந்தது. வெளிநாட்டில் நடந்த கருந்தரங்கு ஒன்றில், இந்தியாவும் 2013ல் செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் என்றேன். அதற்கு சிலர், 'எங்கே உங்க செயற்கைக்கோள்?' என்று நகைத்தார்கள். ஆனால், சந்திரயான்-2 திட்டத்துக்கான செயற்கைக்கோளை அப்படியே மாற்றி மங்கள்யானுக்கு பயன்படுத்தி கொண்டோம். அப்படிதான் மங்கள்யான் சாத்தியமானது," என்கிறார் மயில்சாமி.

மயில்சாமி அண்ணாதுரை தலைமை வகிக்கும் எந்தவொரு திட்டம் வெற்றி பெற்றாலும் தனக்கு கீழ் பணியாற்றும் சக ஊழியர்களுக்கு ஒரு பவுன் தங்கக் காப்பு வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

'சந்திரயான்' மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான்-2 விண்கலத்தில் நிகழ்ந்த குறைபாடு என்ன?

2019ல் கோடிக்கணக்கான இந்தியர்களால் ஆவலோடு காத்திருந்த தருணம் நொடிப் பொழுதில் சுக்குநூறானது. ஆர்பிட்டரிலிருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில், தரையை தொடுவதற்கு சில நிமிடங்களுக்குமுன், ஆர்பிட்டருடன் தொடர்பை இழந்து நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி நொறுங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த கடைசி நிமிடத்தில், என்ன நேர்ந்திருக்கலாம் என்பது குறித்து நம்மிடம் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, "நான் இஸ்ரோவிலிருந்து ஓய்வு பெற்ற போது, சந்திரயான்-2 திட்டத்தின் பணிகள் கிட்டத்தட்ட 95 சதவீதம் நிறைவடைந்துவிட்டன. பரிசோதனை கட்டத்தில்தான் நான் ஓய்வு பெற்றேன். என்னோட கணிப்பு என்னவெனில், அவர்கள் மேற்கொண்ட சின்ன திருத்தத்தை முறையாக பரிசோதித்துப் பார்க்க தவறி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். விக்ரம் லேண்டர் நொறுங்கிவிட்டது என்பதை தெரிந்து கொள்ளவே ஒரு வாரம் ஆனது. அதன்பிறகே, பிரக்யான் ரோவரை இயக்கிப் பார்த்திருக்கிறார்கள். ஒரு வாரம் கழித்து செய்த வேலையை முன்பே செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இப்போது, பிரக்யான் ரோவர் நிலவில் நகர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். இதை அப்போதே இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்திருக்க வேண்டும். சந்திரயானில் 1ல் எப்படி ஆர்பிட்டர் புகைப்படங்களை உடனுக்குடன் பூமிக்க அனுப்பிக் கொண்டிருந்ததோ அதே போன்ற ஓர் அமைப்பை சந்திரயான்-2 திட்டத்தில் செய்திருக்க வேண்டும்," என்கிறார் மயில்சாமி.

சந்திரயான்-2 திட்டம் முழு வெற்றி பெறாதது குறித்து தனது அதிருப்தியை பதிவு செய்யும் மயில்சாமி அண்ணாதுரை, "இதுபோன்ற சிக்கலான சூழ்நிலையில், எப்போதும் வேறொரு பிளான் கைவசம் இருந்திருக்க வேண்டும். இஸ்ரேல் இதே போன்றதொரு திட்டத்தை முன்னெடுத்த போது, இந்தியாவை போன்று கடைசி நிமிடத்தில் லேண்டர் தரையில் மோதி உடைந்தது. அப்போது, அவர்கள் வசம் ஆர்பிட்டர் இல்லை. ஆனால், நம்மிடம் ஆர்பிட்டர் இருந்தது. நாம் அவர்களுடைய படிப்பினையை எடுத்து கொண்டு அதற்கான மாற்றுத்திட்டத்தை வைத்திருந்திருக்க வேண்டும். விக்ரம் லேண்டர் நொறுங்கிய தகவல் கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். இத்தனை நாட்களில் நான் அப்படியான ஒரு வேதனையை அனுபவித்தது இல்லை," என்று வருத்தப்படுகிறார் மயில்சாமி அண்ணாதுரை.

தண்ணீரில் ஓடும் ஹைட்ரோஜன் என்ஜின் குறித்த கண்டுபிடிப்பில் மயில்சாமி அண்ணாதுரை

தனது ஓய்வுக்காலம் பற்றி பேசும் மயில்சாமி அண்ணாதுரை, கல்லூரி மாணவர்களின் அறிவியல் திட்டங்களுக்கும் மற்றும் சமூகம் சார்ந்த நல்ல கண்டுபிடிப்புகளுக்கும் தன்னால் ஆன இயன்ற பங்களிப்பை ஆற்றி வருகிறார் மயில்சாமி அண்ணாதுரை. தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார். பெங்களூருவில் இயங்கி வரும் தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

‘சந்திரயான்’ மயில்சாமி அண்ணாதுரை

"வேலூர் விஐடி மாணவர்களுடன் சேர்ந்து ஹைட்ரோஜன் வாயுவை கொண்டு வாகனத்தை இயக்குவது குறித்து பரிசோதித்து வருகிறோம். அதுமட்டுமின்றி, இந்த ஹைட்ரோஜனை தண்ணீரை மின்பகுப்பு செய்வதன் மூலம் வாயுவைப் பெற முடியும். ஆக, தற்போதுள்ள வண்டிகளில் சில சின்ன மாற்றங்கள் செய்தால் போதும். தண்ணீரை நிரப்பிக் கொண்டு வாகனத்தை இயக்கலாம். என்னை பொறுத்தவரை, ஒருநாள் எரிபொருளும் தீர்ந்து போகும், லித்தியம் அயன் பேட்டரிகளும் தீர்ந்து போகும். அதனால், ஹைட்ரோஜனை மையாமாக எரிபொருள் செல்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன். காஞ்சிபுரம் iiitdm உடன் இணைந்து பருத்திக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு கேடு தராத வகையில் வாழை நாரிலிருந்து நூல் எடுத்து அதைகொண்ட ஆடைத் தயாரிக்க முடியும். இதனால், சாயப்பட்டறைகள் பிரச்சனை இருக்காது. நிலத்தடி நீர் கெடாது. முக்கியமாக இந்த ஆடைகளை செய்ய அதிகளவில் மறைநீர் தேவைப்படாது. வாழை நாரிலிருந்து நூல் எடுக்கும் இயந்திரங்களை தயாரிக்க திட்மிட்டு அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளேன். இதனால், வாழை விவசாயிகளும் பயன்பெறுவார்கள், இயற்கையும் பாதுகாக்கப்படும்," என்கிறார் அவர்.

இந்த கால இளம்தலைமுறையினருக்கு நீங்கள் என்ன சொல் விரும்புகிறீர்கள் என்பதற்கு பதிலளித்த மயில்சாமி அண்ணாதுரை, "வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்குங்கள். பள்ளமோ, மலையோ எந்த தருணத்திலும் அப்படியே நின்றுவிடாதீர்கள் வாழ்க்கை எனும் ஓட்டத்தை ஓடிக் கொண்டே இருங்கள்" என்கிறார் மனநிறைவோடு.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: