குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஊதியம் இல்லை ஏன்? 10 சுவாரஸ்ய தகவல்

குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு ஊதியம் இல்லை ஏன்? 10 சுவாரஸ்ய தகவல்

பட மூலாதாரம், CPRADHAKRISHNAN/FB

படக்குறிப்பு, சி.பி.ராதாகிருஷ்ணன்
    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவின் புதிய குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். குடியரசு துணைத் தலைவர் குறித்து நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பத்துத் தகவல்கள்.

இந்தியாவில் அரசியல் சாசன அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு அடுத்த இடத்தில் குடியரசு துணைத் தலைவர் இடம்பெறுவார்.

முதல் குடியரசு துணைத் தலைவர் யார்?

1. இந்தியா குடியரசான பிறகு முதல் குடியரசு துணைத் தலைவராக சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர்களாக இதுவரை 14 பேர் இருந்திருக்கிறார்கள். சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்த ஜெகதீப் தன்கர் 14வது குடியரசுத் துணைத் தலைவர்.

2. இந்தியாவில் குடியரசு துணைத் தலைவராக இருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும், இரு முறை அதே பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்துள்ளனர். ஒருவர் இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவர் 1952ஆம் ஆண்டிலிருந்து 1962ஆம் ஆண்டுவரை குடியரசு துணைத் தலைவராக இருந்தார். அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரானார். இதற்கடுத்ததாக, எம். ஹமீத் அன்சாரி 2007லிருந்து 2017வரை பத்தாண்டுகள் குடியரசுத் துணைத் தலைவராக இருந்தார்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் துணைத் தலைவராகலாம்

3. குடியரசு துணைத் தலைவரின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள். இருந்தபோதும் புதிய குடியரசு துணைத் தலைவர் தேர்வுசெய்யப்படும்வரை அவர் அந்தப் பதவியில் நீடிக்க முடியும். குடியரசுத் துணைத் தலைவரின் பதவி திடீரென காலியானால், யார் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்பது குறித்து அரசியலமைப்புச் சட்டம் தெளிவுபடுத்தவில்லை. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட முடியும்.

4. இந்தியாவில் குடியரசுத் துணைத் தலைவரே மாநிலங்களவையின் தலைவராகச் செயல்படுவார். ஏதோ காரணத்தால், குடியரசு துணைத் தலைவர், குடியரசுத் தலைவரின் பொறுப்பை ஏற்றுச் செயல்பட்டால் அப்போது மாநிலங்களவைத் தலைவராக அவர் செயல்பட மாட்டார். குடியரசுத் துணைத் தலைவர் இல்லாதபோது, மாநிலங்களவை பணிகளை மாநிலங்களவையின் துணைத் தலைவர் ஏற்றுக்கொள்வார்.

5. இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருப்பவர்கள் திடீரென இறந்தாலோ, ராஜினாமா செய்தாலோ, நீக்கப்பட்டாலோ புதிய குடியரசுத் தலைவர் தேர்வு செய்யப்படும்வரை குடியரசு துணைத் தலைவரே அந்தப் பொறுப்பை ஏற்று செயல்படுவார். அப்போது அவர் மாநிலங்களவையை வழிநடத்த முடியாது.

6. இந்தியாவில் குடியரசுத் தலைவரை நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களும் இந்தியா முழுவதுமுள்ள மாநிலச் சட்டமன்றங்களின் உறுப்பினர்களும் இணைந்து தேர்வுசெய்வார்கள். ஆனால், குடியரசுத் துணைத் தலைவரை நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே தேர்வுசெய்வார்கள்.

ஜெகதீப் தன்கர்

பட மூலாதாரம், SANSAD TV

படக்குறிப்பு, ஜெகதீப் தன்கர் ராஜினாமாவால் தற்போது குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது

ஊதியம் கிடையாது?

7. இந்தியாவில் குடியரசுத் துணைத் தலைவருக்கு ஊதியம் கிடையாது. ஆனால், அவரே மாநிலங்களவைத் தலைவராகவும் செயல்படுவதால் அவர் அந்தப் பொறுப்புக்கான ஊதியத்தைப் பெறுவார். தற்போது மாநிலங்களவைத் தலைவருக்கான ஊதியம் 4 லட்ச ரூபாயாக உள்ளது. இது தவிர, அவருக்கென அரசு சார்பில் தனியான இல்லம், ஊழியர்கள் போன்றவை உண்டு. குடியரசுத் துணைத் தலைவர்கள் ஓய்வுபெற்ற பிறகு, ஒரு பங்களா, ஒரு செயலர், சில பணியாளர்கள் ஆகியோர் அரசின் சார்பில் வழங்கப்படுவார்கள்.

8. குடியரசுத் துணைத் தலைவரை நாடாளுமன்றத் தீர்மானங்களின் மூலம் பதவி நீக்கம் செய்ய முடியும். இதற்கான தீர்மானம் முதலில் மாநிலங்களவையிலும் பிறகு மக்களவையிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

9. இறுதியாக குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடந்த ஆண்டு இறுதியில் தீர்மானம் கொண்டுவந்தன. ஆனால், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

10. இந்தியாவில் குடியரசுத் துணைத் தலைவர்களாக இருந்தவர்களில் 6 பேர் குடியரசுத் தலைவர்களாகியிருக்கிறார்கள். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டாக்டர் ஜாகிர் ஹுசைன், வி.வி. கிரி, ஆர். வெங்கட்ராமன், டாக்டர் சங்கர் தயாள் சர்மா, கே.ஆர். நாராயணன் ஆகிய ஆறு பேரும் குடியரசு துணைத் தலைவராக இருந்து குடியரசுத் தலைவரானார்கள்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு