இந்திய பொதுத்துறை வங்கிப் பணியில் சேர்வது எப்படி? தகுதி, தேர்வு முறை, சம்பள விவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி செய்தியாளர்
வங்கிகள் கடன் வாங்குவதற்கும், பணம் டெபாசிட் செய்வதற்கும், நிலையான வைப்புத்தொகை செய்வதற்கும் மட்டுமல்ல.
அவை வேலைகளையும் வழங்குகின்றன.
வேலைவாய்ப்பு வழங்குவதில், பொதுத்துறை வங்கிகள் நாட்டின் முதல் ஐந்து பொதுத்துறைகளில் ஒன்றாகும்.
ஆனால், இந்த வேலைகளை அடைவதற்கான வழி என்ன?
அந்த வழியின் பெயர் தான் ஐபிபிஎஸ் (IBPS).
ஐபிபிஎஸ் என்றால் என்ன?
மத்திய அரசுப் பணிகளுக்கு யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு நடத்துவது போலவே, பொதுத்துறை வங்கிகளில் ஆட்களைத் தேர்வு செய்யும் அமைப்பின் பெயர் தான் ஐபிபிஎஸ். இதன் விரிவாக்கம் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (Institute of Banking Personnel Selection) ஆகும்.
இது அரசு வங்கிகளில் பணியிடங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை நடத்தும் ஒரு சுயாதீனமான (Autonomous) அமைப்பாகும்
ஐபிபிஎஸ் ஏழு பதவிகளுக்குத் தேர்வுகளை நடத்துகிறது:
- கிளார்க் (Clerk)
- புரோபேஷனரி ஆஃபீஸர் (PO)
- ஸ்பெஷலிஸ்ட் ஆஃபீஸர் (SO)
- ரீஜனல் ரூரல் வங்கி (RRB) ஆஃபீஸர் ஸ்கேல் 1, ஸ்கேல் 2, ஸ்கேல் 3
- ஆஃபீஸ் அசிஸ்டெண்ட் (Office Assistant)
பொதுத்துறையின் 11 வங்கிகள் மற்றும் 43 மண்டல கிராமிய வங்கிகள் ஐபிபிஎஸ் நடத்தும் ஆள்சேர்ப்புத் தேர்வுகளில் பங்கேற்கின்றன.
இதில் பேங்க் ஆஃப் பரோடா, கனரா பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், யூகோ பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, இந்தியன் பேங்க் மற்றும் பஞ்சாப் & சிந்து பேங்க் ஆகியவை அடங்கும்.
ஆனால், நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்.பி.ஐ (SBI) இதன் ஒரு பகுதி அல்ல. ஏனெனில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது ஆள்சேர்ப்புக்குத் தானே தேர்வுகளை நடத்தி, அறிவிப்புகளையும் வெளியிடுகிறது.
ஐபிபிஎஸ் தேர்வில் எத்தனை நிலைகள் உள்ளன?
இந்தத் தேர்வில் முக்கியமாக மூன்று நிலைகள் உள்ளன:
- ப்ரிலிம்ஸ் (Prelims - ஆரம்பத் தேர்வு)
- மெயின்ஸ் (Mains - முதன்மைத் தேர்வு)
- நேர்காணல் (Interview)
கிளார்க் பதவிக்கு மட்டும் ப்ரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் என இரண்டு தேர்வுகள் மட்டுமே உள்ளன. கிளார்க் மற்றும் பிஓ தேர்வுகளின் முறையும் (Pattern) வேறுபடுகின்றன.

பட மூலாதாரம், Getty Images
யார் இந்தத் தேர்வை எழுதலாம்?
ஒவ்வொரு பதவிக்குமான கல்வித் தகுதி வேறுபடும் என்றாலும், இத்தேர்வில் பங்கேற்க சில பொதுவான நிபந்தனைகள் உள்ளன:
- பி.ஓ (PO) தேர்வு எழுத இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- வயது 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் (Graduation) பெற்றிருக்க வேண்டும்.
- கணினி பற்றிய அடிப்படை அறிவு இருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தின் வங்கியில் சேர வேண்டுமெனில், அதன் அதிகாரப்பூர்வ மொழி தெரிந்திருக்க வேண்டும்.
பிஓ (PO) பதவிக்கு, பிராந்திய மொழி நிபந்தனை கட்டாயமில்லை.
இதற்கான காரணத்தை ஐபிபிஎஸ் தேர்வுகளுக்குத் தயாராவோருக்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர் தன்வி விளக்குகிறார்: அதன்படி,
கிளார்க் தேர்வில் விண்ணப்பதாரர்கள் அவர்களின் விருப்பமான மாநிலங்களில் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், பிஓ-வை இந்தியா முழுவதும் எங்கும் அனுப்பலாம். இருப்பினும், ஆர்ஆர்பி (RRB - மண்டல கிராமிய வங்கிகள்) தேர்வுகளுக்கு (பிஓ மற்றும் கிளார்க் உட்பட) மொழிப் புலமைத் தேர்வு (Language Proficiency Test) அவசியம்.
வயது வரம்பைப் பொறுத்தவரை, தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்படப் பல்வேறு பிரிவினருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சலுகைகள் கிடைக்கும்.
அதே நேரம் கிளார்க் (Clerk) தேர்வு எழுத:
- விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- அவர்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
- அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் இளங்கலைப் பட்டத்திற்குச் சமமான வேறு ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
இது வங்கித் தேர்வு என்பதால், நீங்கள் வணிகவியலில் (Commerce) பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. கலைப் பிரிவு (Arts) அல்லது அறிவியல் பிரிவில் (Science) பட்டம் பெற்றவர்களும் இந்தத் தேர்வுகளை எழுதலாம்.
ஆனால், ஸ்பெஷலிஸ்ட் ஆஃபீஸருக்கு (SO), தொடர்புடைய பாடத்தில் படித்திருப்பது அவசியம். உதாரணமாக, சட்ட அதிகாரிக்கு எல்எல்பி (LLB) மற்றும் மார்க்கெட்டிங் மேலாளருக்கு எம்பிஏ இன் மார்க்கெட்டிங் (MBA in Marketing) படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை (Exam Pattern) எப்படி இருக்கும்?

பட மூலாதாரம், Getty Images
இந்தத் தேர்வுகளின் முறை (Pattern) வேறுபடுகின்றன. பிஓ தேர்வில் ப்ரிலிம்ஸில் மூன்று பிரிவுகள் உள்ளன:
- ஆங்கில மொழி (English Language)
- அளவீட்டுத் திறன் (Quantitative Aptitude)
- பகுத்தறியும் திறன் (Reasoning Ability)
மெயின்ஸ் தேர்வில் கொள்குறி வினாக்கள் (Objective) மற்றும் விரிவான வினாக்கள் (Subjective) என இரண்டு வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கொள்குறிப் பிரிவில் பகுத்தறியும் திறன் மற்றும் பொது/பொருளாதார/வங்கி விழிப்புணர்வு, ஆங்கில மொழி மற்றும் தரவு பகுப்பாய்வு (Data Analysis Interpretation) ஆகியவை இருக்கும்.
விரிவானப் பிரிவில் ஆங்கில மொழி சார்ந்த கேள்விகள், அதாவது கடிதம் மற்றும் கட்டுரை எழுதுதல் போன்ற கேள்விகள் இருக்கும்.
ஐபிபிஎஸ் தேர்வில் இருந்து இப்போது கணினித் திறன் (Computer Aptitude) நீக்கப்பட்டுள்ளது. ஆனால், எஸ்.பி.ஐ தேர்வுக்கு அது இன்னும் அவசியமாக உள்ளது.
மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இறுதியாக நேர்காணலில் (Interview) கலந்துகொள்ள வேண்டும்.
ஆனால், எஸ்.பி.ஐ தேர்வில் நேர்காணலைத் தவிர குரூப் எக்சர்சைஸும் (Group Exercise) உண்டு. இது முன்பு குரூப் டிஸ்கஷன் என்று அழைக்கப்பட்டது, இப்போது குரூப் எக்சர்சைஸ் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், இப்போது ஐபிபிஎஸ் மற்றும் எஸ்.பி.ஐ ஆகிய இரண்டும் தேர்ச்சி பெறுவதற்கு உளவியல் சோதனை (Psychometric Test) அல்லது ஆளுமைத் தேர்வையும் (Personality Test) நடத்தத் தொடங்கியுள்ளன.
கிளார்க் பதவிக்கு வெறும் ப்ரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் மட்டும் போதும்.
கிளார்க் ப்ரீலிம்ஸில் ஆங்கில மொழி, எண் திறன் (Numerical Ability) மற்றும் பகுத்தறியும் திறன் போன்ற பிரிவுகள் உள்ளன.
கிளார்க் மெயின்ஸில் பகுத்தறியும் திறன் மற்றும் கணினித் திறன், ஆங்கில மொழி, அளவுத் திறன் மற்றும் பொது/நிதி விழிப்புணர்வு (General/Financial Awareness) ஆகிய பிரிவுகள் உள்ளன.
இதில் பொது மற்றும் நிதி விழிப்புணர்வு என்பது, வங்கி அமைப்பு எப்படிச் செயல்படுகிறது, ரிசர்வ் வங்கி (RBI) எப்படிச் செயல்படுகிறது, பணவீக்கத்தைக் (Inflation) கட்டுப்படுத்துவது எப்படி, வங்கிகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, வங்கிகள் தொடர்பான சர்வதேச அல்லது தேசியச் சட்டங்கள் என்னென்ன போன்ற சில வித்தியாசமான கேள்விகளைக் கேட்கும் ஒரு அம்சமாகும்.
தேர்வுகளில் தவறான பதில்களுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் (Negative Marking) உண்டு. மேலும், அடுத்த நிலைக்குச் செல்ல விண்ணப்பதாரர்கள் கட்-ஆஃப் மதிப்பெண்களில் தேர்ச்சி பெற வேண்டும்.
இப்போது, தகுதிப் பட்டியல் (Merit List) எப்படி உருவாக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. கிளார்க் மற்றும் பிஓ ஆகிய இரு பதவிகளுக்கும் ப்ரிலிம்ஸ் தகுதித் தேர்வாக (Qualifying) உள்ளது. அதாவது, மெயின்ஸ் தேர்வுக்குச் செல்ல இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும், ஆனால் இதன் மதிப்பெண்கள் தகுதிப் பட்டியலில் சேர்க்கப்படாது.
கிளார்க்குக்கான தகுதிப் பட்டியல் மெயின்ஸ் தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது.
பிஓ-வுக்கு, நேர்காணலும் இருப்பதால், மெயின்ஸ் மற்றும் நேர்காணலின் அடிப்படையில் மொத்த மதிப்பெண் கணக்கிடப்படுகிறது. இந்த இரண்டின் வெயிட்டேஜ் (Weightage) சில தேர்வுகளில் 80:20 என்றும், சிலவற்றில் 75:25 என்றும் இருக்கும். இதில் மெயின்ஸ் தேர்வுக்கு அதிக வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.
சம்பளம் மற்றும் தயாரிப்பு
பொதுவாக ஆர்ஆர்பி (கிராமிய வங்கிகள்) இல் கிளார்க்காகச் சேரும்போது, ஆரம்பச் சம்பளம் ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.
வெவ்வேறு இடங்களைப் பொறுத்து வழங்கப்படும் படிகள் (Allowances) சம்பளத்தை நிர்ணயிக்கும். அதாவது, இடம் மாறும்போது படிகளும் மாறும், இது சம்பளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஐபிபிஎஸ் கிளார்க்கின் சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலும், எஸ்.பி.ஐ கிளார்க்குக்கு இந்தச் சம்பளம் 35,000 முதல் 45,000 வரையிலும் இருக்கும்.
ஆர்ஆர்பி (கிராமிய வங்கிகள்) இல் பிஓ (PO) ஆனால், ஆரம்பச் சம்பளம் ரூ.55,000 முதல் ரூ.65,000 வரை இருக்கும்.
ஐபிபிஎஸ் பிஓ-வுக்கு இந்தச் சம்பளம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரையிலும், எஸ்.பி.ஐ பிஓ-வின் சம்பளம் ரூ.80,000 முதல் ரூ.1.5 லட்சம் வரையிலும் இருக்கும்.

ஐபிபிஎஸ் ஆள்சேர்ப்புத் தேர்வுகளின் காலண்டர் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-16 அன்று ஐபிபிஎஸ் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடத்தப்படுகிறது.
"ஆண்டின் முதல் மாதத்திலிருந்தே மாணவர்களுக்குத் தேர்வு எப்போது நடக்கும், நேர்காணல் எப்போது நடக்கும் என்பது தெரியும். இதனால், அவர்களுக்குத் திட்டமிடுவதற்கு நேரம் கிடைப்பதுடன், மற்ற விஷயங்களைப் பற்றிய தெளிவும் முன்பே கிடைத்துவிடுகிறது," என்று தன்வி கூறுகிறார்.
இறுதியாக மிக முக்கியமான விஷயம்: எப்படித் தயாராவது?
தன்வி, "மாணவர்கள் தங்கள் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் பாடத்திட்டத்தை முழுவதுமாக முடிப்பது என்பது தேர்வுக்குத் தயாராவதில் 30-40% மட்டுமே. கூடுதலாக, அவர்கள் குறைந்தது 50 மாதிரித் தேர்வுகளையாவது (Mock Tests) எழுத வேண்டும். இதன் மூலம் முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற முடியும்," என்று நம்புகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












