மேக்ஸ்வெல் போல மிட்செலுக்கு தசைப்பிடிப்பு - பந்துவீச்சு உத்தியை மாற்றிய ரோகித் சர்மா

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கேப்டன் ரோகித் - சுப்மான் கில் தந்த அதிரடி தொடக்கம், கோலியின் சாதனை சதம், ஸ்ரேயாஸின் அதிரடி சதம் மற்றும் 7 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமியின் பந்துவீச்சு ஆகியவற்றால் இந்த வரலாற்று வெற்றி சாத்தியமானது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 397 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 327 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. நடப்பு உலகக் கோப்பையில் இந்தியா பெறும் 10வது வெற்றி இதுவாகும்.

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டேரல் மிட்செல் சதம் அடித்தார். அவர் 119 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். கேப்டன் கேன் வில்லியம்சன் 69 ரன்களும், கிளென் பிலிப் 41 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

நடப்பு உலகக்கோப்பையில் இதுவரை தோல்வியையே சந்திக்காத இந்திய அணி நெருக்கடியை எதிர்கொண்ட முதல் போட்டி இதுவாகும். நியூசிலாந்து இன்னிங்ஸின் போது, கேப்டன் கேன் வில்லியம்சன் - டேரல் மிட்செல் ஜோடி 181 ரன்கள் எடுத்தார். டேரல் மிட்செல் 85 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். இந்த உலகக் கோப்பையில் மிட்செல் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக தனது முதல் சதத்தை அவர் அடித்தார்.

வில்லியம்சன் - மிட்செல் ஜோடி களத்தில் இருந்தபோது ஆட்டம் இந்தியாவின் பிடியில் இருந்து நழுவுகிறதோ என்ற சந்தேகம் இந்திய ரசிகர்களுக்கு தோன்றியது. அந்த அளவுக்கு இந்த ஜோடியின் ஆட்டம் அபாரமாக இருந்தது. இந்திய அணியையும் இந்திய ரசிகர்களையும் இந்த ஜோடி அச்சுறுத்தியது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

முகமது ஷமி 7 விக்கெட் வீழ்த்தி அபாரம்

வில்லியம்சன் - மிட்செல் ஜோடியின் அதிரடிக்கு 33வது ஓவரில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி முற்றுப்புள்ளி வைத்தார். நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணிக்கு தேவைப்படும் போதெல்லாம் தவறாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் முகமது ஷமி இந்த ஆட்டத்திலும் முதலிரண்டு விக்கெட்டுகளாக டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய அபாயகரமான பேட்ஸ்மேன்களை சாய்த்திருந்தார்.

அடுத்தபடியாக, நிலைத்து நின்று இந்திய அணியை அச்சுறுத்திய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனையும் அவரே வெளியேற்றி இந்தியாவின் நெருக்கடியை தணித்தார். அதே ஓவரில் டாம் லாதமை மீண்டும் பெவிலியனுக்கு அனுப்பிய ஷமி, இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கு நிம்மதி கொடுத்தார்.

பின்னர், கிளென் பிலிப்ஸ் - டேரல் மிட்செல் ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு 75 ரன்களை இணைத்து போட்டியை நியூசிலாந்தை நோக்கி திருப்ப மீண்டும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தனர். இந்த ஜோடியை 43வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பிரித்தார்.

இந்திய தரப்பில் முகமது ஷமி 7 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, கேன் வில்லியம்சன், டேரல் மிட்செல், டாம் லாதம் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முகமது ஷமி வழிவகுத்தார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் பேட்டிங் எப்படி?

உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்துக்கு எதிராக 397 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சாதனை இலக்கை இந்தியா நிர்ணயித்திருந்தது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் எந்த அணியும் அடித்த அதிகபட்ச ஸ்கோர் என்ற உலக சாதனை இதுவாகும்.

2015 உலகக் கோப்பையில், சிட்னியில் நடந்த அரையிறுதியில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவித்து சாதனை படைத்தது.

எனினும் இன்றைய இந்திய இன்னிங்ஸில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை அடித்ததோடு, ஸ்ரேயாஸ் ஐயரும் சதம் விளாசினார். அதேசமயம் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்த இந்திய அணி, இந்தப் போட்டியில் வித்தியாசமாக இருந்தது.

ரோஹித் ஷர்மா தனது பழக்கமான பாணியில் அதிரடியாக பேட்டிங் செய்து முதல் விக்கெட்டுக்கு ஷுப்மான் கில் உடன் 71 ரன்கள் சேர்த்தார்.

ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இந்த இன்னிங்ஸின் போது, ரோஹித் நான்கு பவுண்டரிகள் மற்றும் பல சிக்ஸர்களை அடித்தார். இதன் மூலம் உலகக் கோப்பையில் அதிகபட்சமாக 50 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

சச்சின் சாதனையை தகர்த்த கோலி

இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி முதலில் ஷுப்மன் கில்லுடன் 93 ரன்கள் சேர்த்தார், பின்னர் ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து 163 ரன்கள் எடுத்தார்.

இதன் போது, ஷுப்மான் கில் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார், ஆனால் போட்டியின் 23 வது ஓவரில், தசைப்பிடிப்பு காரணமாக அவர் காயம் காரணமாக பெவிலியன் திரும்பினார். அப்போது கில் 65 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்திய இன்னிங்ஸில் விராட் கோலி ஒருநாள் போட்டியில் தனது 50வது சதத்தை அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை அவர் கைப்பற்றினார்.

சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்தபோது, சச்சின் டெண்டுல்கரும் மைதானத்தில் இருந்தார்.

விராட் 59 பந்துகளில் அரை சதத்தையும், 106 பந்துகளில் சதத்தையும் பூர்த்தி செய்தார்.

இந்த நேரத்தில், ஒரு ஒருநாள் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் அவர் முறியடித்தார். 2003 உலகக் கோப்பையில் சச்சின் 673 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது விராட் இந்த உலகக் கோப்பையில் 711 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த இன்னிங்ஸில் விராட் 113 பந்துகளில் 117 ரன்கள் எடுத்தார்.

விராட்டை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயரும் சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 70 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தார்.

கே.எல்.ராகுல் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்கள் எடுத்த நிலையில், சூர்யகுமார் யாதவ் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் அவுட் ஆனபோது, சுப்மான் கில் ஆடுகளத்தில் வந்து தனது ஸ்கோரை 79 ரன்களுக்கு ஒரு ரன் சேர்த்தார். கில் 80 ரன்கள் எடுத்த பிறகு இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும், டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

மிட்செலுக்கு தசைப்பிடிப்பு - இந்தியா என்ன செய்தது?

சதம் கடந்து இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருந்த மிட்செலுக்கு ஒரு கட்டத்தில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சரித்திர சாதனை படைத்த மேக்ஸ்வெல் தசைப்பிடிப்புடனே ஆடி அந்த வரலாறை படைத்தது ரசிகர்களின் கண் முன்னே வந்து சென்றது. ஆனால், ஆப்கானிஸ்தான் போலல்லாமல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா உடனே சுதாரித்துக் கொண்டார்.

வேகப்பந்துவீச்சுக்கு உடனடியாக மாறினார். குறிப்பாக, வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜை அவர் பந்துவீச அழைத்தார்.

அரௌன்ட் தி விக்கெட் முறையில் பேட்ஸ்மேனை விட்டு சற்று விலகிச் செல்லும் வகையில் யார்க்கர்களை வீசி மிட்செலை அவர் திணறடித்தார். பந்தை தொடவே முடியாமல் சிரமப்பட்ட அவரால் அதனை வலுவாக அடிக்கமுடியவில்லை. இதனால், அவரது அதிரடி சற்று மட்டுப்பட்டது.

இதன் காரணமாக 33-வது ஓவர் முதல் 37வது ஓவர் வரை 5 ஓவர்களில் நியூசிலாந்து அணி 17 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால், அந்த அணிக்கு வெற்றி பெறத் தேவையான ரன்ரேட் அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த நெருக்கடி தாங்காமல்தான் நியூசிலாந்து அணி கடைசியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

மும்பை வான்கடே ஆடுகளம் எப்படி இருந்தது?

மும்பை வான்கடே ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. முதல் 10 ஓவர்களில் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து பந்து சீமிங்ஆனது, ஸ்விங் ஆனது. அடுத்த 20ஓவர்களுக்கு பந்துகள் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்து பவுன்ஸ் ஆகியது. 30 ஓவர்கள் வரை நியூசிலாந்து ஆடிய விதம் இந்திய அணிக்கு சற்று அச்சத்தையே ஏற்படுத்தியது. நன்றாக செட்டில்ஆகிய பேட்டர்கள் வில்லியம்ஸன், மிட்ஷெல் ஆட்டமிழந்தபின்புதான் திருப்பம் ஏற்பட்டது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

நியூசிலாந்துக்கு சாதனை இலக்கை நிர்ணயித்த இந்தியா

இந்திய அணி சேர்த்த 397 ரன்கள் என்பது நிச்சயமாக எந்த அணியும் அடையக்கூடிய இலக்கு அல்ல. சிறு தவறு செய்தாலும், விக்கெட்டுகளை வரிசையாக இழந்தாலும் தோல்வியைச் சந்திக்க வேண்டியதுதான். நியூசிலாந்து தொடக்கத்தில் ரவீந்திரா, கான்வே விக்கெட்டுகளை இழந்தது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது.

ஆனாலும், மிட்ஷெல், வில்லியம்ஸன் மனம் தளராமல் போராடி 30 ஓவர்கள் வரை நியூசிலாந்து அணியை நம்பிக்கை முனை நோக்கி நகர்த்தினர்.

இருவரும் களத்தி்ல் இருந்தவரை இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சற்று அழுத்தம் இருந்தது. ஆனால் வில்லியம்ஸன் ஆட்டமிழந்ததுதான் திருப்பமாக அமைந்தது. அதன்பின் வந்த பேட்டர்கள் யாரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. மிட்செலுக்கு துணையாகக் கூட யாரும் களத்தில் நிற்கவில்லை.

இந்த வெற்றியின் மூலம் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்திடம் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பழிதீர்த்துக் கொண்டது.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

முகமது ஷமி கருத்து

57 ரன்கள் கொடுத்து நியூசிலாந்தின் முக்கியமான 7 விக்கெட்டுகளை சாய்த்த முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார். அப்போது பேசிய அவர், "நான் எனது வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தேன். நான் ஒயிட்-பால் கிரிக்கெட்(ஒருநாள், டி20 போன்ற குறுகிய வடிவம்) நிறைய விளையாடவில்லை. நான் நியூசிலாந்துக்கு எதிராக [தர்மசாலாவில்] அணிக்கு மீண்டும் திரும்பினேன்.

பந்துவீச்சில் நிறைய மாறுபாடுகள் பற்றி பேசுகிறோம், ஆனால் அதைத் தவிர்த்து, சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதையே நான் இன்னும் நம்புகிறேன். புதிய பந்தில், வில்லியம்சனின் கேட்சை விட்டேன். அது நடந்திருக்கக் கூடாது. நான் மோசமாக உணர்ந்தேன், நாங்கள் எடுத்திருக்க வேண்டிய ஒரு விக்கெட் அது.

ஆடுகளம் மிகவும் நன்றாக இருந்தது, மதியம் நிறைய ரன்கள் எடுக்கப்பட்டன. பனி பயம் இருந்தது, பனி இருந்தால், அது சறுக்கி விழும் வாய்ப்பு உண்டு. இந்த ஆட்டத்திறன் ஆச்சரியமாக இருக்கிறது கடந்த இரண்டு உலகக் கோப்பைகளில், நாங்கள் அரையிறுதியில் தோற்றோம். எங்களுக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் அல்லது எப்போது கிடைக்கும் என்று யாருக்குத் தெரியும், எனவே இதற்காக எல்லாவற்றையும் செய்ய விரும்பினோம். எந்த ஒரு வாய்ப்பையும் நாங்கள் விட்டுவிட விரும்பவில்லை." என்று கூறினார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

கேன் வில்லியம்சன் கூறியது என்ன?

போட்டிக்குப் பின்னர் பரிசளிப்பு விழாவில் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், "முதலாவதாக, இந்தியாவிற்கு வாழ்த்துகள், அவர்கள் சிறப்பாக விளையாடினர், அநேகமாக இன்று அவர்களின் சிறந்த ஆட்டம் வெளிப்பட்டது. 400 என்பது இயல்பாகவே கடினமாக இருக்கும். ஆனால் கடுமையாக போராடியதால் எங்களுக்கு பெருமைதான். தொடரில் இருந்து வெளியேறுவது ஏமாற்றம் அளித்தாலும் கடந்த ஏழு வாரங்களாக நாங்கள் செயல்பட்ட விதம் நிறைவாக உள்ளது.

இந்தியா டாப் கிளாஸ் என்று நான் சொன்னது போல், உலகத் தரம் வாய்ந்த பேட்டர்களை வைத்திருக்கிறார்கள். அவர்கள் இருக்கும் இடத்தில் இருக்க தகுதியானவர்கள், சிறப்பாக விளையாடினார்கள்.

எங்களிடம் சில நம்பமுடியாத பங்களிப்புகள் இருந்தன, ஒரு அணியாக நாங்கள் விளையாட விரும்பும் கிரிக்கெட்டில் உண்மையான அர்ப்பணிப்பு இருந்தது. ரச்சின் மற்றும் மிட்செல் ஆகிய இருவரும் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடினார்கள். பந்து வீச்சாளர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கினர். இறுதியில் ஒரு குழுவாக சரியான திசையில் சில நல்ல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்." என்று கூறினார்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம், Getty Images

ரோகித் சர்மா பேசியது என்ன?

பரிசளிப்பு விழாவில் பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, இந்திய அணி வீரர்களின் பங்களிப்பை பாராட்டினார்.

"நான் இங்கு நிறைய கிரிக்கெட் போட்டிகளை விளையாடியுள்ளேன், இந்த மைதானத்தில் நீங்கள் எவ்வளவு ஸ்கோர் எடுத்தாலும், ஆசுவாசமாக இருந்துவிட முடியாது. எங்கள் மீது அழுத்தம் இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். களத்தில் சற்று சோர்வாக இருந்தாலும் நாங்கள் மிகவும் அமைதியாக இருந்தோம்.

சில விஷயங்கள் தானாக நடக்கும், ஆனால், நாங்கள் எங்கள் பணியை செய்ததில் மகிழ்ச்சி. 30-40 ரன்கள் குறைவாக எடுத்திருந்தால் சிக்கலில் இருந்திருப்போமா என்று சொல்வது கடினம். வில்லியம்சன் மற்றும் மிட்செல் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். நாங்கள் அமைதியாக இருப்பது முக்கியம். கூட்டம் அமைதியாக இருந்தது, ஆனால் எங்களுக்கு ஒரு கேட்ச் அல்லது ரன் அவுட் தேவை என்று எங்களுக்குத் தெரியும். ஷமி புத்திசாலித்தனமாக விளையாடினார்.

எல்லாேரும் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். முதல் ஆறு பேட்டர்கள், அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், அதை சரியாகப் பயன்படுத்தி அணிக்கு வலு சேர்த்தனர். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடியதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். கில், அவர் எங்களுக்காக பேட்டிங் செய்த விதம் அற்புதமாக இருந்தது. துரதிர்ஷ்டவசமாக அவர் தசைப்பிடிப்பால் வெளியே செல்ல வேண்டியிருந்தது. கோலி எப்போதும் செய்வதைச் செய்தார், மேலும் தனது மைல்கல் சதத்தையும் எட்டினார். புதிய பந்தில் பந்துவீச்சாளர்கள் வீசிய விதம் ஆச்சரியமாக இருந்தது.

இன்று அரையிறுதியாக இருப்பதால், அழுத்தம் இல்லை என்று சொல்ல முடியாது, நீங்கள் விளையாடும் போதெல்லாம் அழுத்தம் இருந்துகொண்டே தான் இருக்கும். அரையிறுதியில் கொஞ்சம் கூடுதலாக அது இருக்கும். நாங்கள் அதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் இருக்க விரும்பினோம், முதல் ஒன்பது போட்டிகளில் நாங்கள் செய்ததையே செய்தோம். இரண்டாவது பாதியில் ஆட்டம் எங்கள் கைக்கு வந்தது." என்று ரோகித் சர்மா கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)